I will no do
நான் செய்ய மாட்டேன்
சுகந்தி
ஏய் செல்வா! ஒரு ஓட்டமா ஓடிப்போய் நம்ம டார்ச்சுக்கு பேட்டரி வாங்கி வந்துடுடா, மின்சாரத் தடை வந்தால் வசதியா இருக்கும். அம்மாவின் குரல் செல்வாவிற்கு எரிச்சலைத் தந்தது. அம்மா எப்பவுமே இப்படித்தான் எதற்காகவாது கூப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அவன் வேலையை ஒழுங்காகச் செய்ய விட மாட்டார்கள். அம்மா பேசுவது காதிலேயே விழாதது போல தன் வேலையில் முனைந்தான். அவனுக்குத் தெரியும், எப்படியும் அம்மா அவனைத் தேடி வந்து நச்சுவார்கள் என்று. குனிந்த தலையை நிமிர்த்தாமல் வேலையில் ஈடுபட்டான். குடியரசு தினத்திற்காகப் பள்ளியில் ஆங்காங்கே ஒட்ட ஒரு சித்திர விளம்பரம் வரைந்து கொடுப்பதாக அவனுடைய விளையாட்டு ஆசிரியருக்குப் பள்ளியில் வாக்குக் கொடுத்திருந்தான். வரைந்து கொண்டிருந்த படத்திலிருந்த நேரு மாமாவின் சட்டைப் பையில் ரோஜாவை நிதானமாக வரைந்து கொண்டிருந்தான்.
அவன் நினைத்தது போலவே அம்மா அவன் பக்கத்தில் வந்து நின்று அவன் தோளைத் தொட்டாள், “ஏண்டா செல்வா, காது கேட்கலையா? கடைக்குப் போய்ட்டு வாடான்னு சொல்றேன்னில்ல”
"அம்மா, வேலை இருக்கம்மா" தலை எடுக்காமல் பதில் சொன்னான் செல்வா.
"போடாச் செல்லம், அம்மா சொல்றனில்லை, பேசியபடியே தலையைத் தடவிக் கொடுத்தார்கள் அம்மா.
எதுவும் பேசாமல் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான் செல்வா.
"டேய் என்னடா, நான் பாட்டுக்கு சொல்லிக்கிட்டே போறேன், நீ சும்மா இருந்தா எப்படி? எந்திரி, படம் தானே வரைந்து கொண்டிருக்கிறாய், ஒரு ஓட்டம் போய் வாங்கிட்டு வந்துடுடா" அம்மா சின்னதாக மிரட்டினாள்.
"அம்மா, இந்தப் படத்தை நாளைக்கு முடித்துக் கொடுக்கிறேன் என்று வாக்குக் கொடுத்து இருக்கிறேன். நான் அப்படி முடித்துக் கொடுத்தால்தான் அதைப் பிரதி எடுத்து, பள்ளி எங்கும் ஒட்ட வசதியாய் இருக்கும். நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எனக்கு வேலை சொல்லிக் கொண்டிருந்தால் என்னால் என்னுடைய பாடங்களிலோ வேலைகளிலோ கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது ஒரு பேட்டரிக்காக மட்டும் என்னைக் கடைக்கு அனுப்பாதீர்கள், நான் போக மாட்டேன்." என்று பிடிவாதம் பிடித்தான் செல்வா.
"சரிடா, நான் உன்னைக் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன் சொல்லு. பேட்டரி மட்டுமில்லை, தேங்காய், இரண்டு தக்காளி மட்டும் வாங்கிட்டு வாடா. அப்பா வருவதற்குள் நான் இரவு சமையலை முடித்துவிட வேண்டும் என்று பார்க்கிறேன்". என்றவள் செல்வம் பேசாமல் இருக்கவும், "டேய் தங்கக் கட்டி, என் ராசா இல்லை, வாங்கிட்டு வந்துடுடா ராஜா, நான் அப்பாக் கிட்ட சொல்லி உனக்கு அந்தப் புது வீடியோ கேம் வாங்கித் தரச் சொல்கிறேன்."
"எனக்கு ஒன்றும் வேண்டாம், நான் இந்த நேரு மாமா படத்தை முடித்ததும் கடைக்குச் செல்கிறேன்" என்றான் செல்வா.
குனிந்து தன் வேலையில் ஈடுபட்டான். "சரி, உனக்கு வீடியோ கேம்ஸ் வேண்டாம் என்றால் என்ன வேண்டும் சொல்? வண்ணம் தீட்டும் உபகரணங்கள் வாங்கித் த்ரச் சொல்லவா? இந்த சனிக் கிழமை அப்பாவை உன்னைக் கடைக்குக் கூட்டிப் போகச் சொல்கிறேன். நீ உனக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொள். இப்ப கடைக்குப் போய் எனக்கு சாமான் வாங்கி வந்து விடு" என்றால் அம்மா.
தாயை நிமிர்ந்து பார்த்தான்.
"இல்லைம்மா, நான் இப்ப கடைக்குப் போக மாட்டேன், என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்." என்று விட்டுத் தலையைக் குனிந்து கொண்டான். அவன் வார்த்தைகளால் அம்மா கொபம் கொண்டு அவனைத் திட்டிய போதும் அவன் தலையை நிமிர்த்தவில்லை. படம் வரைவதிலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்த முயற்சித்தான்.
"டேய் செல்வா, உனக்கு வரவர ரொம்பத் திமிரு அதிகமாப் போச்சு. சொல்பேச்சே கேட்க மாட்டேன் என்கிறாய். அப்பா வரட்டும் சொல்கிறேன்" என்றபடி அம்மா சமையலறைக்குச் சென்றாள். அவரது பேச்சு காதில் விழுந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைத் தொடர்ந்தான். அம்மா தங்கையைக் கொஞ்சி அவளைக் கடைக்கு அனுப்பவதில் முனைவது தெரிந்தது. அவன் படம் வ்ரைந்து முடிப்பதற்கும் மின்சாரம் தடைபட்டு விளக்குகள் அணைவதற்கும் சரியாக் இருந்தது. கடைக்குச் சென்ற தங்கை இருட்டில் திரும்பி வர வேண்டியிருக்கும் என்பதையும் அவன் உணர்ந்தான். சே, அம்மா சொன்னவுடன் நாமே சென்றிருக்கலாமோ என்று ஒரு வினாடி தோன்றியது. அடுத்த வினாடியே அந்த எண்ணத்தை ஒதுக்கித் தள்ளினான். அப்படிச் சென்றிருந்தால் அவனால் இன்று படத்தை வரைந்து முடித்திருக்கவே முடியாது. நாளை ஆசிரியரிடம் கெட்டப் பெயர் வாங்க வேண்டியிருந்திருக்கும்.
சமையலறையில் அம்மா ஏதோ குடைவது தெரிந்தது. கையில் இரண்டு பாடப்புத்தகங்களை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தான். தெருவே இருட்டாக இருந்தது. சில சமயம் தெரு முனையில் உள்ள கோவிலில் மின்சாரம் இருக்கும். அந்த நம்பிக்கையில் வெளியே வந்தவன் முதலில் தங்கையைத் தேடிக் கடைக்குச் சென்றான். தட்டுத் தடுமாறி இருட்டில் வந்து கொண்டிருந்தவளைப் பத்திரமாக வீடு வரை கூட்டி வந்து விட்டுவிட்டு "நான் கோவிலுக்குப் போய் படிக்கப் போகிறேன்" என்று அம்மாவிடம் சொல்லி விட்டுத் திரும்பிக் கோவிலுக்கு நடந்தான். நல்ல வேளை கோவிலில் மின்சாரம் இருந்தது. உட்கார்ந்து பாடங்களைப் படிக்கத் தொடங்கினான்.
கோவில் மூடும் நேரமாகும் வேளையில் செல்வாவின் தந்தை அவனைத் தேடி வந்தார். என்ன செல்வா, படித்து முடித்து விட்டாயா? வீட்டுக்கு வருகிறாயா? அங்கேயும் மின்சாரம் வந்து விட்டது." என்றார். "சரிப்பா" என்றவன் எழுந்து பிள்ளையாரை ஒரு முறை வணங்கி விட்டுத் தன் தந்தையின் பக்கம் திரும்பினான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய தந்தை, "செல்வா, நீ ஏன் அம்மாவிடம் தினம் தினம் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறாய்? அம்மாவை அனுசரிச்சுப் போகக் கூடாதா? அவளுக்கு உன் மேல் எவ்வளவு பாசம் தெரியுமா?"
எதுவும் சொல்லாமல் தலைக் குனிந்தான் செல்வா.
"கேட்கிறதுக்கு பதில் சொல் செல்வா, நீ நல்ல பையன் என்று எனக்குத் தெரியும்." அமைதியாக நின்ற மகனின் தோளில் கை வைத்து அழுத்தினார் தந்தை.
"அம்மா நிறைய தப்பு செய்யறாங்கப்பா, எனக்கு அது பிடிக்கலை அது தான்."
தான் தூக்கி வளர்த்த பையன், பேசுவது கேட்கத் தந்தைக்குச் சிரிப்பாக வந்தது. "என்ன சொல்கிறாய் செல்வா?" என்று நிதானமாகவே கேட்டார், "அம்மா உன்னிடம் உதவி கேட்பது தப்பா?"
"இல்லைப்பா, அம்மாவிற்கு உத்வி செய்ய எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா எனக்கும் வேலை இருக்குன்னு அம்மா யோசிக்க மாட்டாங்க. அது மட்டுமில்லை" என்று சொல்லி நிறுத்தினான்.
"என்னப்பா?"
"எனக்கு லஞ்சம் கொடுத்துப் பழக்குறாங்க"
"என்னது?" திகைத்தார் தந்தை, "என்ன சொல்ல வர நீ?"
"ஆமாம்ப்பா, நான் அம்மாவிற்கு உதவி செய்யணும், தங்கச்சிக்கு விட்டுக் கொடுக்கணும், இல்லைன்னு சொல்லலை. ஆனா அவங்களுக்கு என்ன தேவையோ, அதைப் பட்டியல் போட்டு வைச்சா நான் பள்ளியிலிருந்து வந்தவுடன் நான் பார்த்து உடனே என் வசதிக்கு ஏத்தபடி பாடங்களுக்கு நடுவிலோ, ட்யூஷன் போகும் போதொ அம்மாவின் அவசரத்திர்கு ஏற்ற மாதிரியோ செய்து கொடுப்பேன். அதை விட்டுட்டு ஒரு மணி நேரத்தில் நாலு தரம் ஏதாவது செய்யச் சொல்லித் தொந்தரவு செய்கிறார்கள். இல்லை, முடியாதுன்னு சொன்னாப் புரிஞ்சுக்க மாட்டேன்றாங்க. உனக்கு நான் அது வாங்கித் தரேன், இது வாங்கித் தரேன். விடுமுறையில் இங்கே கூட்டிட்டுப் போறேன் என்று சொல்லி அவங்க காரியத்தை செய்து முடிக்கப் பார்க்கிறாங்க. அதனால நானும் தங்கச்சியும் தானே கெட்டுப் போறோம். நாங்க தான் அப்பா இந்தியாவின் அடுத்த தலை முறை. இந்தியாவை நல்ல முறையில் நடத்தி உலக அளவில் பெயர் வாங்க வைக்க வேண்டிய கடமை எஙகளுக்கு இருக்கு. சின்ன வயசிலேயே எதற்கெடுத்தாலும் இப்படி லஞ்சம் கொடுத்து நீங்க எங்களைப் பழக்குவது தப்பில்லையாப்பா? எங்களுக்குக் கடமை உண்ர்ச்சியையும் நேர்மையையும் ஒரு பக்கம் நீங்களே கற்றுக் கொடுத்து விட்டு இன்னோரு பக்கம் இந்த லஞ்சம் வாங்கும் பழக்கத்தையும் நீங்க ஏற்படுத்திக் கொடுப்பது தவறு தானே?"
ஆவேசமாகக் கேட்கும் ம்கனை பதில் சொல்ல முடியாமல் பெருமையுடன் அணைத்துக் கொண்டார் தந்தை.
Your Feedback
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












