Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

  என் படைப்புகள்



குறள் தோட்டம்

குறள் மலர்கள்

0001 அகர முதல
0002 கற்றதனால்
0003 மலர்மிசை
0004 வேண்டுதல்
0005 இருள்சேர்
0006 பொறிவாயில்

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
குறள் மலர் 03
செபரா



கடவுள் வாழ்த்து

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வர்



பொதுவான பொருள்:

மலரின் மேல் நடந்தவனின் மான்பு மிக்க திருவடியினைச் சரணடைந்தவர்க்கு இவ்வுலகிலும் அவ்வுலகிலும் அனைத்துச் சிறப்புக்களும் (அதாவது இவ்வுலகில் அனைத்துச் சுகங்களும் இறப்பிற்குப் பின் வீடு பேறும்) பெற்று நெடுங்காலம் வாழ்வார் என மணக்குடவர் குறிப்பிடுவார்.

மலரின் கண்ணே சென்றவனது சிறப்பான திருவடிகளைப் பற்றியவர் எல்லா உலகிற்கும் மேம்பட்ட வீடு பேற்றினை அடைந்து நித்தியப் பெருவாழ்வினைப் பெறுவர் எனப் பரிமேலழகர் உரை செய்வார். எண்ணியவர்க்கு எண்ணியபடி காட்சியளிப்பான் இறைவன் என்ற வகையில், மலர் மிசை ஏகினான் – மலரின் மீது சென்றவன் என்று குறிப்பிடுவார்.

அன்பர்களின் மனத்தாமரையில் வீற்றிருக்கும் கடவுளின் திருவடிகளை தியானிப்பவர்கள், வீட்டுலகில் நிலைபெற்று வாழ்வர் எனத் திரு ஐயன் பெருமாள் கோனார் குறிப்பிடுவார்.

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் எனக் குறிப்பிடுவார், திரு மு.வ.

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர் என்பார் திரு சாலமன் பாப்பையா.

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும் – எனக் கூறுவர் திரு மு. கருணாநிதி. இவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை எனக் காட்டிக் கொள்வதற்காக இப்படிப் பொத்தாம் பொதுவாக உரை செய்வார்.

இக்குறளில் “மலர்மிசை ஏகினான்” (மலரின் மீது நடந்தவன்) என்ற சொற்றொடர்களே மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சொற்றொடர்கள். பொதுவாக “மலர்” என்று சொல்லப்படுகிறதே ஒழிய இதனில் தாமரையினைக் குறிக்கும் சொல் இல்லை. பொதுவாக இறைவன் அல்லது இறைவி தாமரையில் அமர்ந்திருப்பது என்ற கருத்தின் அடிப்படையில் மனம் தாமரை மலராக உருவகிக்கப்படுகிறது.

“மலர்மிசை ஏகினான்” என்ற சொற்றொடரினால், சமண மற்றும் பௌத்த சமயவாதிகள் தங்கள் கடவுளாரே தாமரை மலரின் மீது நடந்தவர் எனவும் அதனால் இக்குறள் திருவள்ளுவர் சமண/ பௌத்த சமயத்தைச் சார்ந்தவர் என உறுதி செய்வதாகக் கூறுவர். பரிமேலழகர் இக்கருத்தையும் குறிப்பிடுகிறார். திருவள்ளுவர் குறிப்பிடும் கடவுள் சமணரே என்ற கருத்தை சமண சமய நூல்களான சிலப்பதிகாரம், சூளாமணி, அறநெறிச் சாரம் முதலானவை உறுதிப்படுத்துகிறது.

வைதீக மதத்தில் ஆதிசங்கரரின் சீடரான “பத்ம பாதரைத் தவிர வேறு எவரும் தாமரை மலரின் மீது நடந்ததாகக் (மலர் மிசை ஏகினான் என) குறிப்பிடப்படுவதில்லை. வைதீக மதத்தில் கடவுளார்கள் தாமரை மலர் மீது அமர்ந்திருந்ததாக மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

“மலர்தலை உலகம்“ என்பதற்குப் பரந்து விரிந்திருக்கும் உலகம் என தமிழ் இலக்கியங்களில் பொதுவான பொருளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு உலகைப் பற்றிய குறிப்பும் இக்குறளில் காணப்படவில்லை.

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்ற புறநானூற்றுப் பாடலில் 'மலர்தலை' என்பது பரந்த இடத்தையும், 'மலர்தலை உலகம்' என்பது பரந்த பூவுலகினையும் குறிக்கிறது.

திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதத்தில் “மலர்தலை உலகின் மாயிருள் துமியப் பலர் புகழ் ஞாயிறு” என்ற இடத்தில் மலர்தலை உலகம் என்பதற்குப் பரந்து கிடக்கும் இவ்வுலகம் என்றே பொருள் கூறப்படுகிறது.

திருவிளையாடற்புராணத்திலும் “ மலர்தலை உலகம் என்னும் வான்பயிர் – என்பதற்கு பரந்து விரிந்திருக்கும் இவ்வுலகில் உள்ள உயிர்கள் என்னும் சிறந்த பயிர் எனக் குறிப்பிடப்படும்.

வைதீக மதத்தைச் சேர்ந்த சிலர், மலர்மிசை என்பதிலுள்ள “மலர்” என்பதற்குப் “பரந்து விரிந்திருக்கும்” என்றும் “மிசை” என்பதற்கு மேல், “மேலிடம்” என்றும் பொருள் கொண்டு “மலர்மிசை” என்பதனை “பரந்து விரிந்திருக்கும் மேலிடம்” அதாவது “அண்டவெளி” எனவும் கூறுவர். அடிமுடி காண முடியாமல் அழலுருவாக நெடுதுயர்ந்து நின்ற இறைவனையே சரணாகதி என்று அடையும் அடியவர்க்கு இவ்வுலக சுகமும், நித்தியமான வீடு பேறும் கிட்டும் என்றும் உரை பகருவர்.

இன்னும் சிலர் “மலர்மிசை ஏகினான்” என்பதற்கு “மலர் போலும் மென்மையான அடியவர் உள்ளத்தில் புகுந்தவன்” – என விரித்துக் கூறுவார். (ஏகினான் – புகுந்தவன், குடி கொண்டவன்)

நெஞ்சத்தினுள் புகுந்து நினைவெலாம் தானென்றாகி வஞ்சக எண்ணங்கள் எனை வருத்தாதே காப்பான் அஞ்செலென்றே துணை நிற்கும் அறுமுகன் தாள் வாழி –

என்பதிலுள்ள “நெஞ்சத்தினுள் புகுந்து – என்பதே மலர்மிசை ஏகினான் எனக் கூறப்படுகிறது எனலாம்.

எனவே அடியாரது மலர் போன்ற மென்மையான நெஞ்சத்தில் குடிகொண்ட இறைவனின் மாண்புமிக்க திருவடிகளையே சரணம் என்று எண்ணுபவர் இவ்வுலகில் வாழும் நாளும் எல்லா சுகத்தையும் அனுபவிப்பதோடு, வீடு பேற்றையும் அடைந்து நலம் பெறுவார் என உரைக்கலாம்.

வேண்டுதல் வேண்டாமை – குறித்த விளக்கம் அடுத்த வாரம் --- செபரா

மழலைகள் ஆசிரியர் குழு



             




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants