நலம் தரும் நாயகன்
கவிஞர் முத்து இராம மூர்த்தி
நலம் தருக! நாயகனே!
நலம் தரும் நாயகன் நீ!
நெடுமலை ஏழிலே நிறைபுகழ்க் கோயிலில்
நிலைத்திடும் இறையவன் நீ!
வாடியே சோர்ந்திடும் வையத்து மக்களும்
வளமெலாம் பெற்று வாழ
வேங்கட மலையில் வானவர் போற்றிட
வள்ளலாய் அருள்பவன் நீ!
தேடிய உன்னிடம் தினந்தினம் வந்திடும்
திக்கலா மக்களுக்கு
செல்வமும் மகிழ்ச்சியும் சிறப்புற அளித்திடும்
திருமலைத் தெய்வமே நீ,
பாடியே புகழ்ந்துனைப் பாக்களால் பரவிட
பாவமாம் பிணியறுப்பாய்!
பாரினில் உன்னையே பொருளென நம்பினேன்
பரிவுடன் அருளவா நீ!
வஞ்சனைப் பேய்களாய் வருத்தமே வாழ்வினில்
வதைத்துமே வாட்டுகையில்
வாவென் அழைத்துமே வகையினைக் காட்டியே
வாழ்வினைக் கொடுப்பவன் நீ!
சஞ்சலப் பட்டுமே சலனமும் கொண்டுமே
சாந்தியைத் தேடுவோர்க்கு
சலிப்பினை நீக்கியே சாந்தியைத் தந்திடும்
ஜ்கம்புகழ்க் கடவுளும் நீ!
நெஞ்சிலே பாரமாய் நித்தமும் உழன்றிடும்
நீள் துயர் மக்களுக்கும்
நிம்மதி கொடுத்துமே நிலைத்திடும் அமைதியை
நிலவிடச் செய்பவன் நீ!
பஞ்சமும் வறுமையும் பாதகக் கொடுமையும்
பாரினில் நீங்கி என்றும்
பேரருள் செய்துஇப் பாரினைக் காத்திடும்
பெருமலை மாலவன் நீ!
சங்கொடு சக்கரம் கரங்களில் ஏந்தியே
சகத்தினைக் காப்பவன் நீ!
சரணென அடைபவர் துயரினைத் துடைத்திடும்
தாள்மலர் தருபவன் நீ!
அங்கமும் நொந்துமே அவதியாம் கடலினில்
அமிழந்துமே மூழ்குவோர்க்கும்
அகத்தினில் மகிழ்ச்சியும் அறிவினில் எழுச்சியும்
அருளியே ஆள்பவன் நீ!
திங்களும் கதிருமே தினமுனை வலம்வர
தேடியே வருபவர்க்கு
தண்ணருள் செய்திட தாள்களைக் காட்டியே
சரண் தரும் தேவனே நீ!
மங்கல வாழ்வினை மாநிலம் பெற்றுநல்
மகிழ்ச்சியில் திளைத்து வாழ
மார்பினில் மங்கையை மாண்புடன் ஏற்ற எம்
மாலவா! வாழ்க நீயே!
இக்கவிதை திருப்பதி தேவஸ்தானத்தின் சப்தகிரி இதழில் இடம் பெற்றது.
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












