-
ஒண்ணு கேக்கலாமுங்களா?
- நடராஜன் கல்பட்டு
சார் ஒங்களெ ஒண்ணு கேக்கலாமுங்களா?
அன்று தேதி மூன்று. எப்போதோ சிட்லப்பாக்கத்தில் குடி இருந்தபோது போஸ்ட் ஆபீஸில் போட்டு வைத்திருந்த டிபாஸிட்டுக்கான வட்டிப் பணம் ரூபாய் ஆயிரத்தை வாங்கி ஒன்றுக்கு இரு முறை எண்ணிப் பார்த்து பத்திரமாகக் கையில் இருந்த தோல் பையில் வைத்து கக்கத்தில் இடுக்கிக் கொண்டு தாம்பரம் சானிடோரியம் ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இப்போது நான் என் மகன் ஊரப் பாக்கத்தில் கட்டிய சிறிய வீட்டில் அவன் குடும்பத்தோடு இருக்கிறேன்.
போஸ்ட் ஆபீஸை விட்டு வெளியே வந்து ஸ்டேஷன் போகும் ரோடில் கால் வைக்க, “சார் ஒங்களெ ஒண்ணு கேக்கலாமுங்களா?” என்ற குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன். என்னை நோக்கி தலையில் முண்டாசு கட்டி கிராம வாசி போலக் காணப்பட்ட ஒருவர் வேக வேகமாக அடி போட்டு வந்து கொண்டிருந்தார். நன் சற்று நிற்கவும் அவர் என்னருகே வந்து சேரவும் சரியாக இருந்தது.
கிராம வாசி மீண்டும் கேட்டார், “சார் நான் ஒங்களெ ஒண்ணு கேக்குலாமுங்களா?” என்று.
“தாராளமாக் கேளுங்க. என்ன கேக்கணும் ஒங்களுக்கு?”
“இந்த ரோடு எங்க சார் போவுது?”
“சானிடோரியம் ஸ்டேஷனுக்குப் போவுது.”
“டேசம் மட்டுந்தான் போவுதா? இல்லெ அப்பாலெ வேறெ எங்கனாச்சியுமும் போகுதுங்களா?”
“ஸ்டேஷன் பக்கம் திரும்பாமெ நேராப் போனா கெளக்கு தாம்பரம் போவலாம். ஸ்டேஷன் உள்ளாரெ திரும்பாமெ லெவெல் க்ராசிங்க் கேட்டெத் தாண்டி போனா ஜியெஸ்டி ரோடு போய்ச் சேரலாம்.”
“அப்பாலெ.”
“ஜியெஸ்டி ரோடுலெ வல்து பக்கம் திரும்பினா கவர்மென்டு ஆஸ்பத்திரிக்குப் போகலாம். நேரப் போனா சித்த வைத்தியசாலைக்குப் போகலாம். இல்லெ பக்கத்துலேயே இருக்குற மெப்ஸுக்குப் போகலாம்.”
“மெப்ஸுனா இன்னா சார்?”
“மெப்ஸுனா நம்ம நாட்டுலேந்து வெளி நாட்டுக்கு ஏத்துமதி பண்ற ஜாமாங்களெ தயாரிக்கெற தொழில் கூடங்கள் இருக்குற எடம்.”
“அப்படிங்களா? இங்கேந்து இன்னா ஜாமாங்களெ ஏத்துமதி பண்றாங்க சார்?”
“ரெடிமேட் ஆடைங்க, மணி பர்ஸு, பொம்பளைங்க தோள்ளெ மாட்டி கிட்டுப் போற பைங்க, கணினி மென் பொருளு இப்படி பல ஜாமாங்க இங்கேந்து வெளி நாடுங்களுக்குப் போவுது.”
“அப்படிங்களா சார்? ஒங்களெ இன்னோண்ணு கேக்குலாமுங்களா?”
“கேளுங்க.”
“அதோ நம்ம முன்னாலெ ஒரு பத்தடி துரத்துலெ வெள்ளெ சட்டெயும் கலர் கரெ போட்ட வெள்ள வேட்டியும் கட்டி கிட்டு அப்பொப்போ வலது கையெ மேல தூக்கி ஆள்காட்டி வெரலாலெ யாரையோ காட்டுறா மாதிரி பண்ணிகிட்டு போறாரே அவரு அரசியல் வாதியா சார்?”
“அரசியல் வாதியா இருக்கலாம். நாளெக்கி பேசப்போற மீடிங்லெ ‘ஒன்னெ ஒண்ணு கேக்குறேன்’ னு அடிச்சுப் பேசறத்துக்கு பயிற்சி பண்ணிகிட்டு போறவரா இருக்கலாம். இல்லெ பயித்தியமாவும் இருக்கலாம்.”
“ஆமாம். அது சரி இப்படிக் கேள்வி மேலெ கேள்விகேட்டு கிட்டே வரீங்களே ஒங்க வாயி வலிக்கலெ?”
“வாயி இன்னா சார் பொல்லாத வாயி? இப்பிடிப் பேசிகிட்டே வந்தோம்னா நடக்குற தூரம் தெரியாது. காலும் வலிக்காது அதாம் இப்பிடி பேசிகிட்டெ வாரேன்.”
அதற்குள் ஸ்டேஷனை நாங்கள் நெருங்க, லெவெல் க்ராஸிங்க் கேட் திறக்க, காரும், ஆடோவும், கைவண்டியும், மோட்டார் சைகிளும். ஸ்கூடரும், சைகிளும், பாதசாரிகளுமாக ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முட்டி மோதிக்கொண்டு வர, கூட வந்து கொண்டிருந்த கிராம வாசியும் என்மேல் ஒரு மோது மோத, அவரும் எனது கைப் பையும் கண்ணிமைக்கு முன் கும்பலில் மறைய நான் திகைத்து நின்றேன்.
பக்கத்தில் நின்ற ஒருவரிடம் கேட்டேன், “சார் ஒங்களெ ஒண்ணு கேக்கலாமுங்களா?” என்று.
“என்ன சார்? கேளுங்க”, என்றார் அவர்.
“எங்கூடவே இத்தென நாளியா பேசிகிட்டு வந்த ஆளு இந்தக் கும்பல் கிட்டெ வந்ததும் மேல ஒரு இடி இடுச்சுட்டு கக்த்துலெ இருந்த கைப் பையெப் புடிங்கிகிட்டு கும்பல்லெ ஓடி மறைஞ்சூட்டான் சார். நான் ஊரப்பாக்கம் வரெ போவணும். ஒரு பத்து ரூபாயையும் ஒங்க அட்ட்ரெஸ்ஸையும் குடுங்க. நாளெ காலெ மணியார்டர் அனுப்சூடறேன்”, என்றேன் நான்.
என்னை ஏற இறங்கப் பார்த்த அவர் ஒரு பத்து ரூபாயெ என் கையில் கொடுத்து விட்டு “அதெல்லாம் ஒண்ணும் வாணாம் சார். மனுசனுக்கு மனுசன் ஆபத்துலெ ஒதவலேன்னா எப்படி சார்”, என்றபடி டிகட் கவுன்டரை நோக்கி நடந்தார்.
“சார் ஒங்களெ ஒண்ணு கேக்குலாமுங்களா? என்னங்கறீங்களா? இப்படி அப்பாவி மாதிரி கூடவே வந்து களுத்த அறுக்குறவங்க கிட்டேந்து தப்பிச்சுக்கெறது எப்படின்னு தெறிஞ்சா கொஞ்சம் சொல்லுறீங்களா சார் எனக்கு?”
நடராஜன் கல்பட்டு
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














