Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
உண்மையின் அருமை
சீனு தாத்தா


The story of a boy and his mother
கரூருக்கு அருகிலுள்ள புகலூரில் (புராதனப் பெயர்: புகழூர்) 1930 டிசம்பரில் பிறந்த அந்த பாலகன் ஒரு வயதாகுமுன் தன் அன்புத் தந்தையை அடி வயிற்றுக் கோளாரில் (அப்பெண்டிஸைடிஸ்) இழந்தான்.

இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவனது உயிருக்குயிரான 30 வயதுத்தாய் (தன் முதலிரண்டு மனைவியையும் இழந்த தந்தையின் மூன்றாம் தாரம்) அந்தக் காலத்திய விதி, முறை, கட்டுப்பாட்டின் படி, தன் அழகான கூந்தலையிழந்து, சந்தன நிறப் புடவையை (காவிநிறப் புடவை யென்றும் சொல்லலாம்) தரித்து அதையே தன் தன் தலையை மறைக்க முக்காடாக வைத்துக் கொண்டு வாழலானார்.

1935ஆம் வருடம் செல்லமாக வளர்த்து வந்த தன் ஒரே பெண்ணிற்குப் பிள்ளை வீட்டார் அடாபிடியாகக் கேட்ட வரதக்ஷிணை, மற்ற சீர்வரிசைகளெல்லாம் கொடுத்து விவாகம் செய்து வைத்தார்.

தன் மூத்த மகன் (வயது 17க்கு மேல்), மற்றும் தனது முதல் மூத்தாளின் இரு பேரன்களின் படிப்பை முந்நிட்டு திருச்சியில் வாடகை வீட்டில் 1938 வரை தன் நோயையும் பொருப்படுத்தாமல் மிகச் சிரமத்துடன் குடித்தனம் நடத்தி வந்தாள். இருதயக் கோளாறினால் மிகவும் பலவீனமாய்ப்போய் மேலும் தாங்க முடியாத நிலைமையில் அடுத்த வருடத் தொடக்கத்தில் மேற்சொன்ன தன் கடைசிப் புதல்வனை அழைத்துக்கொண்டு புகலூருக்குத் திரும்படி நேர்ந்தது.

வேறு வழியில்லாமல், பாதிப் படிப்பில் (நான்காம் வகுப்பில்) நிறுத்திக் கூட்டிக் கொண்டு வந்த பையனின் மேல் படிப்புக்கு என்ன செய்வதென்று யோசிக்கலானாள். கிராமத்துப் பள்ளியில் 5ஆம் வகுப்பிற்கு மேல் கிடையாது.

காவேரிக்கு அக்கரை வேலூரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ப்பதை விட வேறு வழியொன்றும் தென்படவில்லை. அந்தக் காலத்தில் இளம் விதவைகள் ஆண்களின் முன் நிற்கக்கூட மாட்டார்கள். ஆதரவற்ற அந்நிலையுலும் தன் மகனை எப்படியாவது அப்பள்ளியில் சேர்ப்பதென்று உறுதி செய்து கொண்டார்.

தன் சிறுவனைக் கூட்டிக் கொண்டு மிகச் சிரமத்துடன் பரிசலில் நதியைத் தாண்டி, பள்ளி வந்தடைந்தார். பள்ளியின் வெளியே வாசற்கதவின் பின் மறைந்திருந்தபடி, முந்தையப்பள்ளியில் படித்ததற்கான தன் மகனின் சான்றிதழ்கள் முதலியவற்றை வைத்திருந்த பையை அவனிடம் கொடுத்து, தலைமை ஆசிரியரிடம் எப்படிப் பேச வேண்டும், என்ன சொல்ல வேண்டுமென்று கிளிப்பிள்ளையைப்போல் சொல்லிக் கொடுத்து உள்ளே அனுப்பினார்.

சிறுவன் மிகப் பயத்துடன் உள்ளே சென்றான். என்ன செய்வதென்று புரியாமல் தலைமை ஆசிரியரின் அறைக்கு வெளியேயிருந்த பொதுக்கூடத்தில் நிற்கலானான்.

ஏதோ வேலை நிமித்தம் தன்னறையை விட்டு வெளியே வந்த முதல்வர் அச்சிருவனைப் பார்த்தார். "யார் நீ? எதுக்காக வெளீலெ நின்னுட்டிருக்கே?" என்று அதட்டலாகக் கேட்கலானார்.

மிக நடுங்கத்தொடங்கிய பையன் "நான், என்னோட அம்மா, அஞ்சாங்க்ளாஸ்" என்று உளறத் தொடங்கினான். கண்களில் நீர் மல்கியது.

அச்சமயம் அந்தப் பள்ளியில் துப்புரவுப் பணி புரியும் ஒரு பெண்மணி வேகமாகத் தலைமை ஆசிரியட்ம் வந்து, "இந்தப் பையனுக்கு அப்பா இல்லையாம், இவனை அஞ்சாம் க்ளாஸ்லெ சேக்கனும்னு அக்கரெலேந்து இவனோட அம்மா கூட்டிட்டு வந்திருக்காங்க; பையோட அவனெ உள்ளே அனுப்பிச்சுட்டு வாச கேட்டுப்பின்னாலெ நின்னுக்கிட்டிருக்காங்க." என்று கூறினாள்.

"அநாதையா? பாவம்" என்று கனிந்த குரலில் கூறி, பிறகு சிறுவனின் ஐயத்தை நீக்குவதற்காக அவனைத் தட்டிக் கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றார். அவனிடமிருந்த சான்றிதழ்களயெல்லாம் வாங்கி கவனமாகப்படித்தற்குப் பின், "எல்லா சப்ஜெக்ட்டிலேயும் நல்ல மார்க் வாங்கிருக்கையே, பின்னெ எதுக்கு அப்படி பயந்து நடுங்கினே?" என்று சொல்லி விட்டு பணியாளர் ஒருவரைக் கூப்பிட்டனுப்பி அவரிடம் விவரமாகப் பேசிவிட்டுப் பையனிடம், "இவரை ஒங்கம்மாகிட்ட கூட்டிண்டு போ, என்னென்ன செய்யனும்னு அவர் ஒங்கம்மாகிட்ட சொல்லிக் கொடுப்பார். முடிஞ்சா நீ நாளேலேந்து 5ஆம் க்ளாஸுக்கு வரலாம்" எனச் சொல்லியனுப்பினார்.

பொங்கிய மகிழ்ச்சியுடன் தன் மகனை வீட்டிற்கழைத்துச் சென்றார் அந்தத் தாய்.

பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய தன் பிள்ளையின் பிடிவாதத்திற்கிண்ங்கி, தினமும் காவேரிக் கரை வரை கூடச்சென்று, பரிசலில் ஏற்றி, அதே தோணியில் பள்ளிக்குச் செல்லும் பெரிய வகுப்புப் பையன்களிடம் சிறுவனை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு பிற்கு திரும்புவார். படகு காவிரையைப் பாதி தாண்டும் வரை தன் தாய் திரும்பிச் செல்லும் திசையையே நோக்கிக் கொண்டிருப்பான், அவளிடம் சொல்லொணாப் பற்றுதலும் நம்பிக்கையும் நன்றியும் வைத்திருந்த அச்சிறுவன்..

உடல் நலமில்லாத அந்த அம்மையால் சில நாட்களே அப்படிச் செய்ய முடிந்தது. இருதய நோய் மேலும் தீவிரமாகி அவளைப் படுத்த படுக்கையாய் இருக்கச் செய்துவிட்டது.

ஒரு வாரத்தில் இரண்டு தடவையாவது பக்கத்தூர் வேலாயுதம்பாளயத்திலிருந்து ஒரு வைத்தியர் வந்து பரிசோதனை செய்துவிட்டுச் செல்வார். ஒரு நாள் அவரிடம் தன் புதல்வனைக் காண்பித்து, "இந்தக் குழந்தையைப் பாத்துக்கறத்துக்காகவாவது நான் இன்னும் கொஞ்சம் நாள் உசிரோட இருக்கனும். எப்படியாவது என்னெக் காப்பாத்திடுங்க டாக்டர்" என்று உருக்கத்துடன் கேட்டுக் கொள்வவதைக் கேட்டுக் கொண்டிருந்த பாலகன் தாங்க முடியாத துயரத்துடன் பெரிதாக அழத் தொடங்கினான். வைத்தியர் தாய் மகன் இருவருக்கும் நம்பிக்கை கொடுத்து ஆறுதல் சொல்லிவிட்டுச் சென்றார்.

உயிருக்குயிரான் தன் தாயின் நிலைமை, இன்னமும் பழக்கப்டாத வகுப்பு மாணவர்கள், இப்படிப்பட்ட ஆதரவற்ற நிலைமையில் சிறுவனுக்குப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால், அவன் பள்ளியில் சேர்ந்த 2 மாதத்திற்குள் வைக்கப்பட்ட கால் வருடப் பரீட்சையில் தேறவில்லை.

"கடவுள் புண்யத்திலெ எங்கெடைசிப்பிள்ளை ரொம்ப கெட்டிக்காரக் கொழந்தையாப் பொறந்துடுத்து. க்ளாசிலெ எப்போதும் ஃபஸ்ட் இல்லாட்டா செகண்ட் இப்படித்தான் வருவான்" என்று பெருமைப்பட்டுக்கொள்வார் அந்த அன்னை. அது ஆங்கிலேயர் ஆண்ட காலமாதலால் அரைகுறையாகப் படித்திருந்தாலும் ஆண்களும் பெண்களும் பேச்சினிடையில் ஆங்கில் வார்த்தைகளை சரளமாகப் பயன்படுத்துவார்கள்.

அச்சிறுவன் அதுவரை மிக நன்றாகப் படித்துவந்ததினால் அவன் தாய் அதிகப்படுத்திச் சொன்னாலும் அவர் சொல்லியதில் சிறிது உண்மை இருந்தது. இப்பொழுதோ பையனின் நிலை மிகப் பரிதாபதக்குரியதாயிருந்தது.

பரிட்சையில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பெண்கள் கொண்ட அட்டையை (மார்க் ஷீட் -mark-sheet) எடுத்துக் கொண்டு தாயிடம் வந்தான், "அம்மா" என்று மிக மெல்லிய் குரலில் அழைத்தான். குப்புறமாகப் படுத்திருந்த அம்மாவின் உடம்பிற்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்த விதவை நன்பர் ஒருவர் அவன் தாய்க்குத் தெரியாமல் அவனிடமிருந்து அந்த அட்டையைப் வாங்கிப் படிக்கலானார்.

"என்னடா கண்ணா, மார்க்கெல்லாம் கெடச்சுடுத்தா? கணக்குலெ எத்தெனெ வாங்கிருக்கே?" எனச் செல்லமாகவும் பெருமையாகவும் கேட்டார்.அன்னை. அந்த விதவை நன்பரும், அவருடன் கூட இருந்த மற்ற சிநேகிதியும் அவனிடம் சைகைகள் காட்டித் தடுத்துக்கொண்டிருந்த பொழுதும் "ரெண்டு (2%) அம்மா" என்று ஈனக்குரலில் சொன்னான்.

அந்தத் தாய் தன் வெளிறிய முகத்தில் புன்ன்கை வரவழைத்துக்கொண்டு, "பாத்தேளாடீ! ஏம்பிள்ளே செத்தாக் கூடப் பொய் சொல்ல மாட்டன் தெரியுமா? அவன் வாய்லெ சத்தியம் தான் வரும். நீங்கள்ளாம் அவனுக்கு ஜாடெ காட்டிண்டிருந்ததெ நான் பாக்கலேன்னு நினைச்சுக்காதேங்கோ" என்று கூறலானாள்.

அடுத்த மூன்றே நாட்களில் அவனது தெய்வத்தாய் வானுலகமெய்திவிட்டாள். திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் தன் தாயை இழந்த அதிரச்சியில் கதி கலங்கி, மருண்டு சுருண்டு விழுந்து தாங்கொணாத் துயரத்துடன் ஓவென்று கதறி அழத்தொடங்கினான் சிறுவன்.

பிறந்ததிலிருந்தே தன் குழந்தையின் மேல் ஒரே கவனமாய், சற்றும் குறையாத அன்புடனும் பொறுப்புடனும் வளர்த்து வந்த தன் தாயின் உருவத்திலே தாய், தந்தை, ஆசான் மூவரையும் கண்ட அப்பாலகன், இம்மியளவேனும் பிசகாது அந்த அம்மையின் சொற்படி நடந்துவந்தான். நாளுக்கு நாள் கவலையை அதிகரிக்கும் தன் தாயின் நிலைமையைக் கண்டு அவன் வணங்கி வரும் முருகக் கடவுளை எக்கணமும் வேண்டிக் கொண்டிருந்தான்.

"முருகா! நீ தான் எனக்கு கதி. எப்படியாவது என்னோட அம்மாவெக் காப்பாத்திடு. என்னோட அப்பா ஒம்மேலெ எவ்வளவு பக்தி வச்சிருந்தா, உனக்காக என்னெல்லாம் பண்ணுவான்னுட்டு அம்மா எங்கிட்டே அடிக்கடி சொல்லுவா. அதே மாதிரி நானும் வருஷா வருஷம் உனக்குக் காவடி எடுப்பேன். சித்திரை, வைகாசி அக்னி நக்ஷத்திரத்திலெ வெடிக்காலம்பர எழுந்துண்டு காவேரீலெ ஸ்நானம் பண்ணிட்டு அம்மா எனக்குன்னு கொடுத்திருக்கிற சின்னக் கொடத்துலெ காவேரி ஜலம் எடுத்துண்டு உன் மலைக்கு (பாடல் பெற்ற புகழிமலை - திருப்புகழ் - பாடல் எண்: 619 -Thiruppugazh-verse619 கடைசி வரிகள் "புகலரிய தான தமிழ்முநிவ ரோது புகழிமலை மேவு....பெருமாளே") கொண்டு வந்து உனக்கு அபிஷேகம் செய்யறத்துக்கு குருக்கள் கிட்ட கொடுப்பேன். அம்மா எனக்கு சொல்லிகொடுத்த படியே கொஞ்சம் கூடப் பிசகாம நடந்துப்பேன். செத்தாக்கூட ஒரு பொய் கூட சொல்லாமாட்டேன். இது நான் உனக்கு அடித்துக் கொடுக்கும் சத்தியம். முருகா! முருகா! எப்படியாவது என்னோட அம்மாவெக் காப்பாத்திடு" என்று.

அம்மா அம்மாவென்று புலம்பிக்கொண்டிருந்த அச்சிறுவனுக்கு திடீரென்று கடவுள் நம்பிக்கையே விலகியது. "முருகனாவது கடவுளாவது? எல்லாமே வெறும் பொய். உண்மையாகக் கடவுள் இருந்தால், எல்லோருக்கும் நன்மை செஞ்சிண்டு ஒரு ஈ எரும்புக்குக் கூட மனசால கூட கெடுதல் செய்யாத 38 வயசு கூட ஆகாத என் அம்மா எதுக்காக சாகனும்? அந்த முருகனே கதின்னு விடாப்பிடியா நம்பிண்டிருந்து தானும் ஏமாந்து, பாவம் என் அம்மா தெரியாமல் நானும் ஏமாறும் படி விட்டுப் போய் விட்டார்."

இவ்வாறெல்லாம் புலம்பத்தொடங்கிய சிறுவன் அவனால் விளக்க முடியாத படி ஒரு அநுபவத்தைப் பெறத்தொடங்கினான். தவறாது ஒவ்வொரு இரவும் அவன் கனவிலே அவனது தாய் தேவதையாக வந்து ஆற்றுதல், தேற்றுதல் செய்துவிட்டு மறைவார். இப்படியாவது தன் தாயைப் பார்க்க முடிந்ததே என்று பையனவன் தன் உள்ளத்தையும் மனத்தையும் சிறிது தேற்றிக் கொள்வான்.

1939ல் தன் பூத உடலை விட்ட தாய் 1974-75 வரை ஒரு பொழுதும் தவறாமல் கனவில் மட்டுமல்லாது எப்பொழுதாவது ஏதும் காரணத்தால் படு துயரத்தில் மனம் நொடிந்து வருந்திருக் கொண்டிருக்கும் அவரது செல்லப் பிள்ளையின் மனக்கண் முன் தோன்றி கிடைக்கொணா ஆறுதலும் தேறுதலும் கொடுப்பார். தெய்வத்தாயின் வருகை சட்டென நின்று விட்டதைப் பற்றி வருந்திக் கொண்டிருக்கும் 44 வயதான அவரது பிள்ளையின் மனதிற்குள் ஒரு எண்ணம் உருவாயிற்று.

"நான் வேண்டிக் கொண்ட மாதிரி அந்த முருகப்பெருமான் என் அம்மாவின் உயிரைக் காப்பாற்றியிருந்தால் என் அம்மாவிற்கு இப்பொழுது 72-73 வயதாயிருக்கும். தன் மெலிந்து நலிந்த பூதவுடலுடன் இம்மண்ணுலகிற்கே உண்டான பலவிதமான தொல்லைகளையும் பிடுங்கல்களையும் தாங்கிக் கொண்டு வாழ நேர்ந்திருக்கும். உயிருக்குயிரான என் அன்புத் தாயிற்கு அதையெல்லாம் தவிர்த்து, பரம்பொருளான திரு முருகன் அவரை அசரீரி தேவதையாக அவருடைய செல்லப்பிள்ளை கூடவே 1975 வரை இருக்கவருள் செய்திருக்கிறார்" அவரது மேற்சொன்ன நம்பிக்கைக்குப் புறம்பாக யார் என்ன சொன்னாலும் அதை ஒரு பொழுதும் ஆமோதிக்க அவர் தயாராயில்லை. விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இவை இரண்டின் கண்ணோட்டத்துடனும் நிறையப் படித்த அவர் இறவனின் அருளால் தான் அவருக்குத் தன் தாயின் உருவத்தை அசரீரியாக (astral body) பார்த்து வர முடிந்தது என்று உறுதியாக நம்புகிறார்.

இந்த இளம் நூற்றண்டிலும், கடந்த நூற்றாண்டிலும் தலை சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன் (Einstein) கடவுளைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்க ஆவலுள்ளவர்கள் கீழே கண்ட 'மின்னகத்திற்கு' (website) சென்று படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

www.geocities.com/seenufour

ஸ்ரீனிவாசன்

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button