மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

புதையல் பெட்டகம்

அத்தியாயம் 6 - எஸ்.வி.என்.

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
The statue of Zeus - image courtesy: Wikipedia

ஐயோவும் ஜுயஸும்

ஹாய் செல்லம்ஸ்,

காலாண்டுத் தேர்வுகள் வருகின்ற நிலையில் விடுமுறை நாட்களைப் பற்றிக் கனவு காண்கிறீர்கள் போலத் தெரிகிறதே. விடுமுறை நாட்களில் பொழுதை எவ்வாறு கழிக்கலாம்? கணனி முன்னால் அமர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபடலாமா? அல்லது எங்காவது சுற்றுலா செல்லலாமா? என உங்கள் மனம் எண்ணுகிறது, சரிதானே. விடுமுறை முழுவதையும் கணனி விளையாட்டிலேயே கழித்து விடாதீர்கள்! உற்சாகமாக எங்காவது சென்று வாருங்கள்! எங்கே செல்வது என்று கேட்கிறீர்களா? வாருங்கள் ஐயோனியன் தீவுகளுக்குச் செல்வோம். ஐயோனியன் தீவு எங்கே இருக்கிறது தெரியுமா? கீரீஸ் நாட்டின் மேற்கு எல்லையில் ஐயோனியன் கடலில் இருக்கும் குட்டிக் குட்டித் தீவுக் கூட்டங்களே ஐயோனியன் தீவுகள் என்று அழைக்கப் படுகின்றன. 1960ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து உல்லாசப் பயணிகள் இந்தத் தீவுகளுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். மத்தியத் தரைக்கடல் தட்ப வெட்ப நிலையைக் கொண்ட இயற்கை அழகு கொஞும் இந்தத் தீவு உங்கள் விடுமுறையைக் கழிக்க ஒரு ரம்யமான இடம்.

இந்தத் தீவுகளின் பெயரின் காரணகர்த்தா இந்தத் தீவுகளைச் சூழ்ந்திருக்கும் ஐயோனியன் கடல். இந்தக் கடலைப் பற்றி இரண்டு விஷயங்களை நாம் அறிந்து கொள்ளப் போகிறோம். ஒன்று வரலாற்று உண்மை, இன்னொன்று கிரேக்கப் புராணக் கதை. முதலில் வரலாற்று உண்மையை அறிவோம். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்ரேல் நாட்டில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கற்கால மீனவ கிராமம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அங்குக் கிடைத்த அரிய பொருட்களை ஆராய்ந்து பார்க்கும் போது அந்த கிராமம் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அதிரடியாகக் காலி செய்யப் பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அந்த கிராமம் மாயமாய்ப் போனதன் காரணம் தெரியவில்லை.

இந்த நிலையில் இத்தாலிய அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் சிசிலித் தீவின் கிழக்குக் கரைப் பக்கமாக ஐயோனியன் கடலின் அடிப்பாகத்தில் ஆராய்ச்சி செய்த போது அது ஒழுங்கீனமாகக் கலைக்கப் பட்டிருப்பது தெரிந்தது. அப்படி இருக்கக் காரணம் என்ன என்று மேலும் ஆராய்ந்து பார்க்கும் போது சிசிலித் தீவில் உள்ள எட்னா என்ற எரிமலை பயங்கரமாக எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வெடித்து இருக்க வேண்டும், அதன் விளைவாக ஐயோனியன் கடலில் மிகப் பெரிய சுனாமி உருவாகி இருக்கிறது. அந்த சுனாமியின் அலைகள் ஏறக்குறைய ஐம்பது மீட்டர் உயரமாகவும், மணிக்கு 725 கிலோ மீட்டர் வேகமாகவும் கடலின் நான்கு பக்கங்களிலுள்ள கடற்கரைகளை கபளீகரம் செய்து விட்டது.

இன்றைய நாடுகளான கீரீஸ், எகிப்து லிபியா இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கடற்கரைகளைத் துவம்ஸப் படுத்தியிருக்கிறது இந்த சுனாமி. ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப் படி இந்தியப் பெருங்கடலில் 2004ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பேரழிவு ஏற்படுத்திய சுனாமியை விட மிகப் பெரியது.

இதயம் அதிர்கிறது அல்லவா? நமது வாழ்வில் தினம் தினம் நடப்பது தான் சரித்திரம் ஆகிவிடுகிறது. அதனால் நாம் செய்யும் செயல்களும், எடுக்கும் முடிவுகளும் உன்னதமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துச் செயலாற்றுங்கள்.

சரி, கதைக்குப் போவோம் வாருங்கள்.

கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தக் கதை மகா பாரதக் கதைகள். அதிலும் கிருஷ்ண லீலைகளைப் பற்றிப் படிக்க மிகவும் விருப்பம். என் குழந்தைகள் இன்றும் கண்ணனைத் தங்கள் நண்பனாகத் தான் நினைத்துக் கோண்டு செயல் படுவார்கள். அதாவது அவர்களது சுட்டித்தனத்திற்கு குழல் ஊதும் கண்ணன் தான் ஒரு நல்ல எடுத்துக்காட்டாம். கண்ணணப் பற்றிய கதைகள் இந்தியப் புராணங்களில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தனவோ, அந்த அளவு கிரேக்க இலகியங்களில் ஜுயஸின் லீலைகள் பிரபலமானவை. அதிலும் அவரின் காதல் லீலைகளைச் சொல்லும் ஏராளமான கதைகளில் மிகவும் சுவையானது ஐயோவின் கதை. ஐயோ ஒரு அழகான யுவதி. நதிக் கடவுளின் மகளான அவள் பூமியில் வசித்து வந்தாள். ஒரு நாள் ஜீயஸ் இந்தப் பெண்ணைக் கண்டு காதல் கொண்டார்.

தன்னுடைய காதல் லீலைகளைத் தன் மனைவி ஹேரா அறிந்தால் தன் மேல் சினம் கொள்வாள் என்று தெரிந்த ஜுயஸ் ஐயோவைத் தன் மனைவிக்குத் தெரியாமல் மணந்து கொண்டார். ஜுயஸ் தன் புது மனைவி ஐயோவைக் காண பூமிக்கு வரும் போதெல்லாம் இருண்ட மழை மேகங்களால் பூமியை மறைத்துவிடுவார். அதனால் இவர் பூமிக்குச் செல்வது ஹேராவிற்குத் தெரியாமல் இருந்தது. தீடீர் திடீர் என்று பட்டப் பகலில் இருண்ட மழை மேகங்களைக் கண்ட ஹேரா தன் கணவன் மேல் சந்தேகப்பட்டாள். அதனால் வானத்திலிருந்து இறங்கித் தன் கணவரை நாடிச் சென்றாள். தன் மனைவி தன்னை நாடி வருவதை அறிந்து கொண்ட ஜுயஸ் ஐயோவை ஒரு பசுவாக மாற்றி விட்டார். ஹேரா அவரை அணுகிய போது அவர் அந்தப் பசு மாட்டை ஆசையோடுத் தடவிக் கொண்டிருந்தார்.

கணவன் அருகே எந்த ஒரு பெண்ணையும் காணாவிட்டாலும் ஹேராவின் சந்தேகம் தீரவில்லை. அதனால் ஜுயஸை நோக்கி, "அன்பரே இந்த வெள்ளைப் பசு எவ்வளவு அழகாக இருக்கிறது? நீங்கள் எனக்கு இதைக் கண்டிப்பாகப் பரிசாகக் கொடுக்க வேண்டும்" என்று சொன்னாள். மனைவியின் ஆசையை மறுத்தால் தான் பிடிபட்டு விடுவோம் என்று ஜுயஸ் தன் மனைவி ஹேராவிற்குப் பசு உருவத்திலிருந்த ஐயோவைப் பரிசாகக் கொடுத்துவிட்டார்.

ஐயோவைப் பரிசாகப் பெற்ற ஹேரா ஆர்கஸ் என்ற நூறு கண்களை உடைய ராட்சஸனிடம் ஐயோவைப் காவல் காக்கும் படி உத்திரவிட்டு விட்டுச் சென்றுவிட்டாள். ராட்சஸனிடம் சிறைப்பட்ட ஐயோ மிகவும் துன்பப் பட்டாள். தன் குடும்பத்தினரை விட்டு வெகு தூரம் வந்து விட்டதை நினைத்து நினைத்து அழுதாள். ஒரு நாள் ஐயோ தன் தந்தையையும் சகோதரிகளையும் கண்டு அம்மா அம்மா என்று கத்தினாள். ஆனால் அவர்களுக்குத் தாங்கள் காணும் பசு தான் ஐயோ என்று புரியவே இல்லை. அவர்கள் அந்த இடத்தை விட்டுத் திரும்பிப் போக எத்தனிக்கும் போது ஐயோ தனது பெயரை கால்களால் மண்ணில் எழுதினாள் அதனால் அவளை அடையாளம் கண்டு கொண்ட அவள் குடும்பத்தினர் நூறு கண் கொண்ட ராட்சஸனிடமிருந்து அவளைக் காக்க முயன்றனர். ஆனால் ஆர்கஸ் அவர்களை விரட்டி அடித்துவிட்டான்.

ஐயோ படும் துன்பங்களைக் கண்டு வருத்தம் அடைந்த ஜுயஸ் தன் மகன் ஹெர்மஸை ஆர்கஸிடம் அனுப்பினார். எப்படியாவது ஆர்கஸிடமிருந்து ஐயோவைக் காப்பாற்றும் படி கட்டளையிட்டார். ஆனால் ஹெர்மஸ் என்ன செய்ய முடியும்? ஆர்கஸை அழித்தால் தாய் அவன் மேல் கோபம் கொண்டு சாபம் அளித்தாலும் அளிப்பார் ஐயோவைக் காப்பாற்ற வேண்டும் என்பது தந்தையின் கட்டளை. ஏதாவது தந்திரம் செய்து தான் ஆர்கசிடமிருந்து ஐயோவைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிய ஹெர்மஸ் ஒரு ஆடு மேய்பவன் வேடமிட்டு ஆர்கஸை அணுகினான். அவன் அருகில் சென்று ஒரே தொனியில் ஒரு மிகப் பெரிய நீளமான கதை சொல்லத் தொடங்கினான். கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் ஆர்கஸின் நூறு கண்களும் தானாக மூட ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான் ஆர்கஸ்.

ஹெர்மஸ் ஐயோவை விடுதலை செய்தான். ஐயோ விடுதலையானதைக் கண்ட ஹேரா சினம் கொண்டாள் ஆடு மாடுகளைத் துன்புறுத்தும் பூச்சியினத்தை ஐயோவின் மேல் ஏவிவிட்டாள். துரத்தி வரும் பூச்சிகளின் தொல்லைத் தாங்காத ஐயோ மலையிலிருர்ந்து கடற்கரைக்கு ஓடினாள். கடலில் குதித்து அதையும் தாண்டி எகிப்து நாட்டின் நைல் நதியை அடைந்தாள். அவளைத் தொடந்து அங்கு வந்த ஜுயஸ் பசுவாக இருந்த ஐயோவை மீண்டும் ஒரு பெண்ணாக மாற்றினார். அவளை ஹேராவின் சாபத்திலிருந்து காப்பதற்காகத் தான் மீண்டும் ஐயோவை சந்திப்பதில்லை என்று தன் முதல் மனைவிக்கு வாக்குக் கொடுத்தார். ஐயோ தாண்டி வந்த கடல் தான் ஐயொனியன் கடல் அவளின் பெயரைப் பறை சாற்றிக் கொண்டு இன்றும் இருக்கிறது. என்ன, ஐயோனியன் கடல் எங்கே இருக்கிறது என்று பூகோள வரை படத்தைப் பார்க்கப் போகிறீர்களா?

நம் பாரத நாட்டின் பெயருக்கு அதன் பெயர் வரக் காரணம் என்ன உங்களுக்குத் தெரியுமா? நம் புராணக் அக்தைகளில் வரும் நிலப்பரப்புகள் இன்னும் பூமியில் இருக்கிறதா? உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எங்களுக்குச் சொல்லுங்கள்.

The river Nile of Egypt - image courtesy: Wikipedia

தொடரும்...

அத்தியாயம் 5

YOUR FEEDBACK FOR THIS STORY
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Attach a File:

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


editor@mazhalaigal.com