-
குறள் மலர் 02
- செபரா
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்
பொதுவான கருத்து:-
கடவுளின் நல்ல திருவடிகளை வணங்காதவன், கற்றும் பயனில்லாதவனாவான். என்பார் திரு ஐயன் பெருமாள் கோனார்.
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? என்பார் திரு மு.வ
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன? என்பார் திரு சாலமன் பாப்பையா.
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை என்பார் திரு மு. கருணாநிதி.
விளக்கம்
ஆக இறைவன் எனும் தத்துவத்தை ஒத்துக் கொள்ளாதவர்கள் தன்னை விட அறிவில் மூத்தவரை வணங்குவதே கற்ற கல்வியின் பயன் என்பர். தன்னை விட அறிவில் மேம்பட்டவரை வணங்குவது பொதுவாக நல்ல பண்பாடு, நாகரீகம். ஆனல் இங்கு கடவுள் வாழ்த்து எனும் பகுதியில் இக்குறளில் வாலறிவன் எனப்படுவது, வெறும் ஏட்டுக் கல்வி மற்றும் பொதுவான அனுபவ அறிவின் மேம்பாட்டை மட்டும் சுட்டுவதன்று. அறிவாற்றலால் அனைத்தையும் சாதிக்க வல்லவன். இந்த “அனைத்தையும்” என்பதில் உள்ள “உம்” சிறப்பு உம்மை. மனிதர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரிடமும் நாமறிந்த அல்லது அறியாத ஒரு சிறு குறையேனும் இருக்கும் வாய்ப்புள்ளது. பொதுவாக மனிதர்களில் சிறுகுறையேதும் இல்லாத மேம்பட்ட அறிவினை உடையவர் இவர்தான் என்று சான்றுரைக்க வல்லார் எவர் உள்ளார்? எனவே வாலறிவன் என எவரையும் நம்மால் குறிப்பிட முடியாத நிலையில் இறைவன் ஒருவனே அத்தகு சிறப்பு உடையவன் என்றும் அவனது நலம் தரும் திருவடிகளைப் பணிவதே கற்றதன் பயன் எனக் கொள்வது பொருத்தம்.
கற்பது என்பது அறிவு பெறுவதற்கான முயற்சி. கற்க கசடற, கற்க வேண்டியவைகளை என திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார். எனவே வாழ்க்கைக்குப் பயன் தரும் நூல்களை கற்றுத் தெளிய வேண்டும். மனிதரின் அறிவு பலவகைப்படும்
பிறப்பிலேயே உண்டாகும் பொது அறிவு – இது பிறந்த குடி, வளர்ந்த விதம், உடன் இருக்கும் தோழமை, மற்றும் சூழல் பொறுத்து உயர்வானதாகவோ அல்லது தாழ்வான ஒன்றாகவோ அமையும்.
அடுத்தபடியாக அனுபவத்தால் பெறப்படும் அறிவு. கல்வியறிவோடு அனுபவ அறிவும் சேர்ந்தால் அது மிகச் சிறப்பான ஒன்று. கல்வியறிவு என்பது படிப்பு அறிவு; அனுபவ அறிவு என்பது பட்ட அறிவு. அடிபட்டு, நுகர்ந்து, பக்குவப்பட்டு, வருகின்ற ஞானம் “ம்” இவ்வளவுதான வாழ்க்கை எனச் சொல்ல வைப்பதே “அனுபவம்”.
அனுபவம் இல்லாத கல்வி அறிவு மட்டுமே உடையவர்கள் இறைவன் என்ற தத்துவத்தை ஒத்துக் கொள்வதில்லை. அவர்கள் தாங்கள் அடையும் எல்லா பெருமைக்கும் தங்கள் முயற்சிதான் காரணம் என்று கூறுவர். இத்தகு அறிவு நிலையினை அடைந்தவன் கூட தன்னை விட அறிவுசால் பெரியோர்களை இனங்கண்டு அவர்களை வணங்குவான் என்பதில் ஐயமில்லை.
அனுபவம் ஒன்றுதான் இறைவன் இருப்பதனை உணரச் செய்யும். “அனுபவம் என்பதும் தானே” என ஆண்டவன் கூறுவதாக திரு கண்ணதாசன் குறிப்பிடுவார்.
அறிவின் மேம்பட்ட நிலை ஞானம் எனப்படும். இதுவே ஒவ்வொரு மனிதனும் அடைய முயற்சிக்க வேண்டிய ஒன்று. தன்னை அறிந்தவன் ஞானி. இத்தகைய மெய்ஞான நிலையினை அடைந்த ஒருவன் தன்னையறிவான், தன்னைப் போல் பிறரையும் அவர்தம் உள்ளத்தையும் அறிவான். தானே “அதுவென்றாகி”த் தனக்கென ஒன்றுமிலாதவனாக, தன்னில் “அதனை” ஒளித்து தன்னிகரில்லா ஆநந்த நிலையினை அனுபவிப்பான். இறைவனுடன் ஒன்றிவிடுவான்.
அவனே இறைவன். எல்லா வல்லமையும் உடைய அத்தகு இறைவனை வணங்குவதே கற்ற கல்விக்கு ஏற்ற பயன் தரும் செயலாகும்.
ஸ்ரீ ராமகிருஷ்ணப் பரமஹம்சர், ஸ்ரீ சீரடி பாபா, காஞ்சி மஹாப்பெரியவர், ஸ்ரீ ரமணர், எனும் பலர் அத்தகு சிறப்பான நிலையை உடையவர்கள் என்று நாம் நம்பினாலும், அவர்களும் தங்களை விட சிறப்பான, மேம்பட்ட ஒரு மாபெரும் சக்தி இறைவன் என்றும், அதனை வணங்குவதே சிறப்பு எனவும் கூறுகின்றனர்.
மனித வாழ்வு நம்பிக்கையினாலே எதிர்காலத்தை சந்திக்கத் தயாராகிறது. ஒரு சமுதாயம் சிறப்பாக இயங்கவேண்டுமானால் அதன் உறுப்பினர்களான மனிதர்கள் நல்ல குணம் உடையவர்களாய், சிறந்த மனிதர்களாய் இருக்க வேண்டும். அதற்கு எது இலக்கு? நம் கண்ணுக்குத் தெரிந்த எல்லாப் பெரியவர்களுக்கும் எதோ ஒரு குறை இருப்பது நமக்குத் தெரிவதால் அவர்களை முழுமனதுடன் வணங்க நாம் விரும்புவதில்லை. இந்நிலையில் இறைவன் என்றொரு கற்பிதத்திற்கு எல்லா நல்ல குணங்களும் இருப்பதாகக் கருதி அத்தகு நிலையினை அடைவதே நாம் செய்ய வேண்டும் என நினைத்து வாழ்க்கையினை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இதனை ஒரு உதாரணத்துடன் விளக்கலாம்.
இன்று நாம் பயன்படுத்தும் பேருந்துகளும் (Bus) மற்றும் சிற்றுந்துகளும் (Car) டீசல் சுழற்சி (Diesel) அல்லது ஆட்டோ சுழற்சி (Otto Cycle) எனும் பொறியியற்தத்துவத்தையே அடைப்படையாகக் கொண்டது. இவை கார்னாட் சுழற்சி (Carnot cycle) என்ற ஒரு சித்தாந்தத்தின் (Theory) திறனை அடைவதையே இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த இரு சுழற்சிகளும் நடைமுறைச் சாத்தியமானதாக இருப்பினும், கார்னாட் சுழற்சியின் (Carnot cycle) உயர்ந்த திறனை அடையவே முடியாது. இறை தத்துவமும் அது போலவே. இறைவனின் அனைத்துத் திருக்கல்யாண குணங்களையும் உடைய ஒரு மனிதனைப் பார்க்க முடியாது. அது ஒரு சித்தாந்தம். ஒரு இலக்கு.
இவ்வுதாரணத்தை ஆங்கிலத்திலேயே விளக்குவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
The second law of thermodynamics puts a fundamental limit on the thermal efficiency of heat engines. Surprisingly, even an ideal, frictionless engine can't convert anywhere near 100% of its input heat into work. The limiting factors are the temperature at which the heat enters the engine, and the temperature of the environment into which the engine exhausts its waste heat, measured in the absolute Kelvin or Rankine scale. From Carnot's theorem, for any engine working between these two temperatures:
This limiting value is called the Carnot cycle efficiency because it is the efficiency of an unattainable, ideal, lossless (reversible) engine cycle called the Carnot cycle. No heat engine, regardless of its construction, can exceed this efficiency.
In practice, because the operating cycles of real engines are nowhere near as efficient as the Carnot cycle, coupled with other irreversibilities such as the combustion process itself and friction, real engines fall far short of the Carnot efficiency. Real automobile engines are only around 25% efficient. Combined cycle power stations efficiencies are higher, approaching 46%, but still fall at least 15 points short of the Carnot value.
இதனாலேயே நமது மூதாதையர்கள் ஒரு நல்ல சமுதாயத்தின் அங்கமான மனிதன் தான் அடைய விரும்பும், மிக உயர்ந்த நிலைக்குரிய கல்யாண குணங்களை எல்லாம் இறைவனுக்குரியதாக ஆக்கி ஒவ்வொருவரையும் அந்த நிலையினை அடைய முயற்சி செயல் வேண்டும் என்றனர்.. ஒரு சமுதாயம் மேம்பட்ட சமுதாயமாக விளங்க இத்தகு சித்தாந்தங்கள் தேவை. அது அறவே முடியாத பொழுதும், “ கான முயல் எய்த அம்பின், யானை எறிந்த வேல் பெரிது” என்றபடி முயற்சி செய வேண்டும். அந்த நிலையினை அடைந்தவன் “வாலறிவன்” அவனை வணங்குவதே கல்வி கற்றதன் பயன் என்கிறது இக்குறள்.
எனவே கடவுளை நம்பாதவர்களும் கூட அத்தகு மனிதர்களை இனம் கண்டு கொள்ளும் வரை “வாலறிவன் இறைவன் ஒருவனே” என்று எண்ணி அந்த இறைவன் எனும் கற்பிதச் சிறப்பினை வணங்குவது அவர்கள் கற்ற கல்வியின் பயன் எனலாம்.
அடுத்த குறளான “மலர்மிசை ஏகினான்” அடுத்த வாரம்.... அன்புடன் செபரா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














