மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
| சிந்துக்குத் தந்தை கைலாசபதி |
|
இணையப் பாட்டி
ஆன்மீகம் தெய்வீகம் லௌகீகம் கலைகள் கல்வி பொது அறிவு நிர்வாகம் Net Granny Philosophy Religion Entertainment Arts Education Knowledge Management வெளியேதமிழிலக்கியம்தமிழிதழ்கள் தமிழ்மணம் நிலாச்சாரல் சுரதா.காம் தேன்கூடு தினமலர் தினகரன் Answers The Hindu Dictionary Geography Downloads Knowledge Special Links Encyclopedia Mazalais Blog E-mail Services |
சிந்துக்குத் தந்தைசுந்தரம்பிள்ளை, மறைமலையடிகள், பரிதிமாற் கலைஞர் முதலியோர் நூல்களைப் படிக்கும்போது அவர்கள் பேராசிரியரது மேற்கோளைக் கற்றும் அதன் வழி நில்லாமை புலப்படும். பாரதி தொல்காப்பியம் படித்தானோ தெரியாது. ஆனால் புனர்ஜென்மம் என்ற கட்டுரையிலே பின்வருமாறு எழுதினான்: "நெடுங் காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட நூல்கள் அக்காலத்துப் பாஷையைத் தழுவினவை. காலம் மாறமாற பாஷை மாறிக்கொண்டு போகிறது. பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தௌிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்கவேண்டும். அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை... நமது கவிதையிலே ஆனந்தம் குறையத் தொடங்கிற்று; ருசி குறைந்தது; கரடுமுரடான கல்லும் கள்ளி முள்ளும் போன்ற பாதை நமது கவிகளுக்கு நல்ல பாதையாகத் தோன்றலாயிற்று. கவிராயர் 'கண்' என்பதை 'சக்கு' என்று சொல்லத் தொடங்கினார். ரஸம் குறைந்தது; சக்கை அதிகப்பட்டது. உண்மை குறைந்தது! பின்னல் திறமைகள் அதிகப்பட்டன. இந்தப் போக்கை முறியடித்து வெற்றி காண்பது இலகுவான காரியமன்று. அதனைச் செய்து முடிப்பது தனி மனிதன் ஒருவனால் ஆகுவதுமன்று. பாரதியார் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தார்; சமணம் முதலாய பரசமயக் கோட்பாடுகளையும் அவற்றிற்கு ஆதாரமாயிருந்த மக்கள் பிரிவையும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்து பாட்டுத் திறத்தாலே சமுதாயத்தைப் பாலித்த சைவ நாயன்மார், வைணவ ஆழ்வார்கள், போலிச் சடங்குகளையும் வரட்டு வேதாந்தத்தையும் கிண்டல் செய்து சம்பிரதாயத்துக்கு எதிராகக் குரல் எழுப்பிய சித்தர்கள், அரவைகளையும் ஆதீனங்களையும் அணுகாது பொது மக்களை நம்பி அவர்கள் விரும்பும் மெட்டில் பாடிய சமூக சீர்திருத்த உணர்வு பெற்றிருந்த கோபாலகிருஷ்ண பாரதியார், இராமலிங்க சுவாமிகள் முதலியோரைப் பக்கபலமாகக் கொண்டார். அதே சமயத்தில் அவர்களுக்கு அப்பாலும் போனார். இதனைத் தெளிந்து கொள்வதற்குப் பாரதியின் முன்னோடிகள் சிலரை அறிதல் வேண்டும். கம்பன் முதல் இராமலிங்கர் வரை பாரதி பாராட்டிய பண்புகள் "ஒளி, தௌிவு, குளிர்ந்த நடை" ஆகிய மூன்றுமாம். இளங்கோ, வள்ளுவர், கம்பர் முதலிய கவிஞரைப் பாரதி பாராட்டியுள்ளார்; ஆழ்வாராதியோர் பாடல்களிலே அவர் ஊறித் திளைத்திருந்தார் என்பதை அகச்சான்றுகளால் அறிகின்றோம்; சித்தர் வாக்குகளினாலும் அவர் கவரப்பட்டிருந்தார். இவை இடைக்காலம் வரை வளர்ந்து வந்த கவிமரபிலிருந்து பாரதி பெற்றவை. ஆயினும் பாரதியின் கவிதையைப் பல வழிகளில் ஆழமாகப் பாதித்த கவிஞர்கள் அவனுக்கு முன் ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் பிறந்தவர்கள். பொதுவாகப் "பெருங் கவிஞர்" எனப் போற்றப்படுவர் அல்லர். ஆயினும் இவரே பாரதியை வழி நடத்திச் சென்றுள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து தமிழிலக்கியத்திலே பொதுமக்கள் சார்ந்த இலக்கிய வடிவங்கள் சில தோன்றலாயின. நாடகப் பண்பும் இசைப் பாங்கும் கொண்ட இவ்விலக்கியங்கள், வித்துவக் காய்ச்சலும் வீண் அலங்காரமும், பகட்டும், படாடோபமும் மலிந்த இலக்கிய நெறிக்கு எதிர் விளைவாகத் தோன்றின. இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்திற்கு முன்னறிவிப்புக் கொடுத்து நின்றன. ஆதினங்களும் மடங்களும் ஆதரித்த மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்ற மகாவித்துவான்கள் கல்வியுலகில் கம்பீர நடைபோட்டுத் திரிந்த சூழ்நிலையிலே, 'தெருப்பாடக'ராகப் புற எல்லையில் நின்றவர்களே இப்புதிய இலக்கிய வடிவங்களைப் படைத்தளித்தனர். நந்தன் சரித்திரக் கீர்த்தனை என்னும் நூலுக்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் முன்னுரை ஒன்று வாங்குவதற்காகக் கோபாலகிருஷ்ண பாரதியார் பலகாலந் 'தவங்கிடந்தமை' பற்றிச் சாமிநாதையர் அவர் சரித்திரத்திற் குறிப்பிட்டுள்ளார். காலவெள்ளத்தில் முனைவர் அடிபட்டுப் போகப் பின்னவர் நிலைத்திருப்பது விசித்திரமான செய்திதான். கோபாலகிருஷ்ண பாரதியார் போன்ற பொதுமக்கள் சார்ந்த கர்த்தாக்களையே சுப்பிரமணிய பாரதியார் தமது உண்மையான வழிகாட்டிகளாகக் கொண்டார். இதில் வியப்பெதுவுமில்லை. இனம் இனத்தை நாடும். அறிவு பூர்வமாக மேற்கூறிய கவிவாணரைப் பின்பற்று முன்பதாகவே இசைத்தமிழ் சார்ந்த இலக்கியங்களிலே பாரதிக்கு உணர்ச்சி பூர்வமான பிடிப்பு இருந்தது என்பது நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டிய செய்தியாகும். தேசபக்தி என்னும் பேரலை வீசத் தொடங்கியபோது, அதனுள் மூழ்கி நீராடப் பாரதி ஏலவே தயாராகியிருந்ததைப் போல, இதிலும் அவனது இளமைக்கால வாழ்க்கை பிற்கால மலர்ச்சிக்கு மிகப் பொருத்தமான எருக்களமாக அமைந்தது. பாரதியின் இளமைக்கால வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ள யாவரும், அவனிடத்து ஆழப் பதிந்திருந்த இசை ஞானத்தையும், சமய இலக்கிய ஈடுபாட்டினையும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர். பாரதி காலத்தில் வாழ்ந்த கல்வி சிரேஷ்டர்கள் பலருக்கு இத்தகைய வாய்ப்பு இருந்தது. ஆனால் நாம் மேலே காட்டியது போல இலக்கியத்தில் ஏற்பட்டிருந்த தரப்பிரிபு காரணமாக 'பழகுதமிழில்' பாமரரும் பிடித்தின்புற்று இசைத் தமிழை அவர்கள் புறநிலையில் வைத்து ஆய்ந்திருப்பினும், "செந்நெறி" இலக்கிய ஆக்கத்திற்குப் பயன்படுத்த ஒப்பவில்லை. 'சேரி மொழியை'ச் செந்தமிழோடு கலக்க விரும்பவில்லை. இது விஷயத்தில் பாரதி கம்பனைத் தனக்கு இலட்சிய புருஷனாகக் கொண்டான். புனர்ஜென்மம் என்ற கட்டுரையில் கம்பன் மதமே தனக்குச் சம்மதம் என்கிறான இவ்விடத்தில் கம்பர் வரலாற்றிற் காணப்படும் கதையொன்று பொருத்தமாகத் தோன்றுகிறது. கம்பர் ஒரு சமயம் 'துமி' என்ற சொல்லைப் பாடலில் அமைத்துப் பாடியபோது, கவிராஜரும் சோழனது பேரவைப் புலவருமான ஒட்டக்கூத்தர் "துமி" என்ற வார்த்தை தமிழ் நூல்களிற் காணப்படாதது என்று ஆட்சேபித்தாராம். கம்பரோ அது உலக வழக்கில் உண்டென வாதிட்டாராம். வாக்குவாதம் மூண்டு சோழனும் சம்பந்தப்பட்டுக் கம்பரைத் தனது கூற்றை நிரூபிக்குமாறு கேட்கவும் மூவரும் தெருவழியே போயினர். சிறிது நேரத்துக்குப்பின் ஆயர் சேரியில் தயிர் கடையும் பெண்ணொருத்தி பக்கத்தில் நெருங்கி நின்று விளையாடிய குழந்தைகளைப் பார்த்து "பிள்ளைகளே, தூரப் போய்விடுங்கள். உங்கள் மீது துமி தெறிக்கும்" என்றாள். இந்நிகழ்ச்சி கம்பர் பற்றிய கட்டுக்கதைகளில் ஒன்றாகவும் இருத்தல் கூடும். ஆனால் கம்பனது மக்கட் சார்பை ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகிறது. கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்தமையைச் சிறப்பித்துப் பாடும் பாரதி கம்பனைப் போல நாடோடிப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என்பனவற்றில் நெஞ்சைப் பறிகொடுத்தவனே.
|
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |