களிமண் - 7
ஆகிரா
ஸ்தபதியின் பட்டரையில் தங்கள் முதல் நாள் பணி நேரம் முடிந்ததும் குணாவும் காவிரி ஆற்றுக்கு நீந்திக் குளிக்கச் சென்றனர். காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதியில் சென்ற இரு நாட்களாகப் பெரும் கனமழை பெய்ததால் வழக்கத்திற்கு முன்னதாகவே அணையைத் திறந்து விட்டதால் ஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. நீர் மட்டம் குறைவாக இருந்ததால் அவர்கள் ஆனந்தமாக ஆற்றில் இறங்கிக் குளிக்க முடிந்தது. குணாவுக்கு கிராமத்தில் தான் நண்பர்களுடன் ஆற்றில் நீந்திக் குளித்து விளையாடிய நாள் நினைவுக்கு வந்தது.
குணாவும் அவனது கிராமத்து சகாக்களும் ஒரு நாள் காவிரி ஆற்றில் குதித்து நீந்தி விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் சிலர் அவன் களிமண்ணால் பொம்மைகள் செய்துகொண்டு பள்ளிப் பாடங்களைச் சரியாகப் படிக்காதது குறித்து அவனைக் கேலி பேசினர். ஒருவன் அவனைப் பார்த்து, "டேய் குணா, எப்போதும் அந்தக் களிமண்ணைக் கட்டிக்கொண்டு அழுகிறாயே, நாளைக்குக் களிமண்ணால்தான் வீடு கட்டப்போகிறாயா?" என்று கேட்க அதற்கு இன்னொருவன், "கட்டினாலும் கட்டுவான், ஆச்சரியப்படுவதற்கில்லை, அதற்குக் களிமண் கோட்டை என்று பெயர் வைக்கலாம்" என்றான். அப்பொழுது இவர்கள் கேலி பேசுவதைக் கேட்டுப் பொறுக்காத இன்னொரு நண்பன், "ஏண்டா, அவனை வம்புக்கு இழுக்கிறீர்கள், அவன் களிமண்ணால் உருவாக்கும் பொம்மைகளைப்போல உங்களால் ஒன்றாவது உருகாக்க முடியுமா? வெறுமனே பள்ளிப் பாடங்களை மற்றும் படித்துப் பயனில்லை. ஏதாவது கைத்தொழில் தெரிய வேண்டும். அப்பொழுதுதான் உலகில் வாழத் தேவையான பொருளையும் புகழையும் நாம் தேட முடியும். ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது எனும் பழமொழி இருப்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று பதில் கூறி, "கைத்தொழில் ஒன்றைக் கத்துக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" எனும் பாடலைக் கூறினான்.
அதைக்கேட்ட அவர்களிருவரும், "நாங்கள் அவனை வம்புக்கு இழுக்கவில்லை. உண்மையிலேயே அவன்மேல் உள்ள அக்கறையால் தான் கேட்கிறோம். அவன் களிமண்ணால் பொம்மைகள் செய்வதில் எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை அதே சமயம் பாடங்களையும் நன்றாகப் படித்தால்தானே அவன் மேலே படித்து ஒரு நல்ல வேலை வாய்ப்பைப் பெற முடியும்." என்றார்கள். அதுவரையில் மௌனமாயிருந்த குணா, "நண்பர்களே, நீங்கள் என் மீது இவ்வளவு அக்கரை காட்டுவதைப்பற்றி எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் என்ன செய்வது? விநாயகரும் பிற கடவுளர்களும் என் மனதில் நிலைத்து நிற்பதுபோல் எனக்குப் பள்ளிப்பாடங்கள் மனதில் சரியாக நிற்கவில்லையே. இதில் என் தவறொன்றுமில்லை" என்றான்.
அவர்களை இடைமறித்துப் பேசிய மற்றொரு நண்பன், "அதனால் என்ன குணா, உனக்கு பொம்மைகள் செய்வதில் நல்ல திறமை உள்ளது. அத்திறமையை நீ வளர்த்துக்கொள். தற்போது விநாய சதுர்த்தி காலத்தில் உன்னால் இதை வைத்து சிறிது பொருளீட்ட முடிவதுபோல் நாளை நீ ஒரு பொம்மை வியாபாரியாக ஆகலாம், அல்லது தெய்வச்சிலைகளை உருவாக்கும் சிற்பியாகக்கூட வளரலாம். கவலைப்படாதே" என்று ஆறுதலாகப் பேசினான்.
காலைமுதல் ஸ்தபதியின் பட்டரையில் தான் கண்டவைகளை குணா நினைவுகூர்ந்தான். ஐம்பொன்னாலும், வெண்கலத்தாலும் ஆன பல அபூர்வமான கலைத்திறன் படைத்த சிற்பங்களுக்கு அடிப்படையே களிமண்ணால் செய்த பொம்மைகள் என்பதைக் கண்டதும் சொல்லொணா ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஆளானான் குணா. அவ்வாறு களிமண்ணால் ஆன அடிப்படை உருவச்சிலையின் மேல் மெழுகை உருக்கி ஒரு குறிப்பிட்ட தடிமன் அளவுக்கு படியவைத்தபின் மெழுகுப் படிவத்தின் மேல் மீண்டும் களிமண்ணைக்கொண்டு மூடி அதில் இரு துளைகள் இட்டு, ஒரு துளையின் வழியாக உருகிய வெண்கலத்தையோ அல்லது ஐம்பொன்னையோ ஊற்றி மெழுகு இருந்த இடத்தில் ஒரு சிலை உருவாக்கப் படுகிறது. மெழுகு உருகியும் எரிந்தும் உண்டாகும் புகை மற்றொரு துளை வழியே வேளியேறுகிறது. இவ்வாறு உருவான சிலையை சிற்பிகள் தங்கள் ஆயுதங்களைக்கொண்டு கலைத்திறனுள்ளவையாக மேலும் அலங்காரமான வடிவம் தந்து உருவாக்குகிறார்கள். தன் மனதுக்கு மிகவும் பிடித்த தொழிலில் ஐக்கியமாகும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த கடவுளுக்கும் ஸ்தபதிக்கும் தன் உள் மனதில் நன்றி கூறினான் குணா.
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













