-
தொப்புள்கொடி உறவு
- முத்து
"சந்தானம், ஏண்டா ஊர்லேர்ந்து உன் அப்பா, அம்மாகிட்டேயிருந்து ஏதும் லெட்டர் வந்துதா?" என்று கேட்டுக்கொண்டே அந்த வீட்டிற்குள் நுழைந்தான் சந்துரு.
சந்துருவும் சந்தானமும் தங்கள் சொந்த ஊர் கிராமத்திலேயே ஒன்றாய் வளர்ந்து, படித்து பின் தில்லிக்கு வந்து இப்போது அங்கே வேலைபார்த்து வருகின்றனர். இருவருக்கும் வெவ்வேறு ஆபீஸ். ஞாயிற்றுக் கிழமையில் சந்துரு அவ்வப்போது அவன் வீட்டுக்கு வருவான், தங்கள் இளம்பருவ லீலைகளை நினைவுகூர்ந்து மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருப்பார்கள். சந்துரு அவன் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டுப் பிறகு தன் ரூமுக்குத் திரும்புவான். சந்துருவின் மனைவி சென்னையில் வேலை பார்த்துக்கொண்டு சந்துருவின் அம்மா, அப்பாவை கவனித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு தில்லிக்கு மாத்தல் கிடைக்காது, தனியார் ஸ்தாபனத்தில் வேலை என்பதால்; அவனும் அப்படியே போகட்டுமென்று விட்டுவிட்டான். ஆனால் சந்தானத்தின் அம்மா, அப்பா மட்டும் பிடிவாதமாக சொந்த ஊர் கிராமத்திலேயே தாங்கள் பிறந்த ஊரைவிட்டுப் போகக் கூடாது என்ற மண்வாசனையை மறக்காமல் அங்கேயே இருந்தார்கள். சந்தானத்தின் அப்பா அந்த கிராமத்தின் கோவிலில் குருக்களாக வேலை பார்த்துவந்தார். அவர்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு தில்லியில் வாழ எவ்வளவோ முயற்சி செய்தும், வருடங்கள்தான் நகருகின்றனவேயன்றி அவன் பெற்றோர்கள் சொந்த ஊரைவிட்டு நகரமாட்டேனென்று பிடிவாதமாயிருந்தனர்.
சந்தானம் தில்லியில் கவர்ன்மெண்ட் உத்தியோகம் பார்த்துக்கொண்டு ஆபீஸராயிருக்கான். கைநிறைய சம்பளம். ஆபீஸர் குவார்ட்டர்ஸ், பெரிய வீடு. அதில் தானும், தன் மனைவியும், ஒரு மகனும், மகளுமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஓரிரு வருடங்களுக்கொருமுறை பத்து, இருபது நாள் லீவில் தன் சொந்த கிராமத்துக்குப் போய்த் தன் பெற்றோர்களுடன் இருப்பான். அவன் பிள்ளைகளும் தாத்தா, பாட்டியென்று அவர்களுடன் ஒட்டி உறவாடுவார்கள். சந்தானத்தின் மனைவியும் அன்பும், மரியாதையுடனுமிருந்து நல்ல மருமகள் என்ற பெயரை எடுத்திருக்கிறாள். அந்த வயதான கிராமத்து தம்பதிகளைப் பற்றித்தான் விசாரித்துக் கொண்டு அப்போது உள்ளே நுழைந்தான் சந்துரு.
"எங்கேடா சந்துரு, இப்பவும் அதே பல்லவிதான். என்னால் முடிந்தவரை இந்த ஊரிலேயே காலம் கழிக்கறோம். முடியலைன்னு போனா எங்களை வந்து அழைத்துப் போ," என்றுதான் இப்பவும் எழுதியிருக்கார். ஊரிலிருந்து சிங்காரம்பிள்ளையும் லெட்டர் போட்டிருந்தார். "அப்பா, அம்மா நல்லா இருக்காங்க. நாங்களெல்லாம் இருக்கோம் இங்கே அவங்களை கவனிச்சுக்க. நீங்க கவலைப்படாமல் இருங்கள்," என்று சமாதானம் எழுதியிருந்தார். அற்றகுளத்து அருநீர்ப் பறவைபோல் அங்கே அவர்கள் ஒட்டிண்டிருக்கிறார்கள். நாம இங்கே பணத்துக்காக எல்லாத்தையும் மறந்துட்டு இந்த ஊருக்குத் தகுந்தமாதிரி நம்மளை நாமே மாத்திண்டு வாழ்ந்திண்டிருக்கோம். பணமில்லேன்னா வாழ்க்கை இல்லேன்னு ஆயிடுத்தே," என்று அங்கலாய்ந்தான் சந்தானம்.
"எப்படியோ திடமா இருக்காங்களே, அது போதும். வயசான காலத்துலே இப்படி அடம்பிடிக்காம நம்மகூடவே வந்திருக்கலாம். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. சரி விடு. அவங்களும் இங்கே வந்தா இந்த வறட்டும் வெய்யலையும், நடுக்கும் குளிரையும் தாங்கறது கஷ்டம்தான். அவங்களுக்கும் வயசாயிடிச்சில்லே," என்று ஆறுதல் கூறினான் சந்துரு.
"இல்லேடா சந்துரு. அடுத்த மாசம் லீவுக்கு அப்ளை பண்ணியிருக்கேன். இந்தத் தடவை அங்கே போய் எப்படியாவது அவர்களை 'கன்வின்ஸ்' பண்ணி அழைத்து வந்துவிடலாம்னு நம்பறேன். அதுக்கப்பறம் அந்த ஆண்டவன் விட்ட வழி. சரி, அடுத்த மாசம் நான் குடும்பத்தோட ஊருக்குப் போறேன். நீயும் லீவு போட்டுட்டு எங்க கூட வாயேன். அப்படியே சென்னையில் உன் மனைவி, அம்மா, அப்பாவைப் பார்க்க நீ போ. நானும் கிராமத்துக்குப் போய் இவர்களை அழைத்து வருகிறேன். எனக்கும் கொஞ்சம் ஒத்தாசையாயிருக்கும். என்ன சொல்றே?," சந்துருவின் பதிலை நாடி நின்றான் சந்தானம்.
"சாரிடா. என் ஆபீஸ்ல அடுத்த மாசம் ஆடிட்டிங்க் இருக்கு. எனக்கு லீவு கொடுக்க மாட்டான். இப்ப நாலு மாசம் முன்னாடிதானே நான் போயிட்டு வந்தேன். நீ இப்பப் போகும்போது எங்கம்மா, அப்பாவையும் அப்படியே பார்த்துட்டு, இரண்டு நாள் சென்னையிலும் தங்கிட்டு வாயேன்," என்று சந்தானத்தை மட்டும் அவன் குடும்பத்தோடு தனித்துப் போகச் சொன்னான் சந்துரு.
"அது கண்டிப்பா நடக்கும். மெட்ராஸுலே ரெண்டு நாள் தங்கிட்டுத்தான் போவேன். நீயும் வந்தாக் கொஞ்சம் ஒத்தாசையா இருக்குமேன்னுதான் கேட்டேன்," என்றான் சந்தானம்.
"அப்படி எல்லாரையும் அழைத்துக்கொண்டு வர ஏற்பாடாயிடுத்துன்னா எனக்கொரு டெலிபோன் பண்ணு. உடனே ரெண்டு நாள்லே அங்கே இருப்பேன்," என்று ஊக்கமளித்தான் சந்துரு.
நாட்கள் ஓடின.
"இருபது நாளைக்கு வேண்டிய துணிமணி, சோப்பு, பேஸ்ட்டெல்லாம் எடுத்து வைத்தாச்சா. ஏன்னா அது கிராமம். இப்படிப்பட்ட் சாமான் வேணும்னா பக்கத்திலே இருக்கிற டவுனுக்குப் போய்தான் வாங்கிண்டு வரணும். கேட்டா உடனே கிடைக்காது," ஊருக்குப் புறப்பட்ட சந்தானம் தன் மனைவியை உஷார்ப்படுத்திக் கொண்டிருந்தான்.
"டாடி, சந்துரு அங்கிள் அவங்க காரை எத்தனை மணிக்கு இங்கே எடுத்துக்கொண்டு வந்து நம்மளையெல்லாம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துப் போவாங்க?" சந்தானத்தின் மகன் இப்படிக் கேட்டுத் தன் கவலையை தெளிவுபடுத்திக்கொள்ள எத்தனித்தான்.
இப்படி அந்த வீட்டில் ஊருக்குக் கிளம்ப பம்பரமாய்ச் சுழன்றுகொண்டு தத்தம் வேலைகளில் சுறுசுறுப்பாயிருந்தனர். சந்தானத்தின் மகன் எம்.பி.ஏ. மேல்படிப்பு படிக்குமளவுக்கு வளர்ந்த பையன். அவன் தங்கை இந்த வருடம் ப்ளஸ் டூ எழுதியிருக்கிறாள். சந்தானத்துக்கு இன்னும் எட்டு வருட சர்வீஸ், அதன் பிறகு ரிடையர்டு வாழ்க்கை. சந்துருவின் கார் வந்தது, எல்லோரும் புறப்பட்டு சென்னை சேர்ந்தனர். வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது சந்தானத்தின் பழைய நினைவுகள். அவனுடன் படித்த விஜியை சைட்டடித்தது எல்லாம் இப்போது ஞாபகம் வந்தது சந்தானத்துக்கு. அப்பப்பா காலம்போகும் வேகத்துக்கு ஈடு இந்த புகைவண்டி கொடுக்குமா? ஏதோ ஒருவழியா சென்னை வந்தடைந்தது தமிழ் நாடு எக்ஸ்ப்ரஸ்.
"சார் கூலி, கூலி" ஈ மொய்ப்பதுபோல் சிவப்புக் கலர் சட்டையணிந்தவர்கள் சந்தானத்தின் குடும்பத்தையும், அவர்கள் இறக்கி வைத்த சாமாங்களையும் சுற்றி வட்டம்போட்டு நின்றனர்.
"இந்த சாமான்களை யெல்லாம் வெளியே கொண்டுபோய் கால் டாக்ஸி பிடித்து எங்களை அனுப்பி வைக்கணும், எவ்வளவு கேட்கிறாய்?" சந்தானம் அதிகாரத் தொனியில் ஒரு கூலியைக் கேட்டான். கூலிகளின் அனுபவம் சொல்லி மாளாது. வந்தவன் கிராமத்திலிருந்து வந்தவனா, அல்லது நகரத்து ஆசாமியா என்று கணித்து ஆளுக்குத் தகுந்தமாதிரி கூலி கேட்பார்கள். மனிதர்களைப் புரிந்து எடைபோட இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் படிப்புக் குறைவானாலும் கணிப்பு துல்லியமாக இருக்கும்.
"சார், நீ டெல்லிலேர்ந்து வந்திருக்கே. உனக்குத் தெரியாததா? ஏதோ பாத்துப் போட்டுக் குடு சாமி," கூலியின் அணுகுமுறை இப்படித்தான் ஆரம்பிக்கும்.
"அதெல்லாம் கிடையாது. கட் அண்ட் ரைட்டா சொல்லு இவ்வளவு வேணும்னு, அதுக்கப்பறம் நான் தீர்மானம் செய்யறேன் நீ கேட்பது சரியா, தப்பான்னு," விடாக்கண்டன் கொடாக்கண்டன் லெவலுக்குப் பேசினான் சந்தானம்.
"சரி சார், உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம் சரியா 100 ரூபா கொடுத்துடு. உன்னை சௌரியமா அனுப்பி வைச்சிடறேன்," கூலி இந்த ஆளிடம் அதிகம் தேறாது என்று தீர்மானித்து அவன் சொன்னபடியே கட் அண்ட் ரைட்டா கேட்டான்.
"நான் டெல்லியிலேயே அறுபது ரூபாதான் கொடுத்தேன். இங்கே என்ன நூறு ரூபாய் கேட்கிறே?" சந்தானம் பேரம் பேசினான். அவன் உண்மையிலேயே தில்லியில் எண்பது ரூபாய் கொடுத்தான். இங்கே இவர்களிடம் இப்படிப் பேசினால்தான் இங்கேயும் எண்பதுக்கே முடிக்கலாம் என்ற கணக்குப்போட்டான் சந்தானம்.
"சரி சாமி பத்து ரூபா குறைத்துக் கொடு. இந்தப் பொட்டியைத் தூக்க ஒரு கைகொடு சாமி," என்று உரிமையோடு சாமானத்தை எடுத்தான் கூலி.
"சரி போ, எண்பது ரூபா தந்துடறேன். வெளியே டாக்ஸி பிடித்துக் கொடுக்கணும். ஓகேவா?" சந்தானம் ஒருவாறு பேரம் பேசுவதை முடித்துக் கொண்டு சாமான்களை அவன்மீது அடுக்கினான், சிலதைத் தொங்க விட்டான். அவன் இன்னொரு பையனையும் சேர்த்துக்கொண்டு ஒருவாறு வெளியே டாக்ஸியில் தன் குடும்பத்துடன் அமர்ந்தான் சந்தானம். "வேளாச்சேரி போகணும்பா" என்று அவனுக்கு வழிகாட்டிவிட்டு கண்களை மூடினான் சந்தானம். மீண்டும் கனவு.
"வாப்பா சந்தானம். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸில் வந்தால் இந்த நேரத்துக்குத்தான் வருவீர்களென்று தெரியும். அதான் வாசலிலேயே நின்று வழியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நீங்கள் இந்த ட்ரெயினில்தான் வருகிறீர்களென்று சந்துரு நேற்றைக்கே எங்களுக்கு டெலிபோன் செய்துவிட்டான்," இப்படி வரவேற்பளித்தார் சந்துருவின் தந்தை. எல்லோரும் இரண்டு நாள் அங்கு தங்கிவிட்டு பின் தன் கிராமத்துக்கு வண்டி ஏறினான் சந்தானம்.
அந்த கிராமத்தின் சன்னதித் தெருவில் ஒரு அம்பாஸிடர் கார் வந்து நின்றவுடன் அங்கே 10-15 பேர் கூடிவிட்டனர். அந்த கிராமத்துக்கு பஸ் போக்குவரத்தோ, புகைவண்டி நிலையமோ கிடையாது. ஏதோ மின்சாரம் மட்டும் அந்த ஊருக்கு வந்துவிட்டது. அதுதான் அந்த கிராமத்தின் வளர்ச்சி. இது தவிர வெளியூருக்கு பஸ்ஸில் போக வேண்டுமென்றால் இரண்டு மைல் தொலைவிலுள்ள நெடுஞ்சாலைக்கு வந்தால் குறைந்தது இரண்டு மணி நேர எதிர்பார்ப்பிற்குப்பின் ஒரு பஸ் வரும். அதிலும் இடமில்லையென்றால் நிறுத்தாமலே போய்விடுவான். பிறகு அங்கு வரும் டவுன் பஸ்ஸில் பக்கத்து டவுனுக்குப் போனால்தான் நம் பயணத்தைத் தொடர முடியும். புகைவண்டிப் பயணமானால் அந்தக் கிராமத்திலிருந்து மூன்று கல் தொலைவிலுள்ள புகைவண்டி நிலையத்துக்குச் செல்ல வேண்டும். அங்கும் திருவாரூரிலிருந்து வரும் பாஸஞ்சர் ட்ரெயின் உங்களை அடுத்துள்ள மயிலாடுதுறை டவுனுக்கு அழைத்துச் செல்லும். அங்கிருந்து சென்னை, தஞ்சாவூர் இப்படிப் பல இடங்களுக்குப் போகலாம. அப்படிப்பட்ட கிராமம் அது. இந்த நிலையில் அம்பாஸிடர் கார் வந்து நின்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். சந்தானம் வண்டியைவிட்டு வெளியே இறங்கியவுடன், "அட! நம்ம டெல்லித் தம்பி. லீவுலா வந்திருக்காப்பல," அங்கு கூடியிருந்தவர்கள் வரவேற்பு.
சந்தானத்தின் அப்பா திண்ணையிலிருந்து இறங்கி வந்தார். "என்ன அப்பா, சௌக்கியமா இருக்கேளா?" சந்தானம் ஓடிவந்து அப்பா காலைத் தொட்டுக் கும்பிட்டான். அது டெல்லி நகரத்துக் கலாச்சாரம். "எங்கேடா என் பேரப்பசங்க?" என்றவாரே தன் பொக்கைவாய்ப் பிளக்க காரை நோக்கி ஓடினார் விஸ்வனாத குருக்கள். "ஹை தாத்தா. எப்படி இருக்கீங்க," டெல்லிக் குழந்தைகள் சரியா தமிழே வராது என்றால், பிராமணப் பேச்சை அவர்களிடம் எதிர்பார்க்கலாமோ? "வாங்கடா என் சிங்கக் குட்டிகளா!" தாத்தாவுக்கு ஒரே சந்தோஷம். இரண்டு பேரக் குழந்தைகளையும் கட்டி அணைத்துக் கொண்டார்.
பக்கத்து வீட்டிலிருந்து ஒரு உருவம் எட்டிப் பார்த்ததை சந்தானம் கவனிக்காமலில்லை. ஆம். அதுதான் விஜியின் வீடு. விஜி என்கிற விஜயலக்ஷ்மிதான் எட்டிப்பார்த்தாள். தான் பள்ளி படித்தபோது வாசல் கதவோரம் நின்று தெருவை நோக்கும் அதே விழிகள். காலம் கடந்துவிட்டது. அவளும் இப்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாய். அதை சந்தானமும் அறிவான். ஏதொவொரு ஏக்கப் பெருமூச்சுவிட்டு, பின் வீட்டிற்குள் சென்றான் சந்தானம். அங்கு கூடியிருந்தவர்களில் இரண்டு ஆள் சாமான்களை உள்ளே தூக்கிச் சென்றனர். டாக்ஸி திரும்பிப்போனது.
"வாடா குழந்தே" என்று உள்ளே முற்றத்தில் சந்தானத்தின் அம்மா அவனைக் கட்டித் தழுவினாள். பிள்ளைக்கு எவ்வளவு வயசானாலும் தாய்க்கு என்றுமே அவன் குழந்தைதான். இதுதான், உலகில் பாரதத்தின் அடையாளம். பாசம், மனிதநேயம், பண்பாடெல்லாம் இன்னும் இந்தியாவில் சாகவில்லை. நகர அளவில் அவை சிறிது குறைந்திருக்கலாம். ஆனால் கிராமங்களில் அவை வேறூன்றிப் போனவைகள்.
"ஏம்மா, நீதான் அப்பாவுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்கப்படாதா. நீங்க ரெண்டு பேரும் தனியா இங்கே இருந்து இன்னும் என்னத்தை சாதிக்கப்போறேள். பேசாம இப்ப நான் திரும்பிப் போகும்போது ரெண்டுன்பேரும் எங்ககூட வந்துடுங்கோ," சந்தானம் தான் வந்த நோக்கத்தை எடுத்துரைத்தான்.
"தாத்தா, இப்ப நாங்க திரும்பிப் போகும்போது எங்க கூடவே நீங்களும் டெல்லி வந்துடுங்க. அங்கே நம்ம எல்லோரும் சந்தோஷமா இருப்போம்." வாசலில் சந்தானத்தின் மகளும், மகனும் தாத்தாவை தில்லி வரப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது சிங்காரம் பிள்ளை வந்தார்.
"வா சிங்காரம். நம்ம பையன் டெல்லிலேர்ந்து வந்திருக்கான். உள்ளே இருக்கான் போய்ப்பாரு," தாத்தா சிங்காரம்பிள்ளையை உள்ளே அனுப்பினார்.
"என்ன தம்பி, சௌக்யமா? எனக்கு நீங்க வந்த செய்தி கிடைச்சுது. உடனே ஓடி வந்துட்டேன்," சிங்காரம் பிள்ளை உள்ளே சந்தானத்தின் பார்வையைத் தன்பக்கம் திசைதிருப்பினார்.
"அடேடே, வாங்க கணக்குப்பிள்ளை. எப்படி இருக்கீங்க?" சிங்காரம் பிள்ளை அந்த ஊர்க் கோவிலில் கணக்குப்பிள்ளை, அதுதான் சந்தானம் அவரை அப்படி வரவேற்றான்.
"நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? புள்ளைங்களெல்லாம் எப்படி இருக்காங்க?" குசலம் விசாரித்தார் கணக்குப் பிள்ளை.
"அவங்க எல்லாம் தாத்தாகூட வெளியிலே திண்ணையிலேதானே இருந்தாங்க. பார்க்கலையா?" சந்தானம்.
"நான் உங்களைப் பார்க்க வர்ர அவசரத்துலே அதுங்களை கவனிக்கலே. அப்ப எல்லாருமே வந்திருக்கீங்களா. ரொம்ப சந்தோஷம்", கணக்குப் பிள்ளை விசாரித்துவிட்டுப் போனார். பிறகு எல்லோரும் கோயில் குளத்தில்போய் குளித்துவிட்டு சாப்பாட்டுக்குத் தயாரானார்கள். அப்போது அங்கு விஜி வந்தாள்.
"வா விஜி. எப்படி இருக்கே?" சந்தானம் விசாரித்தான்.
"ஏதோ இருக்கேன்..." விஜி முகம் வாட சமயல் கட்டில் இருந்த மாமியிடம் ஓடிவிட்டாள். சந்தானம் குழம்பிப்போனான். பிறகு சமயல் கட்டிலிருந்து வந்த சந்தானத்தின் அம்மா. "நீ விஜிகிட்டே ஒண்ணும் கேட்டுக்காதே. அவாத்துலே ஒரு அசம்பாவிதம் நடந்துடுத்து. அதை உனக்கு அப்புறமா சொல்லறேன்." என்று கூறிவிட்டு அடுப்பங்கறைக்குச் சென்றவள் விஜியிடம் பேசிவிட்டு அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். பிறகு சந்தானத்திடம் வந்து, "அவளோட ஆத்துக்காரன் மூணுமாசம் மின்னாடி டவுனுக்குப் போயிருந்தப்ப பஸ்ஸிலே அடிபட்டு அல்ப்பாயிசிலே போயிட்டாண்டா. அதான் விஜி இப்ப நிர்க்கதியா நிக்கறா" என்று கூறியவுடன் சந்தானம் அப்படியே உரைந்து நின்றான். "சீ இந்த இறைவன் எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டிப்படைக்கிறான்?" என்று நொந்துகொண்டான்.
சற்று நேரத்திற்கெல்லாம் சந்தானம் தன் மனைவியை அழைத்துக்கொண்டு விஜியின் வீட்டிற்குச் சென்றான். விஜி கதவைத் திறந்தாள். தன் மனைவியிடம் வருவதற்கு முன்பே அந்த நிகழ்ச்சியைச் சொன்னதால் கதவைத் திறந்த விஜியை அணைத்துக்கொண்டு சந்தானத்தின் மனைவி உள்ளே சென்றாள்.
"எனக்கு சமாச்சாரமே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் அம்மா என்னிடம் சொன்னாள். அப்படியே பதறிப்போனேன் விஜி. கவலைப்படாதே உன்னை அப்படி நாங்களெல்லாம் நிர்க்கதியாய் விட்டுவிட மாட்டோம். தைரியமா இரு. ஏதாவது எங்களால ஆகணும்னா சொல்லு. நாங்க கண்டிப்பா செய்வோம்," சந்தானம் விஜிக்கு சமாதானம் கூறினான்.
"ஆக வேண்டியது ஆயிடுத்து, இனி அதை நினைத்துக் கவலைப்பட்டா என்ன கிடைக்கும்? அவர் திரும்பியா வரப்போறார்? உங்களால ஒரு காரியம் ஆகணும். முடிஞ்சா எனக்கு அந்த ஒத்தாசையை மட்டும் பண்ணுங்கோ," என்று தன் திடமான மனதைத் திறந்து கொட்டினாள் விஜி.
"என்ன செய்யணும்? சொல்லு விஜி. கண்டிப்பா பண்ணறேன்," சந்தானம் மனதாரக் கேட்டான் விஜியிடம்.
"இப்ப என் பையன் ப்ளஸ் டூ எழுதியிருக்கான். அவனை உங்க கூட டெல்லிக்கு அழைத்துக்கொண்டு போய் ஏதாவது நல்ல வேலையா வாங்கிக் கொடுத்தேள்னா ரொம்பப் புண்ணியமாவும் இருக்கும், என்னோட வாழ்க்கையும் நிம்மதியா முடியும்," விஜி விரக்தி கலந்த தன் ஆசையை வெளிப்படுத்தினாள்.
"என்னக்கா அப்படிச் சொல்லறேள்? நாங்க இதுகூட செய்ய மாட்டோமா. இவர் அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வார். எங்க கூடவே நீங்களும் வந்துடுங்கோ. வேலை கிடைக்கும்வரை நம்ம வீட்டிலேயே தங்கிக்கலாம். பிறகு உங்க இஷ்டப்படி வேறு இடத்துக்குப் போகணும்னாலும் நாங்களே அதையும் பார்த்துச் செய்வோம். இனி நீங்க எனக்கு அக்காவாக்கும்," என்று மனம் தழுதழுக்க சந்தானத்தின் மனைவி கூறியதைக் கேட்டு சந்தானம் பெருமையும், சந்தோஷமும் பட்டான். காப்பியைக் குடித்துவிட்டு இருவரும் கிளம்பினர்.
"எங்கேடா போனே சந்தானம். உன் குழந்தைகள் என்னைக் கேட்டு தொளை தொளைன்னு தொளைச்சுப்புட்டா," அம்மாவின் வரவேற்பு சந்தானத்தின் வீட்டில்.
"இங்கேதாம்மா விஜியாத்துக்குப் போயிருந்தோம். அவளுக்கு சமாதானம் சொல்லிட்டு வந்தோம்," என்று சந்தானம் தன் அம்மாவையும், குழந்தைகளையும் அமைதிப்படுத்தினான்.
லீவில் வந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. அன்று அப்பா, அம்மா இவர்களுடன் சந்தானமும் தன் மனைவியும் உட்கார்ந்து டில்லி வாழ்க்கை, அந்த கிராமவாழ்க்கை எல்லாவற்றையும் விலாவாரியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது சந்தானத்திற்கு விஜியின் நினைவு வரவே அந்தப் பேச்சை எடுத்தான்.
"அம்மா. அன்னிக்கு விஜியாத்துக்குப் போனப்ப அவளோட பிள்ளையை எங்களுடன் அழைத்துப்போய் டெல்லியிலேயே ஒரு நல்ல வேலையா வாங்கிக் கொடுக்கலாம்னு நானும் வசந்தியும் (தன் மனைவியைச் சுட்டிக்காட்டினான்) தீர்மானம் பண்ணியிருக்கோம்மா," என்று சந்தானம் சொல்லவே, "நல்ல காரியம்டா. உன் மனசிலே இப்படியொரு எண்ணம் தோணியது உனக்குப் பலகோடி புண்ணியம் கிடைச்சா மாதிரி. இங்கேயிருந்தா அந்த புள்ளையும் அரையணா, ஒரணான்னுதான் சம்பாதிப்பான். அங்கே வந்தால் அவா வாழ்க்கையும் நன்னாயிடும். அப்படியே செய்," இப்படிச் சொல்லி சந்தானத்தின் அப்பா ஆனந்தமாய் அதை ஆமோதித்தார்.
சந்தானமும், வசந்தியும் மகிழ்ந்தார்கள். குழந்தைகளும் சந்தோஷமடைந்தனர்.
"நீங்களும் எங்க கூடவே வந்துடறளேன்னோ?," இடுக்கோடு இடுக்கா அதையும் சந்தானம் ஊர்ஜிதப்படுத்த முனைந்தான்.
"அதை அப்பறம் பார்த்துகலாம்டா. இப்போதைக்கு இதைச் செய்," என்று முற்றுப்புள்ளி வைத்தார் சந்தானத்தின் அப்பா.
"அப்பா இன்னொரு ஆசையும் என் மனதிலிருக்கு," சந்தானம் இழுத்தான்.
"என்னடா சொல்லு. ஆசையெல்லாம் மனதிலேயே வச்சுண்டிருந்தா நிறைவேறாது. வெளியிலே சொன்னாதான் அதைப்பற்றி ஆலோசிக்கலாம்," விஸ்வனாத குருக்கள் அவன் ஆசையை வெளிக்கொணர முயன்றார்.
"நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா என் பிள்ளைக்கு, விஜியோட பெண்ணைப் பார்க்கலாம்னு நினைக்கிறேன்," தயங்கித் தயங்கிச் சொன்னான் சந்தானம்.
"உண்மையிலேயே உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்குடா. இதையேதான் என் மனசிலேயும் எண்ணியிருந்தேன். நீயே வெளிப்படையாச் சொல்லிட்டே. பேஷா பண்ணிடலாம். உன் பையன் ஜாதகமும் எங்கிட்டே இருக்கு, விஜிகிட்டேருந்தும் ஜாதகத்தை வாங்கி நாளைக்கே பொருத்தம் பார்த்துச் சொல்லிடறேன்," சந்தானத்தின் அப்பா பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
"பாவம் நிர்க்கதியா நிக்கற அந்தப் பொண்ணுக்கு நாம வழிகாட்டாம வேற யாரு இந்த ஊர்ல செய்யப்போறா. அந்தப் பொண்ணுக்கு அவப்பா சொத்து சுகமா வைச்சுட்டுப் போயிருக்கார். நல்ல காரியம் பண்ணறேள். எனக்கு ரொம்ப சந்தோஷம்," சந்தானத்தின் அம்மாவும் ஆமோதித்துவிட்டாள்.
மறு நாள் அந்த வீடே குதூகலமா இருந்தது. ஜாதகம் மிகவும் பொருந்தியிருந்தது. இவ்வளவு நாள் வாடிய முகத்துடனிருந்த விஜியின் முகமும் அன்று மலர்ந்திருந்தது. அதைப் பார்த்த சந்தானத்திற்கு ஓர் இனம்புரியாத சந்தோஷம்.
தில்லி சென்றான். அந்தப் பையனுக்கும் நல்ல வேலை வாங்கிவைத்தான், கல்யாணத்துக்கும் ஏற்பாடு செய்தான். அவனது தாய், தந்தையரும் மனம் குளிர்ந்து விஜியை அழைத்துக்கொண்டு தில்லியோடு வந்து சேர்ந்தனர். எல்லாம் சுபமாய் முடிந்தது.
இலங்கையில் நாளுக்கு நாள் மடிந்துபோகும் அப்பாவித் தமிழர்களுக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறோமே. இதுவும் அதுபோல் ஒரு தொப்புள்கொடி உறவுதானா? பரோபகாரம் இதம் சரீரம்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















