மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE

Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

அண்ணாமலையான்

செபரா

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
A website full of English poems
 

Thiruvannamalai - image courtesy: indiantemples.com

இனி ஊர், மலை, மக்கள், கோவில் போன்ற பிற சிறப்பு குறித்த பாடல்கள்:

1. ஊரின் பெயரே இறைவனின் பெயராக அமைந்தது ஒரு சிறப்பு

ஊரின் பெயரதுவும், உற்றதொரு பெயராக, இறைவன்
உவந்திட்ட காரணத்தால், பிறர் உரைக்குமோர் பெயருமாகி,
வார்குழல் நங்கை நாடும் ஈசன் வளரும் நல்லிடமேயிந்த
சீர்மிகு ஊராம் நற்சிறப்பின் திருவண்ணாமலையே!!

நாச்சியார் கோயில் கொண்ட ஊர், நாச்சியார் கோயில்; சூரியன் கோயில் கொண்ட ஊர், சூரியனார் கோயில்; சங்கரன் கோயில், பழம் நீ என்று பலபடியாக, அங்கு உறையும் இறைவனின் பெயர் கொண்டே, அந்தந்த ஊரின் பெயர் அமைவதே இயற்கையாக, ஊரின் பெயர் கொண்டு அதனுள் உறையும் இறைவன் பெயர் அமைவது திருவண்ணாமலையே! அண்ணாமலை என அழைக்கப்படும் மலை இருக்கும் ஊர் திருவண்ணாமலை. அதனில் கோயில் கொண்ட இறைவன் அண்ணாமலையான் எனப்படுவார். இது ஒரு சிறப்பு.

2. திருவண்ணாமலை ஊர்/மக்கள் சிறப்பு

நட்ட கல்லும் சிவமாகும்; நாதனவன் திருவருளால் விண்ணை
முட்ட நிற்கும் மரங்களும் விண்ணுலகம் ஈதென உரைக்க;
கொட்டும் அருவி கங்கையெனக் கோதில்லாதார் நம்மிலையில்
இட்ட உணவும் அமுதமென ஏற்பதுவே இவ்வூர்ச் சிறப்பு!!

திருவண்ணாமலையே சிவலிங்க உருவாக இருக்கையில், இங்கு 1000க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் புதைந்து கிடக்கின்றன. ஊரில் கல்லை நட்டால் அது சிவலிங்கம் என வணங்கும் மனமுடையவராக மக்கள் இருக்கிறார்கள். வானுயர உயர்ந்து நிற்கும் மரங்கள், இது தேவலோகம் என உரைப்பது போலத் தோன்றுகிறது (மரங்கள் அடர்ந்து உயர்ந்து வளர்ந்தால் அங்கு மழை உண்டாகும்; ஊர் நலம் பெறும் என்ற கருத்து “இவ்வூர் தேவலோகம் போல இருக்கிறது” என்று கூறுவதன் மூலம், வலியுறுத்தப்படுகிறது). இங்கு கொட்டுகின்ற அருவிகள் கங்கை போலப் புனிதமானவை; குற்றமற்ற இவ்வூர் மக்கள், மனமுவந்து அளிக்கும் இறைப் பிரசாதம் (வெகு காலத்திற்குப் பின், தற்பொழுது ஆலயங்களில், அரசு ஆணைக்கேற்ப, மதிய உணவும் வழங்கப்படுகிறது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரல்லவா), உயிர் காக்கும் அமுதம் போல நல்வாழ்வினை அளிக்க வல்லது. இதுவே இந்த ஊரின் (திருவண்ணாமலையின்) சிறப்பாகும்.

3. மற்றெல்லாத் தலமும் இறைவனின் இருப்பிடமானதால் சிறப்பு; ஆனால் இருப்பிடமே இறைவன் என்ற பெருமையுடையது இத்தலம் மட்டுமே

இறையருள் வேண்டுவார் இசைந்து செல் பல தலமனைத்தும்
மறையோர் வாக்கின் வழி மாதேவன் உறைவிடமே! இங்கு
இறையே தலமாக இசைந்திங்கு பெருமலையாய் விழைந்து
உறைகுமோர் காரணத்தால் உயர்ந்தது இத்தலமே!!

திருவாரூரில் பிறந்தால் சிறப்பு; காசியில் இறந்தால் முக்தி; சிதம்பரத்தைக் கண்டால் முக்தி என்று இது போலப் பெருமையாகப் பேசப்படும் எல்லாத் தலங்களுமே, இறைவன் தனது இருப்பிடமாகக் கொண்டதால் பெருமை பெறுகின்றன. ஆனால், இங்கு திருவண்ணாமலை எனும் இவ்விடமே (இம்மலையே) திரு அண்ணாமலை எனும் இறைவனாக இருப்பதால், இவ்வூர் அவற்றையெல்லாம் விடப் பெரிதும் சிறப்பு உடைத்தாகிறது.

4. பஞ்சபூதங்களையும் உருவாக்கிய இறைவி இறைவனுடன் ஒன்றிய இடமான அண்ணாமலையே சிறப்புடையது

வளந்தரும் ஐந்தில் நான்கும் வான்வெளி அதனில் ஒன்றிட,
உளங்கொண்ட ஈசனாடும் உயர்வின் சிற்சபையே ஆயினும்,
அளவிலாச் சிறப்பின் இந்த ஐந்தினை ஆளும் அன்னை
இளநங்கை இடமே ஏற்ற இறைவனுறை அண்ணாமலையே!!

பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு மற்றும் காற்று இவையெல்லாம் ஒடுங்குவது வான்வெளி (SPACE) எனப்படும் பிரபஞ்சத்தில். அதனாலேயே வான்வெளியினையே கடவுளாக வழிபடும் சிதம்பரம் சிறப்பான தலமென்று கூறுவார்க்கு, அந்தப் பஞ்ச பூதங்களையும் உருவாக்கும், கட்டுப்படுத்தும் இறைவியினைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்ட (அழல் உருவான இறைவனுறையும்) இந்தத் திருவண்ணாமலையே மிகச் சிறப்பான தலமாகும் என்று பதில் அளித்தல்.

5. மெய்யறிவு (ஞானம்) பெற வேண்டுவாருக்குத் திருவண்ணாமலையே ஞானபூமி

மெய்யறிவுதனை வேண்டித் தம் மேனிதனைத் துறந்தவருக்கு
உய்ய வழி உரைத்த உருவே அண்ணாமலையே! உலகாளும்
அய்ய நின் பாதமலர் அடைந்தவர்க்குக் குறையேது! அகங்கலந்து
வையத்துள் சிறப்பு உனை வாழ்த்தியே பாடிடவே!

ஞானம் அல்லது மெய்யறிவு வேண்டுமெனில், இந்த உடல் குறித்த வாழ்வினை விட்டுவிட வேண்டும். சித்தர்கள் ஞானியர்கள் அனைவரும் இதில் வெற்றி பெற்றவர்கள்; வீடு பேறு (முக்தி) பெற்றனர். இந்த ஞானபூமியில், வந்து சேர்ந்தபின், திரு அண்ணாமலையே நமக்கு வழி காட்டுவான். இந்த உலகம் அனைத்தும் ஆட்சி செய்கின்ற, அவன் பாதமலரைப் பற்றியவர்களுக்கு, எந்தக் குறையும் இருக்காது. உள்ளம் கலந்து, அவனது நாமத்தை “அருணாசலா”, “அண்ணாமலையானுக்கு அரோஹரா” என்று வாழ்த்திப் பாட, இந்த உலகத்தில் உள நாளும், அதுவே மகிழ்ச்சி தரும் அனுபவம்.

6. தொண்மையான மலை அண்ணாமலை என உரைப்பதுமோர் சிறப்பு

காலத்தால் முந்தியது; ஞானியர் கருத்தொன்றிப் பாடியது; கொண்ட
கோலத்தின் அழலாகிக் குளிர்ந்த பெரும் குன்றெனவே வளர்
ஞாலத்தின் இயல்பேயான நடுங்குமொரு நிலையும் இன்றி
சீலத்தின் வழி வழி வந்த சிறப்பு மிகு அண்ணாமலையே!!

இந்த அண்ணாமலை தோன்றிப் பலப்பல யுகங்கள் ஆகிவிட்டன. அழலாகி நின்ற இறையுரு, அடியார் வேண்டுதலால், குளிர்ந்து, மாணிக்க மலையாகி, பொன் மலையாகி இன்று பெரும் கற்பாறையுமாகி நிற்பதனை மெய்யறிவு பெற்றோர் பலப்பல பாடல்களால் பாடிப் பரவி மகிழ்ந்திருக்கிறார்கள். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த பூமியானது இயல்பாகவே வேதியியல், பூகோள மாற்றங்களால் தனது உள் கட்டமைப்பை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் வகையிலானது என்றாலும், தக்காணப் பீடபூமியாகிய இந்தத் திருவண்ணாமலைப் பகுதி, பொதுவாக அத்தகு மாற்றங்கள் குறைந்து, நிலைப்பட்டுவிட்டது என்பதனால், நில நடுக்கம் அதிகம் இல்லாத பகுதியாக, இந்த ஒழுக்கம் மாறாது இன்றளவும் இருந்து வருகிறது. (Ref. report by Dr. B.SHANEY, in the Indian Scientist Academy, in 1949) (அறவழி நின்றார் அதிகமாக இருக்கும் சிறப்பு உடையது என்பதனால், நில நடுக்கம் போன்ற இயற்கை உற்பாதங்கள் குறைவாக இருக்கும் பகுதி அண்ணாமலை என்றும் கொள்ளலாம். நல்லோர் இருக்குமிடத்தில், இயற்கை கட்டுக்கடங்கி நிற்கும் என்பதும் நாம் அறிந்த செய்தியல்லவா). மஹாபாரத காலத்திலேயே திருவண்ணாமலை அறியப்பட்டிருந்தது என்பது வில்லிப்புத்தூரார் எழுதிய பாரதத்தில் குறிப்பிடப்படுகிறது. இது இம்மலையின் தொன்மைக்குச் சான்று.

7. நெருப்பாகி, மாணிக்கமாகிப் பின் பொன்னுமாகி இன்று கற்பாறையான அண்ணாமலை

நெருப்பென நின்ற உருவே, நீள் நெடுங்காலம் செல்ல
விருப்பத்தின் மாணிக்கமாகி விளைந்த நற் பொன்னுமாகி
பருப்பதம் இதுவென்றாகி பரமனின் அருளைத் தாங்கி
இருப்பதும் உண்மையாமே என் இதயம் விழை அண்ணாமலையே!!

இறைவன் கிருத யுகத்தில், அடி முடி காணா அழல் வடிவாகி நின்ற கோலம் அடியார் வேண்டுதலின்படி, குளிர்ந்து, வெப்பம் தணிந்து, திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகி, துவாபர யுகத்தில் பொன்னால் ஆன மலையாகவும் கலியுகத்தில் கற்பாறையாகவும் மாறியது என்கிறது புராணம். கற்பாறையானாலும், ஆண்டவன் அருளைத் தாங்கி நிற்பதால், இதுவே சிவம் “அண்ணாமலை” என்பதாலேயே எனது மனதுக்குகந்தது. இது சத்திய வாக்கு.

8. மலைவலம் செய்து எட்டுத் திசைகளிலும் அமைந்த சிவலிங்கங்களைப் பணிவது சிறப்பு

அட்டதிக்கு மூலைதனிலும் அமைந்த சிவன் தாள் பணிந்தார்!
இட்டம் போல் வாழ்வும் அமையும்; இனியது எந்நாளும் பெறுவார்!
தொட்டதுவும் பொன்னென்றாகும்; தோல்வியவர் வாழ்வில் இல்லை;
சிட்டனின் அருளும் உண்டாம் சிறப்பெல்லாம் அண்ணாமலையே!!

மலைவலம் வருகையில், மலையின் எட்டுத் திக்குகளிலும், சிவலிங்கங்களை அமைத்திருக்கிறார்கள். அவையாவன: கிழக்கில் இந்திர லிங்கம்; தென் கிழக்கில் அக்னி லிங்கம் தெற்கில் எம லிங்கம்; தென் மேற்கில் நிருதி லிங்கம்; மேற்கில் வருண லிங்கம்; வட மேற்கில் வாயு லிங்கம்; வடக்கில் குபேர லிங்கம்; வட கிழக்கில் ஈசான்ய லிங்கம் என்பனவாம். இவை யாவும் அந்தந்த தேவதைகளினால் நிறுவப்பட்டு, அவற்றினோடு தொடர்புடைய நவ கோள்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களையும் தருகிறது. அவரவர் மனம் போல வாழ்வும், (பொதுவாக மனிதர்கள் என்பார் நல்ல மனமுடையார் என்பதனால், அவர்கள் மனம் நாடுவதும் எல்லோருக்கும் நலம் பயப்பதாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.) நல்லதே நினைக்க அவர் வாழ்வில், எப்பொழுதும் நல்லதே நடக்கும். அவர்கள் தொட்டதெல்லாம் சிறப்புறும்; தோல்வி என்பது அவர்களுக்குக் கிடையாது. உயர்ந்தவனான (சிரேஷ்டனான) இறைவனின் அருள் என்றும் உண்டு. இந்த சிறப்புக்கெல்லாம் காரணம் அண்ணாமலையினை வலம் வருவதாகும்.

9. சம்பந்த ஆண்டான் வம்பிழுக்க, அருணகிரி வேண்ட, கம்பத்தில் கந்தன் காட்சியளித்தது

வம்பிழுத்தான் சம்பந்த ஆண்டான்; வருவானோ கந்தனென்றான்
அம்பலத்தில் பிரபுட தேவராயன் அறியவே நேரிலென்றான்;
நம்புவார் மகிழ நாதனவன் மனமிரங்கி, வடவருணைக் கோபுரக்
கம்பத்தில் காட்சி தந்தான் கருணைக்கடல் கந்தனவன்!!

காளியின் பக்தன் சம்பந்த ஆண்டான் அருணகிரி நாதரின் புகழைக் கண்டு பொறாமை கொண்டு, பிரபுட தேவராயன் முன்னிலையில், தன்னால் காளியினை நேரில் வரவழைக்க முடியுமென்றும் அதே போல அருணகிரி நாதனாரால் முருகனை வரவழைக்க முடியுமா என்று சவால் விட்டான். அருணகிரி நாதர் முருகனை வேண்டிப்பாட, பக்தர் குறை தீர்க்க இறைவன் பறந்தோடி வந்து திருவண்ணாமலைக் கோவிலின் வடக்கு கோபுரத்தில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில், ஒரு கம்பத்தில் “கம்பத்திளையனாராகத்” தோன்றிக் காட்சியளித்தான் (சம்பந்த ஆண்டான் காளியினை வரவழைக்க முயற்சித்த பொழுது, அருணகிரியின் வேண்டுதலால், முருகன் தனது அன்பினால் தாயினைக் (காளியும் சக்தியின் வடிவே) கட்டிப் போட்டு, நேரில் வரவிடாமல் தடுத்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு).

10. திருவண்ணாமலை இறை மூர்த்தம் சொக்கத் தங்கத்தால் பந்தனம் செய்யப்பட்டது.

ஆதியில் இறையவர் மூர்த்தம் அழகு நற்சிலையாய் நிறுத்த
வேதியல் பொருள்பல கலந்து, விளங்கிடக் கட்டும் கட்டுவர்!
சோதியாய் நின்ற ஈசன் சொல்லுமோர் சிறப்பின் இங்கு
கோதிலாத் தங்கக் கலவை கொண்டங்கே கட்டிய கட்டே!!

தெய்வச் சிலைகளை நிரந்தரமாகப் பீடத்தில் இருக்கச் செய்யும் சடங்கை எண்பொருள் கலவை சாத்துதல் அல்லது அஷ்டபந்தனம் செய்தல் என்பார்கள். அதாவது கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன் மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டுப் பொருட்களை இடித்தோ, காய்ச்சியோ அக்கலவை உருவாக்கப்படுகிறது. சிலை 12 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஆடாமலும் அசையாமலும் இருக்க இக்கலவை உதவுகிறது. பொதுவாக எல்லாக் கோவில்களிலும் இந்த முறையே நடைமுறையிலிருக்க, திருவண்ணாமலை இறைவன் மட்டும் சொக்கத் தங்கத்தை உருக்கிக் கட்டப்பட்டது (பந்தனம் செய்யப்பட்டது) என்பர் (இச்செய்தி திருவண்ணாமலை ஆலைய விவரக் குறிப்பில் மட்டுமே காணப்படுகிறது).

11. மகப்பேறு வேண்டி, கரும்பு ஏணை எடுப்பதாகப் பிராத்தனை செய்வதும் ஓர் சிறப்பு

மகவெனக்கு அருளிடுவான் மாதேவன் அண்ணாமலையென
அகமேற்று வேண்டி நிற்பார் அவர் விருப்பம் நிறைவேறும்!
உகந்தங்கே கரும்பு ஏணை ஏந்தி ஊர் சுற்றி வருவார் தமக்கு
இகமீது உவந்த தெய்வம் எங்கள் இறையே அண்ணாமலையே!!

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், அண்ணாமலையாரிடம், ஆராதனை செய்து, தங்களுக்குக் குழந்தை பிறந்ததும், கரும்பு ஏணையில் சுமந்து, ஊர்வலம் வருவதாக நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்ள, அவ்வாறே அவர்கள் மனம் மகிழ, மகவு உண்டாவதும், கரும்புக் கட்டுகளில் புதிய புடவையில் தொட்டில் கட்டித் தொங்கவிட்டு, மாடவீதிகளில் வலம் வந்து பிரார்த்தனை செலுத்துவதும் இக்கோவிலில் மட்டுமே உள்ள சிறப்பு.

12. நமது முன்னோர்கள் நற்கதியடைய, “மோட்ச தீபம்” ஏற்றுதல்

என்னாளும் காத்தருளும் ஈசன் மனமிரங்கி நம்மனோர்,
முன்னோர் நற்கதியடைய, முக்திக்கு அருள் செயவே!!
அன்னார் திதியன்று, இலுப்பை அகல் விளக்கேற்றிடவும்,
இன்னமும் நடப்பதுவும் இனிதிந்தக் கோவிலிலே!!

நம்மை எந்த நாளும் காப்பாற்றும் அண்ணாமலையான், நமக்காக, மனமிரங்கி, நம்முடைய மூதாதையர்கள், இறந்த பின் அவர்கள் “மோட்சம்” அடைய அருள் புரிவான். அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்து, இத்திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் உச்சியில், அதற்காகத் தனிப்பட்டு அமைக்கப்பட்ட அகல் விளக்கில், அன்னாரின் திதியன்று, நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை விட்டு, விளக்கேற்றினால், அவர்களுக்கு நற்கதி (மோட்சம்) அருளுவான் என்று நம்பப்படுகிறது. இந்த வகைப் பிரார்த்தனை, இத்திருக்கோயிலில் மட்டுமே நிறைவேற்றப்படுகிறது என்பதுவும் ஓர் சிறப்பு.

13. ஈசனோடு, முருகனுக்கும் உவந்தது இந்த அண்ணாமலை என்னும் திருத்தலம்.

இப்பிறவி செய்த பயன் இறைவனவன் நாமம் சொல்ல,
எப்பிறவி எடுத்த போதும், இறைவனவன் உடனிருப்பான்!!
ஒப்பில்லான் புகழுரைப்பார் உறைகின்ற காரணத்தால்
அப்பனொடு சுப்பனுக்கும் அகம் விழைந்தது அண்ணாமலையே!!

இந்த மானுடப் பிறவியிலேதான் இறைவனை மனதார நினைக்கவும், இனிய பாடல்களை எழுதிப் பாடவும், அவன் புகழ் பேசவும் முடியும் என்கிற காரணத்தால், அதனை முழு மனதுடன் செய்ய, (முற்பிறப்பின் கர்ம வினைப் பயனால்) வேறெந்தப் பிறவி எடுக்க நேரிட்டாலும், நம்மை அந்த இறைவன் காத்தருள்வான் (ஒரு வேளை அந்தப் பிறவிக்கு, இறையருளைப் பற்றி நினைக்கப், பாடப், பேச வாய்ப்பில்லாது போகலாம். எனவே இப்பொழுதே அந்த நல்ல செயல்களைச் செய்வது நலம் தரும்). இறைவனை ஆராதிக்கும் அத்தகு பெரியோர்கள், ஞானியர்கள், சிவயோக சித்தர்கள் நிறைந்திருக்கின்ற காரணத்தாலேயே, இந்தத் திருவண்ணாமலை, எனது அப்பனாகிய சிவ பெருமானுக்கும், அவனது மகனான சுப்பிரமணியனுக்கும் பிடித்த இடம் என்பதாம்.

கருத்தாக்கம்: செபரா

இத்தலத்தோடு தொடர்புடைய ஞானியர், சித்தர் மற்றும் முனிவர்கள் பற்றிய குறிப்புகள் இன்னும் என்னால் முழுமையாக அறியப்படாததால், அவர்களைப் பற்றிய பாடல்கள் பிறகு சேர்க்கப்படும்.

அன்புடன்
செபரா

பாகம் 2

GIVE YOUR FEEDBACK FOR THIS LITERARY WORK IN THE FORM BELOW
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Your Feedback for this poem
editor@mazhalaigal.com