Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அறிவன்
சுகந்தி


விளையாடிவிட்டு வந்த அறிவன் கிரிக்கெட் மட்டையை வாசலிலேயே வீசிவிட்டு வீட்டுக்கு உள்ளே நுழைந்தான்.அவன் காலுக்கடியில் பந்து உருண்டோடியது.

வேகமாக உள்ளே ஓடி வந்தவன் “ அம்மா பசிக்குது “ என்ற படி சப்பாட்டு மேஜையில் போய் உட்கார்ந்தான்.

“டேய் அறிவா, விளையாடிட்டு வந்ததும் கைகால் கழுவி விட்டு சாப்பிட வா என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்.” சமையலறயிலிருந்து வந்த அம்மா கோபப்பட்டார்.

அம்மா எப்பவுமே இப்படித் தான் கோபப் பட்டுக் கொண்டேயிருப்பாள்; அவளுக்கு வேறு வேலையே கிடையாது; சீக்கிரம் சாப்பிட்டு விட்டு டி.வி. பார்க்க வேண்டாமா அவன். முணுமுணுத்துக் கொண்டே கைகழுவச் சென்றான் அறிவன். இனி அப்பா வந்ததும் ஒரு பெரிய அறிவுரைப் படலமே நடக்கும். பெற்றோர் இருவரும் சரியான கழுத்து அறுவை. சலிப்புடன் உணவை உட்கொள்ள உட்கார்ந்தான் அறிவன்.

அறிவன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். தாய் தந்தையருக்கு ஒரே பிள்ளை. அதனால் எல்லாமே அவனுடைய உரிமை என்றே அவன் நினைப்பான். தான் செய்வது எல்லாமே சரி என்று நினைப்பான். அவனைப் பற்றி அவனுக்குத் தற்பெருமை அதிகம். மற்றவர்களை அலட்சியமாக நடத்துவான்.

சாப்பிட்டு விட்டுத் தொலைக் காட்சி முன்னால் உட்கார்ந்திருந்த மகனை ஏறிட்டுப் பார்த்தார் அலுவலகத்திலிருந்து உள்ளே வந்த அவன் தந்தை. தந்தையை அலட்சியமாக ஏறிட்டான் அறிவன். எதுவும் பேசாமல் உள்ளே சென்றார் தந்தை. அவரை வெற்றி கொண்டுவிட்டது போலப் பெருமிதம் கொண்டான் அறிவன். ஆனாலும் அம்மா ஏதாவது சொல்ல அடுத்த அட்வைசஸ் எப்போது வரும் என்று அவன் எதிர்பார்த்துக் கொண்டு அவர்களைச் சொற்களால் தாக்குவதற்குத் தயாராய் இருந்தான். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

மறுநாள் மாலை விளையாடச் செல்லும் போது அவனுடைய கிரிக்கெட் மட்டையைக் காணவில்லை. சரி இருக்கட்டும் என்று நினைத்தவனாய் விளளயாடச் சென்றான். மைதானத்தில் அணியினர் அனைவரும் கூடி இருந்தனர். அறிவன் தான் கடைசியில் வந்து சேர்ந்தான். மட்டையைத் தேடியதில் நேரமாகி விட்டது.

அருகிலிருந்த நண்பன் மூர்த்தியின் மட்டையை வாங்கிக் கொண்டு களத்தில் இறங்கினான். அன்று அவன் நன்றாக அடித்து விளையாடினான். அவுட் ஆகவே இல்லை. அவனுக்கே தன்னைப் பற்றிப் பெருமையாக இருந்தது. மூர்த்தியிடம் மட்டையைத் திருப்பிக் கொடுத்தவன் ஒரு நன்றி கூடச் சொல்லாமல் வீட்டுக்குத் திரும்பினான். மூர்த்தியின் முகம் களையிழந்து இருப்பதையும் அவன் கவனிக்க வில்லை. அவனுடைய மட்டையைத் தேடி கண்டுபிடிக்க வேண்டுமே! என்ற அவசரத்தோடு வீட்டிற்கு வந்தான்.

அவன் அழுது அடம்பிடித்து வாங்கிய அந்த விலை உயர்ந்த கிரிக்கெட் மட்டையை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த மட்டை தான் அவனுக்கு அணியின் தலைவன் என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்தது. மட்டையைப் பற்றிப் பெற்றோரிடம் கேட்க அவனுக்குத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. அம்மா அவனுக்குப் பொறுப்பில்லை என்று திட்டுவாள். அப்பாவோ இவன் அழுது அடம் பிடித்து வாங்கியதைச் சுட்டிக் காட்டுவார். அவனாகவே மட்டையைத் தேடிப்பார்த்தான். கிடைக்கவில்லை. என்ன செய்வது என்றே அறிவனுக்குத் தெரியவில்லை.

வரும் சனி ஞாயிறுகளில் அவனுடைய அணிக்கும் அடுத்து அடுத்து இருக்கும் இறண்டு அணிகளுக்கும் இடையில் அருகில் இரு போட்டி நடக்கவிருக்கின்றன. அறிவனை அவன் தலைவன் என்ற முறையில் அணியினர் மிகவும் நம்பி இருந்தனர். அறிவனோ தனது மட்டையை மிகவும் நம்பியிருந்தான். விலை உயர்ந்த அந்த மட்டையைக் கொண்டு அடித்தால் நிறைய ரன்கள் வரும் என்று நம்பினான். இப்போது என்ன செய்வது என்று அறிவனுக்குத் தெரியவில்லை.

மாலை விளையாடப் போன இடத்தில் அவன் மறுபடியும் மட்டை இல்லாமல் விளையாட வந்திருப்பதைப் பார்த்த அவனது அணியினர் அவன் மேல் எரிச்சல் பட்டனர்.

“டேய் போடா அறிவா, நீ போய் உன் மட்டையை எடுத்துக் கொண்டு வா. இல்லை என்றால் நாங்கள் விளையாடியதும் கடைசியில் விளையாடு. மட்டை இருப்பவர்களுக்குத் தான் முதல் வாய்ப்பு.”

“போடா நான் தான் கேப்டன். நான் தான் முதலில் விளையாடுவேன்” என்ற அறிவன் நின்று கொண்டிருந்தவனின் மட்டையைப் பிடுங்கினான்.

“அறிவா, இன்று முதல் ரவி தான் நம் அணிக்குத் தலைவன்.” என்றான் வினோத் என்ற அணியிலிருந்த ஒரு நண்பன்.

"ஆமாண்டா" என்று மற்றவர்கள் அவனை ஆமோதித்தனர். “ரவி நல்லா சுழல் பந்து போடுவான். அவன் நல்லா ஓடி ஓடி ரன்னும் எடுப்பான். உன்னை மாதிரி எங்களை விரட்டுவதும் இல்லை” என்றனர்.

அவமானமாக இருந்தது அறிவனுக்கு. “அப்படியானால் என்னை அணியிலிருந்து வில்க்குகிறீர்களா?” என்று கேட்டான்.

"இல்லை இல்லை. உன்னிடம் மட்டை இல்லை. அதனால் நீ கடைசியில் ஆடுபவனாக இரு" என்றனர். "நீ வேகமாகப் பந்தை அடிப்பாயே, அதனால் நீ கடைசியில் ஆடினால் நல்லது தானே" என்று அவனை சமாதனப் படுத்தவும் முயன்றனர்.

"நீங்களும் வேண்டாம், உங்கள் கிரிக்கெட்டும் வேண்டாம்." என்று ஆத்திரமாகக் கத்தி விட்டு அறிவன் வீட்டுக்கு ஓடி விட்டான்.

இரவு சாப்பிடாமல் சாதத்தை அளைந்து கொண்டிருந்த அறிவனை அவன் தந்தை யோசனையோடு பார்த்தார். "என்ன அறிவா? என்ன உடல் நலம் சரியில்லையா? என்று கேட்டார். எதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டிருந்தான் அறிவன்.

"என்ன அறிவா, உனக்குப் பள்ளியில் ஏதாவது பிரச்சனையா? மதிப்பெண்கள் குறைவாக வாங்கிவிட்டாயா? போனால் போகிறது அடுத்த முறை நன்றாகப் படி" என்றார் சாப்பாடு பறிமாறிக் கொண்டிருந்த தாய்.

நிலமை புரியாமல் பேசும் இருவரையும் பார்க்க அறிவனுக்கு எரிச்சல் தான் வந்தது. கையிலிருந்த சாதத்தை உதறிவிட்டு எழுந்து போய்த் தன் அறைக்குள் உட்கார்ந்தான். சிறிது நேரம் க்ழித்து அவன் தந்தை அவன் அருகில் வரும் போது அவன் அழுது கொண்டிருந்தான்.

அவன் தோளில் அன்பாய் கைவைத்த அவன் தந்தை, "அழாதே அறிவா? பிரச்சனைகளைக் கண்டு அழுதால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது."

அவர் கையைப் பட் என்று தட்டிவிட்ட அறிவன், "உங்களுக்க்கு எப்பவுமே எல்லாமே வெற்றி, வெற்றி, வெற்றி தான். ஏன் இப்படி வெற்றி வெறி பிடித்து அலைகிறீர்கள். தோல்வி அடைந்தால் என்ன? நல்லாப் படிக்கலைன்னா என்ன? முதல் ரேங்க் வாங்காட்டி என்ன? நான் தோத்துப் போனா உலகமா இடிஞ்சு விழுந்துடும்?" ஆத்திரமாகக் கத்தினான்.

மகனை அதிர்ச்சியுடன் பார்த்த தந்தை, "அறிவா, நாங்கள் சொல்வது எதுவும் உனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். நீ எங்களை வெறுக்கிறாய் அதனால் நான் உன்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஒன்று புரிந்து கொள். வெற்றி என்பது சான்றிதழ்களிலோ, தங்கக் கொப்பைகளிலோ இல்லை. நீ வாங்கும் மதிப்பெண்களிலும் இல்லை. செம்மறி ஆடுகள் போல் மற்றவர்களைப் பின்பற்றுவதால் வருவதல்ல வெற்றி. மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு உன் தனித் தன்மையோடு நீ சிந்தித்துச் செயல் பட வேண்டும். அது தான் உன்னுடைய வெற்றி. அது நீ செய்யும் ஒவ்வோரு செயல்களிலும் இருக்கிறது. நீ செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னையும் சந்தோஷப்படுத்தி உன்னைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துமானால் அது தான் வெற்றி." என்றவர் அங்கிருந்து வேகமாக நகர்ந்துவிட்டார்.

அறை வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அவனுடைய தாய் உள்ளே வந்து அவன் படுக்கை மேல் கிரிகெட் மட்டையை வைத்தார். அது நடுவில் பிளந்து இரண்டாக உடைந்து இருந்தது. இது தான் உன் கோபத்திற்கும் எரிச்சலுக்கும் காரணம் என்று நினைக்கிறேன். வாசலிலேயே நீ தினம் வீசி விடுவாய் நான் தான் அதை ஒழுங்காக எடுத்து வைப்பேன். அன்று மட்டை உடைந்து விட்டதைப் பார்த்தேன். தெரிந்தால் நீ வருத்தப்படுவாய் என்று நினைத்து உன்னிடம் சொல்லவில்லை. உனக்கு இன்னொரு மட்டை வாங்கித் தருமாறு உன் தந்தையிடம் இரண்டு நாளாக சொல்லிக் கொண்டிருந்தேன். நீ இன்று அவரையே எதிர்த்துப் பேசியது கண்டு என் மனம் மிகவும் வருந்துகிறது. இந்த ஆத்திரத்தாலும் கோபத்தாலும் பல நல்ல வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்." என்றவர், "நீ விளையும் பயிர் என்று நாங்கள் செய்த செயல்கள் எல்லாம் வீணாகி விட்டனவோ என்று தோன்றுகிறது." என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

திகைத்து நின்றான் அறிவன்.

அவன் தாய் அவனை எதற்கும் உதவாத ஒரு களைச்செடி என்று சொல்லாமல் சொல்லி விட்டாரே. அழுகையாக வந்தது அவனுக்கு, படுக்கை மேலிருந்த மட்டையை எடுத்துப் பார்த்தான். அவன் பொறுப்பில்லாமல் தினம் வீசி எறிந்து எறிந்து கீறல் விழுந்து, அதுவே மட்டை உடையக் காரணமாக இருந்திருக்கிறது. கண்களில் கண்ணீர் ஒழுக அதை எடுத்துப் பார்த்தான். அப்பா சொல்வது சரிதானே, அவனது பொறுப்பற்ற செயலாலே தோற்றுப் போய் நிற்கிறான். வாய்ப்புக்களை இழந்து நிற்கிறான்.

அடுத்த முறை அவனுக்கு எப்போது வாய்ப்பு வருமோ?

குழந்தைகளே, அறிவனின் செயல்களிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். செய்யும் ஒவ்வோரு சிறு வேலையையும் செவ்வனே செய்யுங்கள்

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button