கங்கை பாயும் தேசத்தில்
கவிஞர் முத்து. இராமமூர்த்தி
மரகதமேனி எழில்நிலங்கள்
கவிரி ஓடும் திருநாட்டில்
நங்கை நிலத்தாள் வறட்சியினால்
நலங்கள் அழிதல் நன்றாமோ?
மங்கலமாக மண்மகளும்
வையம் நிறைக்க வளம்சுரந்து
தங்க நகையாய்ப் பயிர்வகைகள்
தாங்கிச் சிரிக்க வழிகாண்போம்.
அக்கினி விதைகள் நிலம்வீழ்
அனைத்தும் கருகித் தீய்ந்துவிட
கக்கிடும் நெருப்பால் கதிரவனும்
கடலே வற்றச் செய்துவிட
மக்களின் கண்ணீர் வெள்ளமொன்றே
மண்ணில் பெருகும் நிலைமாற்றி
திக்குகள் அனைத்தும் நீர் பாய்ச்சி
செழிப்பைக் காண வகை செய்வோம்.
வான அன்புக் காதலனே
வழங்கும் பருவ மழைச்சுகத்தைக்
காண ஏங்கும் மண்மகளின்
கனவுகள் முழுவதும் பொய்யாகிப்
போன ஏக்கப் பெருமூச்சால்
பூமியைப் பிளந்து பாளமென
ஊனம் ஆக்கும் இயற்கையினை
உலகம் வாழ நாம்வெல்வோம்.
வெள்ளச் சேதம் ஒருபுறமும்
வேதனை வறட்சி மறுபுறமும்
கொல்லும் கொடுமை நாமழிக்க,
கோலக் கோடுகள் இனணவதுபோல்
துள்ளி ஒடும் ஆறுகளை
துலங்கிட தேசம் இனணத்திட்டால்
வெல்லக் காண்போம் பஞ்சத்தை!
வறுமைப் பேயும் உடன்மாயும்!
களங்கள் நிறைய நாட்டினிலே
காவிரி கங்கை இனணத்திட்டு
தெலுங்கு கங்கைத் திட்டங்கள்
தேசம் முழுதும் பயன்படுத்த,
நிலங்கள் சிரிக்கும் மணிப்பயிரால்!
நிலத்தில் சொர்க்கம் தனைக்காண்போம்!
உளங்கொள் மகிழ்ச்சி நிலைபெறவே
உண்மையில் பொய்யாம் பற்றாமை!
நாட்டில் வீணாய்க் கடல்சேரும்
நல்ல நீரைத் தேக்கிட்டு
மேட்டு நிலமே ஆனாலும்
மிகுந்த வெப்பப் பாலையிலும்
ஊட்ட நீரைப் பாய்ச்சிடவே
உயர்ந்த அணைகள் பலகட்டி
வாட்டும் உணவுப் பஞ்சத்தை
வாகை கொள்ள வழிசெய்வொம்
ஆழ மாகத் தோண்டிட்டு
மாற்றிப் பாய்ச்ச பின்நாளில்
மலையாய்க் குவியும் தானியங்கள்
ஊற்றுச் சுனைகள் குளங்களிலே
ஒடை ஏரி நீர்த்தேக்கில்
காற்றில் ஆவி ஆகாமல்
காத்திட நீரை வழிசெய்வோம்.
கடல்நீர் உப்புக் குணம்மாற்றி
கழனி முழுதும் பாய்ச்சிட்டு
மடைகள் நிறைத்து பயிர்செய்தால்
மரகத மேனியில் நிலம்செழிக்கும்!
குடங்கள் நீர்க்காய் தவம்கிடக்கும்
கொடுமைக் காட்சி இனியில்லை,
திடமாய் செயற்கை வருணர்களை
தேசம் செழிக்க உலாக்கொணர்ந்தால்!
மீனாய் கோடி முத்துக்கள்
மின்னிச் சிரித்து எழில்கொஞ்சும்
வான வயலில் வரப்பில்லை!
வளநீர் பாய்ச்ச நிலங்களிலே
காண மனிதர் பிரித்திட்ட
கழனி வரப்பை உடைத்திட்டு
பேண நிலத்தைப் பொதுவாக்க
பூமியில் மகிழ்ச்சி அரசாளும்!
தேறும் ஞானத் தெளிவாளர்
சிந்தை போல வளம்சுரந்தே
ஊறும் தண்ணீர்க் கிணறுகளை
உரிமை கொள்ள அனைவர்க்கும்
ஊருள் பொதுவாய் வைத்திட்டால்
ஒடும் இன்பப் பெருநதிகள்!
மாறும் பாலை மருதமென!
மாற்றம் காண உழைத்திடுவோம்!
வானாம் கவிஞன் மழைக்கோலால்
வடிப்பான் கவிதை நிலஏட்டில்!
வீனண மேகம் இசைபாட
விளையும் இராக மழைநீரும்
தேனாய்ப் பெருகிச் சுழிப்போடு
தேடி நிலத்தில் தினம்பாய
காணா இன்பம் நிலம்காணும்
களிப்பில் மக்கள் மூழ்கிடவே!
முத்து இராமமூர்த்தி
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














