
ஒரு நாள், தனக்குக் கிடைசியாகவும் ஒரே மகனாகவும் பிறந்திருந்த சுமார் ஒன்பது வயதாகியிருந்த பாலகனை அவனது தந்தையார் (நடு வயதைத் தாண்டியவர்) கூப்பிட்டழைத்து இவ்வாறு கூறலானார்.
"குழந்தாய், ஆண்டவனுடைய அருளினால், எனக்குத் தெரிந்தவரை நீ ஒரு முரட்டுத்தனமுள்ளவனாகவும், கெட்டிப் பிடிவாதம் உள்ளவனாகவும் இல்லை. அதற்கு நேர் மாறாக ஒரு இளகிய மனமுள்ள சிறுவனாக உன்னை நான் காண்கிறேன். ஆனால் அப்படியிருப்பவர்களூக்குக் கிடைக்கும் நண்பர்களில் சிலரின் தூண்டுதலினால் அவர்களுக்கே அறியாமல் பல கெட்ட பழக்கவழக்கங்களிலும், வெறுக்கத்தக்க செயல்களிலும் ஈடுபட்டு விடுவதற்கு வாய்ப்புகள் மிக உளன. உன்னைப்போல் கடினமான மனமில்லாத சிறுவர்கள் தவறான பாதையில் ஒரு முறை புகுந்து விட்டால் தன்னையே தான் புரிந்து கொண்டு திருத்திக் கொண்டு நேர்மையானவர்களாக மாறுவது மிக மிகக் கடினம்.
நான் அறிந்தவரை இப்பொழுது நீ சூது வாது இல்லாத ஒரு ஒன்பது வயதுக் குழந்தை. ஆனால் பத்து வயதிலிருந்து பதினாறு இன்னம் சொல்லப் போனால் பதினெட்டு வயதைத் தாண்டும் வரை மிகப் பல துராசைகள், தீய பழக்க வழக்கங்கள் உன்னை மயக்கி, கவர்ச்சி செய்யத் தொடங்கி, விரைவில் உன்னை அவைகளில் ஈடுபட வைக்கும் வாய்ப்புக்கள் இருந்து கொண்டே இருக்கும். வளரும் சிறுவர் சிறுமியர்களின் இந்த ஆறெட்டு வருட கால கட்டத்தை ஆங்கிலத்தில் 'Dangerous Years' அதாவது 'ஆபத்தான, இடருடைய அல்லது பாதுகாப்பற்ற வருடங்கள்' எனக்கூறுவார்கள்.
கடவுளருளால், இது வரை தாய் தந்தையர்கள் சொல் தட்டாதவனாக இருந்து வருகிறாய். இப்பொழுது நான் சொல்வதை கணமும் மறவாமல் அதன்படிச் செய்யத் தொடங்க வேண்டும். தினமும் விடிகாலையில் கண் விழித்தவுடனும், இரவில் உறங்கப் போவதுற்கு முன்பும் 'தெய்வமே நான் எக்கணமும் திசை திரிவு செய்யாமல் நல்லொழுக்கப் பாதையான நேர் பாதையிலேயே செல்வதற்கான திடமான மனதைக் கொடுத்தருள்வாய்' என்ற இறை வணக்கத்தை விடாது செய்யத் தொடங்க வேண்டும்." என்று அறிவுரைகள் கூறிவிட்டு, "நான் உரைத்ததையெல்லாம் மனதில் படிய வைத்துக் கொண்டாயா?" என்று மகனைக் கேட்டார்". "படிய வைத்துக்கொண்டேன் அப்பா" எனச்சொல்லியப் பையனைத் தந்தை மீண்டும் கேட்டார், "அதன்படியே தப்பாமல் செய்யத் தொடங்குவாயா?". அக்கணமே "கண்டிப்பாகத் தாங்கள் சொல்லிய படியே செய்யத் தொடங்கி விடுவேன்" என்று மகன் உறுதி அளித்தான்.
உன் வாக்குறுதி எனக்கு மிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது எனச் சொல்லி மகனைக் கட்டியணைத்துக் கொண்டு கூறலனார், "நான் உன்னை வரவழைத்தது நாமிருவரும் சேர்ந்து ஒரு ஆராய்ச்சி செய்யத் தொடங்குவதற்குத் தான்.
ஐம்பது புதிய, கூர்மையான, நீளமான ஆணிகள் வாங்கி இந்த இந்த அட்டைப் பெட்டியில் வைத்திருக்கிறேன். அறிந்தோ அறியாமலோ நீ ஒரு தவறு செய்தாலோ அல்லது யாராவது ஒருவரின் மனது புண்படப் பேசியிருந்தாலோ, அது எனக்குத் தெரிய வந்தால், நான் உடனே இந்த ஆணிகளில் ஒன்றை நம் தோட்டத்தில் இருக்கும் மாமரத்தில் ஆணியின் நீளத்தில் காலளவைவிடக் குறைவாக உள்ளே செல்லுமாறு அடித்து விடுவேன். ஏனென்றால் அதை மரத்திலிருந்து எடுக்க வேண்டுமென்றால் அதை நன்கு ஆட்டிப் பிடுங்கி எடுக்கச் சுலபமாகயிருக்கும்.
பிறகு நீ செயத தவறைப் பற்றி உன்னிடம் கேட்கும் பொழுதோ அல்லது நீயே தானாக என்னிடம் வந்து, உனது தவற்றிற்கு வருந்தி மன்னிப்புக் கேட்டாலோ, அப்பொழுது, உன் தவற்றிற்காக அடிக்கப்பட்டிருக்கும் ஆணியை அந்த மாமரத்திலிருந்து நீ பிடுங்கி எடுத்து வந்து என்னிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆணியை வேறொரு அட்டைப் பெட்டியில் போட்டு வைப்பேன். சரி, இப்பொழுதிலிருந்து இந்த விசித்திர ஆராய்ச்சியைத் தொடங்குவோமா?" என்ற தந்தையிள் கேள்விக்கு, 'சரி அப்பா' என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு பாலகன் நண்பர்களுடன் விளையாடச் சென்று விட்டான்.
இந்தப் புதுமையான ஆராய்ச்சி ஆரம்பித்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு தன் மகனை அழைத்து ஆணிகளுக்கான இரண்டு பெட்டிகளையும் காண்பித்தார் அவனது தந்தை. மரத்திலிருந்து பிடுங்கி எடுக்கப் பட்ட ஆணிகளுக்கான பெட்டியில் 49 ஆணிகள் இருந்தன. புதிய ஆணிகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி காலியாயிருந்தது. "நான் எல்லா ஆணிகளையும் பிடுங்கி அப்பொழுதைக்கப்பொழுது தங்களிடம் கொடுத்திருக்கிறேன். எப்படி 49 ஆணிகள் தான் இருக்கின்றன அப்பா? மொத்தம் 50 ஆணிகள் இருக்க வேண்டுமே. மீதி ஒன்று இருக்க வேண்டுமே அது எங்கே அப்பா?" எனச்சிறுவன் கேட்கலானான்.
"இப்பொழுது மாமரத்தைச் சென்று பார்க்கலாம் வா எல்லாம் புரியவரும்" என்று தந்தையார் கூறிவிட்டு, பையனை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றார.
தோட்டத்திற்குச் சென்று இருவரும் மாமரத்தை நோக்கினார்கள்.
ஆணிகள் அடித்த துளைகளைத் தவிர ஒரு ஆணி மட்டும் அப்படியே மரத்தில் பதிந்திருந்தது.
"அது தான் நம்மிடமிருந்த புதிய ஆணிகளில் ஐம்பதாவதாகும். அதனைப் பற்றிப் பிறகு விவரிக்கிறேன். இப்பொழுது இந்த நல்ல மரத்தில் காணப்படும் துளைகளை கவனித்தாயா. அவற்றைப் பார்த்ததும் உனக்கு ஏதாவது புலப்படுகிறதா?" என்று மகனைப் பார்த்துத் தந்தை வினவினார். "எனக்கொன்றும் தெரியவில்லை, தாங்களே சொல்லுங்கள் அப்பா" என்று அந்த ஒன்பது வயதுச் சிறுவன் கேட்டுக்கொண்டான்.
நீ செய்த தவறுகள் (பல தருணங்களில், சிறிதும் யோசியாமல், கடும் சொற்களாலும் செயல்களாலும் பலரை (என்னையும் சேர்த்து!) மனம் நோகச் செய்த பொழுதையும் சேர்த்து) நான் அடித்த ஆணியை, பிறகு வெகு விரைவில் நான் கேட்ட பின்போ, அல்லது தானாகவோ மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டவுடன் இந்த மரத்திலிருந்து நீக்கியெடுத்து என்னிடம் கொடுத்து விட்டு மனப்பாரம் நீங்கினவனாய் இருக்கிறாய்.
இப்பொழுது நன்றாக யோசி. செய்த தவறினை மனமார உணர்ந்து அதற்குப் பிறகு அதனால் பாதிக்கப் பெற்றவரிடம் மன்னிப்புக் கோறி, அதைப் பெற்று விட்டால் பாரம் நீங்கியதாக எல்லோரும் நினைத்து விடுகிறார்கள். நீ அதற்கு விதி விலக்கில்லை. ஏனென்றால் அது மனித இயல்பு.
இப்பொழுது உனக்குத் தெரிய வருகிறதா ஒரு உண்மை. இந்த நல்ல மரத்தில் உன் ஒவ்வொரு தவறுக்கும் அதன் மேல் அடிக்கப்பட்டு பிறகு எடுக்கப் பட்ட ஆணிகளினால் அழியாது நிலை பெற்றிருக்கும் துளைகளை ('காயங்கள் எனக் கூற வேண்டும்) நோக்கினால் நல்ல மனம் படைத்த உனக்கு வருத்தமாக இருக்கிறதல்லவா?" என்று தந்தையார் மகனைப் பார்த்துக் கேட்டார். "நன்றாய்ப் புரிந்து விட்டது அப்பா, தப்பு செய்து விட்டு அதற்கு மன்னிப்பு கேட்பதைவிட முயற்சி முழுவதும் செய்து தப்பே செய்யாமல் இருப்பது சாலவும் சிறந்தது என்று எனக்கு மிக நன்றாக விளக்கி விட்டீர்கள். நான் இந்தப் பாடத்தை ஒரு நாளும் மறக்க மாட்டேன். தந்தையே, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு நம் தோட்டத்தில் மரம் செடிகள் மீது மிகப்பற்றுதல் உண்டு. அவைகளில் இந்த மாமரம் எனக்கு மிகவும் பிடித்த மரமாகும். போயும் போயும் இந்த மரத்தில் ஆணி அடிக்கப் போவது ஒரு "ஆராய்ச்சிக்கு" என்று தாங்கள் சொல்லியதால் என்னால் மறுக்க முடியவில்லை அப்பா".
"அதற்கு நான் உன்னிடம் மன்னிப்புக் கோறுகிறேன். சரி, என்னை மன்னித்து விட்டுத் தனியாக விடப்பட்டிருக்கும் அந்த ஐம்பதாவது ஆணியையும் எடுத்துக் கொடுத்துவிடு" என்று தந்தையார் சொல்ல உடனே அந்த ஆணியைப் பிடுங்கி எடுக்க முற்பட்ட சிறவன் ஏமாற்றத்துடன் தந்தையை நோக்கினான். ஒரு விஷயத்தை உனக்குப் புலப்படுத்துவதற்குத்தான் அந்த ஆணியை நானே அடித்து எடுக்காமல் விட்டு வைத்திருந்தேன். "அந்த அறிவுரை சிறுவனின் மனதில் 'பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது" என்று சொல்லக் கேட்டிருக்கிறாயா. முதியோர்கள் ஒரு சிருவனின் மனத்தை ஒரு பசுமரத்திற்கு ஒப்பிடுகிறார்கள். இப்பொழுது கவனித்தாயா நான் அடித்து விட்டு வைத்திருந்த ஆணி எடுக்கவே முடியாதபடி எவ்வ்ளவு கெட்டியாக மரத்தில் பதிந்திருக்கிறது"
நன்மை பயக்கும் வழக்கம், தீமை பயக்கும் வழக்கும் எதுவாயிருப்பினும் சரி ஒரு சிறுவனின் மனதில் படிந்துவிட்டால், பிறகு அது அவன் வாழ்நாள் வரை அவனை விடாது. அதனால் தான் கெட்டதையெல்லாம் அறவே ஒதுக்கி நல்ல பழக்க வழக்கங்களை மட்டும் விடாமல் பயின்று வருவதறகான அறிவுரைகளுடன் கூட இந்த 'ஆராய்ச்சியையும் செய்து காட்டினேன். பதிந்திருக்கும் ஆணியை எடுத்துவிடுவதற்கு நமது தோட்டக்காரரிடம் கூறியிருக்கிறேன். அவரிடம் அதற்கான கருவிகள் இருக்கின்றன." என்று கூறியது மட்டுமல்லாமல் அத்தந்தையார் தான் மகனைத் தன்னிடம் வரவழைத்து மிக்க அன்புடன் தழுவிக்கொண்டே தன் பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை அவன் வியக்க வியக்க அவன் கையில் திணித்து இவ்வாறு சொல்லானார். " நான் சொல்லியதையெல்லாம் கவனுத்துடனும் பொருமையுடனும் கேட்டுக் கொண்டதுமல்லாமல் மனம் கோணாமல் என்னுடன் இந்த விசித்திரமான 'ஆராய்ச்சிக்கும்' ஒத்துழைத்து என்னை அளவிலா மகிழ்ச்சியில் மூழ்கடித்து விட்டாய். என் உள் மனதில் கடவுளருளுடன் எல்லோரும் மெச்சும் ஒரு உத்தமனாக வளருவாய் என்ற திட நம்பிக்கை என்னையறியாமலேயே எனக்குண்டாகிவிட்டது. அந்த இன்பப் பெருக்கில்தான் இதை உனக்குக் கொடுக்கத் தோன்றியது. இதை நீ நல்ல முறையில் உபயோகிப்பாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு" என்று கூறி அதைத் தன் அன்புப் பிடியிலிருந்த தன் மகனிடம் கொடுத்து அவனை விடுவித்தார்.
அவ்வளவு "பெரிய" அன்பளிப்புப் பணத்தை முதல் முறையாகப் பெற்ற அந்த பாலகன் முகமெலாம் மலர, "என்னருமை அப்பா, மிக்க வந்தனம் என்று கூறி விடை பெற்று வெளியே விரைந்து செல்லத் தொடங்கிய பொழுது தந்தையார் அவனைக் கூவி அழைத்து, "பணத்தை எப்படிச் செலவழிக்கப் போகிறாய்? என்று வினவினார். ஐம்பது ரூபாய்க்கு என் சினேகிதர்களுக்கு ஒரு 'ட்ரீட்' treat) கொடுப்பேன் மீதி ஐம்பதுக்கு அம்மாவிற்கும் உனக்கும் ஒரு கடவுள் படம் வாங்கி வருவேன்" என்று கூறினான். "எந்த சுவாமிப்படம்" என்று தந்தை வினவியதற்கு, "பார்வதி பரமேசுவரர் அல்லது ராதா கிருஷனன் 50 ரூபாய்க்கு எந்த நல்ல படம் கிடைக்கிறதோ அதை வாங்கி வருவேன் அப்பா என்று சொல்லிக் கொண்டே விரைந்தோடி விட்டான் அந்த 9 வய்து பாலகன்.
"எங்கள் மூதாதையர்கள் செய்த புண்யத்தில் தான் எங்களுக்கு இந்தக் குழந்தை கிடைத்திருக்கிறான். கடவுளே, உன்னருளில் உடல், மன திடத்துடன் மகிழ்ச்சியுடன் பிறர் மகிழ வளர்ந்து நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டு கண்களில் மல்கிய நீரைத் துடைத்துக் கொண்டே தன் மனைவியிடம் விவரங்களைச் சொல்வதற்கு விரைந்தார் அந்தத் தந்தை.
சுபம்