ரனாஸ்மி வீட்டு ரஹஸ்யம்
நடராஜன் கல்பட்டு
1. ரனாஸ்மி வீட்டு ரஹஸ்யங்கள்
“ஸார், உங்களுக்குப் போதே போகலே, போர் அடிக்குதுன்னு சொன்னீங்க இல்லே? வாங்க ரனாஸ்மி வீட்டு வரைக்கும் ஒரு ரௌண்ட் போயிட்டு வரலாம்” என்று ஆரம்பித்தார் ஊர் வம்பு ஊமாபதி.“அது யாரு சார் ரனாஸ்மி?” இது என் சந்தேஹம்.
“ரனாஸ்மிய தெரியாதா? அதான் ஸார் குப்பு தெரு அஞ்சாம் நம்பர்லெ இருக்காரே அவர் ஸார்.”
“குப்பு தெருவா?” இது நான்.
“குப்பு தெருன்னு ஒரு பெயரே கேள்விப்பட்டதில்லயா? எந்த உலகத்திலே சார் இருக்கீங்க நீங்க? ரெண்டு வருஷத்துக்கு முன்னே தமிழ்நாடு அரசு ஜாதிய ஒழிப்போம்னு அறிக்கை விட்டப்போ கார்பொரேஷன் காரங்க தெருப் பேரு இருந்த போர்ட்கள்ல ஜாதிப் பேரயெல்லாம் எடுத்துட்டு மறுபடி பெயின்ட் பண்ணாங்களே மறந்து போச்சா சார் உங்களுக்கு? அப்போதான் நம்ம குப்புசமி நாயிடு தெரு குப்பு தெருன்னு மாறிச்சு.”
“அது சரி, ரனாஸ்மி யாரு? அவங்க வீட்டுலே என்ன விசேஷம்? அப்படி நம்ம போது போராப்லே?”
“அது ஒரு பெரிய கதை ஸார். வாங்க, பேசிகிட்டெ நடக்கலாம்.” ஆரம்பித்தார் கதையை உமாபதி.
“ஆர்.நாரயணசாமி தான் குப்பு தெரு அஞ்சாம் நம்பெர் வீட்டுக்காரர். ஓரு அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி அவர் ஒரு வெள்ளக்காரன் கம்பனிலே எஞ்சினீயரா சேந்தார். அப்போ அவரோட வெள்ளக்கார பாஸ், ‘வாட் நேம் இஸ் திஸ்? நரயன்னசமி? ஐ கான்ட் ஈவென் ப்ரொனௌன்ஸ் இட். வொய் டோன்ட் யு மேக் இட் ஷார்ட்? ஸே லயிக் ஆர்.என்.ஸம’ந்னு இருக்கார். அப்போதான் இவர் தன் பேரே மாத்திண்டார். அதயே தமிழ்லே ரனாஸ்மின்னு வெச்சுண்டுட்டார்.”
“ஓ, நம்ம நாராயணசாமியப் பத்திதான் சொல்றீங்களா? வாங்க பொகலாம்” என்றபடி உமாபதியுடன் நடந்தேன் குப்பு தெருவுக்கு. இந்த பூத உடலுடன் இல்லை, மானஸீஹ உடலுடன். அப்பொதுதானே நடக்கறதை தங்கு தடை இல்லாம பார்க்க முடியும்?
அப்போது காலை ஏழு மணி இருக்கும். அஞ்சாம் நம்பெர் வீட்டுக் கூடத்தின் ஒரு மூலையில் ஒரு பழைய காலத்துப் பாலிஷ் போன மேஜை. அதுக்கு முன்னால் ஒரு பழைய நாற்காலி. பக்கத்திலே ஒரு மர ஸ்டூல். இவை மூன்றுமே ஆதிகாலத்து சாமான்கள். ஓரு ஐம்பது அறுபது வயதாஹி இருக்கும்.
டி.வி.லே வர ஏன்டிக் ஷோவுக்கு எடுத்துண்டு போனா நிச்சயமாக நல்ல விலை கிடைக்கும். மேஜைக்கடியில் ஒரு இரண்டு மூன்று மாத ஹிண்டு பேப்பர்.
நாற்காலியில் ரனாஸ்மி, ஒரு கையில் ஹிண்டு பேப்பரும் மறு கையில் காபி டம்பளருமாஹக் காட்சி தருகிரார். ஏது செய்கிராரோ இல்லையோ, ரனாஸ்மி ஹிண்டு பேபரை முதல் பக்கம் ஆரம்பித்துக் கடைசிப் பக்கம் கடைசி வரை ஒரு நாளும் படிக்கத் தவற மாட்டார், காலையிலும் மாலையிலுமாஹ.
சமயல் உள்ளிருந்து ஒரு குரல், “ஏன்னா, இங்கே சித்தெ வரேளா? ஊங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்.”
“சொல்றத சொல்லுடீ. இங்கே இருந்தே கேக்கறேன். என் காது ஒண்ணும் இன்னும் செவிடாகலேடீ. அதத்தவிற உன் குரல்தான் எட்டுத் தெருவுக்குக் கேக்குமேடீ.”
“நேத்து கோவிலுக்குப் போயிட்டுத் திரும்பி வரச்சே கோடியாத்துக் கோமா மாமி, அதான்னா கோமதி மாமி, ‘மாமி, வெள்ளிக்கெழமையா இருக்கு. ஊள்ளே வந்து வெத்தலெ பாக்கு வாங்கிண்டு போங்கோன்னா.’ அவாத்தே என்னமா தெரியுமோ பெய்ன்ட் அடிச்சுருக்கா? புது வீடு மாதிரி அழகா இருக்குன்னா. நம்ம வீட்டு செவத்தெப் பாருங்கோ. பொக்கலும் பொரசலுமா. நீங்கதான் ஒரு எஞ்சினீர் ஆச்சே. ஆதுவும் பெரிய எஞ்சினீரிங் கம்பெனிலே வேலை செய்யரேள். ஓங்க ஆ·பிசிலே பெயின்டெர் இருந்தா அனுப்புங்களேன்னா. நம்ம வீடையும் பெயின்ட் அடிச்சா அழகா இருக்குமேன்னா.” இது மிசஸ். ரனாஸ்மி, அதான் ரனாஸ்மியின் சஹதர்மிணி.
“எஞ்சினீரும் இல்லே சுக்கு நீரும் இல்லேடீ. ஆது எஞ்சினியர்னு சொல்லணும்.”
“நான் என்னன்னா ஒங்கள மாதிரிப் பெரிய படிப்பா படிச்சிருக்கேன்? அது என்ன நீரா இருந்த என்ன. ஓரு ஆளெ அன்னுப்புங்கோன்னா. நம்ம வீட்டயும் புதுசா மாத்திடலாம்”.
மனைவி சொல்லைத் தட்டாதேங்கற வேத வாக்யம் நம்ம நாணுவுக்கா, அதான் நம்ம நராயணசாமி அலயஸ் ரனாஸ்மிக்கா தெரியாது? அன்று ஆபிசில் ரனாஸ்மி முதல் வேலையாக ஒரு பெயின்டரையும் அவனுக்கு ஒத்தாசைக்கு ஒரு ஆளையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
“சார் வாங்க வீட்டுக்குப் போயிட்டு சாயங்காலம் வந்து பாக்கலாம்.” உமாபதி அழைக்க நான் பின் தொடர்ந்தேன்.
சாயங்காலம். மணி ஐந்தரை. அலாரம் அடித்தார்போல வீட்டு வாசலில் வந்து கதவைத்தட்டினார் உமாபதி, “ஸார், வரீங்கள்ளா, குப்பு தெரு வரை போயிட்டு வருவோம்” என்ற வார்த்தைகளுடன். இருவரும் நடந்தோம் குப்பு தெரு அஞ்சாம் நம்பர் வீட்டை நோக்கி. மானசீஹமாய் தான். எங்களுக்கு சற்று முன்புதான் ரனாஸ்மி நுழைந்திருக்க வேண்டும் வீட்டிற்குள்.
“அடீ. இது என்னடீ? கோவில் சுவர்லெ பட்டை பொட்டாப்லெ அதுவும் பல கலர்லே?”
“அதுவான்னா. நான் கேட்டேன் நீங்க அனிப்ச ஆள்கிட்டே, இப்போ என்ன கலர் லேடெஸ்டா வந்திருக்குன்னு. அவனும் பொடவை கடைல பொடவையே எடுத்துப் போடராப்ளெ ஒரு நீள கர்டெய் காட்டினான். அதுலெ எனக்கு புடிச்ச கலர் நாலஞ்ச காட்டி இதுலெ எதையாவது பாத்து அடிப்பான்னு சொன்னென். அவந்தான் தப்பா புரிஞ்சுண்டு இப்படி பட்டை பட்டையா அடிச்சுட்டு போயிட்டான்.”. “நாராயணா” என்று தன் பேரையே சொல்லி அடித்துக்கொண்டார் ரனாஸ்மி. காண்டு தலையில்.
“அடேய், ரங்குடு (அதான் நாராயணசாமி ரங்கனாதன் என்ற ரங்குடு) துண்டெ எடு, குளிக்கனும்” என்றார் ரனாஸ்மி. தம்பதியரின் ஒரே பையனான ரங்குடு, "அம்மா அப்பா துண்டு எங்கேம்மா இருக்கு?”
“கொல்லப்பக்கம் கிணத்துக் கிட்டே கொடிலே ஒணத்தி இருக்கும் பாருடா.”
ரங்குடு அடுத்த நிமிஷம் ரங்கு ரங்கா (அதான் ஹிந்திலெ சொன்னேன் கலர் கலராகன்னு) ஒரு துணியை ரனாஸ்மியின் கையில் எறிந்து விட்டு ஓடுகிறான்.
“ஐயையோ, இது என்னடி கண்றாவி?” மீண்டும் தலையில் அடித்துக்கொள்கிரர் ரனாஸ்மி.
“அது .அது“ தயங்குகிறாள் மிஸஸ் ரனாஸ்மி.
“சொல்றதைப் பூரா சொல்லித் தொலயேண்டி” வெடிக்கிரார் ரனாஸ்மி.
“பெயின்டர் கை தொடைக்கத் துணி கேட்டான். நான் சமயல் உள்ளே வேலையா இருந்தேனா, கொல்லப்பக்கம் கிணத்தண்டெ கொடிலே கந்தல் துணி இருக்கும். நீயே போய் எடுத்துக்கோன்னு சொன்னேன். ஓங்க துண்டு கொஞ்சம் கிழிஞ்சதா இருந்துதா, அதை எடுத்துண்டுட்டான் போல இருக்கு. கோச்சுக்காதேங்கோன்னா, அலமாரிலெ வேறெ துண்டு இருக்கு. ஏடுத்துத் தரேன்.”
“ராம ராம” மீண்டும் தலையிலே ரனாஸ்மியின் கை. இது நடந்த போது மாலை ஐந்து முப்பது அல்லது ஐந்து முப்பத்தைந்து இருக்கும். இரவு சுமார் எட்டு மணிக்கு, "ஸார், வாங்க மறுபடி ஒரு நடை போயிட்டு வந்துருவோம் குப்பு தெரு வரைக்கும்" என்று அழைத்தார் உமாபதி. நடந்தேன் நானும் அவருடன்.
அஞ்சாம் நம்பர் வீட்டில் அமைதி இல்லை. பதிலாக, “டேய், ரங்குடு அப்பா எங்கேடா போயிருப்பா? இப்படி சொல்லாமெ எங்கேயும் போனதில்லயேடா, மணி எட்டாரதே டா. வா எதுத்தாத்து வேம்பு மாமாவைப் போய் என்ன செய்யலாம்னு கேப்போம்”. இருவரும் ரோடை தாண்டி எதிர் சாரியில் உள்ள வீட்டை அடைந்த போது காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. அங்கே நாற்காலியில் கையில் ஒரு நியூஸ் பேபருடன் ரனாஸ்மி.
“ஏன்னா, இங்கே என்னன்னா பண்ணிண்டு இருக்கேள்? நாங்க எப்படிப் பதறிப் போயிட்டோம் தெரியுமா ஒங்களெக் காணுமேன்னு?”
“பேபர் படிச்சிண்டு இருக்கேன். பாத்தா தெரியலே?”
“நம்மாத்துலெதான் ஹிண்டு வரவழிக்கறோமே? அதைப் படிச்சாப் போறாதா?”
“எங்கடி இருக்கு ஹிண்டு பேப்பர்? போய்ப் பாரு. த்ரிஷ்டிப் பூஷனிக்காய்க்குக் கரும்புள்ளி செம்புள்ளி வெச்சாப்லெ பேப்பர் எல்லாம் புள்ளி. எப்படிப் படிக்கறதாம் ஹிண்டு பேப்பர்?”
“ஐயையோ பாவி. கீழே போட்டுக்கப் பழய பேபேர் குடும்மான்னு கேட்டான் அந்தப் பெயின்டெர். கீழ பேப்பர் போட்டுக்கலென்னா தரையெல்லாம் நாசம் போய்டும்மான்னான். நான் தான் மேஜைக்கடிலே இருக்கு. போய் எடுத்துக்கோன்னேன். நீங்க எப்பவும் அன்னி பேப்பரெ மேஜை மேலதானெ பிரிச்ச படியே போட்டுட்டுப் போவேள்? இன்னிக்கு எங்க வெச்சேள்? ஸரி, வாங்கோ போகலாம் ஆத்துக்கு.”
நாங்களும் திரும்பினோம் வீட்டுக்கு.
ஓரு வாரம் தாண்டியது. காலை எழு மணி. மீண்டும் உமாபதியின் குரல். "சார் வரீங்களா, ஒரு நடை குப்பு தெரு வரைக்கும்."
"போகலாமே" இது நான். க்யூரியாசிடி யாரை விட்டது?
“ஏன்னா” சமயல் உள்ளிலிருந்து குரல்.
“என்னடீ?”
“ஏன்னா, ஒங்க ஆ·பிசுலே தச்சன் இருக்கானான்னா?”
“எதுக்குடீ?”
“நம்மாத்து ஸ்டூல்லே ஒரு கால் கொஞ்சம் தேஞ்சாப்ப்லெ இருக்கு. அதுமேல ஏரி அலமாரிலேந்து எதாவது பாத்ரம் எடுக்கலாம்னா ஆடறது. பயமா இருக்கு ஏறவே. ஆ·பிசுலேந்து ஒரு தச்சனெ அனிப்ச்சு அதை சரி பண்ணச் சொல்லக்கூடாதா?”
“சரி அனுப்பறேண்டீ.”
அன்று சாயங்காலம் மறுபடி ஒரு விசிட். மறுபடி ஒரு ரிபோர்ட்.
“ஏண்டீ, இங்கே இருந்த ஸ்டூல் எங்கெடி பொச்சு?”
“அதோ அந்த மூலைலெ ஒரு ஜாடிலெ பூ வெக்சு வெச்சுருக்கேன் பாருங்கோ.”
“ஸ்டூல் எங்கேடீ? பலகை மேலென்னா ஜாடியெ வெச்சிருக்கே?”
“அதுதான்னா நம்மாத்து ஸ்டூல். நீங்க அனிப்ச்ச தச்சன் ஒரு ஒரு காலா கொரச்சுப் பாத்துட்டு கடைசீலெ ‘இதுக்குமேல ஒண்ணும் பண்ண முடியாது அம்மா’ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான்.”
ரனாஸ்மி தலையில் மீண்டும் கை, ஆனால் இந்த தடவை அவர் என்ன சொல்லிக்கொண்டு தலயில் அடித்துக்கொண்டார் என்பது எங்கள் காதில் விழவில்லை.
நேற்று. அதே காலை எழு மணி. உமாபதி அழைப்பைத் தட்ட முடியாமல் அஞ்சாம் நம்பர் வீட்டில் நாங்கள்.
“ஏன்னா.”
“ஏன்னடீ இப்போ?”
“அந்த பத்ரூம் லைட் எரிய மாட்டேங்கறது. ராத்ரிலெ பாத்ரூம் போறதுக்கு பயமா இருக்கு. நீங்கதான் பெரிய எஞ்சினியர் ஆச்சே. அதைக் கொஞ்சம் பார்க்கக் கூடாதா?”
“பேசாம இருடி. இதெல்லாம் எஞ்சினியர் வேலை இல்லே. எஞ்சினியர்ன்னா ஆபிசுலே ஒக்காந்து ப்ளான் போடரவன். இந்த வேலை எலெக்ட்ரீஷியன் செய்ய வேண்டிய வேலை.”
“அப்போ ஒங்க ஆ·பீசுலேந்து ஒரு எலெக்ட்ரீஷியனெ அனுப்புங்கோளேன்னா.”
“சரிடீ. அனுப்பரேன்.” அன்று மாலை. அஞ்சாம் நம்பர் வீட்டின் முன் உமாபதியும் நானும்.
“ஏண்டீ, நான் அனிப்ச்ச ஆள் வந்தானாடீ?”
“வந்தான்னா. ஏதோ கொஞ்ச நாழி வேலை செஞ்சுட்டு இப்போ சரி ஆயுடுத்தம்மான்னு சொல்லிட்டுப் போனான். நீங்க கொஞ்சம் போய்ப் பாருங்களேன். இப்போ லைட் எரியறதான்னு.”
அடுத்த கணம், 'ஐயோ' என்ற அலரலும் 'தடால்' என்ற சத்தமும் வருகிறது பாத்ரூமிலிருந்து. மிஸஸ் ரனாஸ்மியும் ரங்குடுவும் ஓடுகின்றனர் பாத்ரூம் பக்கம். இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை. “டேய், ரங்குடு டார்ச்லைட் கொண்டு வாடா.”
டார்ச் வருகிறது. அதன் வெளிச்சத்தில் தெரிகிறது ரனாஸ்மி தரையில் கிடப்பது.
“ரங்குடு, ஒடிப்போய் ஒரு மக் தண்ணி கொண்டு வாடா.”
மக் தண்ணிர் வருகிறது. "அம்மா, வரலக்ஷ்மி தாயே, என் மாங்கல்யத்தெக் காப்பாத்தம்மா" என்று சொல்லிக்கொண்டே ரனாஸ்மி மூஞ்சியில் தெளிக்கிறாள் தண்ணியை, மிஸஸ் ரனாஸ்மி. நல்ல வேளை. உயிர் போகவில்லை. மெதுவாகக் கண்ணைத் திறக்கிரார் ரனாஸ்மி.
“ஏன்னா, என்னன்னா ஆச்சு?”
“அந்த டார்ச் லைட்டே அந்த ச்விச் கிட்டே காட்டுடீ.” டார்ச்சின் வெளிச்சத்தில் தெரிகிறது ஒரு வெள்ளை ஒயர் ஸ்வ்ட்ச்சின் பக்கத்தில். அதன் நுனியிலே இன்சுலேஷன் இல்லை.
“என்ன வேலை செஞ்சிருக்கான் பாரு. இந்த மாதிரி முட்டாளுக்கெல்லாம் எந்த மடையன் வேலை கொடுக்கறான்னே தெரியலே.”
“ஏன்னா, வர வர உங்களுக்கு ஞாபக மறதி ரொம்பவே ஜாஸ்தியாப் போச்சுன்னா. போன மாசந்தானே சொல்லிண்டு இருந்தேள். ஓங்க வெள்ளக்கார மேனேஜருக்கு ஒங்க தெறமை மேல ரொம்பவே நம்பிக்கை வந்துடுத்து. அதனலே, "இன்னமே நீயே ஆபிசுக்கு வேணுங்கற ஆளையெல்லாம் செலெக்ட் பண்ணி அப்பாய்ன்ட் பண்ணிடு"ன்னு சொல்லிட்டார்னு. அதுக்குள்ளே மறந்துட்டேளே.”
“ஆமாண்டி, நாலு வார்தை இங்க்லிஷ்லே பேசத் தெரியாது. ஆனா இந்த நக்கலுக்கு மாத்ரம் கொறச்சலில்லே.”
“நான் என்னன்னா ஒங்கள மாதிரி எஞ்சினீரா படிச்சிருக்கேன்? வெரும் பத்தாம் க்ளாஸ் தானேன்னா.” மிஸஸ் ரனாஸ்மி கண்களில் கண்ணீர் மடைதிறந்த கால்வாய் நீராகத் தளும்புகிறது.
"போதுமையா உமாபதி. நல்லாவே போது போச்சு" என்று சொல்லிக்கொண்டே நகர்கிறேன் நான் என் வீட்டைப் பார்த்து’
நடராஜன் கல்பட்டு
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












