தாயென்று கும்பிடடி பாப்பா
- பாரதிக்கு அஞ்சலி
நீல. பகவன்
அமரகவி பாரதிக்குச் சமர்ப்பித்த கவிதைப் படையல்
தோற்றம் 11.12 1882. அமரரானது 11.9.1921.
86வது ஆண்டு நினைவுநாட் கவிதை
புதுமணத்தைப் பரப்பிடவே
தென்பொதிகை நந்நாட்டில்
தண்பொருனை பெருகிவர
அன்னையவள் செந்தமிழின்
அருமருந்து அன்ன மைந்தன்
சின்னச்சாமி பெற்றெடுத்த
சீராரும் பாரதியே
எழிலார் நகராய் விளங்குகின்ற
எட்டையா புரத்தில் பிறந்துயர்ந்த
அழியாத கவிதைப் பயிராக
ஆனாலோர் அக்னிக் குஞ்சாக
வழுவாத் தமிழ்தான் வாழ்ந்திடவே
வாய்த்த ந்ற்பே றாகிடவே
பொழியும் கவிதைப் புயலானது
பூந்தழலாய் ஒளியைப் பரப்பியதே.
அறிவெனும் நெய்யைத் தானூற்றி
அழியா அழலாய்த் தானெழுந்து
செருவுற்றுலகோர் சிந்தைக்கே
திறமுக யாகப் பெருந்தீயாய்
அறத்தின் மாறாப் பெரும்பொறுப்பால்
அனைத்தும் அன்னை பராசக்தி
இறுத்திடும் ஆணை எனவறிந்தே
இயற்றிய தெல்லாம் இன்தமிழே!
காதல் கொண்டான் கண்ணனிடம்
காதலி காதலன் தானாகி
யாதும் அவனே என்றறிந்து
யாண்டுங் கண்டான் அவனழகை
தீதிலா வேலைக் காரனவன்
சித்தரித்தானே பாட்டினிலே
பேதமி லாத பரம் பொருளாய்ப்
பேணிந்ல் வழிபா டுற்றானே!
அஞ்சுதல் இல்லை பேராற்றல்
ஆயுதம் கவிதை தானெடுத்தே
அஞ்ச வைத்தான்! அன்னியரை,
அகிலம் முழுதும் தேடிடினும்
கொஞ்சுதமிழ்க் கோமான் பாரதிபோற்
கூறப் புலவர் யாருமிலை
தஞ்சமென் றடையான் யாரிடத்தும்
தலைநிமிர்ந் துநிற்குந் தன்மையான்!
விடுதலை இல்லாக் காலத்திலே
வேள்வித் தீயில் குதித்தவனாய்ப்
படுகொலை கண்டு பரபரத்தான்
பாட்டெனும் வாளைத் தானெடுத்துத்
தடுத்திடத் தமிழால் தாக்கினனே
தன்மானத் தனத்தைத் தூக்கினனே
அடுக்கி வந்த தீமைக்கே
அவன்போர் முறைகள் அதிசயமே.
பேராவல் கொண்டான் ஏனெனிலே
கண்களெனப் போற்றிக் கல்வி தந்து
ஆண்களோடு பெண்களுமே
பண்படவே நன்றாய்ப் படித்துயர்ந்து
பாரதத்தைக் காக்கப் பயன்படுவம்
என்றதோர் எண்ணம் ஈடேற
இவன் கண்டான் கனவு நனவாச்சு!
பாரதத் தாயின் விலங்குகளைப்
பார்த்தவன் ஞானி பதைபதைத்தான்
பாரத புராணப் பாஞ்சாலிதன்
படுதுயர் கொண்டு சபதமதை
பாரதத் தாயின் சபதமெனச்
சூசகமாக அறிவித்தான்!
யாரெதிர் நிற்பர் பாரதிமுன்
யாவும் அவனே! பரிமளித்தான்.
வானிற் பரந்த மனம்படைத்தான்
வாரி வழங்கும் மாரியென
தேனிற் குழைத்தே செந்தமிழில்
தீட்டிய கவிதை திறமிகுந்த
ஞானி தானாய் ஞாலமெலாம்
ஞானம் பெறவே, தானளித்தான்!
தேனீபோல் தோன்றுஞ் சுறுசுறுப்பால்
தேடினன் வெற்றிச் சிகரத்தை!
தெய்வபக்தி தேசபக்தி
தெளிந்த ஞானச் செருக்கோடு
தெய்வத் தமிழில் தனிபக்தி
என்றிவன் கொண்ட பினணப்பதனால்
உய்யும் வகைக்கே விதைவிதைத்தான்
உணர்வால் உயர்ந்து தானின்றான்
வையம் வாழும் நாளாக
வாழ்வான் வள்ளல் பாரதியே!
ஆன்மிக நாட்டம் அதிகமுற
அறிவுறும் நூல்கள், மொழிகளுடன்
தானொரு பாதை தானமைத்தான்
தானொரு அத்வைத வேதாந்தி
தான் என தழைத்தான் கீதையதைத்
தமிழ்மொழி பெயர்ப்புச் செய்தளித்தான்
தேன்தமிழ்க் குயிலின் பாட்டினிலும்
தெடினன் வேதாந்த ஞானமதே!
நமது கவிஞன் பாரதியோ
நாளும் நமது நெஞ்சமெலாம்
அமர னாக அமர்ந்திருப்பான்
அழியாத கவிதை வனப்போடு
இமயம் போல அவன் புகழும்
என்றும் வாழும் வணங்குகிறோம்
சமயம் இன்றோ நினைவுநாள்
சாந்தி! சாந்தி! சமர்ப்பணமே!
நீல. பகதீசுவரன்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















