பாப்பா பாப்பா கதை கேளு
காந்தித் தாத்தா கதை கேளு
போர்பந்தரிலே பிறந்தவராம்
போரை அறவே வெறுத்தவராம்!
ராமன் கதையைக் கேட்டவராம்
தாமும் மனதினில் ஏற்றவராம்
வள்ளுவன் குறளைப் படித்தவராம்
குறளின் வழியில் நின்றவராம்!
பாப்பா பாப்பா கதை கேளு
காந்தித் தாத்தா கதை கேளு!
ஒரு நாள் குழந்தைப் பருவத்திலே
அரி சந்திரன் கதையைப் பார்த்தாராம்
மறு நாள் சத்தியம் செய்தாராம்
பொய் சொல்வதையே விட்டாராம்!
ஒரு நாள் பள்ளிக்குச் சென்றாராம்
குருவும் 'காப்பி' அடிக்கச் சொன்னாராம்
மறுத்துத் தண்டனை பெற்றாராம்
வருந்தாது வகுப்பில் இருந்தாராம்!
லண்டன் சென்று படித்திடவே
அன்னை சம்மதம் கேட்டாராம்
நித்தமும் ஒழுங்காய் நடந்திடவே
சத்தியம் செய்தே கொடுத்தாராம்!
சட்டம் நன்றாய் படித்தாராம்
பட்டம் சிறப்பாய் பெற்றாராம்
நாட்டைப் பற்றி நினைத்தாராம்
வாட்டம் பெற்றே நின்றாராம்!
பாப்பா பாப்பா கதை கேளு
காந்தித் தாத்தா கதை கேளு!
தென்னாப்பிரிக்கா சென்றாராம்
ஒன்றாம் வகுப்பில் இருந்தவரை
கருப்பர் என்ற காரணத்தால்
காலால் உதைத்துத் தள்ளினராம்!
வெள்ளையர் கொடுமையை எதிர்த்தாராம்
நல்லவர் மதிப்பைப் பெற்றாராம்
தீயவர் வெறுப்பைக் கண்டாராம்
ஆளுமைத் திறனால் வென்றாராம்!
தாய்நாட் டிற்கு வந்ததுமே
சோதனை கண்டு நொந்தாராம்
வெள்ளையர் ஆட்சி கண்டதுமே
வேதனை அடைந்து வெந்தாராம்!
பாப்பா பாப்பா கதை கேளு
காந்தித் தாத்தா கதை கேளு!
சிகப்பு நிறத்தில் பூனைக் குட்டி
கருப்பு நிறத்தில் பூனைக் குட்டி
இரண்டும் சண்டை போட்டதையே
மருண்ட பார்வையில் பார்த்தாரே
மிகுந்த வேதனை அடைந்தாரே
தகுந்த வழியைத் தேடுதற்கே
கலந்து பலரும் பேசினரே!
வெள்ளைத்துரையை விரட்டிடவே
வேண்டிய திட்டம் வகுத்தனரே
அகிம்சை வழியில் செல்வதற்கே
அனைவரின் உறவை நாடினரே!
அன்பு அகிம்சைப் பாதையிலே
மக்களை அழைத்துச் சென்றிடவே
சத்திய சோதனை செய்தாரே
வெற்றியைக் காணத் துடித்தாரே!
உலகம் செல்லாப் பாதையிலே
பலரும் பார்க்கா வழிதனிலே
விடுதலைப் பெற்றுத் தந்தாரே
பிரிவினைக் கண்டு நொந்தாரே!
பாப்பா பாப்பா கதை கேளு
காந்தித் தாத்தா கதை கேளு!
வெள்ளையர் செய்த கொடுமைகளை
எள்ளத்தனையும் வெறுப்பின்றி
வெள்ளமாகக் கருணைதனை
அள்ளித்தந்தவர் அண்ணலவர்
வையந்தனிலே வாழ்ந்திவரே
"மகாத்மா" என்ற பெயர் பெற்றார்!
அய்யோ பாவம்! அண்ணல் காந்தி
அரக்கன் கையால் சுடப்பட்டார்
"அய்யோ அம்மா" என்றலராது
"ராம் ராம்" என்றே உயிர் விட்டார்!
அண்ணல் காந்தி நம் தந்தை
அன்புப் பாதை அவர் பாதை
அகிம்சை வழியே அவர் வழியாம்
அதனை ஏற்றே வாழ்ந்திடுவோம்!
பாப்பா பாப்பா கதை கேளு
காந்தித் தாத்தா கதை கேளு!
-- என்.வி. சுப்பராமன், சென்னை.