மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

அன்னை தமிழ்

முத்து. இராமமூர்த்தி

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management

தமிழுக்கு அமுதென்று பேர்

auvai - sketch by mazalais kid
உலகத்தில் இறைவனின் படைப்புகளில் மிகவும் உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பே ஆகும். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்கிறாள் ஔவைப் பாட்டி. மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவான பகுத்தறிவும், அதையொட்டிய அவனது செயல்பாடுகளுமே அவனைப் பிற உயிர்களிலிருந்து வேறுபடுத்தி உயர்த்துகின்றன.

ஆறாவது அறிவைப் பயன்படுத்தி செயலாற்றாதவன் விலங்காகவே கருதப்படுகிறான். புல் முதலிய ஓரறிவு உயிர்கள் முதல் ஐயறிவு உடைய விலங்குகள் வரை எந்த உயிரினமும் பேசுவதில்லை. அவைகள் உண்டாக்கும் ஒலி வெறும் கூச்சலாகவே இருக்கிறது.

ஆனால் மனிதன் மட்டுமே தன்னுடைய உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கிறான். மொழி மனிதனுக்கு மட்டுமே உண்டு. மொழியின் மூலமே மனிதன் தன் எண்ணங்களைப் பிறருடன் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது.

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு மொழியே பெரும் துணையாக விளங்குகிறது. மனிதனின் பண்பாட்டுச் சிறப்பிற்கும் மொழி வழி வகுக்கிறது. மொழி இல்லாத மனித வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்த்தால் ஒரு வெறுமையான நிலையே உள்ளதைக் காணலாம்.

உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் மனிதர்களால் பேசப்படுகின்றன. அவைகளில் எழுதும் மொழியாக இல்லாமல் பேசும் மொழியாக மட்டுமே உள்ள மொழிகள் எண்ணற்றவை. பழமையினாலும், இலக்கிய வளத்தாலும் புகழ் பெற்று விளங்கும் மொழிகளில் தமிழ் மொழி தலையாயது. 'என்றிவள் பிறந்தாள் என்றுலகறியா' ஏற்றம் கொண்டவள் தமிழ்த்தாய்! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி! இலக்கணம் கண்டபின் இலக்கியம் கண்டனரா அல்லது இலக்கியம் கண்டபின் இலக்கணம் கண்டனரா என்று ஆராய்ந்து அறிய முடியாத சிறாப்பினை உடையது தமிழ்!

இன்றைக்கு நமக்குக் கிடைக்காத பல அரிய ஒப்பற்ற உயர் இலக்கியங்களைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டு பொலிவு பெற்ற தன்னேரில்லாத் தனி மொழி தமிழ்! தமிழ், தமிழ், தமிழ்... எனப் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்ல, அமிழ்து, அமிழ்து, அமிழ்து என அமிழ்தமாக மாறி இனித்து, தன்னைச் சுவைத்தவரைக் காத்து நீடு வாழவைக்கும் அமுதம் தமிழ் அன்றோ!

அதனால்தான், "முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்" என்கிறார் அருணகிரிநாதர்.

'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' என்று கூறும் பாவேந்தர் பாரதிதாசனார், 'தமிழ்க் கவிஞன் பாரதிதான் செத்ததுண்டோ?' என வினவுவார்.

தமிழ் தன்னைச் சுவைப்பவரை வாழவைக்கிறது; தொண்டாற்றுபவரைச் சாக விடுவதில்லை. தமிழ் என்றும் இளமையாக உள்ள முதிர்ந்த மொழி! அதனால் அது தன்னைப் பேசுபவரையும், சுவைப்பவர்களையும் என்றும் இளமையாக வைத்திருக்கிறது. என்றுமுள தெந்தமிழை இயம்பி இசை கொள்ளும் புலவர்களுக்கு என்றும் இறவாத புகழ் வாழ்க்கையைத் தமிழ் தந்து வருவது வரலாறு உணர்த்தும் உண்மை ஆகும்.

தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும், கம்பரும், பாரதியும் இன்றும் உலகம் முழுவதும் வியாபித்து வாழ்ந்துகொண்டு வருகின்றார்கள் அல்லவா?

valluvar
இங்ஙனம் தமிழ் போற்ற்ப்படுவதற்குக் காரணம் என்ன? அதன் இனிமையா? வளமா? வளர்ச்சியா? தமிழின் ஏற்றத்திற்குக் காரணம் இவை அத்தனையும்தான் என்றாலும், அது தன்னகத்தே கொண்டுள்ள இலக்கண இலக்கியங்களின் மேன்மைதான் அடிப்படையாக விளங்குவதைக் காணலாம்.

தொல்காப்பியத்தின் ஒல்காப் புகழும், சங்கப் பாடல்களின் தகைமையும், வான்புகழ் வள்ளுவத்தின் மேன்மையும், இளங்கோவின் ஏற்றமும், திருத்தக்க தேவரின் தேன்மொழியும், சேக்கிழாரின் தெய்வீக நெறியும், ஆழ்வார்களின் அமுத மழையும், நாயன்மார்களின் நற்றமிழ்ப் பாமாலைகளும், சித்தர்களின் செந்நெறிகளும், பாரதியின் உணர்ச்சி வெளிப்பாடுகளும், கண்ணதாசனின் கவிதை வெள்ளமும் இல்லாமல் போயிருந்தால் தமிழ் தன்னேரில்லாத் தமிழாகத் தரணியில் தலை நிமிர்ந்து விளங்க முடியுமா?

ஆம்! உயர்தனிச் செம்மொழியான தமிழ் உலகத்தில் உயர்ந்தோங்கி நிற்கக் காரணம், அது கொண்டிலங்கும் அரிய இலக்கியங்கள்; அவ்விலக்கியங்கள் கூறும் ஆழமான அரிய செய்திகள்; நேர்த்தியான நெறிகள்; வளமான வாழ்வியல் அறங்கள்; தகையான தத்துவங்கள்!

தமிழ் இலக்கியங்கள் அனைத்துமே உலகளாவிய உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டு இலங்குவதைக் காணலாம். அவைகளின் நோக்கமும், அவைகளில் பொதிந்து கிடக்கும் எண்ணங்களும் விரிந்த உள்ளக்கடலில் விளைந்த நல்முத்துக்களாகவே இருக்கின்றன.

உலகம் முழுவதுமே வாழவேண்டும், உலக மக்கள் இன்புற்று இருக்க வேண்டும், பிறர் துன்பத்தைத் துடைத்தல் வேண்டும் எனப் பரந்த இதயத்துடன் தமிழ்ப் புலவர்கள் தங்கள் படைப்புகளைத் தந்திருக்கிறார்கள்.

"உலகம் உவப்ப வளனேபு திரிதகு
பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு"

எனத் திருமுருகாற்றுப் படையைத் தொடங்கும் நக்கீரப் பெருமான், உலகம் உவப்ப, பலர் புகழ் ஞாயிறு கடலில் தோன்றுதல்போல திருமுருகப் பெருமான் நீலமயிலின் மீது தோன்றுகிறான் என உலகத்தை முன்னிருத்திக் கூறுகிறார்.

திருவள்ளுவரும் 'உலகு' பற்றிய சிந்தனையோடே திருக்குறளைத் தொடங்கி இருக்கிறார்.

'உலகம் யாவையும்' எனும் பாடலுடன் இராமவதாரத்தினைப் பாடத்தொடங்கும் கம்பரின் கவின் தமிழும் விரிந்து, பரந்து உயர்ந்து நிற்கும் அவரின் உள்ளத்தை நமக்குக் காட்டுகின்றது.

'உலகெலாம்' எனத் தொடங்கிய பெரிய புராணமும், சேக்கிழாரின் செந்தமிழ் நெறியை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

அங்ங்னம் விரிந்து, பரந்து, உயர்ந்து நிற்கும் உள்ளத்தில் மட்டுமே உயர்ந்த சிந்தனைகள் விளையும்; தகையான தத்துவங்கள் மலரும்; நிலையான நெறிகள் நிறையும்.

சமுதாயச் சிந்தனையுடன் உலகெல்லாம் இன்புற்று வாழவேண்டும் என்ற நோக்கில் படைக்கப்பட்ட இலக்கியங்கள்தான் காலத்தைக் கடந்து வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தாலும், பாரெல்லாம் வாழ, பாடப்பட்ட பாடல்கள் மட்டுமே சாகா வரம் பெற்று சாசுவதமாய் நிலைக்கின்றன.

சங்கத் தமிழ்ப் பாடல்களும், வள்ளுவனின் தெள்ளு தமிழும், இளங்கோவின் சிலம்பும், கம்பனின் காவியமும், ஆழ்வார்களின் அமுதமும், நாயன்மார்களின் நற்றமிழும், சேக்கிழாரின் செந்தமிழும், பாரதியின் பைந்தமிழும் என்றும் இலக்கிய உலகில் நிலைபெற்று வாழ்வதற்குக் காரணம் அவைகளின் ஊடே இழையோடும் சமுதாய நோக்கமே ஆகும்.

சங்கப் புலவர் நரிவெரூஉத்தலையார் அருளும் அன்பும் இல்லாதவரோடு சேர வேண்டாம் என அறிவுரைப்பது அருளும் அன்பும் இல்லாதவர் விரிந்த மனம் உடையவர் அல்லர் என்பதால்தானே!

"அருளும் அன்பும் நீங்கி நீங்கா
நிரயம் கொள்பவரோ டொன்றாது காவல்
குழலி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குறைத்தே!" (புறம் - 5)

என்பவை அவருடைய பொன்மொழிகள்.

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லால்
வேறொன்றறியேன் பராபரமே."

என்பார் தாயுமானவர். வடலூர் வள்ளற் பெருமானும்,

"அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்"

என உலகத்து உயிர்களுக்கு அன்பு காட்ட அருளுமாறு ஆண்டவனை வேண்டுகிறார்.

விரிந்து பரந்த உள்ளத்தில் சாதி, மதம், மொழி, இனம் என வேற்றுமை கண்டு பேதம் பாராட்டும் தீமை முளை விடுவதில்லை. விரிந்து பரந்த உள்ளத்திற்கு, "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" மனத்தால் உயர்ந்து நிற்கும் மாமனிதர்களுக்குப் பகைவர் என யாருமே கிடையாது. அவர்களுக்கு விலங்கினங்கள்கூட நண்பர்கள், பறவைகள் எல்லாம் உறவினர்கள். அவர்கள்,

"காக்கை குருவி எங்கள் ஜாதி
கடலும் மலையும் எங்கள் கூட்டம்"

என அனைத்தையும் உடன் சேர்த்து ஆர்ப்பரிப்பர். அவர்களின் உள்ளம் விரிந்து நிற்பதால், அவர்கள் எல்லா உயிர்களிலும் இறைவனைக் கண்டு வணங்குவர்.

"வானில் பறக்கும் புள்ளெல்லாம் நான், கடலில்
நீந்தும் மீனெல்லாம் நான்"

என அனைத்திலும் தங்களைக் கலந்து கொள்ளும் அதி அற்புத ரசவாதிகள். அனைத்திலும் தங்களை இணைத்துக் கொள்வதோடு, அனைத்திலும் ஆண்டவனை 'அந்தர்யாமி'யாகத் தரிசித்து வணங்கும் அத்வைதிகளின் உள்ளத்தில் விளைவதெல்லாம் உலகை உய்விக்கும் உன்னதத் தத்துவங்கள். அவர்களின் மொழிகள் யாவும் மொழியையே வாழவைக்கும் அமிழ்தான தெய்வத் திருமறைகள்!

இங்ஙனம் உயர்ந்த நோக்கோடு உலகளாவிய சிந்தனையுடன் தமிழுக்கு நூல்களைத் தந்த புலவர்களால் தமிழ் வாழ்ந்தது; வாழ்விறது; வாழும்!

அறக்கொடைகளை, நீதினெறிகளை, நல்லறங்களைப் பெற்ற தமிழ், அவைகளைத் தந்த புலவர்களையும், புவனம் எல்லாம் போற்றும் வண்ணம் இறவாமல் வாழ்கிற ஏற்றத்தைத் தந்திருக்கிறது.

தமிழ் தன்னைச் சுவைப்பவர்கள் காலம் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆம்! தமிழ் ஓர் அமுதமொழி. அது இனிப்பதோடு, சுவைப்பவர்களையும் வாழ்வாங்கு வாழ வைக்கிறது.

GIVE YOUR FEEDBACK FOR THE ABOVE ARTICLE
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com