Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என் படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பிரதாபன் கதை - 5
வெற்றி வளவன்





Pratab - Tamil story - photograph by AKR
ஒரு நாள் பிரதாபனும் ஞானாம்பாளும் வெளித்திண்ணையில் அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கற்றுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஜோதிடர் ஒருவர் செலவுக்கு ஒன்றும் இல்லாமல் சிரமப்படுவதாகச் சொல்லி உதவி கேட்டார். அப்போது ஆசிரியர், "எல்லோருக்கும் பலன் கூறி அதிர்ட்டத்தைத் தருகிற உங்களுக்குக் கஷ்டமுண்டா?" என்று கேட்டார். உடனே ஜோதிடர் தன் பெருமையை விளக்க வேண்டி, "நாங்கள் உலகத்தைக் காப்பதற்காக ஏழை வேடத்தில் திரிகிறோம். எங்கள் சக்தியால் எந்தச் செல்வமும் வரவழைக்க முடியாதா? சுயநலத்துக்காக அதைப் பயன்படுத்த மாட்டோம்" என்று தற்பெருமையாகக் கூறினார்.

Dog
அப்போது அருகில் கட்டியிருந்த ஒரு வேட்டை நாய் அவரைப் பார்த்துக் குரைத்தது. உடனே அவர், " கரடி, புலி வாயைக்கூட மந்திரக் கட்டினால் கட்டியிருக்கிறேன். இந்த நாயையும் குரைக்காமல் செய்துவிடுவேன்" என்று அதைப் பார்த்துக் கையை ஆட்டிக் கொண்டே சொன்னார்.

கோபம் கொண்ட நாய் சங்கிலியை அறுத்துக் கொண்டு பாய்ந்து வந்து அவரைக் கடிக்க ஆரம்பித்தது. அவர் ஐயோ என்று அலற ஆரம்பித்தார். ஆசிரியர் கம்பை எடுத்து ஓங்கி நாயை விரட்டினார்.

"ஏன் உங்கள் மந்திரத்தினால் அந்த நாயைக் கட்டியிருக்கலாமே?" என்றார். ஜோதிடர் பின்னர், "வயிற்றுப்பாட்டுக்காகப் பலரும் பலவித வேடம் தரிப்பது போல நானும் இந்த வேடம் தரிக்கிறேன். உண்மையில் இந்த வித்தை ஒன்றும் இல்லை. எங்கள் சொந்தக் காரியத்தில் பலிக்காத வித்தை அன்னியருக்கா பலிக்கும்? எனக்கு நான்கு மகள்கள். சாஸ்திர சம்பிரதாயப்படி அவர்களைத் திருமணம் செய்து கொடுத்தேன். ஆனால் நான்கு பேரும் விதவையாகி விட்டார்கள். மந்திரம் கால்; மதி முக்கால், என்பது தான் உண்மை. நான் எனது மதியால் புத்தியைக்கொண்டு ஏதோ பலன்கள் சொல்லிப் பிழைக்கிறேன். வாழ்க்கையில் எல்லோருக்கும் சுகதுக்கங்கள் உண்டு. அதனால் சுகம் பாதி, துக்கம் பாதியாக பலன்கள் சொல்லி வருகிறேன். ஆனால் அனைவரும் சுகத்தையே விரும்புவதால் அவர்களை மகிழ்ச்சிப் படுத்த சுகத்தையே அதிகம் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆனால் அதிலும் இப்போது பிரச்சினையாகி விட்டது. நான் அதிர்ட்டம் வருமென்று சொன்னால் துரதிருட்டம் வருகிறது. நல்ல காலம் என்று சொன்னால் கெட்டகாலமாய் விடுகிறது. பிள்ளை பிறக்கும் என்று சொன்னால் பிள்ளை இறக்கிறது. மக்களுக்கும் நம்பிக்கை குறைந்து வருகிறது. உங்கள் நாயே எனக்கு நல்ல புத்தி கற்பித்து விட்டது. இனி இப்படிப் பொய்யான வாக்கு சொல்வதை நிறுத்தி விடப்போகிறேன் என்று சொன்னார்.

இதையெல்லாம் கேட்டு பிரதாபனுக்கும் ஜோதிடப் பைத்தியம் நீங்கி தெளிவு பிறந்தது. ஆசிரியரும், "சோதிடம் பொய்யென்று சோதிடரே ஒப்புக் கொள்வதால் வேறு சாட்சி அவசியமில்லை. அடுத்து நடப்பது என்ன என்பது நமக்கு முன்கூட்டித் தெரியாதபடி கடவுள் நமது நன்மைக்காகவே மறைத்து வைத்திருக்கிறார். இனிமேல் வருகிற துன்பம் தெரியாதவரை துன்பம் வரும்வரை வருத்தமில்லாமல் இருக்கிறோம். முன்கூட்டியே அதை அறிந்தால் எப்போதும் அதைப்பற்றியே நினைத்து துக்கப் பட்டுக் கொண்டே இருப்போம். நன்மையை முன்கூட்டியே அறிந்தால் அந்த நன்மை வரும்போது ஏற்படும் மகிழ்ச்சி இல்லாமல் போகும். தெரிந்த விசயம் தானே என்ற அலட்சியம் உருவாகும்.

இப்படி வருங்காலம் அறியும் திறன் யாருக்கும் இல்லை. பெரிய மகான்களுக்குக் கூட வருங்காலம் அறிய முடியாமல் இருக்கும்போது இந்த மாதிரி சாதாரண சாஸ்திரிகளுக்கு அறிய முடியுமா? பல்லி, பட்சிகளும் எதிர்காலம் சொல்லி அறிந்து கொள்ள முடியுமா" என்று கேட்டு பிரதாபனின் மனதில் இருந்த சந்தேகங்களைத் துடைத்து எறிந்து விட்டார்.

Night

பிரதாபனின் வீட்டுக்குப் பின்பக்கம் ஒரு பாழ்மண்டபம் இருந்தது. அதைத்தாண்டிச் சென்றால் அடர்ந்த காடு. அந்தப் பாழ்மண்டபத்தில் யாரோ சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி இருந்தது. அதில் பேய் வாசம் செய்வதாகவும் அங்கே போகும் ஆடுமாடுகளை ஆகியவை பிசாசுகளுக்கு இரையாகி விடுவதாகவும் வதந்தி பரவி அந்தப்பக்கமாக யாரும் போவதற்கு பயப்பட்டார்கள். இதை ஆசிரியரிடம் சொன்ன போது அவர் அவையெல்லாம் பயத்தின் காரணமாக வந்தது தான், உண்மையில் பேய் எல்லாம் இல்லை என்று கூறி நேரிலேயே கூட்டுவதாக சொல்லி அழைத்துப் போனார்.

Darkness

அங்கே போனதும் பயங்கர துர்நாற்றமாக இருந்தது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் பறவைகளும் மிருகங்களும் வாசம் செய்து எச்சங்கள் இட்டு வைத்திருந்தன. அவர்கள் அங்கே போனபோது கூட வந்த வேட்டை நாயைக் கண்டு நரிகளும் காட்டுப்பூனைகளும் ஓட ஆரம்பித்தன. ஆட்டைப் பிடித்துத் தின்று கொண்டிருந்த ஓநாயை வேட்டை நாய் பாய்ந்து பிடித்து வந்தது.

மனிதர்கள் நடமாட்டம் இல்லாததால் மிருகங்கள் வசிக்கத் தொடங்கி விட்டன. யாரோ இறந்து போன பயத்தில் மக்கள் இந்த மிருகங்களின் நடமாட்டத்தையே பேய், பிசாசு என்று எண்ணி பயந்துள்ளனர். ஆடு மாடுகளை மிருகங்கள் தின்னுவதை அறியாமல் பேய் தின்னுவதாக எண்ணி விட்டார்கள். காட்டு மரங்கள் காற்றில் சப்தம் செய்வதைக் கேட்டு பேய் வாசம் செய்வதாகக் கதை கட்டி விட்டார்கள்.

இதையெல்லாம் நேரில் பார்த்ததும் பிரதாபனுக்குள் இருந்த பயம் தெளிந்து போய்விட்டது.

ஆசிரியர் அந்தக் காட்டைக் குத்தகையாகப் பெற்றுக் கொண்டு வெட்டித் திருத்தி விவசாயம் செய்து கொண்டு பேய் வாழுவதாக மக்கள் பயப்பட்ட மண்டபத்திலேயே குடும்பத்துடன் வசிக்க ஆரம்பித்தார்.

ஆசிரியரிடம் கற்றுக் கொண்டது போலவே தன் தாயாரிடமும் ஞானாம்பாளிடமும் பல நல்ல குணங்களை பிரதபன் கற்றுக் கொண்டான். கோபம், மூர்க்கம் இல்லாமல் எப்போதும் கனிவோடு இருப்பது, பொய்யே கூறாமல் இருப்பது அவர்களின் நற் குணங்கள்.

பிரதாபன் ஒரு முறை முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு வேலைக்காரனைக் கோபித்தான். அருகில் இருந்த ஞானாம்பாள் எழுந்து தூரத்தில் போய் விட்டாள். பிரதாபன் ஏனென்று கேட்க உங்களுக்குக் கோபம் வரும்போது உங்கள் முகத்தைப் பார்க்க பயமாக இருக்கிறது. நீங்களே கண்ணாடியில் பாருங்கள் உங்களுக்கே புரியும் என்றாள்.

பிரதாபனும் தன் கோபமுகத்தைக் கண்ணாடியில் பார்த்து அவனுக்கே பிடிக்காமல் போய் அன்றிலிருந்து கோபத்தை விட்டு விட்டான்.

ஒரு முறை ஒரு பூவைப் பறித்து அவள் கையில் கொடுத்து, "உன்முகம் இந்தப் பூவைப்போல இருக்கிறது" என்றான். அவளோ "ஆமாம் பூ சீக்கிரம் வாடிப்போவது போல அழகும் சீக்கிரத்தில் அழிந்து போகும்" என்றாள்.

அவன் உடனே, "இல்லை உன் முகம் சந்திரனைப்போல இருக்கிறது" என்றான். "சந்திரனுக்கு சொந்தமாக ஒளி இல்லை. அது சூரியனுடைய ஒளியால் பிரகாசிக்கிறது. அதுபோல மனிதர்களின் வடிவெல்லாம் கடவுளின் விளையாட்டு" என்றாள்.

அதிலிருந்து அவளுக்குப் புகழ்வது பிடிக்காது என்று புரிந்து கொண்டு அவ்வாறு செய்வதை நிறுத்திக் கொண்டான்.

ஒரு முறை ஞானாம்பாள் தோட்டத்தில் ஒரு இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்தாள். அந்த சத்தம் கேட்டதும் அங்கே மேய்ந்து கொண்டிருந்த ஒரு காளை துரத்த மறுபக்கமிருந்து ஒரு முரட்டு ஆட்டுக்கிடா விரட்ட ஆரம்பித்தது. இரண்டுக்கும் இடையில் ஞானாம்பாள் அகப்பட்டுக் கொண்டு தவித்தபோது பிரதாபன் ஓடிவந்து அவளைத் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த சித்திரமண்டபத்துத் திண்ணையில் ஏறிக் கொண்டான்.

இதை அறிந்து குடும்பத்தினர் அனைவரும் பிரதாபனின் வீரத்தைப் பாராட்டினர். ராவணனிடம் இருந்து சீதையை மீட்ட ராமனைப்போல அவர்களின் பாராட்டு மழை பிரதாபனை மகிழ்வித்தது.

வெற்றிவளவன்

தொடரும்...

அத்தியாயம் 4

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button