ஒரு குட்டிக் கதை
நடராஜன் கல்பட்டு
மழலைகளின் மகிழ்ச்சிக்காக ஒரு குட்டிக் கதை இதோ:
என் வழி தனி வழி
சார்மினார் எக்ஸ்ப்ரஸ் கூடூரில் நின்றது. வயது முதிர்ந்த ஒருவர் கையில் ஒரு நீல நிற ஏர் பேகுடன் ஏறி என் பக்கத்தில் அமர்ந்தார். அவர் தன் பையை தன் மடி மீதே வைத்துக் கொண்டார்.எதிர் ஸீட்டில் உட்கார்ந்திருந்தவர், "சார் இது ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட். இதிலே ஏறக்கூடாது" என்றார்.
பெரியவர் சொன்னார், "சார் நானும் ஒங்களே மாதிரிதான் ரிசர்வ்ட் டிகட்டு வாங்கிக்கிட்டு சென்ட்றல் ஸ்டேஷன்லே ஹைதராபாத் எக்ஸ்ப்ரஸ்ஸுலே ஏறினேன். ஏறர போது ஒரு ஆள் என் மேல பலமா ஒரு இடி இடிச்சிக்கிட்டே ஓடினான். பாவம் அவன் ஏற வேண்டிய கேரேஜ் எதுவோ தெரியாம ஓடறான்னு நினெச்சேன். ஆனா டிடிஆர் வந்து டிக்கட் கேட்டபோது நான் பாக்கெட்டுலே கைய உட்டாத் தெரிஞ்சுது அவன் ஏன் அவ்வளவு அவசரமா ஓடினான்னு. என் பாக்கெட்டுலே பர்ஸெக் காணும். என் பொண்ணு ஹைதராபாதுலே ஸ்கூடர் ஏக்சிடென்ட்டுலே அடிபட்டு ஆஸ்பத்திரிலே சேத்திருக்காங்க. பக்கத்துவீட்டுக் காரங்க போன் பண்ணாங்க. அவோ புருசன் அமெரிக்காவுலே இருக்கான். நான் கெஞ்சிப் பாத்தேன். அவர் கிட்டே. 'நான் எதுவும் பண்ண முடியாது. கூடூர்லே எறக்கி உடறேன். வெளிலே போய் வேற டிக்கட்டு வாங்கி கிட்டு அடுத்தாப்ளே வர சார்மினார் எக்ஸ்ப்ரெஸுலே ஏறிப்போங்க' என்றபடி அவர் மத்தவங்க டிக்கட்டே செக் பண்ணப் போயிட்டார். அதான் சார் கூடூர்லே ஒரு சதா டிக்கெட்டு வாங்கிக்கிட்டு இங்கே ஏறினேன். பையிலே நெறெய பணம் வெச்சிருக்கேன். அன்-ரிஸர்வ்ட்லே ஏறினா யாராவது பணத்தே அடிச்சுட்டுப் போய்ட்டா என்ன சார் பண்ணுவேன்? இப்பொகூட பாருங்க. நான் பையே கீழே வெக்கலே."
எதிர் ஸீட் பயணி சொன்னர், "ரொம்ப கரெக்ட் சார். நாம கவனமா இருக்கவேண்டியது அவசியம். பொட்டிய செயின் போட்டு பூட்டி வெச்சுக்கணும். முன்னே பின்னே தெரியாதவங்க கிட்டே பிஸ்கெட்டு குளிர்பானம் இதெல்லாம் வாங்கி சாப்பிடக்கூடது."
எனக்கு அவர் சொன்னதில் ஈடுபாடில்லை. என் வழியே தனி வழி. நான் ஆரம்பித்தேன். "சார் நீங்க ரொம்ப கவனமா ஒங்க பெட்டிய பாத்துக்கிட்டே இருதாலே திருடனுக்கு அந்தப் பொட்டிக்குள்ளே பணமோ வேற வெலெ ஒசந்த பொருளோ இருக்குன்னு தெரிஞ்சுடும். போன மாசம் பாருங்க நான் டெல்லிலேருந்து சென்னைக்கு ஜீடீலே போனேன். அப்போ ஒரு குடும்பம். அப்பா, அம்மா, ஒரு பொண்ணு அவளோட அண்ணன், தம்பின்னு ஆறு பேரு. நெறய பொட்டிங்களே வெச்சி கிட்டு ட்ரேவல் பண்ணாங்க. டெல்லிலே ஏறி பின் கொஞ்ச நாழியும் மறு நாள் பூராவும் ஜாலியா பேசிகிட்டு வந்தாங்க. அவங்க பேசிகிட்டு இருந்ததுலேருந்து அவங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்றத்துக்காக சென்னை போயிகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சுது. பொட்டியெல்லாம் சங்கிலி போட்டு பூட்டி இருந்தாங்க. காலேலே வண்டி சென்னை கிட்டே வந்துகிட்டு இருக்கறப்போ பாருங்க ஒரே சத்தம். 'அய்யோ பொட்டி போச்சே. அதுலதானே போண்ணோட நகை வெள்ளிப் பத்திரம் எல்லாம் வெச்சிருந்தோம். எந்தப் பாவியோ இப்படி பூட்ட ஒடைச்சுப் போட்டூட்டு பொட்டிய தூக்கிட்டுப் போயிட்டனே ' என்ற ஓலம். நான் பாருங்க. ஒருபழய பேகெத்தான் எடுத்து கிட்டு ட்ரேவல் பண்ணுவேன். இப்பொகூட சென்னைலே ஒரு போஸ்ட் ஆபீஸுலே க்ளோஸ் பண்ண என்னெஸ்சி பணம், அங்கே கொழந்தைங்களுக்காக வாங்கின கேம் பாக்ஸ், ரோபோ டாய்ஸ் எல்லாம் அந்த பைலே தான் வெச்சு சும்மா ஒரு பக்கத்துலே போட்டுருக்கேன். பெரியவரே நீங்களும் ஒங்க பேக மடிலேயே வெச்சுகிட்டு இருக்காம ஒரு பக்கம் போடுங்க சும்மா."
பெரியவரும் நான் சொன்னதில் உள்ள உண்மையை புரிந்து கொண்டவராக அவர் பையையும் என் பேக் அருகே வைத்தார்.
மறு நாள் ஹைதராபாத் ஸ்டேஷன் வந்ததும் எல்லொரும் இறங்கினோம், பெரியவர் உட்பட. நான் வீட்டிற்குள் காலடி வைத்ததும், "ரமேஷ், தினேஷ், சாரு எல்லாரும் ஓடிவாங்க. ஓங்களுக்கு என்ன வாங்கிகிட்டு வந்துருக்கேம் பாருங்க” என்று சொல்ல குழந்தைகள் மூவரும் ஓடி வந்தனர், "அப்பா எனக்கு என்ன வாங்கிண்டு வந்திருக்கீங்க?" என்று கேட்டபடி.
பையை மெதுவாகத் திறந்தேன். சட்டென்று திறந்தால் அதில் உள்ள சர்ப்ரைஸ் போய் விடுமல்லவா? பூராவும் திறந்ததும்தான் தெரிந்தது உள்ளே உள்ள சர்ப்ரைஸ். நான் வாங்கிவந்த சாமான்களுக்கு பதிலாக டெய்லர் கடை வாசல் குப்பை போல பிட் துணிகள் இருந்தன அதில். எல்லலா குப்பையையும் வெளியே கொட்டிய போது நாலாக மடித்த ஒரு துண்டு வெள்ளைக் காகிதம் விழுந்தது.
"அதுலே எதுனா அட்ரஸ் எழுதியிருக்கா பாருங்க" என்றாள் என் மனைவி.
அவசர அவசரமாக பிரித்துப் படித்தேன் அதில் எழுதி இருந்ததை. அட்ரஸ் ஒன்றும் காணோம். பதிலாக, "கவனம் கண் போன்றது" என்ற வரிதான் இருந்தது. பெரியவர் பெரிய ‘இவர்’ தான் போங்க.
என் வழியே தனி வழி . இல்லே ?
Natarajan



Your Feedback








