-
குறள் மலர் 01
- செபரா
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொதுவான கருத்து:-
எப்படி அகரம் எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையான எழுத்தாக இருக்கிறதோ, அது போல இறைவன் இவ்வுலகத்திற்கெல்லாம் தலைமையுடையவனாக இருக்கிறான் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பது அறிஞர் மு.வ.வின் கருத்து. எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது என்பது திரு சாலமன் பாப்பையா அவர்களின் கருத்து.
ஓம் என்ற சொல் இறைவனால் நமக்கு உரைக்கப்பட்ட முதல் சொல் என வேத விற்பன்னர்கள் கூறுவர். அந்த “ஓம்” எனும் சொல் அகர உகர மகரம் ஒன்றாகும் பொழுது தோன்றுகிறது. அதனில் அகரம் முதல் எழுத்தாக இருப்பது போல, இறைவன் இந்த உலகத்தின் முழு முதற் பொருளாக இருக்கிறான் என்பர்.
இதைத் தவிர பிற்குறிப்பிட்ட கருத்துக்களும் இக்குறளுக்கு உண்டு.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனக் குறிப்பிட்ட அவ்வை, திருவள்ளுவரின் தமக்கை என்றும் ஆதியும் பகவனும் திருவள்ளுவரின் தாய் தந்தையர் என்றோர் கூற்றும் உண்டு என்பர். அவ்வையின் வாக்குப்படி, திருவள்ளுவர் தனது தாய் தந்தையரை முன்னிறுத்தி இக்குறளைப் பாடியதாக சொல்லுவாரும் உண்டு.
இக்குறள், எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாவதாக இருப்பது போல, தீர்த்தங்கரர்களில் முதலாவதாகக் கருதப்படும், ஆதிபகவன் எனும் விருஷப தேவரே இவ்வுலகத்திற்கெல்லாம் தலைமையுடையவனாக இருக்கிறான் எனக் குறிப்பிடுகிறதாக ஒரு சாரார் கூறுவர். இக்குறளில் வைதீக மதத்தைச் சேர்ந்த கடவுள்களைக் குறிப்பிடவில்லை என்பார்.
திருவள்ளுவர் சமணச் சார்பாளர் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. திரு.வி.க, பன்மொழிப் புலவர்கள் திரு தெ.ப. மீனாட்சி சுந்தரனார், திரு எஸ். வையாபுரிப் பிள்ளை, திரு வெங்கடராஜுலு ரெட்டியார், திரு ஆர்.கே சண்முகம் செட்டியார் மற்றும் மயிலை சீனி வெங்கடசாமி முதலான அறிஞர்களும் இக்கூற்றை உறுதி செய்கின்றனர். எனவே கி.பி முதலாம நூற்றாண்டில் தோன்றிய திருவள்ளுவர் சமணர் என்றும் அதனால் அவர் இங்கு ஆதி பகவன் என்று குறிப்பிட்டது சமண சமயக் கடவுளான “பகவன்” என்றும் கூறுவர்.
திருவள்ளுவர் சமணர் என்பதையும் அவர் சமணக் கடவுளாரையே தனது குறளில் பல இடங்களில் குறிப்பிடுகிறார் என்பதையும் சமணக் கடவுளாருக்கே உரித்தான “ஆதிபகவன்”, “மலர்மிசை ஏகினான்”, “அறவாழி அந்தணன்” என்ற சொற்றொடர்களையே கடவுள் வாழ்த்தில் பிற குறள்களில் கையாளுவதும், திருவள்ளுவர் சமணர் என்பதற்கு ஓர் சான்று என்பர்.
அயோத்தி மாநகரில் நாபிராஜா என்பவருக்கும் அவர் மனைவி மரு தேவிக்கும் பிறந்த குழந்தை விருஷப தேவர் என்பார். அந்த விருஷப தேவர் சமண மதத்தை நிறுவிய முதல் தீர்த்தங்கரர் என்பதும் மஹாவீர வர்த்தமானர் 24 வது தீர்த்தங்கரர் என்பதும் சமண மதத்தவர் கூறும் செய்தியாகும். கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த அகளங்க தேவர் எனும் பன்மொழிப் புலவர் தாம் எழுதிய “தத்வார்த்த சூத்திரம்” எனும் நூலுக்கு பொழிப்புரை எழுதுகையில் ஓரிடத்தில் “எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன. அது போல தீர்த்தங்கரர்கள் முதல் தீர்த்தங்கரராகிய ஆதி பகவன் எனப்படும் விருஷப தேவரை முதலாக எண்ணுகிறார்கள்” என்கிறார். எனவே இக்குறளில் ஆதி பகவன் எனக் குறிப்பிட்டது, விருஷப தேவரையே என்பர். இவர் நான்காம் நூற்றாண்டு புலவர் என்பதால், திருவள்ளுவரின் கருத்தையே பிரதிபலிக்கிறார் எனலாம்.
அதை விட மற்றொரு சிறப்பான, தர்க்க ரீதியான கருத்து “ஆதி பகவன் “ என்பது “ஆதி பகலவன்” என இருந்திருக்க வேண்டுமென்றும் இது உலகின் முதன் முதல் அறியப்பட்ட, ஆதி காலத்து மனிதர்களால் வணங்கப்பட்ட கடவுளான சூரியனையே குறிக்கும் எனவும் கூறப்படுகிறது. பகலவன் என்பது சூரியனைக் குறிக்கும் சொல் எனபது எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு பொருள். முதன் முதல் நீர், நெருப்பு, காற்று, சூரியன் முதலான இயற்கைச் சக்திகளையே மக்கள் கடவுளாக வழிபட்டனர் என்பதும் அறியப்பட்ட ஒரு செய்தி. உயிர்கள் வாழ சூரியனின் ஒளி மிக மிக அவசியம் என்பதால் எப்படி எழுத்துக்களில் அகரம் முதலாவதாக இருக்கிறதோ அது போல, உலகம் வாழ சூரியன் முதலாக இருக்கிறான் எனப் பொருள் கூறுவாரும் உண்டு.
“பகலவன்” என்பது நாளடைவில் “பகலன்” என எழுதப்பட்டிருக்கலாம் என்றும் “பகலன்” என்பதில் உள்ள “ல” எனும் எழுத்து எழுதப்படும் பொழுது நாளாவட்டத்தில் உருமாறி” வ” என்றாகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கற்றதனால் ஆய பயன் என்ன? என்பது அடுத்த வாரப்பதிப்பில்................ -செபரா
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













