தாயென்று கும்பிடடி பாப்பா
- கனவில் வந்தவன்
செபரா
கந்தனா? கண்ணனா?
இசை நிகழ்ச்சியில் குழந்தைகள் பாடவும் உடன் ஆடவும் விழைந்தால், இதனைப் பாடலாம், ஆடலாம். நல்ல பாடலாசிரியர் இதற்குத் தக்க ராகம் அமைக்கலாம். அனுபல்லவியினை இரு முறை பாடலாம். கமகங்கள்/நிரவல்கள், அவரவர் கற்பனா சக்தியினைப் பொறுத்தது.கனவில் வந்தவன், கந்தனா? கண்ணனா?
கனவில் வந்த குழந்தை, கந்தனா அல்லது கண்ணனா எனத் தெளியாத ஒரு தாயின் மனம், தன் கனவில் கண்ட குழந்தையின் குணாதிசியங்களைக் கருத்தில் கொண்டு, இது கந்தனென்றும், கண்ணனென்றும் மாற்றி மாற்றிப் பாடலாகப் பாடுகிறது. முடிவில் கந்தனாயிருந்தால் என்ன, கண்ணனாயிருந்தால் என்ன, அது இறைவடிவம்; தனது கனவில் வந்த புண்ணியத்தைப் பாடிப் பாடி மகிழ்கிறது. நனவில் என்று அந்தப் புண்ணியம் வாய்க்கும்? என்ற கேள்வியுடன் முடிகிறது. இதன் அடிப்படையில் இத்தொகுப்பு அமைகிறது.
இப்பாடல் நாட்டிய வடிவாக மாற்ற ஏற்றபடி அமைக்கப்பட்டிருக்கிறது.
கண்ணனாக ஒரு குழந்தையும், கந்தனாக ஒரு குழந்தையும் வேடமிட, கனவு காணும் தாயாக (ஒருவரோ அல்லது இருவரோ) நாட்டியமாக நல்ல பாவங்கள் காட்டி ஆடுவதாக, என்னால் மனக்கண்ணில் காண முடிகிறது.
1. கனவில் வந்தவன் கந்தனா? கண்ணனா?
இனிதாய் என் கனவதனில், இறைவன் வந்தான்! மனம்இசைந்தது இதுவென்றேன்; இனிதென வரம் தந்தான்! இங்கு
இனிதாய் என் கனவதனில், இறைவன் வந்தான்!
கனி வேண்டித் தவமிருந்த, கந்தனைப் போலிருந்தான்!
கனி வேண்டித் தவமிருந்த, கந்தனைப் போலிருந்தான்!
கார்மேக வண்ணன் எங்கள், கண்ணனையும் போலிருந்தான்!
கனி வேண்டித் தவமிருந்த, கந்தனைப் போலிருந்தான்!
கார்மேக வண்ணன் எங்கள், கண்ணனையும் போலிருந்தான்! இங்கு
இனிதாய் என் கனவதனில், இறைவன் வந்தான்!
கண்ணனோ கனி வேண்டும் கந்தனோ யானறியேன்!
எண்ணமெல்லாம் நிறைந்தான்! எழிலார்ந்த உருவம் கொண்டான்!
கண்ணனோ கனி வேண்டும் கந்தனோ யானறியேன்!
எண்ணமெல்லாம் நிறைந்தான்! எழிலார்ந்த உருவம் கொண்டான்!
உண்ணுவதும் அவன் நாமம்! உவகைக்கோர் எல்லையில்லை!
உண்ணுவதும் அவன் நாமம்! உவகைக்கோர் எல்லையில்லை!
பண்ணதனில் பாடும் எனைப் பாராதிருப்பானோ!
உண்ணுவதும் அவன் நாமம்! உவகைக்கோர் எல்லையில்லை!
பண்ணதனில் பாடும் எனைப் பாராதிருப்பானோ! இங்கு
இனிதாய் என் கனவதனில், இறைவன் வந்தான்! ஆஆஆஆ
2. வந்தவன் கந்தனே!
குழந்தையாய் வரும் இறைவன், குமரன் என்பேன்! மனக்குறையினைத் தீர்த்து வைக்கும், குன்றுதோறாடும் செல்வக்
குழந்தையாய் வரும் இறைவன் குமரன் என்பேன்!
சிறப்பின் மனம் விழைந்த, செல்வமதும் அளித்தவனை,
சிறப்பின் மனம் விழைந்த, செல்வமதும் அளித்தவனை,
பிறப்பெடுத்த புண்ணியம், பேசிடும் பேறு பெற்றேன்!
குழந்தையாய் வரும் இறைவன், குமரன் என்பேன்! மனக்
குறையினைத் தீர்த்து வைக்கும், குன்றுதோறாடும் செல்வக்
குழந்தையாய் வரும் இறைவன் குமரன் என்பேன்!
செல்வக்குமரன் நாமம், செப்பிடுவதும் பேறே! எங்கள்
இல்லம் சிறக்க வந்தான்: எந்தன் இதயம் விழைந்தவாறே!
செல்வக்குமரன் நாமம், செப்பிடுவதும் பேறே! எங்கள்
இல்லம் சிறக்க வந்தான்: எந்தன் இதயம் விழைந்தவாறே!
நல்லதும், வல்லதும் நான் விரும்பும் வாழ்வதும்,
நல்லதும், வல்லதும் நான் விரும்பும் வாழ்வதும்,
நாளும் எமக்களிக்கும் நாதன் அவன் என்பதனால்!
நல்லதும், வல்லதும் நான் விரும்பும் வாழ்வதும்,
குழந்தையாய் வரும் இறைவன், குமரன் என்பேன்! மனக்
குறையினைத் தீர்த்து வைக்கும், குன்றுதோறாடும் செல்வக்
குழந்தையாய் வரும் இறைவன் குமரன் என்பேன்!
3. வந்தவன் கோவிந்தனே!
கோவிந்தா என்றேன் நல்ல கொஞ்சு தமிழ்ப் பாடல்தன்னில்,சேயெந்தன் அருகில் வந்தான்! சிந்தை மயங்க நானும்
கோவிந்தா என்றேன் நல்ல கொஞ்சு தமிழ்ப் பாடல்தன்னில்,
சேயெந்தன் அருகில் வந்தான்! சிந்தை மயங்க
கண்ணனிவன் தெய்வமென்பார்! இரு கரங்கூப்பிக் கை தொழுவார்
கண்ணனிவன் தெய்வமென்பார்! இரு கரங்கூப்பிக் கை தொழுவார்
எண்ணுபவர் உள்ளம் போல, இனிய பல உருவங்கொள்ளும்
கோவிந்தா என்றேன் நல்ல கொஞ்சு தமிழ்ப் பாடல்தன்னில்,
சேயெந்தன் அருகில் வந்தான்! சிந்தை மயங்க நானும்
கோவிந்தா என்றேன் நல்ல கொஞ்சு தமிழ்ப் பாடல்தன்னில்,
சேயெந்தன் அருகில் வந்தான்! சிந்தை மயங்க
மதலையாய் வந்தானெங்கள் மனங்கவர் கள்வனவன்
இதழோடு இதழ் பதித்தான்! இனியதோர் அனுபவமே!
மதலையாய் வந்தானெங்கள் மனங்கவர் கள்வனவன்
இதழோடு இதழ் பதித்தான்! இனியதோர் அனுபவமே!
குழந்தையாய் அன்று அந்த கோகுலந்தன்னில் செய்த
குழந்தையாய் அன்று அந்த கோகுலந்தன்னில் செய்த
குறும்பினை எண்ணுகையில் கோபியராய் எனை நினைத்தே!
கோவிந்தா என்றேன் நல்ல கொஞ்சு தமிழ்ப் பாடல்தன்னில்,
சேயெந்தன் அருகில் வந்தான்! சிந்தை மயங்க நானும்
கோவிந்தா என்றேன் நல்ல கொஞ்சு தமிழ்ப் பாடல்தன்னில்
4. இல்லையில்லை வந்தவன் வடிவேலனே!
வந்தான் இறைவனெங்கள் வடிவேலனே!வந்தான் இறைவனெங்கள் வடிவேலனே! அருள்
தந்தான் எனைக் காக்க, தயவுடன் மனம் விழைந்தே!
வந்தான் இறைவனெங்கள் வடிவேலனே!
கந்தா என்றேன் என்னைக், கருணையுடன் பார்த்தான்!
கந்தா என்றேன் என்னைக், கருணையுடன் பார்த்தான்!
செந்தாமரை விழியால் சிரித்துக் கொண்டே பேச
வந்தான் இறைவனெங்கள் வடிவேலனே! அருள்
தந்தான் எனைக் காக்க, தயவுடன் மனம் விழைந்தே!
வந்தான் இறைவனெங்கள் வடிவேலனே!
எந்தாயும் எனையாளும் இறைவனும் அவனாக
எந்தாயும் எனையாளும் இறைவனும் அவனாக,
என் மடி மீது வளர் இனியதோர் குழந்தையுமாய்,
எந்தாயும் எனையாளும் இறைவனும் அவனாக,
என் மடி மீது வளர் இனியதோர் குழந்தையுமாய்,
செந்தேன் இதழ் குவித்து சிரித்தான்; முத்தம் தந்தான்!
செந்தேன் இதழ் குவித்து சிரித்தான்; முத்தம் தந்தான்!
சொந்தம் இது எனக்கு, சுகம் தரும் அனுபவமே!
வந்தான் இறைவனெங்கள் வடிவேலனே! அருள்
தந்தான் எனைக் காக்க, தயவுடன் மனம் விழைந்தே!
வந்தான் இறைவனெங்கள் வடிவேலனே!
வந்தான் இறைவனெங்கள் வடிவேலனே!
மாயம் செய்கிறான்! இவன் கண்ணனே!
5. மண்ணை உண்கின்றான்! மாயம் செய்கிறான்! இவன் கண்ணனே!
வெண்ணையும் கேட்பானோ, வேலவனே! கேட்டதனால்,கண்ணனே இவனென்பேன்; கண்டு கொண்டேன் நானே!
வெண்ணையும் கேட்பானோ, வேலவனே!
மண்ணையும் உண்ணும் வாயான், மனமது அறிந்தவரை
மண்ணையும் உண்ணும் வாயான், மனமது அறிந்தவரை
திண்ணமாய் இவன் கண்ணன்; தெரிந்து கொண்டேன் நானே!
வெண்ணையும் கேட்பானோ, வேலவனே! கேட்டதனால்,
கண்ணனே இவனென்பேன்; கண்டு கொண்டேன் நானே!
வெண்ணையும் கேட்பானோ, வேலவனே!
மாயமெல்லாம் செய்கிறான்! மறைந்து விளையாடுகிறான்!
சேயிவன் கண்ணனேதான் செப்பிடுவேன் உறுதி!
மாயமெல்லாம் செய்கிறான்! மறைந்து விளையாடுகிறான்!
சேயிவன் கண்ணனேதான் செப்பிடுவேன் உறுதி!
ஆயன் கோபாலன் என்பேன்; அழகில் கரு நிறத்தானவனாய்
ஆயன் கோபாலன் என்பேன்; அழகில் கரு நிறத்தானவனாய்
ஆனதனால் இவனும் எங்கள் அறுமுகன் இல்லையென்பேன்!
ஆயன் கோபாலன் என்பேன்; அழகில் கரு நிறத்தானவனாய்
ஆனதனால் இவனும் எங்கள் அறுமுகன் இல்லையென்பேன்!
வெண்ணையும் கேட்பானோ, வேலவனே! கேட்டதனால்,
கண்ணனே இவனென்பேன்; கண்டு கொண்டேன் நானே!
வெண்ணையும் கேட்பானோ, வேலவனே!
6. இவன் நீல மயில் வாகனனே!
குறுநகைதனைக் காட்டிக் கொஞ்சி விளையாடி வரான்!அறுவரின் மடி தவழ்ந்த அழகனிவன் என்பேன்!
குறுநகைதனைக் காட்டிக் கொஞ்சி விளையாடி வரான்!
அறுவரின் மடி தவழ்ந்த அழகனிவன் என்பேன்!
செந்தாமரை போலும் சிவந்த நிறத்தழகன்!
செந்தாமரை போலும் சிவந்த நிறத்தழகன்!
எந்தாய் எனக்குரைத்த இனிய தமிழ் பேசுகிறான்!
செந்தாமரை போலும் சிவந்த நிறத்தழகன்!
எந்தாய் எனக்குரைத்த இனிய தமிழ் பேசுகிறான்!
குறுநகைதனைக் காட்டிக் கொஞ்சி விளையாடி வரான்!
அறுவரின் மடி தவழ்ந்த அழகனிவன் என்பேன்!
வேழமொடு சிங்கமும், வெம்புலி, கரடியுமாய்,
தோழமையுடன் பழகும், தோற்றத்தில் வேடனைப் போல்,
வேழமொடு சிங்கமும், வெம்புலி, கரடியுமாய்,
தோழமையுடன் பழகும், தோற்றத்தில் வேடனைப் போல்,
வஞ்சிக் குறமாதர் கொஞ்சும் வடிவேலனிவன்;
வஞ்சிக் குறமாதர் கொஞ்சும் வடிவேலனிவன்; என்
நெஞ்சம் அறிந்தவரை நீல மயில் வாகனனே!
நெஞ்சம் அறிந்தவரை நீல மயில் வாகனனே!
குறுநகைதனைக் காட்டிக் கொஞ்சி விளையாடி வரான்!
அறுவரின் மடி தவழ்ந்த அழகனிவன் என்பேன்!
மயிற்பீலியசைய நடந்து வரும் கண்ணனே!
7. மயிற்பீலியசைய நடந்து வரும் இவன், கண்ணனே!
வண்ண மயிற்பீலியதும் வளர் தென்றலில் ஆடிவர,கண்ணனவன் நடந்து வரக் கண்டதுவும் தவப்பயனே!
எண்ணமிட்டேன் யசோதை அன்று என்னனதவம் செய்தனளோ!
எண்ணமிட்டேன் யசோதை அன்று என்னனதவம் செய்தனளோ!
பண்ணதனில் மோகனமாய்ப் பாடிவரும் இவனைப் பெற
வண்ண மயிற்பீலியதும் வளர் தென்றலில் ஆடிவர,
கண்ணனவன் நடந்து வரக் கண்டதுவும் தவப்பயனே!
செங்கமலக் கால் பதித்துச் செல்வனவன் நடந்து வரான்!
செங்கமலக் கால் பதித்துச் செல்வனவன் நடந்து வரான்!
எங்கள் இல்லம் கோகுலாமாய், இசைந்திங்கு மகிழ்ந்திருக்கும்!
கார்வண்ணன் என்பதனால், கண்ணனிவன் என்று சொன்னேன்!
கார்வண்ணன் என்பதனால், கண்ணனிவன் என்று சொன்னேன்!
பேர் சொல்லிப் பாடுவதும் பேரின்பம் என்றாள் பாவை!
பேர் சொல்லிப் பாடுவதும் பேரின்பம் என்றாள் பாவை!
வண்ண மயிற்பீலியதும் வளர் தென்றலில் ஆடிவர,
கண்ணனவன் நடந்து வரக் கண்டதுவும் தவப்பயனே!
(1 – தேவகி பெற்றவளாயினும், யசோதையே பேறு பெற்றவள்)
என்னமாய்ச் சிரிக்கின்றான்! எழில் முருகன்
8. என்னமாய்ச் சிரிக்கின்றான்! எழில் முருகன்
என்னமாய்ச் சிரிக்கின்றான்! எழில் முருகன்! அழகைச்சொன்னவர்கள் யாருமுண்டோ சுந்தரத் தமிழினிலே!
என்னமாய்ச் சிரிக்கின்றான்! எழில் முருகன்!
முன்னரே அறிந்தவன் போல் முறுவலித்தான்!
முன்னரே அறிந்தவன் போல் முறுவலித்தான்! இதழில்
முத்தமிட்டேன்! சுகத்தை முன்னெப்போதும் கண்டதில்லை!
முன்னரே அறிந்தவன் போல் முறுவலித்தான்! இதழில்
முத்தமிட்டேன்! சுகத்தை முன்னெப்போதும் கண்டதில்லை!
என்னமாய்ச் சிரிக்கின்றான்! எழில் முருகன்! அழகைச்
சொன்னவர்கள் யாருமுண்டோ சுந்தரத் தமிழினிலே!
என்னமாய்ச் சிரிக்கின்றான்
பொன் போலும் ஒளிர் மேனி; கமலப் பூப்போல் மலர்ந்த முகம்;
பொன் போலும் ஒளிர் மேனி; கமலப பூப்போல் மலர்ந்த முகம்;
மின்னும் இரு கண்கள்; மேவும் நற்பல்வரிசை;
அகன்ற திண்தோள் தவழும் அலையெனக் கருங்கூந்தல்;
அகன்ற திண்தோள் தவழும் அலையெனக் கருங்கூந்தல்;
அறுமுகனின் திருவுருவம் அகலாதென் நெஞ்சை விட்டு!
என்னமாய்ச் சிரிக்கின்றான்! எழில் முருகன்! அழகைச்
சொன்னவர்கள் யாருமுண்டோ சுந்தரத் தமிழினிலே!
என்னமாய்ச் சிரிக்கின்றான்! எழில் முருகன்!
கொஞ்சும் சலங்கை குழலூதும் கண்ணனா?
9. கொஞ்சும் சலங்கை பாட, வருபவன் குமரனா? குழலூதும் கண்ணனா?
கொஞ்சும் சலங்கை இசை பாடக் குமரனவன் ஆடிவரான்!நெஞ்சமதும் அவனழகில், நித்தமும் இங்கு மயங்குதடி!
கொஞ்சும் சலங்கை இசை பாடக் குமரனவன் ஆடிவரான்!
நெஞ்சமதும் அவனழகில், நித்தம் இங்கு மயங்குதடி!
அஞ்சுகம் போல் பேசுகிறான்! அழகு மயிலேறி வரான்!
அஞ்சுகம் போல் பேசுகிறான்! அழகு மயிலேறி வரான்!
தஞ்சம் என்று எந்தன் மடி, தானாகத் தேடி வந்தான்!
தஞ்சம் என்று எந்தன் மடி, தானாகத் தேடி வந்தான்!
கொஞ்சும் சலங்கை இசை பாடக் குமரனவன் ஆடிவரான்!
நெஞ்சமதும் அவனழகில், நித்தமும் இங்கு மயங்குதடி!
தாயென எனை வரித்தான்; தாளாத ஆசையினால்,
தாயென எனை வரித்தான்; தாளாத ஆசையினால்,
சேயிவனைத் தாலாட்டும், திருவருளும் கிட்டியதே!
மாயங்கள் செய்கின்றான் மறைந்து விளையாடுகின்றான்!
மாயங்கள் செய்கின்றான் மறைந்து விளையாடுகின்றான்!
ஆயன்குடிப் பிறந்த அழகனும் இவனாமோ!
கொஞ்சும் சலங்கை இசை பாடக் குமரனவன் ஆடிவரான்!
10. மகர குண்டலமாட நடந்து வரும் இவன் கண்னனா? கந்தனா?
மகர குண்டலமாட இளமாறனைப் போல் நடந்து வரான்!சுகமான அனுபவமே! நாமம் சொல்லச் சொல்ல அது தருமே!
மகர குண்டலமாட இளமாறனைப் போல் நடந்து வரான்!
நீலவண்னப் பட்டுடுத்தி, மிக நேர்த்தியாய் நடந்து வரான்!
நீலவண்னப் பட்டுடுத்தி, மிக நேர்த்தியாய் நடந்து வரான்!
கோல மயிலேறி வரும் அழகுக் குமரனையும் போல வரான்!
நீலவண்னப் பட்டுடுத்தி, மிக நேர்த்தியாய் நடந்து வரான்!
மகர குண்டலமாட இளமாறனைப் போல் நடந்து வரான்!
சுகமான அனுபவமே! நாமம் சொல்லச் சொல்ல அது தருமே!
மகர குண்டலமாட இளமாறனைப் போல் நடந்து வரான்!
என்ன இந்தக் குழப்பமிது! குழந்தை யாரானால் என்ன இங்கு!
என்ன இந்தக் குழப்பமிது! குழந்தை யாரானால் என்ன இங்கு!
மன்னவனைப் போலிங்கென் மனதினில் இடம் பிடித்தான்!
கண்ணனோ கந்தனோ எந்தன் கனவினில் வந்தவனும்
கண்ணனோ கந்தனோ எந்தன் கனவினில் வந்தவனும்
எண்ணத்திலே நிறைந்த பின்பு யாரானால் என்ன இங்கு!
எண்ணத்திலே நிறைந்த பின்பு யாரானால் என்ன இங்கு!
மகர குண்டலமாட இளமாறனைப் போல் நடந்து வரான்!
சுகமான அனுபவமே! நாமம் சொல்லச் சொல்ல அது தருமே!
மகர குண்டலமாட இளமாறனைப் போல் நடந்து வரான்!
கனவினில் வந்தவன் கண்ணனா – கந்தனா என்ற சர்ச்சை முற்றும்!
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||