அன்னை சாரதாதேவி
புலவர் நீல பகவன்
அன்னை சாரதாதேவி அருட்பாமாலை
பாரதம் ஏறிடும் பண்புகள் மேவிடச்
சாரதா என்றிடும் நாமமே தாங்கியே
சார்ந்தவர்க் கருள்தரும் சாதனை ஓங்கிட
நாரத கானமாய் நாமிதைப் பாடிட
நாளுமே நன்மையே நம்மையே நாடிடச்
சாரதா தேவியை! சந்ததம் பணிவோம்!
சாற்று பாமாலை போற்றியே புகழ்வோம்!
உலகின் அன்னை யாகவே
உயர்ந்த நின்றவள் - தூய
உறவின் சின்ன மாகவே
உணர்ந்து வென்றவள்!
இலகுங் கருணைப் பெருக்கினால்
இறைவி யானவள்! நாளும்
இசைந்த பாசம் இயல்புற
இராதை யானவள்!
நிலைத்த பெறுமைத் திறத்தினால்
சீதை யானவள்
நினைவில் ராம கிருஷ்ணரை
நிறுத்தி வாழ்ந்தவள்
மலரின் மென்மை யாகவே
மனதில் நிறைந்தவள் - நாலு
மறைகள் போற்றுஞ் சாரதா
மகிமை மிக்கவள்!
மங்கலம் வழ்ங்கு நாயகியே!
மகிமை சாரதா தேவியளே!
திங்கள் முகத்தில் திரளமுதைத்
தினமுந் தரநல் திறமெழுமே
அங்கை காட்டும் அடையாளம்
அபயம் வரதம் அமைந்திடுமே
கங்கை நதியின் கருணையெனக்
கண்கள் கருணை போழிந்திடுமே!
அன்றும் இன்றும் அன்னையவள்
அகிலம் முழுதும் அருள்தரவே.
பொன்னும் பொருளும் ஈடாகப்
பூப்போல் மனதாற் பொலிவாளே!
அன்னை அன்பின் ஆற்றலினால்
ஆதி சக்தி ஆனவளே!
கன்னல் மொழியிற் களிப்பூட்டிக்
கருதும் முத்தி அளிப்பவளே!
அன்னை அருளின் மறுவடிவே
ஆவதால் தன்னால் இயன்றவரை
என்றும் ஏழை எளியவர்க்கே
ஏக்கங் கொண்ட ஏதலர்க்கே
நின்றும் இருந்தும் நிழல்தந்தும்
நிகழுந் துன்ப நிலைமாற்ற
ஒன்றும் உள்ளம் ஒளிபரவ
உயர்தர மறையின் பதம் தருவாள்!
என்மன வண்டே! உலகின்பம்
எனுமலர் நாடித் திரியாதே!
பொன்மய மான புண்ணியத் தாய்
பூம்பதத் தேனைப் பருகிடுவாய்!
அன்னை பாத அருமருந்தே
அகிலப் பற்றை அழித்தருளும்
இன்றே பிறவிக் கடல்கடக்க
இயன்றதைச் செய்ய வழிவகுக்கும்!
விளங்கும் விஸ்வ பாரதியே!
தீதெலாஞ் சேரா மாதேவி
தரிசனம் தரவே வருவாயே!
ஓதி உணர உன்னாமம்
ஒளிர்வதைக் கண்டே மகிழ்ந்தோமே!
பாத மலரில் அடைக்கலமே
பரிவுடன் தேவி அருள்வாயே!
அன்னையின் நாணம் அணிகலனே!
அருள்தரும் ஞானம் பணிமனையே!
பண்ணிய பாவ இருளகலப்
பாரினில் தேவி ஒளிதருவாள்!
உன்னை அல்லால் உலகினிலே
உறுதிப் பொருளே யாரம்மா?
மன்னிய ராம கிருஷ்ணவர்
மடிதவழ் சேயே நீயம்மா!
அம்மா நின்றன் வாழ்வதுதான்
அகிலம் போற்றுங் குருநாதர்
தம்மாற் பெற்ற தனிவாழ்வே!
தனிப்பே ரின்பத் தவவாழ்வே!
இம்மா நிலத்தே நின்போல
எவரே உளரோ புகழ் வாழ்வே!
பெம்மான் ராமகிருஷ்ணருடன்
பின்னிப் பிணைந்த பெருவாழ்வே!
புனித வதியே! புகழ்வடிவே!
புனித வாழ்வின் புகலிடமே!
புனிதப் பண்பின் புதுப்பொலிவே
புவியில் மாந்தர் நலம்பெறவே
புனிதம் அளிக்கும் புத்தமுதே
புங்கவர் போற்றுந் தேவியளே!
மனித குலத்தின் மாதவமே
மீண்டும் மீண்டும் வண்ங்குதுமே!
அறிந்தவர் தமக்குப் பேரின்பம்!
அளிப்பதே உனக்குப் பேரின்பம்!
அறியா தவர்க்கே ஏதின்பம்?
அறிந்திடச் செயவ துனதின்பம்!
நறவாய் வழங்கும் பேருற்றே!
நாளுந் நீயே அருளுற்றே!
அறந்திகழ் தாயே வணங்குதுமே
அகிலம் வாழ வண்ங்குதுமே!
ஆனந்த மான வடிவுடையாய்!
ஆதார சக்தி தெளிவுடையாய்!
தானென்ற வாதந் தகர்த்தெறிந்தாய்!
தாழாத கீர்த்தி தலைகுனிந்தாய்!
ஏனெனில் துன்பம் துடைப்பவளாய்
எவர்க்கும் இன்பம் அளிப்பவளாய்
வானென விரிந்தாய் மனந்தனிலே
வானென அழைக்கும் மகிதலமே!
ஞானியர் வணங்கம் ஞானியென
ஞாலம் போற்றல் காணிரோ!
வானவர் நாடாய் வையகத்தை
மாற்றிய பெருமை கேளீரோ
தேனறி வுரையைத் தெளியீரோ
தேடிடும் தெய்வம் அறியீரோ!
ஞானத்தின் வரம்பே மோனமென
நாட்டிய பாதை நடப்பீரோ!
அன்பெனுங் கயிற்றால் அனுதினமும்
ஆருயிர் அனைத்துங் கட்டிடுவாய்!
இன்பம் பொங்க இசைபொங்க
இயன்ற வழியைக் காட்டிடுவாய்,
துன்பம் இயற்கை என்பதனை
தொடருங் குறைகள் என்பதனை
என்றுங் கூறி விளக்குவதால்
ஏற்றம் பெற்றாய் எந்தாயே!
தாயாய் இருங்குங் காரணத்தால்
தரணிக் குதவும் பூரணத்தால்
சேயாய் என்னைச் சீராட்டிச்!
சிறப்பைத் தந்தாய் பாராட்டி!
வாயார வுன்னைப் பாடுகிறோம்
மலர்சொரிந் துன்னை நாடுகிறோம்
மாயே நின்றன் அதிசயத்தை
மனதார எண்ணித் துதித்தனமே!
சாரதா தேவி வணங்குகிறோம்!
சர்வேஸ் வரியே வணங்குகிறோம்
நேரெதிர் வந்த குருநாதர்
நெஞ்சம் நிறைந்தாய் வணங்குகிறோம்!
சீருடன் செயல்கள் ஒன்றாகச்
சிந்தனை செய்தோம் நன்றாகப்
பாரத தேவி வ நங்குகிறோம்!
பதமலர் தனிலே சரணடைந்தோம்.!
Your Feedback
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||











