-
குறள் மலர் 05
- செபரா
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு
இங்கு கவனிக்கப்பட வேண்டிய வரிகள், “இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்” என்பதும் “பொருள் சேர் புகழ்” என்பதுமாகும்
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து. என்பது அவ்வையின் அகவல்.
செய்யப்படும் வினைகளனைத்திற்கும் (அனைத்து செயலுக்கும்) பலன் உண்டு என்பதும் அவை நல்வினையா அல்லது தீவினையா என்பதனைப் பொறுத்துப் புண்ணியம் என்றோ அல்லது பாவம் என்றோ கொள்ளப்படுவது நம்பிக்கை. துன்பத்திற்குக் காரணம் ஆசை என்றார் புத்தர். ஆனால் திருவள்ளுவரோ துன்பத்திற்குக் காரணம் “அஞ்ஞான இருள்” அதாவது அறியாமை என்கிறார். (இதனாலேயே திருக்குறள் பௌத்த மத நூல் இல்லை எனப்படுகிறது) நாம் செய்யும் செயல் நல்வினையா அல்லது தீவினையா என்பது அச்செயலின் விளைவுகள் யார் மீது எத்தகைய தாக்கத்தை அல்லது பாதிப்பை உண்டாக்குகிறது என்பதனைப் பொறுத்து நமக்கு அது பாவமென்றோ புண்ணியமென்றோ எண்ணப்படும். இதனை அறியாத பொழுது பாவம் புண்ணியம் என்ற இருவினையுமே இருள் (அஞ்ஞானம்) சேர்ப்பவையே. பாவத்தின் காரணமாகவே பிறப்பு ஏற்படுகிறது.
பூமியே வினை (கர்மா) செய்ய ஏற்ற இடம். இங்கு பிறப்பெடுத்துச் செய்த புண்ணியத்தால் சுவர்க்கம் எனப்படும் புண்ணிய லோகம் கிடைத்தாலும் அங்கு வினை செய்ய வழியில்லாததல் மேற்கொண்டு புண்ணியமோ பாவமோ உண்டாகாது. அது “போக பூமி” அனுபவிக்க மட்டுமே முடிகிற இடம். சேர்த்த புண்ணியம் தீர்ந்தவுடன், மறுபடி பிறப்பெடுத்தே ஆக வேண்டும். புண்ணியமோ பாவமோ இரண்டின் பலனுமே தனக்கு வேண்டாம் எனச் சொல்கிற ஒருவனுக்கு இறைவனிடம் ஒடுங்குவதை தவிர வேறு வழியே இல்லை. வாலறிவனாகிய இறைவனுக்கு மட்டுமே எந்த வினையும் வினையின் பலனும் அதன் தாக்கமும் இல்லை. அவைகளை கடந்த நிலையே பிறவியை கடக்கும் வழி. இதையேதான் கீதையும் அறிவுறுத்துகிறது.
யோக நிலை சித்தி பெற்ற திடமதி கொண்ட மனிதர் சமநிலை பெற்றவர். மனதிலுள்ள விருப்பங்களையும் வெறுப்புக்களையும் அறவே ஒதுக்கி விடுகிறார். தன் நிலையிலேயே தமக்குள்ளேயே மகிழ்ச்சி அடைகிறார். அவர் “ஸ்திதப்ரக்ஞர்” (நிலையாய சம புத்தி பெற்றவர்) எனப் படுகிறார். ஆசை பாசம், பயம் குரோதம் பகை இவை எல்லாவற்றையும் கடந்தவர். முன்வினைப் பயனாக நல்லது நடந்தாலும், தீயது நடந்தாலும் அதன் விளைவுகளால் அவர் மனம் பாதிப்படைவதில்லை. பரமாத்வோடு இணைவதொன்றையே தனது குறிக்கோளாக கொண்டவர். அத்தகைய மனநிலை கொண்டவரின் எல்லாத் துயர்களும் நசித்து விடுகின்றன என, பகவத் கீதைக்கு உரை எழுதிய சுவாமி ராம் சுகதாஸ் தனது “கீதா மாதுர்யம்” எனும் நூலில் குறிப்பிடுவார்.
இறைவன் காட்டிய அருளில்லையேல் அவனது திருவடியைக் கூடக் காண முடியாது ஆதலால், "தன் கருணைக்கண் காட்ட வந்தெய்தி எண்ணுதற்கெட்டா எழிலார் கழலிறைஞ்சி" என்றார். "காண்பார் யார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே?" என்றார் திருநாவுக்கரசரும்.
பிற எல்லாப் பொருள்களையும் இறைவன் திருவருளாலே அறிந்து வரும் உயிர், இறைவனை அறிவதும் அவனருளாலே என்பது, "அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்பதனால் நன்கு தெளிவாகும்.
"இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு".
இக்கருத்தே, "சிவபுராணந்தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்" என்று குறிப்பிடப்படுவது அறியத்தக்கது.
இறைவனது பொருள் சேர் புகழைப் பாடினால் இருள் சேர் இருவினையும் சேரா என்பது மறைமொழி என உரைக்கப்பட்டது. ஆக திருவள்ளுவம் வேதம் பகவத் கீதை இவற்றின் தத்துவத்தைக் குறள் வடிவாகச் சித்தரிக்கையில், பின் காலத்து வந்த திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள்.
இங்கு “பொருள் சேர் புகழ்” என்பதில் உள்ள “பொருள்” என்பதற்கு வாழ்க்கையின் குறிக்கோள், இறை தத்துவம் எனக் கொள்வது சாலப் பொருத்தம். “புகழ்” என்பதற்கு அதன் பெருமை எனக் கொள்ள, பிறப்பெடுத்ததன் குறிக்கோளை, நோக்கத்தை உணர்த்தும் இறை தத்துவத்தின் பெருமையினைப் பாடுபவருக்கு இரு வினைகளால் உண்டாகும் பாதிப்புக்கள் இருக்காது எனச் சொல்வதாம்.
அடுத்த வாரம் ஐம்புலன் அடக்கம் குறித்த குறள் பேசப்படும்.
செபரா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














