மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 
அருட்கடலில் விளைந்த ஆன்மீக முத்துக்கள்       நீல பகவன்

 

உள்ளே
 இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management



வெளியே

தமிழிலக்கியம்
தமிழிதழ்கள்
தமிழ்மணம்
நிலாச்சாரல்
சுரதா.காம்
தேன்கூடு
தினமலர்
தினகரன்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services

அறிமுகம்

திரு நீல பகவதீஸ்வரன் அவர்கள் இயற்றிய "அருட்கடலில் விளைந்த ஆன்மீக முத்துக்கள்' என்ற இந்தப் புதிய நூலைப் படிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. நூல் முழுவதும் பக்தி வெள்ளம் அமுத ப்ரவாகமாக அலையடித்து முழ்ங்குவதை உணர முடிந்தது. எல்லாத் தெய்வங்களையும் பாடியிருப்பது பெருமைக்குரியது. ஆதிசங்கரர் நூல்களின் மொழிபெயர்ப்புகள் மிகவும் பொருள் வளங்கொழிப்பதாக உள்ளன. மிக அருமை! இறுதியில் அமைந்துள்ள "அருள் மழையில் நனைந்த அன்பு மலர்கள்" பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தரப் பற்றிப் பாடிய பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. பகவான் ராமகிருஷ்ணரின் அருள் இவ்வாசிரியருக்கு என்றும் நிர்ம்ப உண்டு என்றும், இது போன்ற ஹக்திப் பரவசமான நூல்கள் நிறைய எழுதிப் பெயரும் புகழும் பெற்று வாழ மனப்பூர்வமாக ஆசிகளை வழங்குகிறேன்.

ஸ்வாமி தர்மாத்மானந்தா
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், காரைப் பேட்டை, காஞ்சீபுரம்.

சிறப்புப் பாயிரம்

தேசீயம் தமிழ் என்ற இரண்டு கண்ணால்
திருவருளாம் உயிர்கொண்டு வாழும் என்றும்
மாசடையாக் கவிதை எனும் மாண்புமிக்க
மலர்ச்சோலை குலுங்கச் செய் ஆசான் ஆகும்
தேசுடைய நீலபக வதீஸ்வரன் என்
நிறை தமிழின் ஆசிரியர் இன்றே போல
வாசமிகும் வண்ண இசைப் பாடல்தந்து
வளர்தமிழ்க்கு வளம்சேர்த்து வாழ்க! வாழ்க!!

மரபுவழித் தமிழ்க் கவிதை இவர்தம் சொத்து
மற்றறியாத் தமிழ்ச் சொற்கள் இவரைத் தேடி
வரவுவந்து மற்றதனை வாய்ப்ப வைத்து
வளமான தமிழ்க்கவிதை யாக்கும் செல்வர்
சிரமசைத்துக் கேட்பவர்கள் செவிகள் தேக்க
சிறந்த இசைப் பாடல்களும் இவர்க்கே வாய்க்கும்
தரமுடைய தமிழ்ப் பாடல் வேண்டும் என்றால்
தயங்காமல் இவரிடத்தில் கேட்கலாகும்

ஆதிசங்கரர்தாம் அருளிய பாடல்
அனைத்திலும் தோய்ந்து அவைதம்மை
பேதமோர் சிறிதும் மொழியினில் பாராப்
பிறழ்விலா உயர்வழித் தொண்டர்
யாதும் ஓர் குறையும் இலாவகை தந்தார்
இசைத்தமிழ்க் கவிதைநூல் வாழ்க.

ஆதித்தன் வானம் அறியாதார் கணேசன்
அன்பருக் கருளு கற்பகமாய்
மேதினி புகழும் விநாயகர் லிங்காஷ்
டகம் ஸ்ரீ தேவியின் பூஜை
ஆதரமாக ஆதிசங்கரரே அருள்சுப்ர
மண்யபு ஜங்கம்
ஓது ஷட் பதிதோர் திறத்தோடு கூடும்
உன்னத பஜ கோவிந்தம்

சீர்மிகும் ஐயப் பன்பா மாலை
சிறப்புறு தமிழ்தே சீயம்
ஆரருள் உடைய ஸ்ரீராம கிருஷ்ணர்
அன்னை ஸ்ரீ சாரதா தேவி
பேரறிவான ஆன்மிகச் சுடராய்ப்
பேணுறு விவேக ஆனந்தர்
சீர்தமைப் போற்றிச் சிறந்துறு கவிதைத்
திருவருட் பனுவலைத் தந்தார்

தெய்வ முத்தமிழும் சீர் வடமொழியும்
சிறப்புறக் கற்றறிந்தனை
உய்வகை உலகிற் குதவிடத் தமிழில்
உயர்வுறும் இசைத்தமிழ்க் கவிதை
மெய்பெறத் தந்த பகவதீஸ்வரனாம்
மேன்மையார் மேலுற வளர்ந்து
தெய்வமும் தமிழும் நிலைபெறும் அளவும்
சிறந்துறு புகழுடன் வாழ்க.

மஹாவித்துவான் மயிலம்
வே. சிவசுப்பிரமணியன்

வாழ்த்துரை

கவிஞர் புலவர் நீல பகவதீஸ்வரன் கவிதைகளின் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கும் வாய்ப்பு கிட்டியதால் அவரது கவிதைகளை முற்றிலும் படிக்கும் பேறு பெற்றேன். வாழ் நாள் முழுதினையும் தமிழாசிரியராகப் பணியாற்றிய இந் நூலாசிரியரின் தமிழறிவும், இலக்கணம் பிழைபடாது அதே நேரத்தில் சுவையான கவிதை படைக்கும் ஆற்றலும் இந்நூலில் தெள்ளெனத் தெரிகின்றன.

அவரது தலைமுறைத் தமிழாசிரியர்கள் தமிழார்வ மிக்கவர்களாகவும் ஆழ்ந்த இறையன்பு உடையவர்களும் வாழ்ந்து இறைப் பணியினைத் தமிழ்ப் பணியாகவே செய்து பொலிவு பெற்றனர். கவிஞர் நீல. பகவதீஸ்வரன் கவிதைத் தொகுப்பின் முதல் பகுதி துதிகளாகவும் இறை பக்தி மிளிர்வதாகவும் அமைந்துள்ளது.

நிலத்து வாழ் மாந்தருக்கும் நீலவானிற் கப்பால்
தலத்து வாழ் தேவர்தமக்கும் - புலத்தினிய
புத்தியுடன் சித்தியருள் பூரணனே...

போன்ற வரிகள் சுவைக்கத் தக்கன.

ஆதிசங்கரரின் அருள் மழையில் நனைந்து அவரது படைப்புகள் சிலவற்றை மொழிபெயர்ப்பாக அளித்திருக்கிறார்கள். அவை மொழிபெயர்ப்பாகத் தெரியாமல் மூலக் கவிதைகள் போலவே இருப்பது வியப்பாக உள்ளது.

இறைமையில் தான் இவரது கவிதை நயம் பொலியும் என்று எண்ணியிருந்த போது எந்தத் துறையிலும் கவிதை படைக்கும் தமக்கு உண்டு என்று கூறுவது போல் அமைந்துள்ளவை அவரது தேசபக்திப் பாடல்கள்.

நூலின் கடைசிப் பகுதியில் நாட்டுப்புறப் பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றைப் படிக்கும் போது இவைதான் இந்நூலுக்கு உயிர்நாடி என்று கூறினாலும் அது பொய் ஆகாது. பாரதியையும், பாரதிதாசனையும் கவிதை நடையில் நினைவு கூர்வதாக அமைந்துள்ளன. சில பாடல்களில் நாட்டுப் பற்றும் வாழ்க்கைத் தத்துவமும் ஒளிர பல பாடல்கள் அமைந்துள்ளன.

நமது நாட்டினைப் பற்றிப் பாடும்போது 'வேதாந்த ஞானமதோ விரிவாகும் - உலகு வேறெங்கும் காணாத தெளிவாகும்" என்று பாடுவது இதமளிக்கிறது.

திரு நீல. பகவதீஸ்வரன் கர்நாடக சங்கீதம் அறிந்தவர். அவர் இயற்றிய சில பாடல்கள் "கீர்த்தனங்களாக" அமைந்துள்ள பாங்கு போற்றத்தக்கது. சிலவற்றிற்கு அவர் இசை அமைத்தும் பாடியுள்ளார். சங்கீதம் அறிந்தவர்களைப் பாட வைத்தும் கேட்டுப் பலர் மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஆசிரியர் அவர்கள் இதுவரை பல நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இந்த நூல் அமைந்துள்ளது. இந்த நூலினை தமிழார்வலர்கள் அனைவரும் சுவைத்து மகிழ்வார்கள் என நம்புகிறோம்.

Dr. C.K. ராமன்
தலைவர், பிரம்ம ஞான சங்கம், காஞ்சீபுரம்

அணிந்துரை

கவிதை, எண்ணங்களின் அண்வகுப்பு, சொற்களின் ஊர்வலம், உணர்ச்சிகளின் ஊற்று! இயலிசைத் தமிழ்மணி புலவர் நீல. பகவதீஸ்வரன் அவர்களின் அருட்கடலில் விளைந்த ஆன்மீக முத்துக்கள் கவிதை நூல் இதை மெய்ப்பிக்கின்றது.

சூரியனைத் துதிக்கும் சுடரொளிக் கவிதை
ஆதி நாதா ஆதவனே!
அருளொளி வழங்கும் ஆண்டவனே!
சோதி நாதா தூயவனே!
சுடரும் பகலாய் விரிபவனே

ஆற்றொழுக்கோடு சரளமாக ஓடிவரும் வார்த்தை நதி!

தொழில்நுட்பத்தோடு தச்சன் செய்த தகத்தகாய வானம் காட்டுகிறார் கவிஞர் பாருங்கள்!

முட்டிமோதி முகிலினங்கள்
முன்னும் பின்னும் எதிர்ப்படவே
வெட்டி வெட்டி வீறுகொண்டு
வேண்டு மட்டும் எளிதாக்கி
பட்டுத் துகிலாய் அம்முகிலை
பரந்த வான வெளியிடையே
தட்டுத் தட்டாய்த் தவழ்ந்திடவே
தச்சன் ஒருவன் செய்தானே!

பாடும் கவித்தச்சனின் கைவண்ணத்தைப் பாராட்ட வேண்டும்.

கட்டளைக் கலித்துறை வெண்பா முதலிய யாப்பினங்களில் அந்தாதி போன்ற வகைகளில் கவிதை எழுதும் இக்கவிஞரின் புலமை போற்றத் தக்கது.

மரபுக் கவிதை எழுதும் கவிஞர்கள் அருகி வரும் இந்நாளில் புலவரின் அத்துணைக் கவிதைகளும் மரபாய் விளங்கி மணந்து நிற்பது நம் மனத்தில் நம்பிக்கையை விதைக்கிறது.

ஸ்ரீ ஆதிசங்கரரின் கணேச பஞ்சரத்தினம், ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம், ஷட்பதி தோத்திரம், ஸ்ரீ கனகதாரா தோத்திரம், பஜகோவிந்தம் முதலியவற்றை இனிய தமிழில் ஏற்றமிகு கவிதைகளாக்கி, கம்பனைப் போல மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத வண்னம் எளிய நடையில் செய்திருக்கும் இக்கவிஞரின் கவித்திறம் போற்றற்குரியது. தங்கப்புதையலை எடுத்து தமிழுக்கு அணிகள் செய்திருக்கிறார் கவிஞர்.

நாடும் மொழியும் நமக்குக் கண்கள் என்பான் பாட்டுக்கொரு புலவன் பாரதி. தமிழும் தேசியமும் மணக்கும் இசைப்பாடல்கள் பலவற்றை இவர் இயற்றியிருப்பதோடு, மேடைகளில் இவரே இசைப்புலமையோடு அவற்றை இனிமையாகப் பாடுவது தேனோடு பால் சேர்த்து அமுதமாக்கித் தருவது போல் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

முக்கனிச் சக்கரைச் சாறு - எங்கள்
முத்தமிழ்ப் பக்குவம் பாரு - கோடி
மக்களின் மனதினில் மாட்சி - அது
மன்பதை மகிழுநல் காட்சி

இச்செந்தமிழ் நம்முடைய உள்ளத்திலும் காவடிச் சிந்துவை இசைக்க வைக்கவில்லையா?

இதந்தரும் சுதந்திர வானத்தில் பறக்கும் எழிலார் பறவைகள் நாம்! இந்திய தேசமே இன்னுயிர் என்றிடும் எண்ணத்தில் உயர்ந்தவர் நாம்!

நம் உயர்வுக்குக் காரணம் சொல்லி உயர்த்தி வைக்கும் கவிஞர் தெய்வ பக்தியோடு தேசபக்தியும் மிகுதியாகக் கொண்டவர்!

தைப்பாவைக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடும் பத்துக் கவிதைகளும் இலக்கிய விருந்தளிக்கும் இனிய பலாச் சுளைகள்!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரைத் துதிக்கும் இக்கவிஞரின் அத்துணை அர்ச்சனைப் பாடல்களும், கவிதைகளும் புதிய தேவாரங்கள்! புகழான தமிழ்க் காவியத்தை மரபு தவறாமல், முறையோடு பாடிய இக்கவிஞரின் திறம் சொல்லில் உரைக்க இயலாதது.

பாரத நாட்டின் பண்பாட்டைப்
பாரெல்லாம் அறியப் பறைசாற்றும்
தீரராய்த் தோன்றித் துறை பலவாய்த்
திசையுளோர் எல்லாம் தேடிடவே
நாரத முனிபோல் நல்லிசையால்
நாளும் மகிழும் நாயகனே!
பேரருள் பெற்றாய் பிழையறவே
பிள்ளை ஆடுக செங்கீரை

இக்கவிதை சுவாமியுடன் நம்மையும் செங்கீரை ஆட வைக்கிறது.

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்

என்பான் பாரதி. ஒளிச் சொற்களினாலே ஓடி வரும் தமிழ்த் தென்றலை உள்ளத்திலே பெருகச் செய்திருக்கிறார் புலவர் நீல. பகவதீஸ்வரன்.

கவிஞரின் கவிதைப் பணியும் ஆன்மீகப் பணியும் தொடர குன்றேழில் வாழ்ந்து குறை தீர்க்கும் ஏழுமலையான் இன்னருள் செய்யட்டும்!

பைந்தமிழ்ப் பாமணி புலவர் முத்து. இராமமூர்த்தி

தொடர்க உமது பணி

பொய்மைகள் நிறைந்திருக்கும்
கலியுகத்தில் வாழ்ந்திருக்கும்
நமக்கெல்லாம் நலம் சேர்க்கும்
வழியோன்று உண்டென்றால்
அதுவே ஆன்மீகம்
நாளும் துணையாகும்!

கடலில் மூழ்கிவந்தால்
முத்தொன்று கிடைக்கலாம்
வறுமை வாழ்வுதன்னில்
வளமது சேர்ட்ந்திடலாம்
பொருள்மட்டும் இருந்திட்டால்
புவிவாழ்ந்து பயனில்லை

அருட்கடலில் மூழ்கிவிட்டால்
மறுபிறப்பு உண்டாமோ!
கணேச புஜங்கத்தில்
கற்பகக் களிறோனை
ஏத்தி நின்றாய்
புகழ்பெற வாழுதற்கு

ஆறு முகத்தானின்
அருட்பெருமை அத்தனையும்
ஊறும் தமிழுணர்வால்
உட்கொண்டேன் உவகைகண்டேன்
அன்னை காமாட்சி
தேவிக்கு அர்ப்பணித்த

ஆதிசங்கரரின் அமுதமொழி
அத்தனையும் தேனென்பேன்!
தினம் ஏத்தும் தெய்வங்களின்
களமான கருணையினை
கவிநயப் பாங்கோடு
நூலாக அளித்திட்ட
பெருமைசால் பகவதியே!

உன்தமிழால் தனங்களெலாம்
உயர்கவிதை படிப்பதற்கு
வழிவகுத்த அருட்சுடரே!
வாழ்வாங்கு வாழ்ந்திடுக!
பகவதி ஈஸ்வரனே
தொடர்ந்திடுக உமது பணி!

பொதுநலச் செம்மல்
அருட்கவி மணப்பாக்கம் கே. சுகுமார்

YOUR FEEDBACK FOR THIS ARTICLE

Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com