Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

   என்னைப் பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
புதிய கந்தரலங்காரம்
செபரா





"அழகுக்கு ஆராதனை"

(கந்தரலங்காரம் - புதியது)

கருத்தாக்கம்: எஸ்.பி.இராமமூர்த்தி (செபரா),

“குருகிருபா”

மனை எண் 189, 3வது பிரதான சாலை,
முதல் குறுக்குத் தெரு, நடேச நகர்,
சென்னை 92.
பதிவு செய்யப்பட்டது. எவ்விதமான பிரதியெடுக்கவும் அனுமதி பெறுவது அறிவுறுத்தப்படுகிறது

முருகன் என்றாலே அழகு. அதுவும் குழந்தை வடிவில் அவன் விளங்குவது ஒரு பேரழகு. இப்பாடலை இயற்றும் வரை நான் கந்தரலங்காரம் படித்ததில்லை. கந்த கோட்டம் சென்ற பொழுது, அங்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. கந்தரலங்காரம் = கந்தனின் அலங்காரத்தைப் பாடும் நூல் என நான் எதிர்பார்த்தபடி அதில் கந்தனின் வடிவழகைப் பாடியாதாக எனக்குத் தோன்றவில்லை. (இது எனது கருத்து. மாறுபடுவதற்கு மற்றவர்களுக்கு உரிமை உண்டு) அப்பொழுது எனக்கு “பாதாதி கேசம் முதல் பக்தனிவன் உன் அழகை, ஓதுவது ஓர் சிறப்பாய்” என்ற வரிகள் நினைவில் தோன்றியது. ஆனால் பாடல் உருவாகவில்லை. அதே நினைப்புடன், நண்பர் குழுவுடன் சிறுவாபுரி செல்ல நேர்ந்தது. என் சிந்தை மகிழ முருகனின் திருவுருவம் கண்ணில் நின்று, என் கருத்தில் நிறைந்தது. பாடல் உருவாகத் தொடங்கியது. நான் வசிக்கும் நடேச நகர் முருகன் வடிவமும் பார்த்தபின், இந்தப் பாடல் முழு வடிவம் பெற்றது. ஈற்றடியாக “எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே! எனைக் காக்க இசைந்தருளவே!!“ எனும் வரிகள் மனதினில் தோன்ற இப்பாடல் தாற்காலிகமாக, நிறைவுற்றது. முதற் பகுதியான் இதில், வேண்டுதலுடன் முடிவடைகிறது. இதன் அடுத்த பகுதி, வேண்டுதல் எவ்வாறு நிறைவேற்றப்படும் எனச் சொல்லும். அதற்கு முருகன் அருள் செய்வான் என நம்புகிறேன்.

- அன்புடன் செபரா

காப்பு - தும்பிக்கையான் துணை

கும்பிட்ட கைகளுக்குக் குவலயத்து நல்வாழ்வும்,
நம்பிக்கையும் தரும் அந்த நாயகனின் திருவடியும்,
தும்பிக்கையும் இங்கு துணையெனவே வருமென்று,
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனை!
இனிதிங்கு பாடவும் வந்தேன்!!

அழகுக்கு ஆராதனை

பாதாதி கேசம் முதல் பக்தனிவன் உன் அழகை,
ஓதுவது ஓர் சிறப்பாய் உவந்திங்கென் உளங்கலந்து,
வேத முதலானவனே வேலவனே அடி பணிந்தேன்!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

1

மலர்களெல்லாம் ஒன்றாகி, மன்மதனைப் போலிங்கு,
உலவுவது என் மனதில் உருவாக்கும் பல பாடல்!
நிலவன்ன உன் முகமும் (என்) நெஞ்சமதில் நிலைத்திருக்க,
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

2

அழகு திருவதனமதில் அருளொளி விளங்கிடவும்,
அகன்ற நன்நெற்றிதனில் அணி செய்யும் திருநீறும்,
இலங்கு சந்தனத் திலகம் இட்ட பொட்டழகும் சொல,
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

3

மதியுந்தன் முகமாக மலருமிரு விழியதுவும்,
அதிலிரண்டு சூரியராய் அட என்ன விந்தையிது!
பதும மலர் அழகன் உனைப் பைந்தமிழில் பாட வந்தேன்!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

4

முத்தன்ன பல்வரிசை முறுவலித்தால் முல்லையென,
வித்தகன் இவனென்ற விளக்கமதும் நாசிதரும்!
கொத்தலர் கொன்றை மலர் குடுமிதனில் சூடி வரும்,
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

5

அலைபாயும் கருமுடியும் அழகு திண் தோள் தவழ,
அணிந்த பொற்கிரீடமதால், அமரருலகொளி பெறவும்,
கலையாத கல்வி தரும் கந்தனவன் நாமம் சொல!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

6

அருளொளி தவழுமெங்கள் அறுமுகன் உன் திரு வதனம்,
அகத்தினில் இருத்திடவே, ஆஹா ஈதென்ன சுகம்!
ஒரு திருப் புகழேனும் உளமுவந்து தினம் பாட;
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

7

பன்னிரு கரத்தழகும், பரந்த திண் தோளழகும்;
முன்னின்று எனை நடத்தும் முருகன் உன் வடிவழகும்,
என்னன்பின் இளையன் புகழ் இசைந்தெந்த நாளும் சொல!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

8

விரல்களும் செங்காந்தாள்; வேலவனே உந்தனிரு,
கரங்களும் தாமரைதான்; கனிவுடன் நான் வேண்டும்,
வரங்களும் தருமன்பின் வடிவழகைப் பாட வந்தேன்!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

9

அம்புறாத் தூணியன்ன அழகு முழந்தாளழகும்,
இன்புறவே உலகாளும் இளையனின் தொடையழகும்,
ஆலிலை போல் வயிறும், அகன்ற நன்மார்பும் கண்டேன்!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

10

நன்னீரால் நீராட்டி, நறுமணப் புகையூட்டி,
பொன்மாலைதனைப் பூட்டி, போற்றுமுந்தன் திருவடியை,
சென்னி மேற் சுமந்து நித்தம் சிறப்பதனைப் பாட வந்தேன்!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

11

அறுமுகமோ தாமரை! அழகுவிழி தாமரை!
இலங்கு செந்தேன் துளிர்க்கும் இதழ்களும் செந்தாமரை!!
தாமரை மலரொத்த தலைவன் உந்தன் பாதம் கண்டேன்!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

12

தாமரை மலரன்ன (அவன்) தாள் பணிந்தெழும் அடியார்,
தலைவிதி மாற்றுமொரு தகைமையால் நாளுமிங்கு,
கோல மயிலேறி வரும் குமரா என்றுனைப் பாட
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

13

வெண்பட்டு இடையுடுத்தி, விரிமார்பில் பதக்கமுமாய்,
கண்பெற்ற பேறு நான் கண்டதொரு பேரழகை,
உண்ணிறுத்தி அனுபவித்து, உரைத்திடும் நல் வாய்ப்பளித்தான்
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

14

ஒளிரும் செந்ஞாயிறென உலகுய்ய வழிகாட்டும்,
மிளிரும் நல்லழகுடையான்; மேனியது தழுவி நிற்கும்
நளின (வெண்) பட்டாடையொடு நன்மணி மாலையுமாய்
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

15

கூன் குருடு முடமென்று குறையிலா வாழ்வதனைக்
குமரா நீ அருளிடவே; (எம்) குலம் காக்கும் உன் புகழை,
தேனன்ன தமிழில் இங்கு தினந்தோறும் பாட வந்தேன்!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

16

பிறப்பொடு, இறப்புமிலா பேரின்ப வாழ்வருளும்,
சிறப்பருளும் உன் நாமம் செப்புவதும் பேறாக;
மறப்பதும் எளிதாமோ, மண்ணிலிங்கு உள நாளும்!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

17

இல்லமதும் சிறந்திடவும், இனியதீதென்றுரைக்க,
வல்லவனே முருகனே, வடிவேலா என நாளும்,
சொல்லுமொரு வரமருள்வாய்; சுகம் தரவே எனையாளும்,
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

18

நல்ல தமிழ் நானறியேன்; நாயகன் உன் புகழ் பாட,
வல்லவனோ அறியேனே (பிறர்) வணங்கும் நன்னிலையளித்தாய்!
சொல்லுவதும் உன் நாமம்; சுகமென்றும் எமக்கருள,
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

19

எள்ளளவும் ஐயமில்லை; இறைவா நின் நாமந்தன்னை,
உள்ளமதில் இருத்தி எந்தன் உணர்வோடு கலந்து இங்கு,
கள்ளமில்லா மனத்தினராய்க் கந்தா என்றுனை அழைக்க,
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

20

தமிழ்க் கடவுள் இவனென்று தரணியெலாம் புகழ்ந்தேத்தும்!
இமைப் பொழுதும் மறவாது இறைவனையே பாடிவரும்
அமிழ்தமதுன் நாமமெனும் அடியார்தம் குறை தீர்க்கும்!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

21

எத்தனை பெரியோர்கள் இறைவனுனைப் பாடினரோ!
அத்தனை பேர்களுக்கும் அடி பணிந்து வணங்கியிங்கு,
இத்தரையினோர் அறிய, இளையனுனைப் பாடி வைத்தேன்!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

22

இது முதல் முயற்சியென்பேன்; இளையனின் புகழ் பாட,
என் அறிவு அறிந்தவரை, இசைத்தமிழில், பாட வந்தேன்!
புதுகருத்து இனியும் வரும் (உன்) பொலிவினைப் பாடுதற்கு,
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

23

வண்ண மயிலேறி வரும் வடிவழகன் நாமம் சொல,
எண்ணமெலாம் இனித்திடவே இனியதொரு நினைப்பதனில்,
விண்ணகத்து வாழ்வதுவும், வேண்டேனே; வேண்டி நின்றேன்!
பண்ணதனில் இளையன் புகழ் பரவி நிதம் பாடிடவும்!!
எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே!
எனைக் காக்க இசைந்தருளவே!!

24

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button