பொன்வீணைகள்
கவிஞர் முத்து. இராமமூர்த்தி
விறகாகும் பொன்வீணைகள்
உளத்தின் உணர்வும் தனக்கின்றி
மடமை இரும்புத் திரைகளிடை
மனிதர் ஊமைப் பூச்சிகளாய்
அடிமை விலங்குக் கைகளுடன்
ஆறாய்க் குருதி பெருகிவிட
முடமாய் அழியும் கொடும்கதையை
முடித்து வைத்தல் நம்கடை!
உழைப்பிற் கேற்ற ஊகியத்தை
உழைப்போன் பெறுதல் அவன் உரிமை!
உழைப்போன் கூலி இல்லாமல்
உழல்வது தானே அடிமை நிலை!
உழைப்பின் விலையைப் பெறுகின்ற
உரிமை மறுத்து அடிமைகொள
இழைக்கும் கொடுமைச் சிலுவைகளை
ஏசு வாகச் சுமந்திடவோ?
அதிசய பிரமிடு கோபுரத்தில்
அடிமையர் பலரின் வாழ்வடக்கம்!
கதியிலா எளியோர் செத்தகதை
கால்வாய் "பனாமா" தினம் உரைக்கும்!
விதியென வாழ்வை தினம் ஓட்டும்
வெளிச்சம் அறியா சிறைமக்கள்
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க
சுமையாம் அடிமை விலங்கொடிப்போம் !
மனிதப் பூவைக் கசக்கிவிட்டு
மணத்தைக் கெடுத்து அழித்திட்டு
தினமும் மனிதர் குருதியினைச்
சுவைத்து ரசித்துக் குடித்திட்டு
சனமாம் எழில்பொன் வீனணகளை
சழக்கர் விறகாய் அடுப்பிலிட்டு
வனமாய் உலகை மாற்றுகையில்
வாளாய் இருத்தல் பெரும்பாவம்!
பொருமை அழிக்கும் கொத்தடிமைப்
பயிராம் பார்த்தீ நியச்செடிகள்
பெருக நாட்டில் காடுகளாய்
பேசா திருத்தல் அறமாமோ?
பருகும் நீராய்க் கண்ணீரை
பாவக் கொடியோர் குடிக்கையிலே
கருகும் அடிமை நெஞ்சத்தின்
கண்ணீர் அமில ஆறாகும்!
உரிமைச் சுடரோன் ஒளியறியா
உலகின் மக்கள் குருடர்களாய்
வறுமைப் பேய்கள் துரத்தியதால்
வதைந்தார் அடிமைப் புதைமணலில்!
சிறுநரிக் கூட்டச் சூதினிலே
தருமன் போல பாரதத்தில்
தளையாய் அடிமைச் சிறைப்பட்டார்!
சுதந்திர வெளிச்சம் மறுக்கின்ற
துயர அடிமை இருள்சிறையில்
பதமுறச் சட்ட விளக்கொளியைப்
பரப்ப நாட்டில் வினைசெய்வோம்!
இதமுற எளியோர் உழைப்பிற்கும்
ஏற்ற கூலி பெறச்செய்தால்
சதையினால் ஆன பொம்மைசனச்
சரித்திரம் மாறிப் புதிதாகும்.
கல்லா மடமை போக்கிடவே
கல்வி தந்து கண்திறக்க
எல்லா வாய்ப்பும் ஏற்படுத்த
எளிதாய் அடிமை வலைகிழியும்.
இல்லா வறுமை ஏழ்மையினை
ஏற்ற பணியால் மாற்றிட்டு
முள்ளாய்க் குத்தும் பினணத்தளையின்
முடிச்சை அவிழ்க்க முனைந்திடுவோம்!
எடையின் தட்டில் ஒன்றாக
இறைவன் படைத்த மனிதர்களே
இடையில் அடிமை ஆண்டானாய்
ஏனோ தம்மைப் பிரித்திட்டார்.
படையாய் நாட்டின் மேனியிலே
பார்த்தோம் பினணப்புச் சங்கிலிகள்!
விடையாய் இன்பம் தினம்காண
வெற்றி கொள்வொம் அடிமையினை!
பொருளா தாரப் பள்ளத்தில்
புழுவாய் நெளிந்து சாகின்ற
அறியா ஜனங்கள் மேல்வந்து
அரியா சனத்தில் அமர்ந்திட்டு
சரியா சனங்கள் உருவாக்க
திருநாள் இன்றே சூளூரைப்போம்
தேச நலத்தை நாம்போற்றி!
மனித நேய மரவேர்கள்
மண்ணில் ஆழக் காலூன்ற
இனிய உரிமை எழில் பூக்கள்
என்றும் மலர்ந்து வெற்றிகளால்,
கவியும் இருட்டாம் கொத்தடிமை
இனியும் நாட்டில் இல்லையென
இன்பக் கீதம் நாம் இசைப்போம்.
முத்து. இராமமூர்த்தி





Your Feedback









