-
விருந்து வருது
- நடராஜன் கல்பட்டு
விருந்து வருதா? வாண்டாம்பா நமக்கு இந்த வம்பு.
“ட்ரிங்... ட்ரிங்...” டெலிபோன் மணி அடிக்கிறது.
“ஏன்னா பக்கத்துலேயே ஒக்காந்துண்டு இருக்கேளே, டெலிபோன் அடிக்கறது காதுலெ விழல? எடுக்கக் கூடாதோ? அப்படி என்ன விஷயம் போட்டுருக்கான் பேபர்லெ, இப்படி அப்படி நகர முடியாதபடி?”
போனை எடுத்த நான், “ஹல்லோ. நான் ராஜன் பேசறேன். யாரு வேணும் உங்களுக்கு?”
“ராஜன் நான் தான் ஒன் பெரிப்பாவோட மச்சினியோட ஹஸ்பெண்ட் ராமு பேசறேன்.”
“அப்படியா? சொல்லுங்க மாமா. என்ன விசேஷம்? அபூர்வமா போன் பண்ணியிருக்கேளே”.
“ஒண்ணும் இல்லெப்பா. வர வாரம் மண்டே என் பேத்தி ஒத்தி ஒரு வேலேலெ ஜாயின் பண்றத்துக்காக மெட்ராஸ் வரா. அவ லேடீஸ் ஹாஸ்டல்லெ தங்கறதா இருக்கா. ஆனா நல்ல ஹாஸ்டலாக் கெடெய்க்கறத்துக்கு ஒரு வாரம் பத்து நாள் ஆகலாம். அது வரெய்க்கும் எங்க தங்கலாம்னு தவிச்சுண்டு இருந்தா. நாந்தான் சொன்னேன், நம்ம ராஜன் அங்கிள் இருக்கச்சே நீ ஏண்டி எங்க தங்கறதுன்னு தவிக்கணும்னு”
“மாமா, அதுலெ ஒரு சின்ன ப்ராப்ளெம் இருக்கே மாமா.”
“என்ன ப்ராப்ளம்? சொல்லு.”
“நானும் என் வொய்ஃபுமா வர ஞாயித்திக் கெழமெ ஒரு பதினஞ்சு நாள் நார்த்திண்டியா டூர் போறோம். மங்களா ட்ரேவல்ஸ்லெ ஆளுக்கு பத்தாயிரம் கொடுத்து டிக்கெட் புக் பண்ணி இருக்கோம். டிக்கெட்டெ கேன்ஸல் பண்ண முடியாது. பண்ணா இருபதாயிரம் போயிடும். என்ன செய்யறதுன்னு தெரியலயே மாமா.”
“பரவா இல்லெப்பா. நான் என் கூட வேலெ பாத்த ஃப்ரெண்ட்ஸ் யாரையாது கேக்கறேன். கோமு சௌக்கியமா இருக்காளா?”
“சௌக்கியமா இருக்கா மாமா. மாமியெ விசாரிச்சேன்னு சொல்லுங்கோ.”
“சரி சொல்றேன்.”
நான் போனைக் கீழே வைப்பதற்கும் கோமு அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.
“ஏன்னா, எனக்கு சர்ப்ரைஸா இருக்கணும்னு எங்கிட்டெ சொல்லாமெ வெச்சிருந்தேளா இந்த நார்த்திண்டியா டூரெ?”
“யாருடீ போறா டூரு? ஒரு புருடா உட்டேன்.”
“ஏன்னா, பாவம் ராமு மாமா. அவர் கிட்டெ ஏன்னா பொய் சொன்னேள் அப்படி?
“ஏண்டீ, மடக்குக் கட்டில் சாமான் உள்ளுக்குப் போய் இன்னும் ஒரு வாரம் கூட ஆகலெ. அதுக்குள்ள மறந்து போச்சா ஒனக்கு?”
“அது என்ன சார் மடக்கு கட்டில் சமாசாரம்?”னு கேக்குறிங்களா?
சொல்றேன் கேளுங்க. வாங்க, ஒரு மாசம் பின்னாடி போய் பாப்போம் என்ன நடந்தீச்சுன்னு.
ஒரு சனிக் கிழமை.
“ஏன்னா... என்னோட சீதா சித்தி நீங்க வாக் போயிருந்தப்போ டெலிபோன் பண்ணா. அவளோட பேத்தி சுந்தரி நாளெ காலபர அஞ்சு இருபதுக்குத் தாம்பரம் வர நெல்லை எக்ஸ்ப்ரெஸ்லெ இங்கெ வராளாம் ஒரு இன்டெர்வ்யூக்காக. அவளெ நீங்க போயி கொஞ்சம் அழெச்சிண்டு வந்தூட்டு திங்கக் கெழெமெக் காலம்பர ஒரு பீச் போர ட்ரைன்லெ ஏத்தி உட்டூடுங்கோ. இன்டெர்வ்யூ முடிஞ்சதும் அவளே வந்தூடுவா ஆத்துக்கு. மறு நாள் ராத்திரி அவளெ மலைக்கோட்டை எஃஸ்ப்ரெஸ்லெ ஏத்தி உட்டூடுங்கோ. டிக்கெட்டெல்லாம் புக் பண்ணீட்டாளாம். சீதா சித்திக்கு நம்மெ உட்டா இங்கெ யாருன்னா இருக்கா?”
சொன்னதைச் செய். பின்னதைப் பற்றி நீ கவலைப் படாதே என்பதுதானே நாற்பது வருடமாக நான் கடை பிடித்து வரும் கொள்கை. ஞாயிறு காலை நாலறைக்கே எழுந்து குளித்துவிட்டு ஸ்கூடரில் ஸேனிடோரியம் ஸ்டேஷனுக்குப் போய் ஸ்கூடரை வைத்து விட்டு ட்ரைனில் தாம்பரம் போய்ச் சேர்ந்தேன். சுந்தரியை அடையாளம் கண்டு பிடிப்பது ஒன்றும் சிரமமாக இல்லை. கோச் நம்பர் கொடுத்திருந்தாள் சீதா சித்தி. வண்டி வந்தது. பீ-2 கோச்சை நான் நெருங்கியபோது கையில் ஒரு ஏர் பேகும் தோளில் ஒரு ஹண்ட் பேகுமாக ஒரு 20–22 வயதுப் பெண் இறங்கினாள். நான் அவளை, “உன் பேரு சுந்த” என்பதற்குள் அவள், “நீங்க ராஜன் மாமாதானே?” என்றாள்.
“வா போகலாம்” என்று அவளிடம் “உன் ஏர் பேகெ குடும்மா என் கிட்டெ” என்றேன்.
சுந்தரி, “பரவாயில்லெ மாமா, ஒண்ணும் கனமா இல்லெ பேக். நானே எடுத்துண்டுவறேன்” என்றபடி என்னுடன் நடந்தாள் எலெக்ட்ரிக் ட்ரெய்ன் இருந்த பிளேட்பாரத்திற்கு. பின்னர் சானெடோரியம் ஸ்டேஷனில் இறங்கியதும் நேராக என் ஸ்கூடரை அடைந்து அவள் பேகை வாங்கி கால் வைக்கும் இடத்தில் வைத்து விட்டு நான் ஏறிக்கொண்டு அவளை பின்னால் ஏறிக் கொள்ளச் சொல்லி இருவருமாக வீட்டை அடைந்தோம்.
காலிங்க் பெல்லை அழுத்தியதுமே கதவைத் திறந்த கோமா, “வாம்மா சுந்தரி” என வரவேற்றாள். உள்ளே சென்ற சில நிடங்களுக்குள் சூடாக வந்தது காபி. காபி வருவதற்குள் தன் பேகெய்த் திறந்து அதனுள்ளிருந்து ஒரு பேக்கெட்டெய் எடுத்து “மாமி அம்மா இதெ ஒங்ககிட்டெ கொடுக்கச் சொன்னா”என்றபடி கோமாவின் கையில் கொடுத்தாள்.
“எதுக்குடி இதெல்லாம்?” என்று சொல்லியபடியே பேக்கட்டை கையில் வாங்கிக் கொண்டு சமையல் அறைக்குள் போனாள் கோமா. நான் அன்றைய பேபரில் மூழ்கினேன்.
சற்று நேரத்திற்கெல்லாம் ஆவி பறக்க இரெண்டு ப்ளேட் இட்லி, தனித் தனி கப்களில் பொட்டுக் கடலை சட்னி, வெங்காய சாம்பார் இவை வந்தடைந்தன டைனிங்க் டேபிளுக்கு.
“சூடா இருக்கச்சே வந்து சாப்பிடுங்கோ. சுந்தரி நீயும் வாம்மா. வந்து டிபன் எடுத்துக்கோ” என்றாள் கோமா.
நான் போய் வழக்கமாய் உட்காரும் இடத்தில் உட்காரும் போது சுந்தரி குளித்து விட்டு சிக்கென சில்க் புடவையில் எனெக்கெதிர் நாற்காலியில் வந்து உட்கார்ந்தாள். உள் பூராவும் அவள் போட்டிருந்த சென்டின் மணம் பரவியது.
“மாமி, இட்லி இவ்வொளோ ஸாஃப்டா இருக்கே. எவ்வொளோ உளுந்து எவ்வளோ அரிசி போடுவேள்? எப்படி அறைப்பேள்?” என்று சரமாரியாக அடுக்கிக் கொண்டே போனாள் கேள்விகளை சுந்தரி.
“அதாண்டி குஷ்பு இட்லின்னு இப்பொல்லாம் கல்யாணத்துலெ போடறாளே அதுடிம்மா இது.”
“குஷ்பு இட்லியா?”
“நீ கேள்விப் பட்டது இல்லியா குஷ்பு இட்லி? உளுந்து அறைக்கெற போது அதுங்கூட நாலஞ்சு ஊறெவெச்ச உரிச்ச ஆமணக்கு வெறெயையும் போட்டு நன்னா வெழுமூணா அறைச்சுக்கணும். மத்தபடி ஒண்ணுக்கு நாலுதான் உளுந்தும் அரிசியும்.”
“அப்படியா மாமி. நான் இது வரெலும் இவ்வொளோ சாஃப்டான இட்லியெ சாப்டதே இல்லெ மாமி. ஊருக்குப் போனதும் அம்மா கிட்டெ சொல்லி குஷ்பு இட்லி பண்ணச் சொல்லணும் மாமி”
“இன்னும் ரெண்டு போட்டுக்கெறெயா?”
“போரும் மாமி. வயத்துலெ எடமில்லெ.”
டிபன் காபி முடிந்ததும் கோமா ஆரம்பித்தாள், “ஏன்னா, சுந்தரியெ இங்கெ பக்கத்துலெ இருக்கற குமரன் குன்றத்துக்ககும் ஸ்கந்தாஸ்ரமத்துக்கும் அழெச்சிண்டு போயிட்டு வாங்கொளேன். சாமியெத் தரிசனம் பண்ணி வேண்டிண்டு வந்தாள்னா நாளெய்க்கி இன்டர்வ்யூலெ நன்னாப் பண்ணுவா. வேலையும் நிச்சயமாக் கெடெய்க்கும் அவளுக்கு.”
சொன்னதைச் செய்தேன் நான். வந்திருக்கும் விருந்தாளி கோமாவின் சித்தி பேத்தியாயிற்றே?
என் ஸ்கூடரை ஸ்டார்ட் செய்து விட்டு, சுந்தரியை “ஏறி உட்காந்து கெட்டியாய்ப் பிடிச்சிக்கோம்மா”,என்றேன். அவளும் “சரி மாமா” என்றபடி தன் இரு கைகளையும் என் இடுப்பைச் சுற்றி கட்டிக் கொண்டு உட்கார்ந்தாள் பில்லியன் சீட்டில்.
கோவில் விஜயம் முடிந்து பகல் ஊணவும் ஆயிற்று. முருங்கைக் காய் சாம்பார், பட்டாணி, கேரெட்டுடன் கோஸ் கறி, கூடவே சின்னச் சின்ன முழு உருளைக் கிழங்கு கர கர வென வதக்கிய கறி, அப்பளாம், வடை என விருந்து சாப்பாடு பிரமாதம்.
இரவு வந்தது.
“நா அந்த மடக்கு கட்டிலெ சாமான் உள்ளேருந்து எடுத்து ஹால்லெ போட்டுண்டு நீங்க படுத்துக்கோங்கோ. நானும் சுந்தரியும் பெட் ரூம்லெ படுத்துண்டு கதெ பேசிண்டே தூங்கறொம்” என்றாள் கோமா. சொன்னபடி செய்தேன் நான்.
மறு நாள் இன்டர்வ்யூவும் நல்லபடி முடிந்தது. செவ்வாய்க் கிழமை சுந்தரியைத் தாம்பரத்திற்கு ஸ்கூடரிலேயே அழைத்துப் போய் டிரெய்னில் ஏற்றி விட்டு வீடு திரும்பினேன்.
மடக்கு கட்டிலை எடுக்கப் போன என்னை, “அது அங்கேயே இருக்கட்டும். இந்தக் கட்டில் அகலம் போரலெ. இப்படி அப்படி திரும்பிப் படுக்க முடியறது இல்லெ என்னாலெ” என்றாள் கோமா. வழக்கமாக வரும் “நா”வைக் காணோம் பேச்சில். முதலில் ஏதோ உடல் அசதியில்தான் அப்படி நடந்து கொள்கிறாள் என நினைத்தேன். அடுத்த ஒரு வாரம் எது கேட்டாலும், “ஆமாம் இல்லை” என்ற இரு வார்த்திகளே வந்த போது தான் புரிந்தது அவளுக்கு என்மேல் ஏதோ கோபம் என்பதை.
ஒரு நாள் கொஞ்சம் தைரியத்தை வரவழித்துக் கொண்டு கேட்டு விட்டேன், “ஏண்டீ, நாப்பது வருஷமா இருக்கு அந்தக் கட்டில். இத்தென நாள ஒனக்குத் தெரியலையா கட்டில் எவ்வொளோ அகலம்னு?”
“ஆமாம். நான் கூடத்தான் நாப்பது வருஷமா குப்பெ கொட்டிண்டு இருக்கேன் ஒங்க கூட. ஆனா இப்பொ தானே புரியறது நிங்க எப்படிப்பட்ட ஆளுன்னு.”
“என்னடி சொல்றெ நீ?”
“ஆமாம். எப்பொலேந்து இஸ்திரி போட்ட சட்டையும் பேன்டும் போட்டுக்க ஆரம்பிச்சேள்?”
“நீ தானேடி சொல்லுவெ, யாரானும் வந்துருக்கச்சே சமயக்காரன் பனியனாட்டம் பழுப்பேறின ஓட்டை பனியனையும் மடிப்பு கலெஞ்ச பழய சட்டெயயும் மாட்டிண்டு நிக்காதேங்கோன்னு?”
“அது சரி, சென்டு போட்டுக்கற பழக்கம் எவ்வொளொ நாளா?”
“சென்டா? நான் எங்கேடி சென்டு போட்டுக்கறேன்?”
“பொய் சொல்லதீங்கோ. ஒங்க துணியெ தினோம் தோய்க்கெறெ எனக்குத் தெரியாதா? நிங்க சென்டு போட்டுண்டேளா இல்லையாங்கறது.”
‘அது... வந்து சுந்தரி நெறெய சென்டு போட்டுண்டு இருந்தாளோல்லியோ? அவ என் பின்னடி ஸ்கூடர்லெ உக்காந்துண்டு வந்ததுனாலெ வந்துருக்கும்.”

"இடுப்பெச் சுத்தி கெட்டியாக் கட்டிப் புடிச்சுக்கோம்மா"
“ஆமாம். வராதா பின்னே? எப்டி... எப்டி...? சுந்தரியெ இன்டெர்வ்யூக்குப் போறதுக்காக திங்கக் கெழெமெ ஸ்டேஷனுக்கு அழெச்சிண்டுபோறப்பொ என்ன சொன்னேள்? ‘நன்னா இறுக்கி ரெண்டு கையாலெயும் இடுப்பெச் சுத்தி கெட்டியாக் கட்டிப் புடிச்சுக்கோம்மா’. என்ன கரிசனம் வார்த்தெலெ?”
அப்போது புரிந்தது நான் செய்த தவறு என்ன வென்று. போன வாரத்திற்கு முன் வாரம்தான் குங்குமத்தில் படித்தேன் எனக்கு சனி தசை ஆரம்பிக்கிறது என்று. அந்த சனி பகவான் தான் என் நாக்குலெ வந்து ஒக்காந்துண்டு “கெட்டியாப் புடிச்சுக்கோம்மா” ன்னு சொல்றதுக்கு பதிலா “நன்னா இறுக்கி ரெண்டு கையாலேயும் இடுப்பெச் சுத்தி கெட்டியாக் கட்டிப் புடிச்சுக்கோம்மா”ன்னு சொல்ல வெச்சுட்டாரோ?
எது எப்படியானா என்ன? ‘ஒன்ஸ் பிட்டென் ட்வொய்ஸ் ஷை’னு இங்க்லீஷ்லெ சொல்லுவா இல்லியா? அதான் இன்னிக்கி ராமு மாமா கிட்டெ அப்படி ஒரு புருடா விட்டென். என்ன சொல்றீங்க நீங்க? நான் செஞ்சது சரிதானே?
“ஆமாம் மடக்குக் கட்டில் என்ன ஆச்சு?” ன்னு கேக்குறீங்களா? ஒரு நாள் கட்டில் கால்லெ கோமா இடிச்சுக்க, “இந்த சனியெனெ எடுத்து உள்ளே போடுங்கோ. இதெதுக்கு நட்ட நடுப்பற இந்த வீட்டுலெ” ந்னு கோமா வலி பொருக்க மாட்டமெ கத்த, கட்டில் மறுபடி சாமான் உள்ளுக்கே போயிடுத்து.
நடராஜன் கல்பட்டு
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















