மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

புதையல் பெட்டகம்

அத்தியாயம் 5 - எஸ்.வி.என்.

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
Mount olympus - Greek Mythology, Image courtesy: Wikipedia

அன்புக் குழந்தைதைகளே!

கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடிக் கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பழங்கால கிரேக்கக் கதைகள் இயற்கைக்கு மனிதன் பயப்படும்படியாகவே கருத்துக்கள் கொண்டதாகவே அமைகிறதே ஏன் என்று தோன்றுகிறதா? இயற்கையை வழிபடுவதே வாழ்க்கை நெறியாக கிரேக்க இலக்கியங்களில் போதிக்கப்படுகிறதே என்று யோசிக்கிறீர்களா? மனிதனின் மனநிலை அப்படிப்பட்டது. வாருங்கள் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். இது இன்று நடக்கும் கதை.

சென்னையில் ராயபுரம் அருகில் வண்ணாரப்பேட்டை என்ற இடம் என் தாய் வழி ஆச்சி வசித்த இடம். எனது ஆச்சியிடம்தான் நான் சிறுவயதில் வளர்ந்தேன். அங்குதான் பள்ளிக் காலங்களில் என் கோடை விடுமுறையைக் கழிப்பேன். சிங்காரத் தோட்டத்தின் குறுகிய சந்துகளில் ஆட்கள் நடமாடுவதற்கே இடமிருக்காது. மாட்டு வண்டிகள், சைக்கிள் ரிக் ஷாக்கள் என்று சாலையை அடைத்துக் கொண்டு இருக்கும். அது போதாது என்று சாலையைக் கடக்கும் மக்கள், விலங்குகள் என்று சாலை ஓரங்களில் பொதுச் சுகாதாரம் பற்றிக் கவலைப் படாமல் தெருவோரங்களில் சீறுநீர் கழித்து வைப்பர். எத்தனை முறை சொன்னாலும் யாரும் கேட்க மாட்டார்கள். சுவர்களில் சீறுநீர் கழிக்காதீர் என்று எழுதி வைத்தாலும் யாரும் மதிப்பதில்லை. காலப்போக்கில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் சிங்காரத் தோட்டம் நான்காவது சந்து அதே நிலையில் இருந்தது. கல்லூரிக் காலங்களில் என் நண்பர்களை, தோழிகளை அந்தப் பக்கம் அழைத்து வைப்பதற்கே அவமானமாக இருக்கும். இந்த நிலையில் ஐந்து, ஆறு வருடங்களூக்கு முன்னால் எங்கள் ஆச்சி வீட்டை முழுமையாகப் புதுப்பிக்க வேண்டிய நிலை வந்தது. நான் அந்நேரம் அமெரிக்காவில் வசித்து வந்தேன். புது மனை புகு விழாவிற்கு ஆவலோடு சென்றேன். ஆனாலும் அசுத்தமான தெருவை என் குழந்தைகள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற யோசனையாக இருந்தது.

Greek Mythology, Image: Garden
புது வீட்டின் வாசல் ஒரு பொதுக் கழிப்பிடமாக மாறுவதைத் தற்போது அங்கு வசித்து வரும் என் மாமாவும் அத்தையும் விரும்பவில்லை. அதனால் வீட்டின் முன்னால் தாங்களே செலவு செய்து ஒரு அழகான பூந்தோட்டம் போட்டார்கள். ஒரு பூந்தோட்டத்தை அழிக்க யாரும் முன் வரமாட்டார்கள் என்பது அவர்கள் எண்ணம். அந்தோ பரிதாபம். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. இரண்டு வாரங்களில் அந்த அழகிய பூந்தோட்டம் ஒரு குப்பைக் கிடங்காக மாறியது. அதைப் பரமாரிக்க அருகில் செல்லக் கூட அருவருப்பாக இருக்கும். அப்படி அந்தப் பூந்தோட்டத்தை மாற்றிவிட்டனர். நம் பொது ஜனங்கள் என்று ஃபோனில் சொன்னார் என் மாமா. அவர் குரலில் ஏகப்பட்ட வருத்தம். இதே நிலையில் கடந்த ஆண்டு நான் சென்னை வந்திருந்த போது ஒரு ஆச்சிரியத்தைக் கண்டேன்.

அழகிய பூந்தோட்டம் மீண்டும் புதுபிக்கப்பட்டு இருந்தது. மாடுகள் மேயா வண்ணம் முள் வேலி போடப்பட்டிருந்தது. பார்ப்பதற்கே வண்ணமயமாக மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது அந்தப் பூந்தோட்டம். அதற்குக் காரணம் அந்த சிறு இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள என் மாமாவும் அத்தையும் செய்த மந்திர தந்திரம் தான். என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா? சுவர்களில் பல மதத்தினரின் சின்னங்களையும் அந்தந்த மத நூல்களிலிருந்து நல்ல வாசகங்களையும் எழுதி வைத்தனர். அதை எல்லாம் விட சாலை ஓரத்தில் தோட்டத்தின் எல்லைக் கற்களைப் போலக் கருங்கற்களை ஆங்காங்கே பதித்து அவற்றிற்கு மஞ்சள் வர்ணம் அடித்து நடுவில் சிவப்பு வர்ணம் அடித்து வைத்து விட்டார் என் அத்தை.

பார்ப்பதற்கு ஒரு புனிதமான இடம் என்ற கருத்தை அங்கு வாழும் பொது ஜனங்களின் மனதிலும் அங்கு நடமாடும் மற்றவர்களின் மனதிலும் மென்மையாகப் பதிய வைத்து விட்டார் அவர். இதனால் அந்த இடத்தில் இயற்கை மதிக்கப்படுகிறது. மனித மனம் சாந்தமடைகிறது. இந்தக் கதையை எதற்குச் சொல்கிறேன் என்றால் இருபத்தி ஓராம் நூற்றாண்டுகளில் கூட மனிதனுக்கு இயற்கையை மதிக்க முதலில் ஒர் பயத்தை உருவாக்க வேண்டியிருந்தது. அதைத்தான் நமது உலகின் பல சமயங்கள் சொல்லுகின்றன. அவை சொல்லும் விதம் வேறாக இருந்தாலும் கருத்து ஒன்று தான். உலக வரலாற்றில் ஒரு சில குறிப்பிட்ட இயற்கையின் சீற்றத்திற்குப் பழம் பெரும் மதங்கள் ஒவ்வோரு விதமாக விளக்கம் கொடுக்கின்றன. ஆனால் அதன் சாரம் ஒன்று தான்.

பிரளய காலத்தில் மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்ததாக இந்துப் புராணங்கள் சொல்கின்றன. நோவா என்னும் மனிதன் கடவுளின் ஆணைப் படி ஒரு பெரிய கப்பலைக் கட்டி அதில் எல்லா வித உயிரினங்களின் ஒவ்வொரு ஜோடியை ஏற்றிச் சென்றதாகப் பழைய ஏற்பாட்டிலும் யூத மதத்திலும் சொலப்படுகிறது. இன்று இல்லாமலே அழிந்து போன கிரேக்க மதம் தன்னுடைய கதைகளில் பிரளய காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

டியூகலியனும் ஃபைராவும்

பண்டோரா திறந்த குடுவையிலிருந்து வெளியேறிய துர்குணங்கள் மனிதர்களைப் பல காலம் ஆட்டிப் படைத்தன. தான் மக்களுக்குக் கொடுத்த தண்டனையை ஏற்று மனிதன் மாறிவிட்டானா என்று தெரிந்து கொள்ளக் கடவுளர் ஜீயஸ் ஆசை கோண்டார். அதனால் ஒரு பயணியைப் போல மாறு வேடம் தரித்துக் கொண்டு பூமிக்குச் சென்றார். அங்கு ஒவ்வோரு மனிதனும் நடந்து கொள்ளும் விதத்தைக் கண்டு கோபம் கொண்டார் அவர். பூமியில் வாழும் மனிதர்கள் கடவுள் என்ற ஒரு சக்தியையே மறந்து விட்டனர். இயற்கையின் செல்வங்களைப் பேராசை பிடித்த ஒரு சிலரே அனுபவித்து வந்தனர். ஒருவரை ஒருவர் நித்தித்தும் துன்பப் படுத்தியும் வாழ்ந்து வந்தனர். பூமியைச் சுரண்டி பல உலோகங்களைச் சுரண்டி அதை ஆயுதங்களாகி ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டிருந்தர். இதை எல்லாம் கண்ட ஜீயஸ் மனித இனத்தின் மீது மிகுந்த கோபமும் வருத்தமும் கொண்டார்.

கோபத்தோடு ஒலம்பஸ் மலைக்குச் சென்ற அவர் மற்ற கடவுளர்களைக் கூட்டினார். இந்த பூமியில் வாழும் மனித இனத்தைப் பூண்டோடு அழிக்கும் காலம் வந்து விட்டது. இவர்கள் இயற்கையை நித்திப்பது மட்டுமல்ல, அதைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி புரிவதை விட்டு விட்டு ஒருவரை ஒருவர் அழிக்கப் பார்க்கிறார்கள். இவர்கள் இந்த பூமியில் இருப்பதற்குத் தகுதியில்லாதவர்கள். இவர்கள் அனைவரையும் நான் வேரோடு அழிக்கிறேன். என்று கோபக் கர்ஜனை செய்தார்.

மனித இனத்தைப் பூண்டோடு எப்படி அழிப்பது என்று அவர் யோசனை செய்தார். முதலில் தன் சூலாயுதத்தைக் கொண்டு பூமியில் இடி மின்னலை உருவாக்கி, பூமியைத் தீப்பிடித்து எரியச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதே நெருப்பு கடவுளர்கள் வாழும் ஒலம்பஸ் மலையையும் சூறையாடி விடும் என்ற காரணத்தால் அந்த எண்ணத்தைக் கைவிட்டார். மற்றக் கடவுளரான போசிடியனுடன் கலந்தாலோசிக்க ஆரம்பித்தார். இதே நேரத்தில் பூமியில் மலையோடு கட்டப்பட்டிருந்த ப்ரோமோதியஸ் தன் ஈரலைக் கொத்தித் தின்ன வரும் கழுகோடு தினம் தினம் போராடிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டு செல்லவென்று அவனுடைய மகன் டியூகலியன் அந்த மலை உச்சிக்கு வந்தான். தந்தைக்குத் தொந்தரவு கொடுக்கும் கழுகோடு போராட முயன்றான்.

அவனைத் தடுத்த ப்ரோமோதியஸ், “மகனே, நான் சொல்வதைக் கேள். எனக்கு ஜூயஸைப் பற்றித் தெரியும். அவன் மனித இனத்தின் மேல் மிகுந்த கோபத்துடன் இருக்கிறான். என்னால் எதிர்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்சிகளை என் ஞானக்கண்ணால் காண்கிறேன். அதனால் நான் சொல்வதைக் கேள். ஜீயஸ் போசிடியனுடன் சேர்ந்து இந்த பூமியில் ஒரு பெரு வெள்ளத்தை உண்டாக்கி மனித இனத்தை அழிக்க உத்தேசித்து இருக்கிறான். அதனால் நீ உடனே வீடு திரும்பிச் சென்று உன்னைக் காத்துக் கொள்ளும் வழிகளைப் பார். என்னைப் பற்றிக் கவலைப் படாதே என்று சொல்லித் தன் மகனை அனுப்பினான்.

தந்தை சொல்படி வீடு திரும்பிய டியூகலியன் தன் மனைவியுடன் இணைந்து தான் உயிர் வாழ்வதற்கான ஏற்பாட்டைச் செய்தான். மரக்கலம் கட்டி அதில் தேவையான பொருட்களையும் உணவையும், ஆடு மாடுகளையும் அடைத்தான். அவர்கள் தாயாராகி நின்ற அதே சமயத்தில் வானம் இடி மின்னலோடு முழங்க ஆரம்பித்தது. ஜீயஸ் தெற்குக் காற்றை வீச, கரும் மழை மேகங்கள் பூமியைச் சூழந்தன. டியூகலியனும் அவன் மனைவி •பைராவும் தங்களுடைய மரக்கலத்திற்கு விரைந்தனர். மழை கொட்டோ கொட்டு என்றுக் கொட்ட ஆரம்பித்தது.. ஆறு, குளம், ஏரி என்று எல்லா நீர் நிலைகளும் நிறைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெருவெள்ளம் அங்கும் இங்கும் முட்டி மோதி ஓடுவது கடலே பூமிக்குள் நுழைந்து விட்டது போலத் தோன்றியது. மழை பெய்யப் பெய்ய நீரின் அளவு மேலே உயர்ந்து பூமி வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தது. கட்டடங்கள், கோவில்கள், விளைநிலங்கள், ஆடு, மாடு, பறவைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பூமியில் இருந்த எல்லாமே வெள்ளத்தில் அடிபட்டு அழிந்து போயின. ஆங்காங்கே ஒரு சில மலை உச்சிகள் மட்டும் தெரிந்தன. மழை பெய்யப் பெய்ய வெள்ள நீர் உயர்ந்து கொண்டே போனது.

டியூகலியனும் •பைராவும் தங்கள் மரக்கலத்தில் ஒன்பது நாட்கள் மழை வெள்ளத்தில் தவித்தனர். கடைசியில் பரானஸ் என்ற மலை உச்சியில் அவர்களுடைய மரக்கலம் நின்று போனது. மழையும் நின்று போனது. வெள்ள நீர் மெள்ள மெள்ள வடிய, கணவனும் மனிவியும் தங்கள் மரக்கலத்தை விட்டு வெளியே வந்தனர். இந்தப் பாழும் பூமியில் வேறு உயிரினங்களே இல்லை என்று தன் மனைவி •பைராவிடம் சொன்ன டியூகலியன் அங்கு அழிந்து போயிருந்த ஜீயஸின் கோவிலுக்குச் சென்று அவரை வழிபட்டனர். தங்கள் தவறுகளுக்காகத் தங்களை மன்னிக்கும்படி வேண்டிய அவர்கள் தங்களைக் காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றியும் கூறினர். தனிமையின் கொடுமையிலிருந்து தங்களைக் காக்கும்படி அவரிடம் வேண்டினர். இவர்கள் மேல் இரக்கம் கொண்ட ஜியஸ் தன்னுடைய தூதுவனான டைட்டனை அவர்களிடம் அனுப்பினார். தனிமையிலிருந்த கணவன் மனைவியை அணுகிய டைட்டன் ”நீங்கள் தலையைத் தூணியால் மூடிக் கோண்டு உங்கள் தாயின் எலும்புகளை உங்கள் முதுகுப் பக்கமாகப் போட்டால் உங்கள் தனிமைத் துயர் நீங்கும் என்று ஜீயஸ் சொல்லச் சொன்னார்". என்றான். ஜியஸ் தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று கணவன் மனைவிக்குத் தெரியவில்லை. தாயின் எலும்புகளை எங்கே போய் தேடுவது? ஜீயஸ் தங்களைத் தந்திரமாக ஏமாற்றுகிறாரோ என்று இருவரும் எண்ணினர். ஆனால் டியூகலியன் ப்ரோமோதியஸின் மகனாயிற்றே. அவன் சிந்திக்க ஆரம்பித்தான்.

டைட்டன் சொன்ன புதிர் அவனுக்கு விளங்க ஆரம்பித்தது. பூமி தான் நம் தாய். அவளின் எலும்புகள் என்றால் பாறைகள் என்று முடிவுக்கு வந்தவன். தன் தலையைத் துணியால் மூடிக் கொண்டு குனிந்து பாறைகளை எடுத்துத் தன் தோள் புறமாகத் தன் பின்னால் வீசினான். அவன் மனைவி •பைராவும் தன் கணவனைப் பின் தொடர்ந்து பாறைகளை வீசினாள். டியூகலியன் வீசிய பாறைகள் ஆணாகவும் •பைராவீசிய பாறைகள் பெண்ணாகவும் மாறின. இப்படியாக பூமியில் புதிய மனித இனம் உருவானது. கல்லைப் போல மனவலிமையும் உடல் வலிமையும் கொண்ட மனிதர்கள் நம் பூமியை மீண்டும் செம்மைப் படுத்த ஆரம்பித்தனர்.

பிரளய காலங்களைப் பற்றிப் பழம் பெரும் சமயங்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்தோம். நீங்கள் படிக்கும் அறிவியல் பாடத்திலும் பூகோளப் பாடத்திலும் பிரளய காலம் பற்றி என்ன தெரிந்து கொண்டீர்கள் சொல்லுங்களேன்.

Greek Mythology, Prometheus - image courtesy: Answers.com

தொடரும்...

அத்தியாயம் 4 அத்தியாயம் 6

YOUR FEEDBACK FOR THIS STORY
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Attach a File:

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


editor@mazhalaigal.com