மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
| சிந்துக்குத் தந்தை கைலாசபதி |
|
உள்ளே
இணையப் பாட்டி ஆன்மீகம் தெய்வீகம் லௌகீகம் கலைகள் கல்வி பொது அறிவு நிர்வாகம் Net Granny Philosophy Religion Entertainment Arts Education Knowledge Management வெளியேதமிழிலக்கியம்தமிழிதழ்கள் தமிழ்மணம் நிலாச்சாரல் சுரதா.காம் தேன்கூடு தினமலர் தினகரன் Answers The Hindu Dictionary Geography Downloads Knowledge Special Links Encyclopedia Mazalais Blog E-mail Services |
சிந்துக்குத் தந்தை
ஆயினும் இந்தச் சந்தர்ப்பத்தில் சிக்கல் நிறைந்ததாக்கப்பட்டுள்ள அப்பிரச்சினைக்குள் நாம் இறங்க வேண்டியதில்லை. பரிதிமாற் கலைஞர், சோமசுந்தர பாரதியார், சுப்பிரமணிய முதலியார், இராகவையங்கார் முதலியோர் தொல்காப்பியரின் கட்டளையையும் ஷேக்ஸ்பியரின் மேதையையும் எண்ணிப் பெரும்பாடுபட்டு, தமிழகத்து அறிஞரும், வெள்ளைக்காரப் பேராசிரியர்களும் ஒருங்கே பாராட்டக்கூடிய செய்யுட்களை எழுத முயன்று கொண்டிருந்தபோது, கூழுக்குப் பாடிய தமிழ்க் கிழவியைப் போல முன்னின்று கேட்போருக்குப் பாடிப் பரவசமடைந்தான் பாரதி. இதனால் கவிதைக்குரிய புராதனப் பண்பு ஒன்றை மீட்டும் எமக்கு உணர்த்தினான் பாரதி. நான் பிறிதோரிடத்திலே கூறியுள்ளதைப் போல, (நெடும் பகல்; முருகையன் கவிதைகள், 1967) "காகிதத்தில் எழுதியோ, அச்சடித்தோ மனத்திற்குள் ஒருவர் முணுமுணுப்பதல்ல கவிதை. பாடப்பாட வேண்டும்; அதுதான் பாட்டு. பாட்டென்றால் இசை தழுவியுமிருக்கும்; தழுவாமலுமிருக்கலாம். ஆனால் ஓசை நயமிருக்கும். சாதாரண மனிதர், உரைநடையைக் கொண்டு தமது கருத்துக்களையும் உணர்வுகளையும் புலப்படுவது போலக் கவிஞன் செய்யுளைத் துணைக்கொண்டு பிறருடன் உரையாடுகிறான். உயர் கவிகளுக்குரிய ஓர் இலக்கணம் அது. பாரதியார் செய்த அதிமுக்கியமான புதுமைகளிலொன்று கவிதை மூலம் தனது சமூக மக்களுடன் உறவாடியதே". கடந்த பதினைந்து இருபது வருடங்களாக - குறிப்பாக 1947-க்குப் பின்னர் வீர வணக்கம் காரணமாகத் தமிழகத்தில் பாரதி பாடல்கள் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் வெவ்வேறு இசைவடிவங்களைப் பெற்றிருப்பதையும் நான் முன்னர்க் கூறியதையும் ஒன்றாகக் கொள்ள முடியாது. இசைக் கலைஞர்கள் கர்நாடக இராகங்களில் பாரதிப் பாடல்களைப் பாடுவதும் இத்தகையதே. பாரதி முதலிற் கவிஞன்; இரண்டாகவே சாகித்திய கர்த்தா. இரணடின் முறையையும் மாற்றிவிடக் கூடாது. பாரதி தனது பாடல்களை உரத்துப் பாடிச் சொற்கள் ஒவ்வொன்றினதும் உள்ளார்ந்த ஆற்றலை வௌிப்படுத்தியதையே நான் இங்குக் கருதுகிறேன். பாரதியின் சங்கீதத் திறமையை அன்று. பாரதியைக் கண்டு கேட்டவரும், அவர்களைக் கண்டோரும் ஒருமுகமாகக் கூறுவது இதுதான்: மந்திரச் சொல் இன்பம் பொங்கப்பாடுவார் கவிஞர். பாரதி புதுவையில் இருந்த காலத்தில் அவரது அன்புக்குப் பாத்திரமான சிறுமி யதுகிரியிலிருந்து பேராசிரியர் வையாபுரிப் பிள்ளைவரை பலரும் கவிஞரது குரலையும் உணர்ச்சி ததும்பப் பாடும் முறையையும் வருணித்துள்ளனர். இது பாரதியின் பெருமை சம்பந்தமானது மட்டுமன்று. அவரை அவரது சகபாடிகள் பெரும்பாலானோரிலிருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுவதோடு, அவரது கவி ஊற்றுக்களை ஒருவாறு கண்டறியவும் குறி காட்டுவதாயுள்ளது. யதுகிரி அம்மாள் எழுதுகிறார். "மூவரும் பாட்டின் ஒசை வந்த திக்கை நோக்கிச் சென்றோம். அங்கே ஒரு கட்டுமரத்தின் மேல் பாரதியார் அமர்ந்திருந்தார். கறுப்புச் சொக்காய்; கச்சை போட்ட வேஷ்டி; கூப்பிய கரங்கள். கடலில் உதயமாகும் பாலசூரியனை நோக்கியபடி பாடிக்கொண்டிருந்தார் அவர். வௌிச்சம் நன்றாகப் பரவவில்லை; மங்கலாக இருந்தது. கம்பீரமான பாட்டு, உள்ளத்தைக் கவரும் ராகம், பாட்டின் உந்நதமான பொருள் எல்லாம் சேர்ந்து உண்மையில் தெய்வத்தை எதிரில் காண்பதுபோல் மயிர்க்கூச்செறியச் செய்தன. உள்ளம் குளிர்ந்தது. பாரதியைப் பற்றி எழுதிய சில ஆசிரியர்கள் இத்தகைய சம்பவங்களை அவரது விசித்திரமான சுபாவத்துக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவர். கவிஞனை அல்லது கலைஞனை கற்பனாலோகத்திற் சஞ்சரிக்கும் அபூர்வப் பிறவியாகக் கொள்ளும் கனவுலக இலக்கியக் கோட்பாட்டின் விளைவு அது. ஆனால் பாரதியாரைப் பொறுத்தவரையில் கவிதை வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது. கவிதை, நிறைந்த புலமையின் வௌிப்பாடு மட்டுமல்ல, வாழ்க்கைக்கு உணவுமாகும். வேறோர் இடத்திலே யதுகிரி அம்மாள் எழுதுகிறார்: "ஸரீ பாரதியாருக்குச் சங்கீதக் கச்சேரிகளைக் காட்டிலும் பாம்பாட்டி, வண்ணான், நெல்குத்தும் பெண்கள், செம்படவர்கள், உழவர் இவர்களுடைய நாடோடிப் பாட்டுக்கள் என்றால் மிகவும் இஷ்டம்.... ஒரு நாள் மாலை... செம்படவர்கள் மீன்களை நிரப்பிக் கொண்டு, சந்தோஷமாகப் பாடியபடி தோணியைக் கரையேற்றிக் கொண்டிருந்தார்கள். எங்களோடு பேசிக் கொண்டிருந்த பாரதியார் அவர்களுடைய பாட்டுக்கு 'சபாஷ்' சொல்ல ஆரம்பித்தார். நான்,'இது என்ன வேடிக்கை! அவர்கள் அர்த்தம் ராகம் ஒன்றும் இல்லாமல் பாடும் பாட்டை நீர் இவ்வளவு மெச்சுகிறீரே! எங்களுக்கு ஒன்றும் புரிகிறதில்லை' என்கிறேன்." யதுகிரி அம்மாள் சிறுவயது நினைவுகளைச் சொல்கிறார். பாரதியைப் பெரியவராகக் கருதி வாழ்ந்தவர். ஓரளவு முதிர்ச்சி பெற்ற தமிழறிஞர் எஸ்.வையாபுரிப் பிள்ளை கூறுவதைப் பார்ப்போம்: "அவருடைய பாடல்களை அவர் பாடிக் கேட்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு அதிகமாயிருந்தது. அந்த ஆவலை நிறைவேற்றிக் கொள்ள இது தக்க சமயமென்று எண்ணினேன். 'சின்னஞ் சிறுகிளியே' என்று தொடங்கும் பாடல்களைப் பாடும்படி கேட்டுக் கொண்டேன். பாரதியார் கண்கள் ஒரு நிமிஷம் மூடுண்டன. முகத்திலே புதியதொரு பொலிவு. அன்பு ததும்பும் சாரீரத்தில் பாடத் தொடங்கி எங்களைப் பரவசமாக்கினார்." இவ்வாறு வாய்விட்டுப் பாடும் பண்பினைப் பாரதியார் தனது முன்னோடிகள் சிலரிடமிருந்து பெற்றார் என்பதனைச் சிறிது பின்னால் கவனிப்போம். இங்க மனங்கொள்ள வேண்டியது யாதெனில், வாழ்கையையே கவிதைப் பொருளாக்கியமையால் தனது வாழ்க்கையனுபவங்களையும் தன்னைச் சார்ந்தோர் வாழ்க்கை நிகழ்வுகளையும் நாட்டு நடப்புக்களையும் பாட்டாக்கினார். அது பொருள்; வடிவமும் அனுபவத்தாற் பெற்றதுதான். பல்வேறு உழைப்பாளிகளின் நாட்டுப்பாடல்களை மட்டுமன்றிப் பிச்சைக்காரர் பாட்டுக்களையும் தனதாக்கினார். புதுவை அலுத்துப் போய்த் திடீரெனப் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு மாறுவேடத்தில் போன சமயம் (1918) ரெயிலில் பிச்சைக்காரப் பெண்ணொருத்தி பாடிய ஹிந்துஸ்தானிப் பாடலின் மெட்டில் "பாருக்குள்ளே நல்ல நாடு" என்ற கீதத்தைக் கவனஞ் செய்தாராம். இவையெல்லாம் சாதாரண மக்களோடு தொடர்பு கொண்டு சந்தர்ப்பத்துக்கேற்றவாறு நவநவமாகப் பாரதியார் பாடியதைக் காட்டுகின்றன... பாடும் பாடல் "கொச்சக ஒருபோகா அல்லது வண்ண ஒத்தாழிசைக் கலியா அல்லது கழிநெடி லாசிரிய விருத்தமா" என்று அவர் சகபாடிகள் தமது ஒய்வு நேரங்களில் மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்க, பாரதியார் தமது அநுபவத்தையே ஆதாரமாகக் கொண்டு சாதாரணக் கற்களை வைரமணிகள் ஆக்கிக் கொண்டிருந்தார். ஒரு சமயம் பாரதியார் வீட்டில் சக்தி பூஜைக்குப் பிறகு "வந்தே மாதரம்" பாடிவிட்டு, "தாம் செய்த புதிய பாடலாகிய 'பெண்மை வாழ்கென்று' என்பதை இங்கிலீஷ் "நோட்மெட்டில்" பாடினாராம். (பாரதி நினைவுகள். பக். 115) சுருங்கக் கூறுவதாயின் பாரதியின் சமகாலப் படிப்பாளிகள் தாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் கற்றுத்தேர்ந்த உயர்தனிச் செந்நெறி இலக்கியங்களின் வழிநின்று தகை சான்ற - மாண்புள்ள-இலக்கியம் படைக்க விரும்பினர். இடைக்காலத்திலே தமிழ் மரபு சிதைவுற்றிருந்தது உண்மையே. இலக்கியப் படைப்பு ஏறத்தாழ நின்று போயிருந்தது. எனவே பழைய பெருமைக்கு எத்தகைய இழுக்கும் ஏற்படாத விதத்தில் சான்றோர் செந்நெறியைத் தம்மாலியன்றளவு புதுப்பிக்க முனைந்தனர். பரிதிமாற் கலைஞர், சோமசுந்தர பாரதியார் அத்தகையோரே. அவர்கள் அந்த வகையில் நவசெந்நெறியாளர் (Non-Classicists). ஆனால் அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றைத் தவறாக விளங்கிக் கொண்டிருந்தார்கள். செந்நெறி எவ்வளவு தான் பெருமை படைத்தாராயிருப்பினும், அதனை மீட்டும் நிலைநாட்ட முடியாது. தனது பழைய 'தூய்மை'யுடன் இயங்க முடியாமலே அது சென்று தேய்ந்திருந்தது. அதன் பயனாகவே இலக்கியம் பிளவுண்டு இருபாற்பட்டு, பொதுமக்கள் (நாடோடி) இலக்கியம் என்றும், உயர்ந்தோர் இலக்கியம் என்றும் ஒன்றையொன்று விலக்கி நின்றது. இயக்கவியலின்படி இம் முரண்பாட்டை அறுத்தாலன்றிப் பிரச்சினை தீராது. எவ்வளவு வன்மையுடன் (நேர்மையுடனும்) அவர்கள் பழைய செந்நெறியை அழுத்தி வற்புறுத்தினரோ அவ்வளவுக்குக் காலத்திலிருந்தும் வாழ்க்கையினின்றும் விலகியவராயினர். இதனை உதாரணமூலம் விளக்குவோம். இராகவையங்காரின் பாரிகாதை, சோமசுந்தர பாரதியாரின் மாரிவாயில், சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம், முதலியவற்றை எடுத்துக்கொண்டால், அவை முந்தையோர் நூற்கருத்துக்களையும், யாப்பமைதிகளையும், உவமை உருவங்களையும் பொன்னேபோற் பின்பற்றுவதைக் காணலாம். மூலக் கதையொன்றை எடுத்துக் காலத்துக்கேற்ற வகையில் நூதன நடையில் அமைப்பது ஒரு முயற்சி. அவற்றைப் படியெடுப்பது ஒரு முயற்சி. பின்னது படியெடுக்கும் திறமையையன்றி வேறெதையும் உணர்த்த வல்லதன்று. 'சங்க'ச் சான்றோர் பாடிய அகத்திணைச் செய்யுட்களையே மூலாதாரமாகக் கொண்டு இல்லது, இனியது, நல்லது என்பனவற்றைப் புகுத்திப் பிற்காலப் புலவோர்கள் கோவை இலக்கியம் பாடினர். மூலம் மூலம்தான்; படி படிதான். இதுகுறித்து டாக்டர் வ.சுப.மாணிக்கம் கூறுவன சுவை பயப்பன: "சங்க இலக்கியங்கள் நேரடி வாழ்விலிருந்து தோன்றிய மூலப் பிறவிகள், அவை கற்பவர் நெஞ்சட் புகுந்து வாழ்வை நெறிப்படுத்த வல்லவை. சங்கச் சான்றோர் அகப்பொருளைத் தொடர்புடைய துறைகளாக வைத்துப் பாடவில்லை. அகத்திணைக்குத் தொடர்பற்ற கவிப்பாடல்கள் எழுந்த தொல்காப்பிய நெறியே வாழ்வுக்குப் பொருந்தும். அந்நெறிப்பட்ட பாடல்களே உயிருடைய வாழ்வுப் பாடலாகும்... கோவை என்பது சங்க இலக்கியம் என்னும் பெரிய மாளிகையைக் கண்டு படியெடுத்த ஒரு வரைப் படமாகும்; அம்மாளிகைக்குள் செல்லப் பயன்படும் வழிகாட்டியாகும்; இலக்கியம் தோற்றிய இலக்கியமாகும்." (சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள், நான்காவது மாநாடு, தலைமையுரை.) இம்மேற்கோளிற் கோவையாசிரியர் பற்றிக் கூறியது விளக்க உதாரணமேயன்றிப் பாரதியின் சமகாலப் புலவர்க்குப் பொருந்துவதன்று. அவர்கள் செய்தவை வழிநூல்களக்கு வழிநூல்கள். அதாவது நிழலின் நிழல்போல! தொல்காப்பியர் ஆணைக்கு அத்துணை மதிப்புக் கொடுத்த இப்புலவர் பெருமக்களிற் பலர் தொல்காப்பியர் நெகிழ்ந்துகொடுக்கும் திறன் படைத்தவர் என்பதை மறந்தனர். தொல்காப்பியம் செய்யுளியலில்,
"மரபேதானும் என்னுஞ் சூத்திரத்துக்குப் பேராசிரியர் கூறியுள்ள உரைப் பகுதி இன்றும் சிலருக்குப் போதம் அளிக்கவல்லது. "எனவே, சொல்லும் பொருளும் அவ்வக்காலத்தார் வழங்கு மாற்றானே செய்யுள் செய்க என்பதாயிற்று. இதனது பயன் ஒரு காலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து இலவாகலும் பொருள் வேறுபடுதலும் உடைய. அதோளி, இதோளி, உதோளி எனவுங் குயின் எனவும் நின்ற இவை ஒரு காலத்துளவாகி இக்காலத்திலவாயின. இவை முற்காலத்துள வென்பதே கொண்டு வீழ்ந்த காலத்துஞ் செய்யுள் செய்யப்படா. இனிப், பாட்டினுந் தொகையினும் உள்ள சொல்லே மீட்டதொரு காலத்துக்கு உரித்தன்றிப் போயின், முற்காலத்துளவென்பதே கொண்டு பிற்காலத்து நாட்டிச் செய்யுள் செய்யப்பெறா என்பது. இனிப் பொருளும் இவ்வாறே காலத்தானும் வேறுபடுதலுடைய".
|
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |