மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
அத்தியாயம் 7 - எஸ்.வி.என்.
|
என்னக் குழந்தைகளா, பாடம் படித்துப் படித்து போரடிக்குதா? ஏதாவது குறும்பு பண்ணனும் என்று கைகால் துறுதுறுக்குதா? வாங்க ஜீயஸின் மகன் ஹெர்மெஸ் செய்த குறும்புகளைச் சொல்கிறேன். ஜூயசின் இன்னோரு மனைவி மய்யா தன் குழந்தை ஹெர்மெஸை யாருக்கும் தெரியாமல் ஒரு பாதாளக் குகையில் வளர்த்து வந்தாள். பிறந்த குழந்தையாய் இருந்த போதே ஹெர்மெஸால் பேசவும் எழுந்து நடக்கவும் முடியுமாம். உங்களைப் போல ஒரு துறு துறு குழந்தை தான். ஒரு நாள் தாய் குழந்தை ஹெர்மஸைத் தூளியில் போட்டுத் தூங்க வைத்துவிட்டுத் தன் வேலைகளைப் பார்க்கச் சென்றார். தூளியில் படுத்திருக்க முடியாத ஹெர்மஸ் அம்மாவிற்குத் தெரியாமல் பின் பக்க வழியாக குகை வாசலுக்குச் சென்றான். அங்கே ஊர்ந்து கொண்டிருந்த ஒரு ராட்சத ஆமையின் ஓட்டை எடுத்து ஏழு கம்பளி நூல்களை அதில் கோர்த்து ஒரு இசைக் கருவியை உண்டாக்கினான். அதைத் தன் தூளிக்குக் கொண்டுவந்து கையில் வைத்து இசை பாடி மகிழ்ந்தான். மாலை வேளையில் தன் பெற்றோருக்கு அந்த இசைக் கருவியில் இசை மீட்டி, கதைகள் சொல்லி அவர்களை மகிழ்ச்சிப் படுத்தினான். மகனின் திறமையில் மகிழந்த பெற்றோர் அவன் குகையை விட்டு அனுமதியில்லாமல் வெளியே சென்றது பற்றிக் கவலைப் படவில்லை. ஒரு சில நாட்கள் சென்றிருக்கும். தன்னுடையப் புதிய இசைக் கருவி குழந்தை ஹெர்மஸிற்கு போரடித்துப் போயிற்று. என்ன செய்யலாம் என்று யொசித்த குழந்தை மீண்டும் குகையை விட்டு வெளீயே வந்தது. சூரியக் கடவுள் அப்போலோ அப்பொது தான் தன் அன்றையக் கடமையை முடித்துவிட்டு வானத்திலிருந்து இறங்கிச் சென்று கொண்டிருந்தார். தன் சகோதரன் சூரியக் கடவுளின் ஆடுகள் மலை அடிவாரத்தில் மந்தை மந்தையாய் மேய்ந்து கொண்டிருப்பதையும், சூரியக் கடவுள் தூங்கச் செல்வதையும் கண்ட சிறுவன் ஹெர்மெஸ் அந்தக் கூட்டத்திலிருந்து ஐம்பது ஆடுகளைத் திருடிக் கொண்டுவிட்டான். சூரியக் கடவுள் எல்லாம் அறிந்தவர், எனவே அவருடைய ஆடுகளைத் திருடியது யார் என்பதை அவரால் அறிந்து கொள்ள முடியும், தன் ஆடுகளைத் திருடியவனை அவர் கண்டிப்பாய்த் தண்டிப்பார் என்று உணர்ந்து கொண்ட ஹெர்மெஸ் ஆடுகளைப் பின்பக்கமாகவே நடக்கச் செய்தான். அதனால் ஆடுகள் எங்கு போகின்றன என்பதைக் காலடித் தடங்களால் கண்டு பிடிக்க முடியாது என்று ஹெர்மஸ் முடிவு செய்தான். ஆட்டைத் தேடி வருபவர்களை மீண்டும் குழப்ப, தன் கால்களில் மரக்கிளைகளால் ஆன துடைப்பத்தைக் கட்டிக் கொண்டான். ஆடுகளை மேய்த்துக் கொண்டு நேராக நடக்காமல் பக்கவாட்டில் மரக்கிளைகளை இழுத்து இழுத்து நடந்தான். சூரியக் கடவுளின் ஆடுகளை ஓட்டி வந்த ஹெர்மெஸ் ஆடுகளை ஒரு ஆற்றுப் படுகைக்கு அழைத்து வந்து ஒளித்து வைத்துவிட்டான். ஆடுகளை ஒளித்து வைத்த பின் அவனுக்கு பயம் வந்தது. ஆட்டைத் திருடிய தன் மீது மற்றக் கடவுளர்கள் கோபம் கொள்ளக் கூடாது என்று எண்ணி, திருடிக் கொண்டு வந்த ஆடுகளில் இரண்டை தன் தவறுக்குப் பிராயச்சித்தமாக பலி கொடுத்தான். இத்தனையும் செய்து முடித்தபின் ஒன்றும் நடக்காதது போல தன் குகைக்குத் திரும்பி தூளியில் படுத்துத் தூங்கி விட்டான். காலையில் வழக்கம் போலத் தன் கடமைகளைத் தொடங்க வந்த சூரியக் கடவுள் தன் ஆடுகள் காணாமல் போனதைக் கண்டு கடும் சினம் கொண்டார். தன்னுடைய ஞான திருஷ்ட்டியால் ஆட்டைத் திருடியது யர் என்று கண்டு கொண்ட அவர், ஹெர்மஸைத் தேடி வந்தார். தூளியில் படுத்திருந்த ஹெர்மஸ் தனக்கு எதுவுமே தெரியாதது போலப் பாசாங்கு செய்தான்.. கோபப்பட்ட சூரியன் ஹெர்மஸை அழைத்துக் கொண்டு ஜீயஸிடம் சென்றார். கோபமாக வரும் சூரியனோடு தன் மகன் சிறு குழந்தை ஏதும் அறியாதவனாய் நடந்து வருவதைப் பார்த்த ஜீயஸுக்குச் சிரிப்பு வந்தது. ஆனாலும் சூரியனின் ஆடுகளைக் தன் மகன் திருடி இருப்பது அவருக்குத் தெரியும் என்பதால் ஆடுகளைத் திருப்பிக் கொடுக்கும் படி மகனுக்கு உத்தரவிட்டார். தந்தையின் ஆணையை மீற முடியாத ஹெர்மெஸ் சூரியக் கடவுளை அழைத்துக் கொண்டு ஆடுகள் இருக்கும் இடம் சென்றான். ஆற்றுப் படுகையில் தன்னுடைய இரண்டு ஆடுகள் பலியாக்கப் பட்டிருப்பதைக் கண்ட சூரியக் கடவுள் சிறு குழந்தை மீது கடுங்கோபம் கொண்டார். எங்கே தன்னைச் சூரியன் தண்டித்து விடுவாரோ என்று பயந்த குழந்தை ஹெர்மெஸ் தன்னுடைய ஆமை ஓட்டு இசைக் கருவியை சூரியனுக்குப் பரிசாக அளித்தான். ஆமை ஓட்டிலிருந்து வந்த இசையில் மயங்கிய சூரியன் மனம் மகிழந்து ஹெர்மஸ் திருடிய ஆடுகளை அவனுக்கே பரிசாகத் தந்துவிட்டார். அந்த ஆடுகளை மேய்ப்பதற்குத் தன்னுடைய தங்கச் செங்கோலையும் தந்தார்.
|
YOUR FEEDBACK FOR THIS STORY
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |