மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

தருமனும் கீரியும்

புலவர் வைரா

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management

இராஜசூய யாகம்

Mahabharat - story
தருமன் மிகப் பெரிய சக்கரவர்த்தி. அவர் இராஜசூய யாகம் செய்ய வேண்டும் என்று எண்ணினார். இராஜசூயம் செய்ய வேண்டுமானால் அதற்கு முன்னதாக தான தருமங்கள் செய்ய வேண்டும் என்பது நியதி. எனவே தருமன் வருபவர்களுக்கெல்லாம் தினந்தோறும் பொருளை வாரிவாரிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

வருகின்ற மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் அவன் எவ்வளவு பேர் வந்தாலும் இல்லை என்னாமல் கொடுத்துக்கொண்டே இருக்கிறான். அதனால் அந்த நேரத்தில் தருமனுக்கு ஒரு எண்ணம் தோன்றிற்று.

"நம்மைப்போல் கொடுப்பதில் வல்லவர்கள் யார் இருக்கிறார்கள்" என்ற எண்ணம் இலேசாகத் தோன்றியது.

இந்த எண்ணம் தோன்றிய சற்று நேரத்துக்கெல்லாம்:

கொடுக்கும் இடத்தில் சில பொருட்கள் சிந்தி இருந்தன. ஒரு கீரி அந்த இடத்தில் வந்து கீழே சிந்தியிருந்த பொருட்கள் மீது புரண்டு பார்த்தது. அதில் அதிசயம் என்னவென்றால் அதன் பாதி உடம்பு முன்னதாகவே தங்கமாக இருந்தது, மீதி உடம்பும் தங்கமாக மாற வேண்டும் என்பதற்காக அந்தக் கீரி அங்கேயே புரண்டு கொண்டிருந்தது.

இதைப் பார்த்த தருமர் கீரியிடம் கேட்டார், "நீ ஏன் இவ்வாறு புரள்கிறாய்?" என்று.

Mahabharat - story
கீரி சொன்னது, "இது போலவே வேறொரு இடத்தில் தருமம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கே கீழே சில பொருட்கள் சிந்தியிருந்தன. அந்தப் பொருட்களின் மேல் நான் விழுந்து புரண்டேன். அந்தப் பொருட்கள் என் உடலில் பாதிவரைதான் பட்டது. பட்ட இடமெல்லாம் உடம்பு தங்கமாக மாறிவிட்டது. அதிலிருந்து தருமம் செய்யுமிடங்களில் கீழே சிந்தியிருக்கும் பொருட்கள் மீது புரண்டால் அந்தப் பொருட்கள் உடலில் எந்த இடத்தில் பட்டாலும் அந்த இடம் தங்கமாக மாறிவிடும் என்ற முடிவுக்கு நான் வந்தேன். மீதியுள்ள பாதி உடம்பு தங்கமாக மாறவில்லை அல்லவா! அந்தப் பாதி உடம்பையும் தங்கமாக ஆக்கிக்கொள்ள ஆசைப்பட்டு தருமம் செய்யும் இடங்களில் எல்லாம் சென்று அங்கே சிந்தியிருக்கும் பொருட்கள் மீது புரண்டுபுரண்டு பார்க்கிறேன். இங்கேயும் தாங்கள் தருமம் செய்த போது சில பொருட்கள் சிந்தியிருக்கின்றன. அந்தப் பொருட்கள் மீது புரண்டேன். இங்கேயாவது எனது மீதி உடம்பு தங்கமாகுமா என்ற என்னுடைய ஏக்கம் தீரவில்லை" என்று கீரி கூறியது.

"அப்படியா?" என்று ஆச்சரியத்தோடு கேட்டார் தருமர்.

சிந்தியிருந்த பொருட்கள் உன் உடம்பில் பாதியைத் தங்கமாகுமாறு செய்யப்பட்ட அந்த இடம் எது? செய்தவர்கள் யார்? என்று தருமன் கேட்டார்.

Mahabharat - story
கீரி பதில் சொன்னது, "காட்டிலிருக்கும் ஒரு குடிசை வீடு. அந்தக் குடிசையில் வாழ்ந்துவரும் உஞ்சவிருத்தி பிராமண குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து செய்த தருமத்தால் என் பாதி உடல் தங்கமாக மாறியது" என்று.

சற்று விளக்கமாகக் கூறுமாறு தருமர் கேட்க, கீரி விளக்கமாகச் சொன்னது.

"ஒரு காட்டுப் பகுதியில் குடும்பத் தலைவர், தலைவி, மகன், மருமகள் என நாங்கு பேர் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் உஞ்ச விருத்தி பிராமணர்கள். காட்டில் அங்குமிங்கும் சுற்றி வருவார்கள். உணவுப் பொருட்கள் எது கிடைத்தாலும் நால்வரும் சரி சமமாகப் பங்கிட்டுச் சாப்பிடுவார்கள். மூன்று நாட்களாக சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லை. தண்ணீர் மட்டும் கிடைத்தது. அதைக் குடித்துக்கொண்டு பசியோடு இருந்தார்கள்.

நாங்காம் நாள் அவர்களுக்குக் கொஞ்சம் தினை அரிசி கிடைத்தது. இடித்து மாவாக ஆக்கி நாங்கு பாகமாகப் பிரித்து உண்பதற்குத் தயாரானார்கள். அந்த நேரத்தில் பவதி பிட்சாந்தேகி என்ற குரல் கேட்டுத் திரும்பினார்கள்.

அங்கே ஒரு துறவி மிகவும் பசியோடு நின்று கொண்டிருந்தார். இவர்கள் பசியைக் காட்டிலும் பல மடங்கு அதிகப் பசி அவருக்கு இருந்தது.

துறவி மயங்கி விழும் நிலையில் இருந்தார். துறவியைக் கண்ட தலைவர் சிறிதும் தாமதிக்காமல் தன் பங்கு மாவைத் துறவிக்குக் கொடுத்தார். அந்தத் துறவி மாவை வாங்கி மிகவும் பரபரப்பாக உண்டார். உண்டபின் அவருக்குக் கால் வயிறு கூட நிரம்பவில்லை என்பதை அவருடைய முகம் குறிப்பாகக் காட்டிக் கொண்டிருந்தது. எனவே தலைவியும் தன் பங்கு மாவைத் துறவிக்குக் கொடுத்தார். துறவி அந்த மாவையும் பரபரப்பாக உண்டார். இருந்தும் அவருக்கு அரை வயிறு கூட நிரம்பவில்லை. இன்னும் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கும் அந்தத் துறவியின் முகக் குறிப்பை உணர்ந்த மகனும் தன் பங்கு மாவைக் கொடுத்தான். துறவியும் உண்டார். இருந்தும் துறவி திருப்தியடையவில்லை. பசி முழுமையாகத் தீரவில்லையே என்ற அந்தத் துறவியின் முகக்குறிப்பைக் கண்ட மருமகளும் தன் பங்கு மாவை அவருக்குக் கொடுத்தார். அவரும் உண்டார்.

உடனே பசி தீர்ந்து அவருக்கு ஏப்பம் வந்தது. மனநிறைவு ஏற்பட்டு முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. மகிழ்ச்சி தாண்டவமாடும் அந்த முகத்தைக் கண்ட அந்த நான்கு பேருக்கும் ஒரு பெரிய செயலைச் செய்துவிட்டோம், சாதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்கள் ஈவதால் அடையக் கூடிய இன்பத்தை முழுமையாக உணர்ந்தனர்.

இந்த நிலையில் அங்கே அந்தத் துறவி அவசர அவசரமாக மாவை உண்டபோது கீழே சிறிது துகள்கள் சிந்தியிருந்தன. அந்தத் துகள்கள்தான் என் உடம்பின் மீது பட்டன. பட்ட இடமெல்லாம் தங்கமாயிற்று. இதுதான் என் பாதி உடம்பு தங்கமாக இருப்பதற்கான வரலாறு" என்று கூறிய கீரி மேலும் தொடர்ந்தது.

மீதி உடம்பு தங்கமாக மாறவில்லையே, மீதி உடம்பையும் தங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையால் அன்று முதல் இன்றுவரை அதுபோன்ற ஒரு சிறந்த தருமம் செய்யும் இடத்தைத் தேடுகிறேன்.

தருமம் நடைபெறும் இடங்களில் எல்லாம் சென்று சிதறிய பொருட்களின் மீது விழுந்து புரள்கிறேன். எப்படி விழுந்து புரண்டாலும் என் மீதி உடம்பு தங்கமாகவில்லை அதே போல இங்கும் பொருட்கள் சிந்தியுள்ளன. இப்பொருட்களும் கூட என்னுடம்பைத் தங்கமாக்கவில்லையே" என்றது கீரி.

இதைக் கேட்ட தருமன் சிந்தித்தான். "இந்த பிராமண குடும்பத்தின் தருமம் மிகச் சிறந்தது தான்" என்று எண்ணினான்.

என்றாலும் "என்னைப் போல் கொடுப்பதில் வல்லவர்கள் யார் இருக்கிறார்கள்?" என்ற எண்ணம் மட்டும் குறையவில்லை.

Mahabharat - story
(ஆணவம் எந்த மனிதனையும் எளிதில் விட்டு விலகாது. அதை ஆணவம் அடங்கி இருக்குமே தவிர முற்றிலும் விலகாது. அதை விலக்கிக் கொள்ளவும் இயலாது. மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களை வெகு சுலபமாகச் செய்யக்கூடிய மனிதர்களுக்கு செயல்களைச் செய்யும் அந்த நேரத்தில், தன்னால் மட்டுமே இந்தச் செயலைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு)

"தருமன் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன?"

புலவர் வை. ராஜேந்திரன்

YOUR FEEDBACK FOR THIS ARTICLE
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Attach a File:

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com