-
குறள் மலர் 04
- செபரா
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொதுவான விளக்கம்
விருப்பு வெறுப்பற்ற கடவுளின் திருவடிகளைத் தியானிப்பவர்களுக்கு எக்காலத்தும் துன்பங்கள் உண்டாகாது என பொருள் கூறுவார் திரு ஐயன் பெருமாள் கோனார்.
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை என்பார் திரு மு.வ.
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை எனப் பகருவார் திரு சாலமன் பாப்பையா.
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை என்பார் திரு. மு. கருணாநிதி
இங்கு கவனிக்கப்பட வேண்டிய சொற்றொடர்கள் “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்பதாகும். எந்த ஓர் பொருளின், மீதும் விருப்பமோ அல்லது அதனைக் குறித்து வெறுப்போ இல்லாத ஒரு நிலை. விருப்பு வெறுப்பு இருப்பவர்கள் தாங்கள் எப்பொருளினை விரும்புகிறார்களோ அல்லது வெறுக்கிறார்களோ அதன் மேல் மற்றவர்களுக்கும் அத்தகு விருப்போ அல்லது வெறுப்போ வருவதற்காக பொய்யும் சொல்லத் துணிவார்கள். இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட விழைவார்கள். பஞ்சமா பாதகங்களிலேயே கொடியது பொய் சொல்வது. ஒரு முறை பொய் சொல்லத் தொடங்கினால் அது மேலும் பல பொய்களைச் சொல்லத் தூண்டும். மேலும் ஒரு பொருளின் மேல் விருப்பம் அல்லது நாட்டம் இருக்குமானாலோ வெறுப்பு அல்லது நாட்டமின்மை இருக்குமானால், அதன் நிறை குறைகள் நம் கண்ணுக்குப் புலப்படாது.
எவனொருவனுக்கு எந்த ஒரு பொருள் அல்லது உயிர்களின் மீது விருப்போ அல்லது வெறுப்போ இல்லையோ அவன் இறைவன். அவன் யாருக்கும் கட்டுப்பட்டவன் இல்லை. அவனுக்கென எந்தவிதமானக் கட்டாயமும் இல்லை. பிறரைத் திருப்திப் படுத்துவதற்காகக் கூட அவன் எப்பொருளையும் விரும்பவோ வெறுக்கவோ தேவையில்லை. எவரொவருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எந்த ஒரு செயலையும் செய்யத் தேவையில்லாதவன். முற்றும் துறந்த ஞானி கூட பிறப்பறுக்க வேண்டும் என்றல்லவோ வேண்டுகிறான். ஆக விருப்பும் வெறுப்பும் இல்லாத ஒருவன் இறைவன் மட்டுமே. அவனது திருவடிகளை சரணம் என்று பணிபவருக்கு எந்தக் காலத்தும் துன்பம் இல்லை என்பதாம்.
இங்கு “யாண்டும்” என்பதற்கு சிறப்பாகப் பொருள் கொள்ள வேண்டும். சில வேளைகளில் நாம் செய்யும் செயல்களின் பலன் அந்தப் பிறவி மட்டுமல்லாது, அடுத்த பிறவி கூடத் தொடரும் என்பர். சில நமது சந்ததியினர் மீதும் ஒரு தாக்கத்தை உண்டாக்கும் என்பர். நம் மீது ஒரு செயல் உண்டாக்கும் தாக்கத்தை விட நமது சந்ததியினர் மீது அச்செயல் ஏற்படுத்தும் தாக்கம் நம்மை அதிகமாகவே துன்புறுத்தும். வேண்டுதல் வேண்டாமை இலாத இறைவனின் பதம் பணிய, எத்தனை பிறவி எடுத்தாலும், நம்மையோ அல்லது நமது சந்ததியினரையோ துன்பம் தொடராது என உரைப்பர்.
இதனையே பகவத் கீதைக்கு விளக்கம் தரும் திரு ஸ்ரீஜயதயால் கோயந்தகா கீழ்க்கண்டபடி விளக்குகிறார்.
1. “எங்கு விருப்பு - வெறுப்பு என்ற க்லேசங்களோ, நல்லது - கெட்டது என்ற கர்மங்களோ, மகிழ்ச்சி - துயரம் என்ற விகாரங்களோ, மற்ற தோஷங்களோ அறவே இல்லையோ,
2. எது இந்தப் பிரக்ருதி – அதன் விளைவுகளுக்கு அப்பாற்பட்டதோ,
3. எது பகவானைத் தவிர வேறில்லாத பரமதாமமோ,
4. எங்கு சென்றவன் திரும்பி வருவதில்லையோ,
அந்தப் பரமதாமத்திற்கு அநாமயம் என்று பெயர். ஆகவே பகவானுடைய பரமபதத்தை அடைவது ஸத் சித் ஆநந்தமயமான குணமற்ற – உருவமற்ற பரப்ரம்மத்துடனோ ஸகல கல்யாண குணங்களும் திவ்யத் திருமேனியும் பெற்ற பரமாத்மாவுடனோ ஐக்கியமாகிவிடுவது, பரமகதியை அடைவது, அம்ருதத்வத்தை அடைவது. இவை எல்லாமே ஒரே நிலையைக் குறிக்கும் சொற்கள். அந்த நிலையினை அடைந்த (இறைவனுடைய பாதங்களில் சரணாகதி அடைந்து விட்ட) ஒருவனுக்கு இன்பமும் இல்லை. துன்பமும் இல்லை. அதாவது இரண்டையும் சரிசமமாகப் பார்க்கும் மனப் பக்குவத்தை அடைந்து விடுகிறான். இதுவே “வேண்டுதல் வேண்டாமை” எனும் இக்குறளின் விளக்கமாகக் கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்ட நற்குணங்களுடைய ஒரு மஹானைக் கண்டுபிடித்துவிட்டால், (கண்டுபிடிக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க) அவரைச் சரணடைந்துவிட, துன்பமில்லாப் பெருவாழ்வை அடைவர் எனவும் கொள்ளலாம். அது இயலாத வகையில், அத்தகு ஞானியினைக் கண்டுபிடிக்கும் வரையாவது, இறைவனே (கற்பனை என்று கொண்டாலும்) அத்தகு நற்குணங்கள் உடையவர் என்றெண்ணி அக்கற்பனையின் பேரில் நம்பிக்கை வைக்க, அவனையே சரணடைய எப்பொழுதும் துன்பமில்லாப் பெருவாழ்வை பெறுவர் எனலாம். ஏனெனில் நம்பிக்கையே வாழ்க்கை. அடுத்த வாரம் இருள்சேர் இருவினையும் குறித்த குறள் பேசப்படும்.
செபரா
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













