மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
ஆகிரா
|
|
வீட்டு வாசலில் தபால்காரரின் சைக்கிள் மணி சத்தம் கேட்டதும் அடுப்பில் வெந்து கொண்டிருந்த கீரையை அப்படியே இறக்கி வைத்து விட்டு வீட்டு வாசலுக்கு விரைந்து வந்தாள் சீதா. மகன் குணாவை ஸ்தபதியுடன் அனுப்பி நான்கு நாட்களாகிவிடவே, அவனிடமிருந்து அன்று கடிதம் வருமென்று அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். மகனை அதுநாள் வரை பிரியாமல் தினந்தோறும் அவனைப் பார்த்துக் கொண்டு அவனுடன் கொஞ்சி மகிழ்ந்திருந்த அந்தத் தாயுள்ளம் இப்பிரிவால் சற்று வாடினாலும் மகனின் எதிர்காலம் நன்கமைய வாய்ப்பு கிட்டிய மகிழ்ச்சியே அவள் மனதில் மேலோங்கி நின்றது.
அவள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. குணாதான் கடிதம் எழுதியிருந்தான். கும்பகோணத்தில் தான் பார்த்த கோவில் சிற்பங்களின் அழகைப்பற்றியும் தனக்குக் கிடைத்த சினேகிதனையும் பற்றி நிறைய எழுதியிருந்தான். தந்தை ராமு, தங்கை மல்லிகா ஆகியோர் நலத்தைப்பற்றியும் கோவிலின் கட்டுமானப் பணிகளைப் பற்றியும் விசாரித்து எழுதியிருந்தான். மறு நாள் தான் செல்லப்போகும் பிற ஆலயங்களைப் பற்றியும் ஸ்தபதி தனக்கு அளித்திருக்கும் சுதந்திரத்தைப் பற்றியும் மிகவும் மகிழ்வுடன் எழுதியிருந்தான் குணா. வயலில் வேலை ஆரம்பிக்காததால் கோவிலுக்குச் சென்றிருந்த ராமு சற்று நேரத்தில் வீடு வந்து சேரவே, அவனிடம் மகனது கடிதத்தைக் காட்டி மகிழ்ந்தாள் சீதா. அவளுக்கு தமிழில் எழுதிய கடிதங்களைப் படிக்குமளவிற்கு அவளது பெற்றோர் பள்ளிப் படிப்பளித்திருந்தனர். தன் தந்தை தன்னைப் படிக்க வைக்காதிருந்தாலும் மனைவியிடம் படிக்கக் கற்றுக்கொண்ட ராமு, மகனின் கடிதத்தை எழுத்துக்கூட்டிப் படிக்கையில் "அம்மா, அம்மா" என்று அழைத்தவாறே மல்லிகா வீட்டுக்குள் வந்தாள். அவள் கைகளில் ஒரு அழகிய புத்தகம் வைத்திருந்தாள். அப்புத்தகத்தின் அட்டையில் முறுக்கு மீசை, தலைப்பாகை சகிதம் மஹாகவி பாரதியார் கம்பீரமாக விளங்கினார். "அம்மா, இன்று எங்கள் பள்ளியில் நடந்த பாட்டுப் போட்டியின் எனக்கு முதல் பரிசு கிடைத்தது" என்று சொல்லிப் அப்புத்தகத்தைக் காண்பித்தாள். மகனிடமிருந்து வந்த கடிதத்தைப் படித்த சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்த ராமுவும் சீதாவும் மகளின் திறமையை எண்ணி மேலும் மகிழ்ந்தனர். தன் அண்ணனிடமிருந்து கடிதம் வந்ததை அறிந்ததும் மல்லிகா அக்கடிதத்தைப் பிடுங்காத குறையாய்த் தந்தையிடமிருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவள் உரத்த குரலில் கடிதத்தைப் படித்தாள். பின்னர் தான் பரிசு வாங்கியதை அண்ணனுக்கு அறிவிக்கும் ஆவலில் அவனுக்கு பதில் கடிதமெழுத அமர்ந்தாள்.
|
YOUR FEEDBACK FOR THIS STORY ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |