மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE

Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

சின்னஞ் சிறு வைரமே

சுகந்தி

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
evening sky

காலாண்டுத் தேர்வின் விடுமுறையில் சுமதி தத்தா வீட்டிற்கு வந்திருந்தாள். ஒவ்வோரு விடுமுறைக்கும் சுமதி மதுரையிலிருந்து இப்படி வருவது வழக்கமே! சுமதி தன்னோடு வந்து தங்கியிருக்கும் தினங்கள் தாத்தாவிற்கு மிகவும் உற்சாகமான நேரங்கள். பேத்தியோடு சேர்ந்து தோட்டவேலை பார்ப்பதும் மாலையில் தினமும் இருவருமாகச் சேர்ந்து கோவிலுக்குச் செலவதும் ஒரு வழக்கமாகவே கோண்டிருந்தனர் தாத்தாவும் பேத்தியும். இன்றும் அப்படித்தான். சுமதியும் தாத்தாவும் கோவிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தனர். எப்போதும்அவர் நடக்க அவருக்கு இரண்டடி முன்னால் தட்டாமாலை சுற்றியபடி மான் குட்டி போல துள்ளித் துள்ளி நடந்து வரும் பேத்தி இன்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு அமைதியாக அவரோடு நடந்து வருவது தாத்தாவிற்கு ஆச்சிரியமாக இருந்தது.

சுமதி, அங்கே பார்த்தாயா? அந்த வீட்டுச் செம்பருத்திச் செடியில் எத்தனைப் பூக்கள் பார்! தாத்தா பேத்தியிடம் பேச்சுக் கொடுத்தார். அவருக்கு பதில் பேசாமலே சுமதி தீவிர யோசனையோடு வர தாத்தா கூர்மையாக, தன் பேத்தியின் குனிந்த தலையைப் பார்த்தர்.

பேத்தியின் தொங்கிய தலையும் துவண்டதோள்களும் அவருக்கு பேத்தியின் மனநிலையைப் பற்றி சான்று கூறின.

"என்ன சுமதி, விடுமுறை முடிந்து விட்டதே, தாத்தாவை விட்டுப் போக வேண்டும் என்று கவலையாக இருக்கிறதா?" என்று மென்மையாகக் கேட்டார்.

குனிந்த படியே தலை அசைத்து இல்லை என்றாள் சுமதி.

"அப்படியானால் என்ன சுமதி? விடுமுறையில் கொடுத்த வீட்டுப் பாடம் எதையும் நீ சரியாக செய்ய வில்லையா? இல்லை செய்ய மறந்து விட்டாயா?" பேத்தி யின் கவலையின் காரணம் அறிந்து கொள்ள முற்பட்டார் தாத்தா.

மெளனமாக தாத்தாவுடன் நடந்து வந்த சுமதி, தாத்தாவை நிமிர்ந்து பார்த்தாள்.அவள் கண்களில் நீர் குளம் கட்டியிருந்தது. தாத்தாவிடம் மனம் விட்டுப் பேச உதடு துடித்தது.

பேத்தியின் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீரைப் பார்த்த தாத்தாவின் மனம் துடித்தது. "என்னடா என்ன? செல்லம் என்ன வேண்டும்? தாத்தாவிடம் சொல்லு" என்று கனிவாகக் கேட்டார்.

அவருடைய வார்த்தைகளும், அன்பான பார்வையும் சுமதியின் சுயக் கட்டுப்ப்பாட்டை உடைத்தன. கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "தாத்தா, நான் மதுரைக்குப் போகலை. அப்பாகிட்ட சொல்லி என்னை இங்கேயே ஒரு பள்ளியில் சேர்த்து விட ச்சொல்லு தாத்தா. ப்ளீஸ் தாத்தா நான் அந்த பள்ளிக்குத் திரும்பிப் போக மாட்டேன் தாத்தா."

பேத்தி அழுவதைப் பார்த்ததும் தன்னோடு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு நடந்த தாத்தா வழியிலிருந்த ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். சுமதியின் தந்தையின் வேலையின் நிமித்தம் அடிக்கடி இடம் மாற்றலாகும். இந்த முறை மதுரைக்கு மாற்றலாகி ஜீன் மாதன் தான் சுமதி புதுப் பள்ளியில் சேர்ந்தாள் என்று தாத்தாவிற்குத் தெரியும். வழியெல்லாம் சுமதியை அமைதிப் படுத்திய தாத்தா ஒரு பெஞ்சில் இருவரும் உட்கார்ந்ததும், "சொல்லு சுமதி, ஏன் அந்தப் பள்ளிக்குப் போக மாட்டேன் என்கிறாய்? பாடங்கள் கடினமாக இருக்கிறதா?"

தாத்தா, அந்தப் பள்ளியில் யாருக்கும் என்னைப் பிடிக்கவே இல்லை. எனக்குத் தோழிகளே கிடையாது. என்னை எல்லோரும் கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்கள். எனக்கு அங்கு போகவே பிடிக்கவில்லை என்று மடமடவென்று சொல்லிய சுமதி மீண்டும் அழ ஆரம்பித்தாள். "இங்கே நான் கல்பனா படிக்கும் பள்ளியில் சேர்ந்து கொள்கிறேன், செல்வி, கல்பனா இருவருமே என்னுடன் எவ்வளவு ஆசையாக விளையாடுகிறார்கள்? நாங்கள் மூவரும் நல்ல தோழிகள். நான் இங்கேயே வந்து இவர்களுடன் படிக்கிறேன் தாத்தா, ப்ளீஸ் தாத்தா" அழுகையும் பேச்சுமாக தாத்தாவை கெஞ்சினாள் பேத்தி.

புதுப் பள்ளியில் நல்ல தோழிகள் அமையாமல் இருப்பதே தன் பேத்தியின் கவலை என்பதைத் தாத்தா புரிந்து கொண்டார். சுமதி தன்னுடன் இருந்து தங்கிப் படிப்பது என்பது அவரைப் பொறுத்தவரை ஒரு சுகமான அனுபவமே. ஆனாலும் பிரச்சனையிலிருந்து ஓடக் கூடாது என்பதை சுமதிக்கு அறிவுறுத்த நினைத்தார் அவர். அதனால் “சுமதி, நீ செலவது புது இடம், புது மனிதர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சிறிது காலம் ஆகும். நீ புத்திசாலிப் பெண், பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்”.

“ஆனால் தாத்தா, அவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்னை எப்போது பார்த்தாலும் கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்கள். நான் எவ்வளவு பொறுமையாக இருந்தாலும் ப்ரயோஜனமே இல்லை’ சுமதி பிடிவாதமாகச் சொன்னாள்.

தாத்தாவும் தன் பொறுமையை விட வில்லை. ஒருவர் உன்னைக் கிண்டல் செய்கிறார்கள் என்றால் அவர்களை விட ஏதோ ஒருவிதத்தில் நீ உயர்ந்தவளாய் இருக்கலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். நீயும் அவர்களைப் போலத்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்திவிட்டால் போதும். உன்னைப் புரிந்து கொண்டு நல்ல தோழிகளாக மாறி விடுவார்கள்” நிதானமாகப் பேசி, பேத்திக்குப் புரிய வைக்க முயற்சி செய்தார்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை” அவர்களுக்கு என்னைக் கண்டாலே எகத்தாளம். “நான் தான் எங்கள் வகுப்பிலேயே சின்னப் பெண்ணாம்? நான்காவது வகுப்புப் படிப்பதற்கு பதில் என்னை எல்.கே.ஜி.யில் போய்ச் சேர்ந்து கொள்’ என்று கிண்டல் செய்கிறார்கள். அறிவியல் ஆசிரியர் பூச்சி இனத்தைப் பற்றிப் பாடம் நடத்தும் போது “ சுமதியை மாதிரி என்று சொல்லிக் கிண்டல் செய்து சிரிக்கிறார்கள்." சொல்லும் போதே சுமதியின் கண்களில் மீண்டும் நீர் தளும்பியது.

தாத்தாப் புரிந்து கொண்டார். சுமதி இயறகையிலேயே உருவத்தில் சின்னவள் தான். பார்ப்பதற்குப் பொடியாகத்தான் இருப்பாள். ஆனால் படு சுட்டி, புத்திசாலி. நல்ல ஒழுக்கமான மாணவி. அதனால் அவளது முந்தையப் பள்ளியில் அவளை ட்புள் ப்ரொமோஷன் கொடுத்து ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பிற்கு மாற்றிவிட்டார்கள். புதிய பள்ளியில் புது ஆண்டு நான்காம் வகுப்பிலேயே சேர்த்துக் கொள்ள வகுப்பிலேயே அவள் தான் சின்னவள் என்பது சரியே! சுமதிக்கு தன் தோழிகள் அவளைக் கிண்டல் செய்வதை விட, தான் மற்றவர்களைப் போல இல்லாமல் உயரம் குறைவாக ஒல்லியாக இருக்கிறோம் என்னும் தாழ்வு மனப்பான்மையே அவளை மிகவும் குடைந்து எடுக்கிறது என்று தாத்தா நினைத்தார்.

"சுமதி, நீ என்னோடு வா" என்றபடி அவளை மீண்டும் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். கோவிலில் பிள்ளையாருக்கு முன்னால் சுமதியை நிறுத்தினார். பிள்ளையாரைப் பார் சுமதி, சுவாமியின் கழுத்தில் இருக்கும் அருகம்புல்லைப் பார். எந்தத் தாவரத்திற்கும் கிடைக்காத பெருமை ஒரு சின்னப் புல்லுக்குக் கிடைத்திருக்கிரது பார். உருவம் என்றுமே முக்கியத்துவம் பெற்றதில்லை. நம் உள்ளமும் நாம் செய்யும் செயல்களும் தான் முக்கியம். பேசிக் கொண்டே வந்தவர் தன் பேத்தியின் முகம் தெளியாததைக் கண்டு கொண்டு அவளை அணைத்தபடி வீட்டுக்கு அழைத்து வந்தவர் தன் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கேமண்ணைக் கீளறி ஒரு மண் புழுவைக் காண்பித்தார். பார் சுமதி, இந்த மண்புழுவை நாம் கவனிக்காமல் மிதித்து விடுகிறோம். பல பறவைகளின் உணவாகவே இது மாறிவிடுகிறது. மீன் பிடிப்பதற்குக் கூட இந்தப் புழுவைப் பலரும் பயன் படுத்துகிறார்கள். ஆனால் இதனுடைய அன்றாட வாழ்க்கையே என்னத் தெரியுமா? மண்ணைக் கிளறிக் கிளறி அதற்கு உயிருட்டுவது தான். தன்னைச் சூழ்ந்து கொண்டிருக்கும் ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைச் செய்து வருகிறது. அதனால் நீ உன் உருவ அமைப்பை நினைத்து வருத்தப் படாதே. நீ நிறைய சாதிக்கப் பிறந்தவள் என்று பெருமையாகச் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்தசுமதி பொறுமையிழந்தாள், "போங்கள் தாத்தா, நான் இதைப் போய்ப் பள்ளியில் சொன்னால் இது வரை அவர்கள் பூச்சி என்று கிண்டல் செய்தது போதாது என்று இனமேல் என்னை மண்புழு என்று வேறு கிண்டல் செய்வார்கள், உங்களுக்குப் புரியவே இல்லை” தாத்தாவின் கைகளை உதறி விட்டு வீட்டுக்குள் சென்றாள் சுமதி.

கோபமும் எரிச்சலுமாக வீட்டிற்குள் செல்லும் பேத்தியைப் பார்த்துக் கொண்டு நின்றார் தாத்தா.

சுமதியின் பிரச்சனை என்ன? மீண்டும் மீண்டும் தோழிகள் கிண்டல் செய்ததால் தன்னம்பிக்கை இழந்து நிற்கிறாள். குட்டக்குட்ட குனியத்தான் அவளுக்குத் தெரிந்திருக்கிறது. தன்னால் நிமிர முடியவில்லை என்ற ஆதங்கம் தான் அவளைப் பிரச்சனையிலிருந்து ஓட வைக்கிறது. தன்னம்பிக்கையுடன் சுமதி மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் அவளுக்கு சில தந்திரங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். என்பதைப் புரிந்து கொண்ட தாத்தா சுமதியை நாடிச் சென்றார். ஜன்னலோரம் நின்றபடித் தெருவை வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த சுமதி தாத்தா அவளை அணுகியதும், "ஏன் தாத்தா கடவுள் என்னை மட்டும் இப்படிப் படைத்துவிட்டார் ? நான் மட்டும் ஏன் இப்படி வித்யாசமாக தனியாக இருக்கிறேன்? மற்ற குழந்தைகளைப் போல நானும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்னை எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்ற பயமில்லாமல் நானும் அவர்களுடன் ஒருத்தியாய் விளையாடுவேன்தானே?". அவளுடைய குரலில் ஒரு இயலாமை இருந்தது.

சுமதி, "கடவுள் உன்னை ஏன் உருவத்தில் சின்னதாகப் படைத்தார் என்று எனக்குத் தெரியுமே" என்று சிரித்தப்டி சொன்னார் தாத்தா?

"என்ன?" ஆச்சரியமாகக் கண்கள் மலர, தாத்தாவைப் பார்த்தாள் சுமதி. "ஆமாம், நீ உருவத்தில் சின்னதாய் இருப்பதற்குப் பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது, என்னுடன் வா சொல்கிறேன்" என்றவர் நடு வீட்டில் நிற்க வைத்துவிட்டு, தன் அறைக்குள் சென்று வந்தார். அவர் கைகள் மூடியிருந்தன. "இதோ என் கைகளுள்" ஒரு சிறுப் பெட்டியை எடுத்து வந்தார். கைக்குள் அடங்கிய அந்தப் பெட்டியை சுமதியின் கைக்குள் வைத்தார்.

கையை விரித்துப் பார்த்த சுமதி புரியாமல் தாத்தாவை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் கையில் கருநீல வெல்வட் நிறத்தில் ஒரு சதுரவடிவ நகைப் பெட்டி. அவள் உள்ளங்கையில் அடங்கி உட்கார்ந்திருந்தது.

"திறந்து பார்" என்று தாத்தா சொன்னவுடன் மெள்ள அந்தப் பெட்டியைத் திறந்தாள். உள்ளே சின்னதாய் இரண்டு வைரக் கம்மல்கள் மின்னின. கண்களைப் பறிக்கும் ஜொலிப்பு சுமதியின் சிந்தனையைக் கவர்ந்தது.

"தாத்தா, இது ரொம்ப அழகாயிருக்கே, இது யாருடையது?" "இது உன்னுடைய இறந்து போன பாட்டியின் வைரக் கம்மல்கள். இந்த வைரங்களைப் பற்றி உனக்குத் தெரியும் தானே! வைரம் என்பது ஒரு விலை மதிக்க முடியாத பொருள். ஒரு வைரததைப் போல இன்னொரு வைரமும் இருப்பதில்லை. இந்த வைரத்தைப் பார்த்து ஒன்று புரிந்து கொள். ஒரு சில அரிய விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் சின்னப் பெட்டிக்குள்ளே அடங்கி விடுகின்றன. சின்னப் பெட்டிக்குள் அடங்கி விடுவதனாலேயே அதன் மதிப்புக் குறைந்து விடுவதில்லை. இந்த வைரத்தைப் போல் நீயும் உருவத்தில் சிறியதாய் இருந்தாலும், நீ பல அரிய பெரிய சாதனைகள் செய்யப் பிறந்திருக்கிறாய் மறக்கவே மறக்காதே" என்று சொல்லிவிட்டு, "உன்னை யாராவது கிண்டல் செய்தால் special things come in small packages என்று பதிலடி கொடுத்துவிடு புரிந்ததா?"

"தாத்தா கேட்க பளீரென்று சிரித்தபடி சுமதி சொன்னாள், "ஓ நன்றாய் புரிந்ததே, நம் திருக்குறளைப் போல நானும் ஒரு தனி மகத்துவம் பெற்ற சின்னப் பெண்ணாக்கும்" என்று சொல்லிவிட்டு, "special things come in small packages. special things come in small packages" என்று பாடியபடியே ஆடிக் கொண்டு விளையாடச் சென்றாள் அந்தச் சின்னஞ்சிறு வைரம்.

சுகந்தி

YOUR FEEDBACK FOR THIS ARTICLE
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Attach a File:

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com