தாயென்று கும்பிடடி பாப்பா
- புதையல் பெட்டகம் - 4
எஸ்.வி.என்.
பண்டோரா
வணக்கம் குழந்தைதைகளே!மனிதனின் வாழ்க்கையே கடவுளர்களின் விளையாட்டுத்தான் இல்லையா? உலகில் வாழும் ஒவ்வொருவரும் பொதுவான சில நியதிகளை இயல்பாகவே மதித்து வாழ வேண்டும். அப்போது தான் உலகின் இயக்கம் சீராக இருக்கும். அப்படிபட்ட நியதிகளில் முதலாவது, இயற்கையை மதித்து வாழ வேண்டும். இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும். மனிதர்கள் இயற்கையை மதிக்காவிட்டால் என்ன ஆகும் என்று இந்த நூற்றாண்டுக் குழந்தைகளான உங்களுக்குத் தெரிந்திருக்கும். மாசு படிந்த இயற்கையின் விளைவை நாம் தினம் தினம் இன்று அனுபவிக்கிறோம். நவ நாகரிகத்தின் உச்சியில் நின்று கொண்டு தொழில் நுட்பங்களால் நாம் வாழ்வை மேம்படுத்திக் கொண்டு வாழும் நாம் இயற்கையை மறந்து, இயற்கைத் தாய்க்கு எதிராக நடப்பதின் விளைவைக் கண் கூடாகக் காணும் நீங்கள் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இருக்கிறீர்கள். ஆனால் நாகரீகம் தோன்றிய பழமையான கிரேக்கர் காலத்தில் மக்கள் இயற்கையை மதிக்க வேண்டும் என்பதை எப்படிப் புரிய வைத்தார்கள்? இயற்கையோடு ஒன்றி மட்டுமே வாழ வேண்டும் என்பது அவர்கள் இரத்தத்தோடு கலந்து இருந்தது. அது எப்படி? இயற்கையையே கடவுளாக்கி, அவருக்கு மனிதனுக்கும் மேலான சக்திகளைக் கொடுத்து, கோபத்தோடு தண்டிக்கும் உரிமையையும் கொடுத்துப் புனையப்பட்ட கதைகள் தான் பழங்கால கிரேக்க மக்களுக்குக் கேள்வி கேட்காமல் இயற்கைக்கு அடங்கி வாழ வழி வகுத்தது.
ப்ரோத்தியசைத் தண்டித்த ஜீயஸ், மனிதனை மட்டும் தண்டிக்காமல் விட்டு வைப்பாரா? வாருங்கள் அவருடையத் தந்திரங்கள் என்ன என்று பார்க்கலாம்.
பண்டோரா
ப்ரோமேத்தியசிடமிருந்து நெருப்பை வாங்கிய மனிதனை எப்படி தண்டிப்பது என்று யோசித்த ஜீயஸ் தந்திரமான வேலை செய்தார். தன் மகன் ஹெபாஎஸ்டெஸை அழைத்து உலகின் முதல் பெண்ணை உருவாக்கச் சொன்னார். அவனும் பெண் கடவுளர்களைப் பிரதிபலிக்கும் ஒரு பெண்ணை உருவாக்கினான். நான்கு திசையிலிருந்து வந்த காற்று அந்த உருவத்திற்கு உயிர் கொடுத்தது. அதன் பின் ஒவ்வோரு கடவுளர்களும் தங்கள் பரிசாக ஒவ்வொன்றை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தனர். அவளைத் தங்கம் வெள்ளி நகைகளால் அலங்கரித்து அழகு படுத்தினர். அந்தப் பெண்ணுக்கு பண்டோரா என்று பெயரிட்டனர். அப்படி என்றால் அனைத்தையும் பரிசாகப் பெற்றவள் என்று பொருள்.
அவள் பூமிக்குச் செல்லும் முன்னால் ஜீயஸின் முன்னால் நிறுத்தப்பட்டாள். ஜீயஸ் அவளுக்கு வல் என்ற குணத்தைப் பரிசாகக் கொடுத்தார். அதோடு இறுக்கி மூடப்பட்ட ஒரு குடுவையையும் அவளிடம் கொடுத்து, இதை எந்தக் காரணம் கொண்டும் நீ திறக்கக் கூடாது என்று அவளுக்குக் கட்டளை இட்டார். அதன் பின் பண்டோராவை எப்பிமித்தியஸுக்குப் பரிசாக அனுப்பி வைத்தார். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. மனிதனின் தண்டனையை அவனிடமே தந்திரமாக அனுப்பியாகி விட்டது. இனி அவன் தண்டனையை அனுபவிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டியது தான்.
அழகான பெண்ணைக் கண்ட எப்பிமேத்தியஸ் அவளைத் தன் மனைவியாக்கத் துடித்தான். ப்ரோமேத்தியஸ் தன் தம்பிக்கு ஜீயஸைப் பற்றி எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். பண்டோராவின் அழகில் மயங்கி அவன் தன் சகோதரனின் புத்திமதியைக் கேட்கவில்லை. எப்பிமேத்தியஸ் பண்டோராவை மணந்து தன் மனைவியாக்கிக் கொண்டான். எப்பிமெத்தியஸின் மனைவியாக பண்டோரா மகிழ்ச்சியாக இருந்தாலும் அவள் உள்ளம் அவ்வப்போது குறுகுறுத்தது. ஜீயஸ் “திறக்காதே” என்று சொல்லிக் கொடுத்த குடுவையில் என்ன தான் இருக்கும் என்று அறிய அவளுக்கு ஆவலாய் இருந்தது. அந்தக் குடுவைக்குள் கண்டிப்பாக ஒரு அதிசயமான பொக்கிஷம் இருக்கிறது என்று அவள் நம்பினாள். அந்தக் குடுவையைத் தாண்டிச் செல்லும் போதெல்லாம் அவளது இதயம் வலில் படபடத்தது. எவ்வளவு முயன்றும் அவளது ஆவலை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் ஒரு முழுவதுமாய் அந்தக் குடுவையைத் திறக்கப் போவதில்லை. திறக்கப் போவதில்லை என்று அவள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டாலும் குடுவையைக் கொஞ்சம் திற்ந்து அதற்குள் என்ன இருக்கிறது என்று மட்டும் பார்த்தாலொன்றும் தவறு இல்லை என்று அவள் நினைக்க ஆரம்பித்தாள்.
அந்த யோசனை மெள்ள மெள்ள அவள் மனதுக்குள் வளர்ந்து அந்தக் குடுவையைத் திறந்தே பார்க்க வேண்டும் என்ற நிலைக்கு அவள் வந்தாள். நான் குடுவையின் மூடியை மெள்ளத் தூக்கிப் பார்க்கிறேன். முழுவதுமாகத் திறக்காமால் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்தவுடன் மூடி விடுகிறேன் என்று நினைத்து அந்தக் குடுவையைத் திறக்க முற்பட்டாள். அவள் நினைத்தது போல குடுவையை எளிதாகத் திறக்க முடியவில்லை. அதனால் மூடியை பலமாக இழுத்தாள். மூடி சட்டென்று திறக்க, குடுவையிலிருந்து நோய், பேராசை, கோபம், பொறாமை, துரோகம், மனக்கவலை, பழிவாங்குதல், இடையூறு, துரதிர்ஷ்ட்டம் ஆகியவை பேய் போல வெளியேறி அவளைச் சுற்றிச்சுற்றிச் சுற்றி வந்தன. பயந்து போன பண்டோரா குடுவையை அவசர அவசரமாக மூட முயன்றாள். ஆனால் அதற்குள் குடுவையை விட்டு வெளியேறிய துற்குணங்கள் பண்டோராவின் வீட்டை விட்டு வெளியேறி உலகத்தில் கலந்தன. ஒவ்வோரு மனிதனும் இந்த துர்குணங்களால் ஆட்கொள்ளப்பட்டான்.
மேலே ஜீயஸ் மனிதனைத் தண்டித்து விட்ட வெற்றியில் சிரித்தார். கஷ்ட்டப்பட்டு பண்டோரா குடுவையை மூடும் போது அதற்குள்அதிர்ஷ்ட்ட வசமாக நம்பிக்கை மட்டுமே இருந்தது. அதாவது உலகில் எத்தனை தீய குணங்களால் மனிதன் ஆட்டிப்படைக்கப் பட்டாலும் நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் எதையும் வெற்றி கொள்ள முடியும்.
சரி குழந்தைகளே இந்தக் கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்? நீங்கள் பண்டோராவின் நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? ஜீயஸின் வார்த்தையை மதித்து பண்டோரா குடுவையைத் திறக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
இன்னொன்று பார்த்தீற்களா? பைபிளிள் ஏவாள், கிரேக்கப் புராணத்தில் பண்டோரா? உங்களுக்குத் தெரிந்த மற்ற புராணங்களில் உலகின் முதல் பெண் எப்படிச் சித்தரிக்கப் படுகிறாள்? யோசியுங்கள்.
ஆழமாக யோசிக்க யோசிக்க உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை எழுதி அனுப்பிங்கள்.
தொடரும்...
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















