Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பொறுப்பு
சுகந்தி


Tamil story on responsibility and gardening - Image courtesy: Sweetgaldecals

“நான் ஊருக்குப் போய் என் பேத்தியைப் பார்த்துவிட்டு வர வேண்டும். முடிந்தால் அவளையும் என்னுடன் கோடை விடுமுறைக்கு அழைத்து வரலாம் என்று நினைக்கிறேன். ஆனால் என் தோட்டத்தை ஒரு வாரம் எப்படி விட்டு விட்டுப் போவது என்று தெரியவில்லை”

பக்கத்து வீட்டு வரதராஜா தாத்தா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருப்பது அருகில் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த கல்பனாவின் காதில் விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டை அப்படியே விட்டு விட்டுத் தாத்தாவை நோக்கி ஓடினாள் கல்பனா.

“தாத்தா, தாத்தா, சுமதியை நீங்க போய்க் கூட்டிக்கொண்டு வரப் போறீங்களா?” ஆவலாகக் கேட்டாள் கல்பனா.

“ஆமாம்மா கல்பனா, அவளைப் போய்க் கூட்டிட்டு வரணும்ன்னு ஆசையா இருக்கு, ஆனால் என் தோட்டத்தை விட்டுட்டுப் போகணுமேன்னும் யோசனையாக இருக்கு” தாத்தா கல்பனாவை மென்மையாகப் பார்த்துப் புன்னகைத்தபடியே சொன்னார். அவருக்குக் கல்பனா என்றால் கொள்ளைப் பிரியம். மதுரையில் இருகும் அவர் பேத்தி சுமதியும் கல்பனாவும் ஒத்த வயதினர் நல்ல தோழிகளென்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

"தாத்தா தாத்தா, நான் உங்கள் தோட்டத்தைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போய்ச் சுமதியைக் கூப்பிட்டு வாங்க தாத்தா" ஆசையாகவும் ஆர்வமாகவும் சொன்னாள் கல்பணா.

"நீயா? நீயா என் தோட்டத்தைப் பார்த்துக் கொள்ளப் போகிறாய்?" என்று தாத்தா சிரித்தார். "நீ சின்னப் பெண்ணம்மா, வேண்டாம் விடு, பரவாயில்லை" என்றார் தாத்தா.

"ஆமாம் கல்பனா, நீ சின்னப் பெண், உன்னால் முடியாத வேலைகளை நீ இழுத்துப் போட்டுக் கொள்ளாதே. உனக்கு உதவி செய்யவும் நான் இருக்க மாட்டேன். வேலை விஷயமாக நான் பெங்களூர் செல்ல வேண்டும். தங்கைப் பாப்பாவைப் பார்த்துக் கொள்ளவே அம்மாவிற்கு நேரம் சரியாக இருக்கும்." கல்பனாவின் தந்தை அவளுக்கு அறிவுரைக் கூறினார்.

"பெரியவங்க நீங்க எப்பவுமே இப்படித்தான், சின்னப் பிள்ளை சின்னப் பிள்ளை என்று எங்களை ஒதுக்குவது, அப்புறம் பொறுப்பே வரவில்லை என்று திட்டுவது" எட்டாவது படிக்கும் ஒரு மாணவி படபடவென்று பெரிய மனுஷி போல் பேசுவதைப் பார்த்த பெரியவர்கள் இருவரும் சிரித்தார்கள்.

"சரிம்மா, நீ தான் என் தோட்டத்தைப் பார்த்துக் கொள். நான் இரண்டே நாட்களில் வந்து விடுகிறேன்." வரதராஜா தாத்தா சொன்னார்.

"சார், கல்பனா தான் சின்னப் பிள்ளைத் தனமாக ஏதோ சொன்னாள் என்றால் நீங்களும் அவளுடைய விளையாட்டை நிஜம் என்று.." அவசரமாக மறுக்கப் போனார் கல்பனாவின் தந்தை.

"இல்லை இல்லை, எனக்குக் கல்பனாவின்மேல் நம்பிக்கை இருக்கிறது. அவள் ஒரு நாள் மட்டும் தோட்டத்திற்குத் தண்ணீர் விட்டால் போதும். நான் தான் இரண்டு நாட்களில் சுமதியோடு வந்துவிடுவேனே" என்ற தாத்தா, "என்ன கல்பனா, நீ என் தோட்டத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்வாய் தானே" தாத்தா கேட்க ஆர்வமாகத் தலையாட்டினாள் கல்பனா.

இப்படியாகத்தான் கல்பனாவிற்கு வரதராஜா தாத்தாவின் தோட்டத்தை இரண்டு நாட்கள் பார்த்துக் கொள்ளும் பொறுப்புக் கிடைத்தது. தாத்தா ஊருக்குப் போன முதல் நாள் கல்பனா மிகவும் ஆசையாய்த் தோட்டத்தில் தாத்தா சொன்னவேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். செம்பெருத்திச் செடிகளுக்கும் ரோஜாச் செடிகளுக்கும் தண்ணீரை ஊற்றி முடித்தாள். இன்னும் தாத்தாவின் வாழை மரத்திற்கும் கீரைத் தோட்டத்திற்கும் நீர் ஊற்ற வேண்டும். தாத்தா சொன்ன படி வாளியில் நீர எடுத்துத் தண்ணீர் விடுவது கல்பனாவிற்கு மிகச் சிரமமாக இருந்தது. அதனால் நீர் பாய்ச்சும் குழாயைத் தண்ணீர்க் குழாயோடு இணைத்தாள். தண்ணீரைத் திறந்து மரத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தாள். அவள் பொறுப்பாகச் செயல் படுவதை நினைத்து அவளுக்கே பெருமையாக இருந்தது.

"கல்பனா, கல்பனா" என்று எதிர் வீட்டுச் செல்வி அழைத்தது கேட்டது. தாத்தாவின் வீட்டிற்கு வெளியே சுவர்ப் பக்கமாக செல்வி நின்றிருந்தாள் திரும்பிப் பார்த்தாள் கல்பனா, "என்ன செல்வி? என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.

"கல்பனா, இங்கே வாயேன், என் மாமா எனக்கு ஒரு பரிசு கொடுத்திருக்கிறார் அதை வந்து பாரேன்" ஆவலாக அழைக்கும் தோழியையும் தான் பிடித்திருந்த தண்ணீர்க் குழாயையும் ஒரு வினாடி பார்த்தாள். பின் தண்ணீர்க் குழாயை அப்படியே மரத்தடியில் போட்டுவிட்டுச் செல்வியிடம் என்ன என்று கேட்டுவிட்டு வந்துவிடுவோம் என்ற யோசனையோடு செல்வியை நோக்கி ஓடினாள்.

"என்ன செல்வி, என்ன சொல்? நான் தண்ணீரை அப்படியே விட்டு விட்டு வந்திருக்கிறேன் நான் போக வேண்டும்" கல்பனா செல்வியை அவசரப் படுத்தினாள்.

"இங்கே பார்" என்று செல்வி தன்னுடைய பிரிக்கப்படாத பரிசுப் பொருளைத் தூக்கிக் காட்டினாள்.

பளபளக்கும் வண்ணக் காகிதத்தில் சுற்றியிருக்கும் பெரிய பரிசுப் பொருளைப் பார்த்ததும் கல்பனாவிற்குத் தான் செய்து கொண்டிருந்த வேலை மறந்தே போயிற்று.

"சீக்கிரம் காகிதங்களைப் பிரி செல்வி, உள்ளே என்ன இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டபடியே கதவைத் திறந்து கொண்டு செல்வியிடம் ஓடினாள் கல்பனா.

தோழிகள் இருவருமாகச் சேர்ந்து பரிசைப் பிரித்தனர். உள்ளே ஒரு அழகான பெட்டி இருந்தது. அதனுள்ளே வண்ண வண்ண மணிகள் விதவிதமான வடிவங்களிலும் அளவுகளிலும் இருந்தன. அந்த வண்ண மணிகளை வைத்துக் கொண்டு சிறுமியர் என்ன என்ன செய்யலாம் என்றும், எப்படி அதைச் செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது. அதை இருவரும் ஆவலாகப் புரட்டிப் பார்த்தனர்.

"வா கல்பனா, நாம் இருவரும் சேர்ந்து கைகளுக்கு அலங்காரமாக ஒரே மாதிரியாக இந்த மணிகளை வைத்துக் கோர்க்கலாம்" என்று சுமதி அழைக்க அவளோடு ஓடினாள் கல்பனா. நிமிடத்தில் தான் செய்து கொண்டிருந்த வேலை அவளுக்கு மறந்தே போயிற்று.

சுமதி வீட்டில் அவளோடு விளையாட ஆரம்பித்தவள் அப்படியே அங்கு வந்த தோழிகளோடு விளையாடினாள். அவர்களோடு சேர்ந்து தொலைக்காட்சி பார்த்தாள். வரதராஜ தாத்தாவைப் பற்றிக் கூட அவள் நினைத்துப் பார்க்க வில்லை. இரவானதும் தன்னுடைய வீடு வந்து சாப்பிட்டு விட்டுத் தூங்கிவிட்டாள் கல்பனா.

விடிந்தவுடன் எழுந்தவளுக்கு நினைவிற்கு வந்தது சுமதி தான். இன்று சுமதி தாத்தாவுடன் மதுரையிலிருந்து வந்து விடுவாள். உற்சாகமாகப் படுக்கையை விட்டு துள்ளிக் குதித்தவளுக்கு அப்போது தான் நினைவு வந்தது. நேற்று அவள் அரைகுறையாக விட்டு விட்டு வந்த வேலை. தாத்தா வீட்டுத் தோட்டத்தில் தண்ணீரை அப்படியே விட்டு விட்டு வந்து விட்டது நினைவிற்கு வந்தது. வேகமாக வெளியே வந்து தாத்தா வீட்டிற்கு ஓடினாள். தாத்தா வீட்டுக் கதவு திறந்திருந்தது. தோட்டத்திற்கு ஓடினாள். அங்கே அவளுக்குஅதிர்ச்சி காத்திருந்தது. தோட்டம் முழுவதும் நீர் வீணாகி இருந்தது அவள் செல்வியோடு ஓடிய போது அவள் கதவை மூட மறந்து விட்டாள் போல. தோட்டத்திற்குள் மாடு வேறு புகுந்து விட்டிருந்தது. அதைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார் வரதராஜா தாத்தா.

Tamil story on responsibility and gardening - Artwork by mazalais kid N. Menaka
கல்பனாவிற்கு அழுகையாக வந்தது. தாத்தா அவள் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார். அது இப்போது கெட்டுப் போய் விட்டதே. அழ ஆரம்பித்தாள் கல்பனா. அவள் வந்து விட்டதை உணர்ந்த தாத்தா அவளைப் பார்த்துத் திரும்பினார். அவர் முகத்தைப் பார்க்கவே கல்பனாவிற்கு வெட்கமாக இருந்தது. இருந்தாலும் அவரைப் போய்க் கட்டிக் கொண்டாள். "தாத்தா என்னை மன்னித்து விடுங்கள், நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன். சுமதி விளையாட்டுப் பொருளைக் காட்டியதும் நான் எல்லாவறையும் மறந்துவிட்டேன். என்னுடைய பொறுப்பில்லாத தனத்தால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம். நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்" என்றபடியேஅழுது கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

சிறு குழந்தை அழுவதைத் தாத்தாவால் தாங்க முடியவில்லை.

அவள் செய்த தவறை அவளுக்குப் புரிய வைக்க எண்ணினார் தாத்தா.

"உனக்கு தண்டனை கொடுத்தால் என் தோட்டம் சீராகி விடுமா? உனக்குத் தான் தோட்ட வேலை என்றால் கசப்பாகி விடும். உள்ளம் உவந்து பொறுப்புக்களை ஏற்பதற்குத் தயக்கம் வந்து விடும்" என்றவர், உன் பொறுப்பற்ற செயலின் விளைவைப் பார்த்தாயா? எவ்வளவு நீர் வீணாகி இருக்கிறது. என் கீரைச் செடிகள் என்ன ஆகுமோ தெரியவில்லை. மாடு வேறு வந்து என் பூஞ்செடிகளைத் தின்று விட்டது. இது எல்லாம் உன்னுடைய பொறுப்பின்மையால் வந்தது. எனவே இந்த தோட்டத்தைச் சீர் படுத்தும் பொறுப்பும் உன்னுடையதே. நீ தோட்டம் சீராகும் வரை தினம் காலை மாலை இரு வேளைகளிலும் ஒரு இரண்டு மணி நேரம் எனக்கு வந்து உதவி செய்" என்று குரலில் கண்டிப்புடன் கூறினார் தாத்தா.

கல்பனாவிற்கு தாத்தா சொல்வது சரி என்று பட்டது. அதனால் அந்தக் கோடை விடுமுறை முழுவதும் தாத்தாவிற்குத் தோட்டத்தில் உதவி செய்தாள். கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் போது தோட்டக்கலை என்னும் ஒரு நல்ல பொழுது போக்கைக் கல்பனா கற்றிருந்தாள் என்று சொல்லவும் வேண்டுமா?

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button