தாயென்று கும்பிடடி பாப்பா
- களிமண் - 6
ஆகிரா
தன் தங்கையிடமிருந்து வந்த கடிதத்தைப் படித்த குணா, அவளது திறமையைக் கேட்டு அளவிலா ஆனந்தமடைந்தான். சிறு வயது முதலே அவளுடன் அவன் மிகவும் நெருக்கமாக இருந்தான். அவளென்றால் அவனுக்கு உயிர். அவன் களிமண்ணால் பொம்மைகள் உருவாக்குகையில் அவள் அவனுடன் அமர்ந்துகொண்டு அவனுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்தாள். அவன் அவ்வாறு உருவாக்கிய களிமண் பொம்மைகளைக் கண்டு மிகவும் ரசித்தாள். குயிலினும் இனிய குரலில் அவள் பாடும் பாட்டு அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
இப்பொழுது அவள் பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வாங்கியதை அறிந்து அவளை மனதுக்குள் மிகவும் பாராட்டினான். அவள் பாட்டைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் அவன் மனதில் ஏற்பட்டது. ஆனால் அவள் இப்போது தன் ஊரிலல்லவா இருக்கிறாள். இடையில் ஒரு முறை ஊருக்குச் சென்று தந்தை, தாய், தங்கை, மற்றும் தன் கிராமத்து சகாக்கள் அனைவரையும் கண்டு வர வேண்டுமென்று எண்ணிக்கொண்டான். அப்போது அங்கு வந்த மாணிக்கம் மல்லிகாவின் பாட்டுத்திறமையைப் பற்றி குணா சொல்லக் கேட்டதும் தானும் அவள் பாட்டைக் கேட்க விரும்புவதாகவும் குணா ஊருக்குச் செல்கையில் தானும் அவனுடன் வர விரும்புவதாகவும் சொன்னான். அவர்களிருவரும் கும்பகோணத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் இருக்கும் பல கோவில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களையும் பிற இடங்களையும் பார்த்து மிகவும் மகிழ்ந்திருந்தனர். அவர்களின் ஆலய தரிசனத் திட்டம் ஸ்தபதி கோவில் பணியை மறு நாளிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்று சொல்லிவிட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
குணாவுடன் பழகியதிலிருந்து மாணிக்கத்திற்கு சிற்பக்கலை மேலிருந்த ஈடுபாடு அதிகரிக்கவே தானும் குணாவுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பினான். அவன் பள்ளி இறுதிப்படிப்பை முடிதிருந்தாலும் மேற்படிப்பைப் பற்றிய சிந்தனைகள் அவன் மனதில் ஏதுமில்லை. தன் மனதுக்குப் பிடித்த தொழிலொன்றைக் கற்றுக்கொண்டு அதில் முன்னேறுவதே அவனது நோக்கமாக இருந்தது. எந்தத் தொழிலைக் கற்பது என்று இதுவரை முடிவு செய்யாத நிலையில், தற்போது அவனுக்குக் கிடைத்த குணாவின் சினேகிதத்தால் இம்முடிவுக்கு வந்தான். அவனது பெற்றோர்களும் அவனது விருப்பத்துக்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. அவனது மாமாவான ஸ்தபதியும் சந்தோஷமாக அவனுக்கு சிற்பக்கலையைக் கற்றுக்கொடுக்க ஒப்புக்கொண்டார்.
நாளைக் காலையில் பயிற்சி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் குணா, மாணிக்கம் இருவரும் தாங்கள் கோவில்களில் கண்ட தெய்வ விக்கிரங்களை மனக்கண்ணால் திரும்பப்பார்த்து அவ்விக்கிரங்கள் போல் தாங்களும் பலவற்றை உருவாக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். தங்கள் ஊர்க் கோவிலில் நிறுவ இருக்கும் வெண்கலச் சிற்பங்களைத் தன் கையாலேயே உருவாக்குவதற்கு இறவனருளால் ஏற்பட்ட சந்தர்ப்பத்தை எண்ணியெண்ணி மகிழ்ந்தான் குணா. இத் நாள் வரையில் தான் அருகிலிருந்து பிறர் சிற்பங்களை உருவாக்குவதை வேடிக்கை மட்டுமே பார்த்திருந்த மாணிக்கமும் தான் தன் கைப்பட அத்தகைய விக்கிரங்களை உருவாக்க வேண்டிய இன்பகரமான சூழ்நிலை புதிதாக ஏற்பட்டதை நினைத்து ஒரு வித்தியாசமான உணர்வைப்பெற்றான். இருவரும் சிறிது நேரம் தங்கள் வருங்காலக் கலைக் கனவுகளைப் பற்றிப் பேசிய பின்னர் குணா தன் தங்கையின் கடிதத்திற்கு பதிலெழுத அமரவே, மாணிக்கம் நாளைக் காலை ஸ்தபதியின் பட்டரையில் சந்திக்கலாமென்று கூறிவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றான்.
தொடரும்...
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















