தாயென்று கும்பிடடி பாப்பா
- தமிழும் சுவையும்
அழகி விஷி
க் ச் த் ப் - எங்கு வரும், எங்கு வராது?
An aid to avoid mistakes, while writing in thamizh
அன்பர்களே,தமிழில்(தான்) எழுத வேண்டும் என விழையும் பலரும், ஒற்றுப் பிழைகள் வராமல் எழுத வேண்டும் என(வும்) விழைந்தால் நலம்தானே?!
இது குறித்த என் அறிவைச் சற்றே புதுப்பித்துக்கொண்டேன், சில நாட்களாக. முனைவர். திரு.இர.வா. அவர்களுக்கு என் கோடி நன்றிகள், இதற்காக.
எடுத்தவுடனேயே வேற்றுமை உருபுகள், புணர்ச்சி, வினையெச்சம், ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினையாலணையும் பெயர், இடைநிலை, சந்தி, சாரியை எனத் தமிழ் இலக்கணத்தை அள்ளி வீசாமல் [இளவயதில் தமிழில் பாடம் கற்க இயலாத சூழ்நிலை பலருக்கும் இருந்திருக்கலாம் அல்லவா? என்ன விசாலம் அம்மா, சொல்வது சரிதானே?], எளிதாய்ப் புரிந்து கொள்ளும் வண்ணம் இருக்கும் சிலவற்றை மட்டும் முதலில் சொல்கிறேன். இலக்கண விதிகள் பற்றி பிறகு பார்ப்போம்.
அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி, இனி, தனி, என, முன்னர், பின்னர், மற்ற (மற்றை, மற்று), எல்லா, அவ்வகை, இவ்வகை, எவ்வகை.
மேற்கூறிய சொற்களை அடுத்து வருமொழியின் (வந்து சேரும் இரண்டாம் சொல் வருமொழி. முதல் சொல் நிலைமொழி) முதலில் க், ச், த், ப் முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர்மெய்யெழுத்துகள் இருப்பின் (அதாவது, க, கா... ச, சா... த தா... ப, பா... முதலியன), நடுவிலே க், ச், த், ப் ஆகிய (வல்லின)மெய்யெழுத்துகள் மிகும். உதாரணங்கள் கீழே.
அந்தச் சிற்பம்
இந்தக் காட்சி
எந்தப் பாட்டு
அங்குத் தங்கினான்
இங்குப் படுத்தான்
எங்குக் கண்டான்
அப்படிப் போடு
இப்படித் தாண்டு
எப்படிச் சொல்வது
இனிப் பாடு
தனித் தமிழ்
எனச் சொன்னான்
முன்னர்க் கண்ட
பின்னர்க் கேட்ட
மற்றக் காட்சிகள்
எல்லாப் பெண்களும்
அவ்வகைச் சித்திரமே
இவ்வகைத் தென்றலே
எவ்வகைப் பகுக்க
"அந்திங்கெப்படி இனிதனி என முன்னரும்
பின்னரும் மற்றெல்லா வகையும்"
என மேற்சொன்னவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளச் சுலபமாய் ஓர் ஈரடிச்சொற்றொடர் உருவாக்கினேன். இதற்கு அர்த்தம் எதுவும் கிடையாது. தமிழில் ஒற்றுப்பிழை வராமல் எழுத வேண்டும் என விழைபவர்கள் நலன் கருதி மட்டுமே உருவாக்கினேன்.
இதை எழுதும்பொழுதே ஒன்று ஞாபகம் வருகிறது. என் அப்பாவிடம் இருக்கும் புத்தகங்கள் 10,000 இருக்கும் (கரையான் அரித்து அழிந்து போனவை மீத). பலதரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியவை அவை. ஒரு 15 வருடம் முன்பு, அவர் வைத்திருந்த சங்க காலப் பாடல்கள் நிறைந்த ஒரு புத்தகத்தில் (அப்புத்தகம் இப்பொழுது இல்லை) ஒரு கவிதை படித்தேன். அது இதுவே: (சரியாக ஞாபகமில்லை. முறையான பாடல் தெரிந்தவர்கள் பாடலைத் திருத்தி இடவும்)
காவிறைய கூவிறைய மண்ணுண்னி மாப்பிள்ளையே
உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி
கன்னா பின்னா தென்னா மன்னா
சோழரங்கப் பெருமானே
இந்தப் பாடலை முறையான படிப்பறிவில்லாதவர் ஒருவரே எழுதினார் (யாரோ ஒருவர் 'நீயும் கவிதை எழுதி மன்னரிடம் பரிசு பெறலாமே' என உசுப்பிவிட).
காகம் கரைதலைக் கண்டு 'காவிறைய' என்றும், குயில் கூவுவதைப் பார்த்து 'கூவிறைய' என்றும் அப்படியே............... சிறுவன் சொன்ன ஒரு வாக்கியம், நண்பன் சொன்ன ஒரு வாக்கியம் என அங்குமிங்கும் ஏதேதோ எழுதி, கவிதையென்றெண்ணி, மன்னரின் அவையில் பாட, எல்லோரும் சிரிக்க, கம்பர் மட்டும் - "இது மன்னரைப் போற்றிப் புகழும் அற்புதமான பாடல்" என்று விளக்கம் தந்தாராம். கதை இப்படித்தான் என நினைக்கிறேன். முழுவதும் அறிந்தவர்கள், கதையுடன், கவிதையின் பொருளையும் விளக்கிச் சொன்னால், தமிழின்/கம்பனின் பெருமை உணர்ந்து மெய்சிலிர்க்க வாய்ப்பு உண்டு.
அர்த்தமில்லாத என் ஈரடிச் சொற்றொடர் கண்டதும் எனக்கு மேற்சொன்ன கதை ஞாபகம் வந்து விட்டது. செ.ப.ரா. அவர்கள் கூட சில நாள் முன்பு இட்ட ஒரு மடலில் இதைப்பற்றி ஒரு வரி மேற்கோள் காட்டியிருந்தார் என நினைக்கிறேன்.
சரி. மடலின் இறுதிக்கு வந்தாகி விட்டது. 'அந்த, அங்கு, ...' போலவே "இன்னும் நிறைய இருக்கின்றன". எனக்கு நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம்(மட்டுமே) அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய், பாங்காய், எளிதாய் [அழகியைப் போல] எடுத்துச் சொல்லலாம் என வைத்துள்ளேன், இனி வரவிருக்கும் மடல்களில்.
முக்கியமான ஒன்று. அதை மடலின் ஆரம்பத்திலேயே கோடிட்டுச் சொல்லி விட்டேன் விளக்கமாய். இப்பொழுது. நான் தமிழ் ஆசான் அல்ல. இந்த மடலிலேயே, நானே கூட சிற்சில இடங்களில் பிழையாக எழுதி இருக்கலாம். இருப்பின், சுட்டிக் காட்டுக (உங்களுக்கு நேரம் இருப்பின்). திருத்திக் கொள்கிறேன். முனைவர். திரு இர. வாசுதேவன் எனக்கு அனுப்பிய சில முக்கியக் குறிப்புகள், இலக்கண விதிகளின் அடிப்படையில் நான் 'வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள்' பற்றிக் கற்றதை உங்களுடன் 'பகிர்ந்து' கொள்ள வந்திருக்கிறேன் - எளிமையாக, எல்லோருக்கும் மனதில் சென்று ஆழமாய்ப் பதியும் வகையில். எனக்கு எளிமை என்று தோன்றுவது உங்களுக்கு இல்லாமலும் போகலாம். இருப்பின், ஏன் என்று சொல்லுக. எப்படி இருந்திருக்கலாம் என்று சொல்லுங்கள். இந்த மடலின் தலைப்பைக் கூட எளிமை கருதியே 'வல்லெழுத்து மிகும், மிகா இடங்கள்' என வைக்கவில்லை.
நேரம் கிடைக்கையில், இம்மடல் குறித்த உங்கள் கருத்துகளைச் சொன்னால் மிகவும் மகிழ்வேன்.
உங்கள் நட்பையும் அன்பையும் என்றும் நாடுகிறேன்.
மிக்க பணிவன்புடன்
விசுவநாதன்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















