தாயென்று கும்பிடடி பாப்பா
- திருக்குறள் எனும் அமுதம்
ஆகிரா
நீல பகவன் துணை
உணர்ந்தவிதம் உலகோர்க்கு உரைத்திடுவேன் எளியேனென்
இதயமதில் குடிபுகுந்து உறைநீல பகவனவன்
இருதாள் பணிந்துதானே
கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அகரம் தொடக்கம் எழுத்துக்கள் யாவுமே அனைத்துக்கும் ஆதாரமாம்
ஆண்டவன் தொடக்கம் ஆகுமே இப்புவி யாவையுமே
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்
எத்தனை படித்தறிந்தும் என்னபயன் இவ்வுலகில்
சித்தமதில் நித்தமுறை வித்தகனின் திருவடியை
பத்தியுடன் பணியாது பாமரராய் என்றுமிந்தப்
பாழுலகில் உழல்பவர்க்கே
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
உள்ளமெனும் மலரதனில் உறைந்திருக்கும் இறைவனவன்
உத்தமமாம் அடிதொழுது உயிர்த்திருக்கும் அன்பரருள்
வெள்ளமதில் திளைத்தின்ப வாழ்வுதனையே வாழ்வார்
வையகத்தில் நீடூழியே
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
விருப்பென்றும் வெறுப்பென்றும் யாதொன்றும் இல்லாத
திருப்பொருளாய் விளங்குபவன் திருவடியை நினைந்தோர்க்கு
வினைப்பயனால் விளைகின்ற இன்னலெதும் அண்டாது
விளங்கிடுமே புவிவாழ்விதே
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இறைவனவன் மெய்ப்புகழை என்றென்றும் விரும்பியிங்கு
எக்காலும் அன்புசெய்யும் மாந்தர்தமை யேயென்றும்
அறியாமையால் விளையும் நல்வினைதீ வினையிரண்டும்
அடையாவே ஒருபோதுமே
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
மெய்வாய் கண்மூக்கு செவியென்னும் ஐம்பொறிகள்
பொய்யாய் விளைவிக்கும் ஆசையவை தானொழித்த
மெய்யாய் விளங்குமந்த மெய்ப்பொருள் ஒழுக்கமதை
செய்வார் செழித்துவாழ்வார்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது
ஒப்பாரும் மிக்காரும் என்றுமிலா இறைவனவன்
உன்னதத் திருவடியில் உறைவோர்க் கன்றியார்க்கும்
உள்ளமதில் வெள்ளமென ஊற்றெடுக்கும் கவலையது
ஒருநாளும் நீங்காது காண்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்த லரிது
அனைவர்க்கும் அறம்செய்யும் ஆழியெனும் அந்தணனாம்
ஆண்டவனின் திருவடியை அடைந்தவர்க் கேயன்றி
அரிதாமே இவ்வுலகில் நீந்திக் கடத்தலென்றும்
அறம்சேரா எக்கடலுமே
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
உலகினிலே உள்ளபொருள் உணர்பொறிகள் தவிர்த்தெட்டு
உன்னதமாங் குணம்கொண்ட ஒளிவடிவாம் இறைவனவன்
தலையாய தாள்பணிந்து உய்வடையாதோர்க் கென்றும்
தலையிருந்தும் இல்லாததே
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி செராதார்
இறைவனடி யெனும்தோணி என்றென்றும் பற்றியவர்
பிறவியெனும் பெருங்கடலில் நீந்திக் கரைசேர்வார்
அவனடியை எண்ணாதோர் அஃதென்றும் நீந்துகிலார்
அடையார் கரைதன்னையே
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















