மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
ஆகிரா
|
|
மழலையர் மகிழ மணக்கும் பாச்சரம்
ஆகிரா அறிமுகம்புலவர் நீல. பகவன் எங்கிற புலவர் நீல. நகதீசுவரன் கடந்த 30 ஆண்டுகளாக என் குடும்ப நண்பர். பவானி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் மேனிலைத் தமிழாசிரியரகப் பணியாற்றி 31.5.97 உடன் ஓய்வு பெற்றவர். இவரது முதல் நூலாகிய "தெய்வத் தமிழ் மணி மாலை" எனது தலைமையில் 16.7.97ல் பவானி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் வெளியிடப்பட்டது. இவர் சிறந்த பாடகர், சிறந்த கவிஞர், சிறந்த பேச்சாளர் என்பது எல்லோராலும் அறியப்பட்டதே. இவரது மூச்சும் பேச்சுங் கவிதையாகவே இருக்கும் என்று கூறுவதில் வியப்பில்லை! என்பால் இவர் கொண்ட மதிப்பு, மரியாதை காரணமாக இவரது இரண்டாவது நூலாகிய "மழலையர் மகிழ மணக்கும் பாச்சரம்" என்ற நூலை வெளியிட பவானி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியரை அணுகி, அவர்கள் பள்ளி இலக்கிய மன்ற நிறைவு விழாவில் இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தமை பாராட்டுக்குரியது. முழுவதும் குழந்தைப் பாடலாக அமைந்த இந்நூலை வெளியிடும் விழாவில் தலைமை தாங்குவதில் நான் பெரிதும் மகிழ்வடைகிறேன். இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளைத் தந்து இவரது இறைப்பணியுந் தமிழ்ப் பணியுந் தொடர அருள வேண்டுமென வேண்டிக் கொள்வதுடன் இவரை வாழ்த்துகிறேன்.
இன்னனம் S.N. பாலசுப்பிரமணியன்
அணிந்துரைசிந்தனை வளமும், வந்தனை நலமும், கந்தனை மறவாக் காட்சியும், மாந்தனன் விழையும் மாண்பும், சந்தத் தமிழின் முழக்கும், சிந்தெனச் சிந்தையை ஈர்க்கும் இசையுள்ளமும் கொண்டவர் புல்வர் நீல பகவன். அவர் படைத்த மழலையர் மனம் வளர்க்கும் சந்த நல்கனிந்த இசைப்பாடல் தொகுதி இது. "செந்தமிழே! செந்தமிழே!" எனத் தொடங்கி, உலகின் முதல் மக்கள் காப்பியமாகிய நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் சீர்மையைச் சிறார்களும் சிந்தையில் நிறுத்தும் வண்ணம், "சிலம்பைக் காலில் அணிந்தவளே" என்ற தமிழ்த்தாயின் திருவடி போற்றி ஐம்பெருங்காப்பியங்களை இசைப்படுத்தி இருப்பது போற்றத்தக்கதாம்.
குறளுக்கும் மருந்தென்று பேர் அந்தக் என்று உலகம் போற்றும் திருக்குறளின் தன்னேரில்லாத் தகைமையைத் தமிழின் தனி அமுதத்தைப் பிஞ்சு நெஞ்சில் பதிய வைக்கும் பாங்கு பாராட்டற்குரியதாகும். இளமையில் கல்வி சிலையில் (கல்லில்) எழுத்து என்பர் வஞ்சம் புகா நெஞ்சினர் சிறார். அவர்தம் மனத்தினில் பக்திப் பயிர் வளர்ப்பது நற்பணி. அப்பணியை இந்நூல் செம்மையாகச் செய்துள்ளது. "கருகி மருளும் வினைகளே சுந்தன் என்று சொல்லிட" என்பன போன்ற பக்தி நலங்கனிந்த பாடல்கள் நெஞ்சில் நிலை நிற்கும். சமூக நல்லிணக்கம் சமய ஒற்றுமை வளர்க்கும் வண்ணம் :யேசு", "அல்லா" யாவரும் ஒருமைபெறப் பாடியுள்ளவையும் வரவேற்புக்குரியது. "அன்னை போல நீயும் குறைநீக்கிக் கற்க" என்றும், "குறும்பு செய்தால் கடிப்பேன்" என்று எறும்பு தன்னிலை விளக்கந்தரப் பாடுவதும், கோழி, காகம், குருவி போன்றவை உணர்த்தும் உயர் எண்ணங்களும் நலம் பயக்கும். விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த சத்தியத்தின் நித்தியத்தைச் சொந்தமெனக் கொண்ட காந்தியடிகளாரையும், குழந்தையுள்ளம் கொண்ட நேரு, பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி போன்றோரையும் இளைய தலைமுறைக்கு இசையாக்கியிருப்பது இனிமை தருவதாகும். இயற்கையின்பப் பாடல்கள் யாவும் வாழ்க்கையின் வான்பயனை, மெய்ப்பொருளை இன்ப நோக்குடன் இளமைக்கு உணர்த்தும் வண்ணம் பாடப்பட்டுள்ளன. நல்லறம் புகட்டும் வண்ணம் அமைந்த "குருவியும் குரங்கும்" மற்றும் பாட்டுக்கதையுமாக அமைந்தனவும் சந்தச்சீருடன் கதைவளம் கொண்ட ஓவியப் பாங்கின. ஆங்கிலப் பாடல்களை மொழிபெயர்ப்பு என அறியா வண்ணம் மொழியாக்கம் செய்துள்ளமை தமிழுக்குத் தந்ததோர் நல்லணியாம். முன்னோர் மொழிப்பொருள் மட்டுமின்றிச் சந்த நலத்தையும், தன்னேரில்லாத இசைவழித் தமதாக்கிக்கொண்ட ஆற்றல் மிக்கவர் இவர் என்பதை, "இன்று நிகழ்ந்திடும் அத்தனை கூத்தையும்" "நல்லதை நாடவல்லதை நாமதைப் போற்ற வந்ததை" என்பன போன்ற அடிகள் காட்டும். அனைத்துக்கும் மேலாக நாட்டுப்புற நளினம், எளிமை, இனிமை, இசைமை, சந்தச்சீர்மை, சிறார்க்கேற்ற சிந்தனை வளம், யாவரும் சுவைக்கத்தக்க பாங்கு இந்தத் தொகுதியின் தனிச் சிறப்பாகும். படைப்பாளியின் உயர் நோக்கம் உணர்த்தும் தன்னுணர்வுப் படைப்பாக வந்துள்ள இத்தொகுதி பாராட்டத் தக்கதாகும்.
பாவலர், கல்வெட்டியல் அறிஞர், சித்தாந்த நன்மணி |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |