A short story
ஒரு குட்டிக் கதை
நடராஜன் கல்பட்டு
மழலைகளின் மகிழ்ச்சிக்காக ஒரு குட்டிக் கதை இதோ:
சினிமா
"சினிமா பாக்கலாம் வரீங்களா?" என்றார் உமாபதி ஒரு நாள் மாலை ஐந்து மணிக்கு."என்ன சினிமா?"
"ஒரு குடும்பப் படம் சார்."
"அப்படியா? எந்த தியேடர்லே?"
"தியேடர்லே இல்லே. வெங்கடராமன் தெரு முதல் வீட்டுலே. அந்தத் தெருவுக்கு அந்தப் பேரு வந்ததுக்குக் காரணமே அந்த வீட்டைக் கட்டின வெங்கடராமன் தான். அவர் தான் மொத மொத அந்தத் தெருலெ வீடு கட்டினார். இப்பொ அவருக்கு வயசு அறுபதுக்கு மேல ஆயிடிச்சு. வெங்குத் தாத்தான்னு தான் எல்லோரும் அவரெ இப்போ கூப்பிடறாங்க. அந்தத் தெருலெயே நின்னுகிட்டு வெங்கடராமன் வீடு எதுன்னு கேட்டாத் தெரியாதும்பாங்க. வெங்குத் தாத்தா வீடு எதுன்னு கேளுங்க. உடனே ஒண்ணாம் நம்பர் வீட்டே காமிப்பாங்க. அந்த வீட்டுலெ நடக்கற சினிமாவைத் தான் போய் பாக்கலாம்னு சொன்னேன்."
"நடக்குற சினிமான்னா, இப்போ ஷூடிங்க் நடந்துகிட்டு இருக்கா அந்த வீட்டுலே?
"ஷூடிங்க் இல்லெ சார். ஃபேமிலி ட்ராமா சார்."
"என்ன சார்? ஒரு சமயம் சினிமாங்கறீங்க. ஒரு சமயம் ட்ராமாங்கறீங்க. எனக்கு தல சுத்துது."
"போய் பாத்தோம்னா தானே தெரியுது என்ன நடந்துகிட்டு இருக்குதுன்னு."
"ஊர் ஊராப் போய் யார் வீட்டுலெ என்ன நடக்குதுன்னு பாக்கறதே ஒங்க போது போக்காப் போச்சு. அதுனாலதான்னு நெனெக்கெறேன் ஒங்க பின்னாடி சிலபேரு ஒங்களெ ஊர் வம்பு உமாபதின்னு சொலாறாங்க. போய்த்தான் பாக்கலாம் என்ன நடக்குதுன்னு," என்று கிளம்புகிறேன் நானும்.
டைரெக்டர் 'ஸ்டார்ட்' என்று சொல்லமலே பேச்சை ஆரம்பிக்கிரார் சுப்ரமணியம். "நாம எல்லொரும் சேந்து போய் சினிமா பாத்து ரொம்ப நாளாச்சு இல்லே? ஒரு சினிமா போய் பாக்கலாமா?"
"போகலாம்... போகலாம்," என்று ஏக காலத்தில் பல குரல்கள்.
"என்ன சினிமா? இங்கலிஷா, தமிழா, ஹிந்தியா?" இது ராமு.
"ஏண்டா சுப்புணி, புராணக் கதையா, இல்லே சமூகக் கதையா?" என்று கமலா பாட்டி.
தாத்தா ஆரம்பிக்கிரார், " ஸம்பூர்ண ரமாயணம் இன்னும் நட்ந்துண்டு இருக்காடா சுப்புணி? எனக்கு அதுலெ ஒரு சந்தேகம். ராமர் வாலியே மறஞ்சிண்டு இருந்து கொல்றார். அப்பொ வாலி கேக்கறான், 'ராமா ஒனக்கும் எனக்கும் ஒரு சண்டயும் இல்லாதபொது என்னெ எதுக்குக் கொன்னே, அதுவும் மறஞ்சிண்டு இருந்து?'ன்னு. அதுக்கு ராமர் என்ன பதில் சொன்னார்னு போன தடவை பாத்த போது என் காதுலெ சரியா உழலே. அது தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்டா. அந்த படம் ஓடிண்டு இருந்தா அதுக்கு போகலாண்டா."
"அதெவிட க்ரிஷ்ண லீலா இருந்தா பாக்கலாம்னா." இது கமலா பாட்டி.
"ஆமாம். இந்த வயசுலெ க்ரிஷ்ண லீலாதான் கேக்கறதாக்கோம்?" என்ற முனகல் சமயல் உள்ளிருந்து.
"ஒரு இங்கிலிஷ் படம் பாக்கலாமே", என்று ஐடியா கொடுக்கிறார் சுப்ரமணியம்.
"சுப்புணி, எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகண்டா. இந்த இங்க்லிஷ் படத்துலெ எல்லாம் ஒரு பொண்ணு ஏதோ பாட்டெ மொண மொணத்துண்டு ஏதோ வேலை செஞ்சிண்டு இருப்பா. அப்பொ ஒத்தன் வந்து அவளெ கட்டிப் புடிச்சு முத்தம் கொடுப்பான். அவளும் அவனெ இருக்க கட்டிண்டுதான் இருப்பா. ஆனா முத்தம் குடுத்து முடிஞ்சதும் அவ அவன் கன்னத்துலெ பளார்னு ஒரு அறை உடுவா. அது அவோ புருஷனா, இல்லெ அடுத்தவீட்டுக் காரனா? ஏன் அப்படி முத்தம் குடுத்து முடியற வரைக்கும் காத்திண்டு இருந்துட்டு அப்பொறமா அவனே அடிக்கறா?" இது கமலா பாட்டியின் சந்தேகம்.
"இதெ சின்னஞ் சிறுசுகளுக்கு எதுத்தாப்பளெ இப்போ கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டியதுதான் ரொம்ப அவசியம். வயசுக்கேத்த விசாரம் வேண்டாம்?" மீண்டும் முனகல் சமயல் உள்ளில் இருந்து.
ராமு சொல்கிறான், "என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சிவாஜி படம் பாத்தூட்டு அது சூபர் ஹிட் படம்டாங்கரா. அதுக்குப் போகலாமே."
"என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்றா அதுலெ ரஜினி பண்ற ஒவ்வொரு காரியமும் நம்பராப்ளவே இல்லென்னு. அதெவிட ஷாருக் கான் படம் 'யெஸ் பாஸ்' கெய்டிலெ நடக்கறது. அதுக்குப் போகலாம்." இது லலிதாவின் பரிந்துரை.
"ஆமாம். சுட்டுப் போட்டாக் கூட ஒரு ஹிந்தி வார்தைக்கும் அர்த்தம் தெரியாது இவளுக்கு. ஹிந்தி படம் பாக்கணுமாம், ஹிந்தி படம்." சண்டையை ஆரம்பிக்கிறான் ராமு.
"அர்த்தம் புரியாட்டா என்ன? அடுத்த வாரமே கடைல டீவீடீ கெடைக்கும், சப் டைடிலோட. அதெப்பாத்து புரிஞ்சுக்கலாமே."
"அப்பொ அடுத்த வாரமே வீட்டுலெ டீவீடீ வாங்கி பாத்துக்கலாமே."
"தியேடெர்லே பாத்தா ஆளெல்லாம் நிஜ சைஸுலெ தெரிவா. டீவீடீலெ சின்ன சின்னதாத்தான் தெரிவா. ஹிந்தி படம் வேணான்னா இங்க்லிஷ் படமே பாக்கலாம். ஹேரி பாட்டர் அண்ட் தெ ஆர்டெர் ஆஃப் தெ ஃபீனிக்ஸ் வந்து இருக்காம். அதுக்குப் போகலாமே. அந்த படத்துக்கு போனா வரவாளுக்கெல்லாம் ஒரு மேஜிக் வாண்டோ இல்லே ஃபயர் போல்ட்டோ இல்லெ ஹேரி ஸ்பெக்டகிள்ஸோ தராளாம்."
"ஏன். விட்டலாசார்யா படம் 'பூ பூம்பா' நடக்கறதாமே அதுக்குப் போனா?" என்று ராமுவின் நக்கல்.
"ஏண்டா, சுப்புணி ஃபயர் போல்ட்னா என்னடா அது. ஒரு போல்டுலே இருந்து நெருப்பு வருமா? கேஸ் அடுப்பு பத்த வைக்க உபயோகமா இருக்குமாடா அது?" கமலா பாட்டியின் அடுத்த சந்தேகம் இது.
"அம்மா, ஃபயர் போல்ட்டுங்கறது ஒண்ணும் போல்டு இல்லெம்மா. அந்த சினிமாலெ வர சில பசங்க தொடப்பக் கட்டை மாதிரி ஒண்ணெ காலுக்கு இடுக்குலெ வெச்சிண்டு ஆகாசத்துலெ சர்ருன்னு பறப்பாம்மா. அதுதான் ஃபயர் போல்டுங்கறது."
"நமக்கு தொடப்பக்கட்டே கெடச்சாக்கூட ஒத்தாசையாத்தான் இருக்கும். அதுக்கெ வாணா போகலாம்."
"டேய், சாமா நீ என்னடா சொல்றே?" - சுப்ரமணியன் கேட்கிறார்.
"ஆமாம் சாமாவைக் கேளுங்கோ. அந்த முந்தரிக்கொட்டை சொல்றதுதான் நடக்கும் எப்போபொதும் இந்த ஆத்துலே. நான் ஒத்தி நாள் பூரா எண்ணைப் பொகெய்லெயும் மொளகா நெடிலெயும் காஞ்சிண்டு இருக்கேன். என்னயும் ஒரு வார்தெ கேக்கணும்னு தோண்றதா இவாளுக்கு?" சமயல் அறை புலம்பல் மீண்டும்.
"அது என்ன சார் முந்தரிக் கொட்டைன்னு சொல்றாங்க?" இது என் கேள்வி.
"அதுவா சார். அந்த வீட்டுலெ என்ன ஒரு காரியம் நடக்கணும்னாலும் ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொல்லுவாங்க. கடசீலே, 'நான் சொல்லுட்டுமா?'ன்னு சாமா ஒரு வழி சொல்லுவான். அனேகமாக அவன் முந்திக் கொண்டு சொல்லும் வழிலெ தான் காரியம் நடக்கும். அதனாலெ சாமாவுக்கு மத்தவங்க வெச்ச பேரு ‘முந்தரிக் கொட்டை’. "நான் சொல்லட்டுமா? ஜுராஸிக் பார்க் போகலாம். இல்லேன்னா ஸிம்ப்ஸன்ஸ் கார்டூன் நடக்கறதாம். அதுக்கு போகலாம்." இது சாமாவின் விருப்பம்.
சுப்ரமணியம் தவிக்கிறார், "இப்படி ஆளாளுக்கு ஒண்ணு சொன்னா என்ன பண்றது?"
"நான் சொல்றென் இதுக்கு வழி. இப்பொ சொன்ன எல்லா பேரையும் சீட்டுகள்ளெ எழுதி குலுக்கி போடுவோம். எதுவுமே சொல்லாத அம்மாவைக் கூப்பிட்டு ஒரு சீட்டு எடுக்கச் சொல்லுவோம். அதுலெ என்ன வரதோ அந்த சினிமாவுக்குப் போவோம்." யோஜனை சொல்கிறான் சாமா.
எல்லோரும், சரியென்று சொல்ல, சீட்டுத் துண்டுகள் எழுதப் படுகின்றன.
சமயல் உள்ளிலிருந்து ஒரு சன்னக் குரல். "அந்த முந்தரிக் கொட்டைக்காவது, தப்பு.... தப்பு, பிஞ்சுக் கொழந்தைக் காவது நானும் இருக்கேன்ற நெனவு இருக்கே. என்ன இருந்தாலும் என் செல்லக்கண்ணு இல்லயா அவன்?"
"அம்மா, கொஞ்சம் சட்டுன்னு இங்கெ வாம்மா", சாமா அழைக்கிறான்.
"என்னடா? கை வேலயா இருக்கேன்."
"சீக்கிரம் வாம்மா. நீ ஒரு முக்கியமான வேலை செய்யணும்." என்று சாமா அழைக்க சுந்தரி வந்து ஒரு சீட்டை எடுத்துக் கொடுக்கிறாள். என்ன ஆச்சரியம்! சீட்டில் 'சிம்ப்சன்ஸ்'!
"என் செல்லக் கண்ணனுக்கு எப்பவுமே ஒரு ராசி உண்டு", என்று சொல்லியபடி மீண்டும் மறைகிறாள் சமயல் உள்ளே சுந்தரி.
"என்ன படமானா என்ன? நெட் ரிசல்ட் ஒண்ணுதான். என் பர்சுலெ விழப் போறது ஒரு பெரிய ஓட்டை", என்ற புலம்பலுடன் எழுந்திருக்கிறார், சினிமா போவது பற்றிய பேச்சை ஆரம்பித்து வைத்த சுப்ரமணியம்.
சினிமாவும் ஆரம்பிக்கிறது. முதலில், ‘ப்ரொட்யூசர், டைரெக்டர், அனிமேஷன் பை, வாய்ஸெஸ் பை’ என்றெல்லாம் வருகின்றன. ஸிம்ப்ஸன் காரில் வருவது போல ஒரு சீன் ஆரம்பித்ததும் திடீரென மின் விசிறிகள் நிற்கின்றன. கூடவே படமும் திரையிலிருந்து மறைகிறது.
தியேடரில் ஒரே கூச்சலும் குழப்பமும். வீடு திரும்புகிறது வெங்குத் தாத்தா குடும்பம்.
நாங்களும் வீடு திரும்புகிறோம், சினிமா பாக்காட்டா என்ன. அதான் ட்ராமா பாத்தோமே என்ற திருப்தியுடன்.
Natarajan
Your Feedback
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||











