குறள் தோட்டம்
முத்து
குறளோவியம் - அறத்துப்பால்
6. வாழ்க்கைத் துணைநலம்"என்ன்ங்க இந்த மாசம் சம்பளம் ஒரு வாரத்துக்குப் பிடிச்சுட்டாங்க. ஆமாம், நீங்க ஒரு வாரம் உடம்பு சரியில்லாம வீட்டிலே படுத்துக்கிட்டு இருந்தீங்க. அதனால என்ன இப்ப? இந்த மாசம் அதை இதை வாங்காம சிக்கனமா இருந்தாப் போச்சு. இதுக்குப்போய் கவலைப்பட்டுக்கிட்டு இன்னும் உடம்பைக் கெடுத்துக்காதீங்க". அந்த மாதம் கணவன் ஒரு வார சம்பளம் பிடித்த மீதியைத் தன் மனைவியிடம் கொடுத்தபோது, அந்த மனைவி சொன்ன ஆறுதல் வார்த்தைதான் இது.
"அப்பா, அப்பா, இந்த மாசம் எங்க ஸ்கூல்ல எல்லாரும் எக்ஸ்கர்ஷன் போறாங்கப்பா. அப்படி போறவங்களெல்லாம் 150 ரூபாய் பணம் இப்பவே கட்டணுமாம்ப்பா", இப்படி மகன் தன் அப்பாவைக் கேட்டுக்கொண்டிருந்த போது அந்த மனைவி ஓடிவந்து தன் பிள்ளையை அணைத்துக்கொண்டு "இதோ பாரு கண்ணா, இந்த மாசம் நம்பளே ஒரு கல்யாணத்துக்கு வெளியூருக்குப் போனாலும் போவோம். அதையே நீ எக்ஸ்கர்ஷனா நினைச்சுக்க. இப்ப அப்பாவைத் தொந்தரவு செய்யப்படாது. போய்ப் படி" என்று கூறவே அந்தப் பிள்ளையும் சரியம்மா என்று கூறிவிட்டு ஓடிவிட்ட்து.
இது ஒரு சில குடும்பங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் ஒரு காட்சிதான். எவ்வளவு ஒத்துமையான குடும்பம். அவனுக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணைநலம் எப்பேர்ப்பட்ட ஒரு துணை. ஆஹா! இந்தக் காட்சியைத்தான் வள்ளுவர் இந்தக் குறளில் படம் பிடித்துக் காட்டுகிறார்:
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளர்த்தக்காள் வாழ்க்கைத் துணை.
இல்வாழ்க்கைக்குத் தேவையான நற்பண்புகள் கொண்டு, தன் கணவனது பொருள் வளத்திற்கு ஏற்றபடி வாழ்க்கை நட்த்துபவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.
அவன் அலுவலகத்தில் நிர்வாகி. அந்தக் கம்பனியின் முதலாளி அவன் சொல்லுக்குக் கட்டுப்படுவார். அலுவலகத்தில் அவர் ரொம்பக் கடுபிடியானவர். அவரைக் கண்டால் எல்லோரும் கதிகலங்குவார்கள். அவர் கடுபிடியானவர் என்றாலும் போனஸ், ஓவர்டைம் எதிலும் யாருக்கும் குறைவைக்க மாட்டார். வீட்டிலும் கார், பங்களா, வேலைக்காரன் என்று எல்லா சௌகர்யங்களும் செய்து கொடுத்துள்ளார். அந்தத் தெருவில் அவ்ரை மிகச் சிறப்பாக மதிப்பார்கள். ஆனால், அவர் மனைவி மாதர் சங்கம், அந்த சங்கம், இந்த சங்கம் என்று நாள் பூராவும் வெளியிலேதான் டியூட்டி. "டியர், நாளைக்கு என் ஆபீஸில் கணக்குப்பிள்ளையின் மகனுக்குக் கல்யாணம். அழைப்பு விடுத்துள்ளார். தம்பதி சமேதராக வந்தால் மிக்க சந்தோஷப்படுவேன் என்று சொன்னார். நாளைக்கு ஈவினிங் போகலாமா?" தன் மனைவியை வேண்டினார்.
"ஸாரி டார்லிங். நாளைக்கு ஈவினிங் மாதர் சங்க ஆண்டு விழா பார்ட்டி. என் தலைமையில்தான் நடக்குது. அதுக்குப் போகணும்" மனைவியின் மறுப்பு.
இந்த ஜோடியைப்பற்றி வள்ளுவர் என்ன சொல்றாறு?
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த நல்ல பண்புகள் மனைவியிடம் இல்லை என்றால், ஒருவனது வாழ்க்கையில் வேறு எத்துணைச் சிறப்புகள் இருந்தும் பயனில்லை.
ராமாயணத்தில் ஒரு காட்சி.
சீதை அசோக வனத்தில் சிறையுண்டு கிடக்கிறாள். ஹனுமானை ராமர் தூதுவிட்டிருந்தார். ஹனுமன் அங்கு வந்து சேர்ந்தார். தன்னைப் பரிச்சையம் செய்துகொண்டு சீதையின் அவல நிலையைக் கண்டு கொதித்துப்போனார். இதற்கிடையில் ராவணன் அங்கு வரவே மறைவில் நின்றுகொண்டு நடப்பதை கவனிக்கிறார். ராவணன் அங்கு வந்து சொல்லும் தகாத சொற்களைக்கேட்டு வெம்பிப்போனார். ராவணன் சென்றவுடன் சீதா அன்னையிடம் வந்து "தாயே! சரியென்று ஒரு வார்த்தை சொல்லுங்கள். இப்போதே இந்த எனது தோளில் தங்களை ஏந்திச் சென்று அண்ணலிடம் சேர்த்துவிடுகிறேன்" என்றதற்கு சீதாபிராட்டியார் சொல்கிறார், "உனது இந்த அன்பு ஒன்றே போதும். இப்படியே உன்னுடன் வந்துவிட்டால் எனது பிராண நாதனாகிய ராமனின் வீரத்துக்கு அது இழுக்கல்லவா?" என்று மறுக்கிறாள். தன்னால் தன் கணவனுக்கு ஒரு பழிச்சொல் வரக்கூடாது என்று நினைத்த அந்த மனைவியை வள்ளுவர் எப்படிச் சித்தரிக்கிறார் பாருங்கள்:
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
கணவனையே தெய்வமாகத் தொழுது, பிற தெய்வம் எதையும் தொழாமல் துயில் எழுபவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.
இங்கு சீதா தேவியார் பின்னொரு சமயத்தில் அக்னிப்ரவேசம் செய்யும் பொருட்டு அக்னி பகவானை அழைத்தாள். அங்கே அக்னி மூண்ட்து என்று ராமாயணம் கூறுகிறது. மழை மட்டுமல்ல, அக்னி தேவனும் அம்மாதிரி பெண்டிருக்கு அடிபணிவர் என்பதே கருத்து.
எனவே,
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
அதாவது, இல்வாழ்க்கைக்கு மங்கலம் தருவது மனைவியின் நல்ல பண்பே ஆகும். அந்த இல்வாழ்வுக்கு அணிகலனாக இருப்பது நல்ல மக்களைப் பெறுவதே ஆகும் என்று கூறுகிறார் வள்ளுவர்.
.....மீண்டும் பூக்கும்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














