-
விக்கிரமாதித்தனும் [நானும்] வேதாளமும்
- புஷ்பா ராகவன்
காட்சி - 1
மதியம் 3 மணியிருக்கும். பொழுதும் போகவில்லை. தூக்கமும் வரவில்லை. என் ம்னைவி வேதா இருந்தாலாவது அவள் வாயைக் கிண்டிக்கொண்டிருக்கலாம் என்றால் அவளும் இன்று கோயிலில் சனி பெயர்ச்சியாம், 4 மணிக்கு ஹோமம் ஆரம்பம் என்று போய் விட்டாள். அதுவும் என் ராசிக்குத்தான் சனி பெயர்கிறதாம். என் நலம் வேண்டித்தான் போவதாகச் சொன்னாள்.
எனக்கு 40 வருடங்களுக்கு முன்பே சனிப் பெயர்ச்சிக்குக் கோயிலுக்குக் போய்த்தானே, பெயர்வதற்கு பதில் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்பது அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை, பாவம்.
[அவளைத்தான் குறிப்பிடுகிறேன் என்று சொல்லி விடாதீர்கள்]
எனக்கு சனி தசை இருப்பதால் தான் திருமணம் தள்ளிப் போகிறது என்று ஏதோ ஒரு ஜோசியர் சொல்லி விட்டாராம். என் அம்மவுக்குக் கவலை வந்து விட்டது.
[நினைவு வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு அப்போது 25 வயதுதான்.]
உடனே திருநள்ளாறு போய் சனி ப்ரீதி பண்ண வேண்டும் என்று நச்சரித்து, திருநள்ளாறு போனோம். அங்கேதான் ஆரம்பமாயிற்று சனி தசை. என் மனைவி வேதாவுக்குமா சனீஸ்வரர் பிடிக்க வேண்டும்? அவள் அம்மாவுடன் வந்திருந்த்தாள். ஒரே கூட்டம், அவள் எதிர்த் திசை க்யூவில் நின்றிருக்க, அப்போது பார்த்து எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் அவள் பின்னால் நின்றிருந்தார், அவரைப் பார்த்து நான் புன்னகை புரிய, வேதாவுக்கோ தன்னைப் பார்த்துத்தான் நான் சிரிப்பதாக நினைத்து வெட்கத்துடன் என்னை ஓரக்கண்ணால் பார்த்து அந்த நிமிஷமே தன் மனதை என்னிடம் பறி கொடுத்து விட்டதாகப் பின்னாளில் சொன்னதை நம்பிதானே ஆக வேண்டும்.
[அதிலிருந்து சாப்பிடுவதற்கும் பேசுவதற்கும் தவிர வாயை சிரிப்பதற்கும் பயன் படுத்துவதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.]
அவள் அம்மா, அப்பாவிடம் என்னைத்தான் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாய்ப் பிடிவாதம் பிடித்து, தன் ஒரே பெண்ணின் ஆசையை நிறைவேற்ற நான் பலிக்கடாவானது, இதெல்லாம் பழைய கதை.
அதை விடுங்கள். நிகழ்காலத்துக்கு வருவோம்.
ஆனால் ஒன்று, இப்போது எந்த நவக்கிரஹப் பெயர்ச்சிக்கும் போவதில்லை என்று விரதம் பூண்டிருக்கிறேன்.
நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு எனக்குத் துணையாக இருப்பது புத்தகங்கள்தான். அதுவும் குழந்தைகள் படிக்கும் அம்புலிமாமா, ட்விங்கிள், விக்கிரமாதித்தன் கதைகள்தான். சரி, ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்று புத்தக அலமாரியைத் திறந்தேன், என்ன ஆச்ச்ரியம்!
புத்தகங்கள் எல்லாம் அழகாக அடுக்கப்பட்டிருந்தன.
வேதா புத்தகம் படித்துவிட்டுத் தாறுமாறாக வைப்பாள். இன்று புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. பரவாயில்லை, திருந்தி விட்டாள் என்று மனதில் சந்தோஷப்பட்டேன். என் கண்ணில் சரியாகப் பட்டது விக்கிரமாதித்தன் புத்தகம்தான். எடுத்துக்கொண்டு வந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்த்கத்தைப் பிரித்தேன்.
வாசற்கதவு தட்டும் சத்தம் கேட்க, அதற்குள்ளாகவா வேதா வந்து விட்டாள் என்று மனதில் நினைத்துக்கொண்டே கதவைத் திறக்க எழுந்தேன்.
காட்சி - 2
"என்ன, வேதா [கவனிக்கவும்] அதற்குள் ஹோமம் முடிந்து விட்டதா? சீக்கிறம் திரும்பி விட்டாயே" என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தால், யாரும் இல்லை. "ச்சே ப்ரமையா?" என நினைத்துக்கொண்டே கதவை மூடுமுன் ஒரு காற்று என்னைத் தள்ளி விட்ட்து போல் இருந்தது. சமாளித்துக்கொண்டு கதவை சாத்தித் தாள் போட்டேன்.
மீண்டும் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிக்கும்போது, ''ஹஹ் ஹஹ் ஹா! அஹோ விக்கிரமாதித்த மகராஜனே, நலமா?'' என்ற குரலைக் கேட்டுத் திடுக்கிட்டேன்.
''யா.....யார்....யாரது?'' பயத்துடன் கண்களைச் சுழல விட்டேன், யாரும் புலப்படவில்லை. ''இன்னிக்கு என்ன எல்லாம் ஒரே மனப் பிராந்தியாய் இருக்கே'' என்று ஒரே குழப்பமாயிருந்தது.
திரும்பவும் புத்தகத்தின் பக்கம் விழிகளைத் திருப்பினேன்.
''நான் கூப்பிட்டது காதில் விழவில்லையா, விக்கிரமாதித்தா?" அதே குரல்.
இப்போது எனக்கு ஒரு சந்தேகம், ''ஒரு வேளை வேதாதான் ஏதாவது மேஜிக் பண்ணுகிறாளோ என்று நினைத்தாலும் அப்படியெல்லாம் அவளுக்கு ஏது சாமர்த்ர்தியம்?'' என்றும் ஒரு எண்ணம் ஓடியது.
''என்ன திருதிரு என்று விழிக்கிறாய்? என்னைத் தெரியவில்லையா? நான்தான் வேதாளம் வந்திருக்கிறேன். உற்றுப்பார்.'' என்றதும், ''உண்மையைச் சொல்லு, நீ வேதாவா? வேதாளமா? [இது கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், உறுதிப்படுத்திக் கொள்ள] கேட்டதும் பகபகவெனச் சிரித்தது.
''நீ நிறைய ஜோக்ஸ் எழுதுவாய் என்று தெரியும் தான், ஆனால் இந்த ஜோக் உலகத்திலேயே மிக சிறந்த ஜோக். நகைச்சுவை சூடாமணி என்ற பட்டமே கொடுக்கலாம்'' என்றதும், ''அதெல்லாம் கிடக்கட்டும் உனக்கு தைரியம் இருந்தால் உன் மூஞ்சியைக் காட்டு' 'என்றேன் கொஞ்சம் கோபத்துடன்.
தூக்கம் போனது ஒரு பக்கம், புத்தகம் படிக்க முடியாத நிலை ஒரு பக்கம், எரிச்சல் எனக்கு.
''இரு, இரு பதட்டப்படாதே, கண்ணை மூடிக்கொண்டு என்னை நினை, நான் தெரிவேன்'' என்றது.
அதேபோல் கன்ணை மூடி திறந்தால் என்ன ஆச்ச்ரியம்! ஜகன்மோகினியில் வருமே வெள்ளையாக ஒரு புகைமண்டலம். அப்படி ஒரு புகை போல ஒரு உருவம் அந்தரத்தில் நின்று கொண்டிருந்தது.
"ஆஹா! எந்த ஷூட்டிங்கிலிருந்து வருகிறாய்? விட்டாலாச்சார்யா படமா? ராமநாராயணன் படமா/?" என்று கேட்டதும், "என்ன விளையாடுகிறாயா, நான் நிஜ வேதாளம் தெரியுமா? உன்னைப் பார்த்து வெகுநாளாகி விட்டதால் உன்னுடன் சிறிது நேரம் அளவளாவிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்." என்று பேச்சை முடித்தது.
ஆஹா! என்ன அருமையான தமிழ்! உடம்பு புல்லரித்தது. "ஆமாம், என்னை விக்கிரமாதிதன் என்று கூப்பிடுகிறாயே, என் பேர் பரசுராமனாக்கும்" என்றேன் பெருமையுடன்.
"ஆனால் எனக்கு நீ விக்கிரமாதிதன் மாதிரிதான் தெரிகிறாய், நான் உன்னை அப்படித்தான் கூப்பிடுவேன்" என்றது. விடாப்பிடியாக.
சரி எதுவாக இருந்தால் என்ன? கொஞ்ச நேரம் ராஜாவாகத்தான் இருந்து விட்டு போலாமே. இதன் ஆசையையும் கெடுப்பானேன்.
''ஆமாம், கேக்கணும்னு நெனைச்சேன், இத்தனை நாள் நீ எங்கே இருந்தே? திடீருன்னு என்னை பார்க்கணும்னு வந்திருக்கே?'' என்று கேள்விக்கு மேல் கேள்வியாய் அடுக்கி கொண்டே போக..'
இரு, இரு சொல்றேன். உன் வீட்டு பக்கத்தில் இருக்கிற முருங்கை மரத்தில்தான் என் ஜாகை, இன்றுதான் உன்னைப் பார்க்கும் சந்தர்ப்பம் கெடைச்சது'' என்றதும் மனதுக்குள் வேதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன்.
காட்சி - 3
"சரி, சரி எனக்கும் பொழுது போகவில்லை, உட்கார்,சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாம், வேதா வருவதற்குள் எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவும் பேசிவிடலாம்." என்றதும் "ஏன் உன் மனைவியிடம் அவ்வளவு பயமா?" கேட்டது வேதாளம்.
"அதெல்லாம் ஒரு மண்ணுமில்லே. நம்மைப் பேச விடாமல் அவளே பேசிக்கொண்டிருப்பாள்" என்றேன்.
"அதுக்கு முன்னாலே எனக்கு ஏதாவது சாப்பிட கொடுக்கிறாயா.ஒரே பசி .என்ன வைத்திருக்கிறாய்" என்று கேட்டுக் கொண்டே சமையல் அறைக்குள் செல்ல, நானும் அதன் பின்னே சென்றேன்.
வேதா கோயிலுக்குப் போவதற்கு முன் எனக்கு டிஃபன் செய்து கொடுத்து விட்டுத்தான் சென்றாள்.
"பரவாயில்லையே, கணவன் மேல்தான் எத்தனை அக்கறை!" என்று வேதாளம் சொன்னது.
"என் மேல் எந்த அக்கறையும் கிடையாது, மதியம் ஒரு மணிகெல்லாம் டாணென்று காஃபியும், அதைத் தொடர்ந்து டிஃபனும் நிச்சயம் அவளுக்கு வேண்டும். அவள் நினைப்புக்கு மறு பேச்சு எப்போதும் நான் பேசியது கிடையாது. தயவு செய்து மறுபடியும் அவளிடம் எனக்கு பயம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். அனாவசியமான விவாதம் வேண்டாமே என்று பெரும்பாலும் நான் விட்டு கொடுத்து விடுவேன். [தரையில் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை] என்று சொல்வதாக நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது. ஆனாலும் அதுதான் உண்மை என்று நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள். சரி விஷயத்துக்கு வருவோம். ஒப்புக்கு என்ன டிஃபன் பண்ணட்டும் என்று கேட்பாள். எனக்கு பிடித்ததைச் சொன்னாலும் அவளுக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்வதுதான் இதுவரையில் நடை முறையில் நடந்துகொண்டிருக்கு. ஆனால் இன்று மட்டும் என்னவோ தெரியவில்லை, "இன்று பஜ்ஜி செய்யேன் வேதா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு" என்றதும் வழக்கம்போல், "அதுக்கென்ன செஞ்சுட்டாப் போச்சு" சொன்னவள் ஆச்ச்ரியமாய் நிஜமாகவே பஜ்ஜி செய்தாள்.
பஜ்ஜியைப் பற்றி ஒரு மலரும் நினைவு. எனக்குச் சின்ன வயசுலேர்ந்தே பஜ்ஜின்னா உயிர், அதுவும் என் அம்மா நன்னாவே ப்ண்ணுவா. நன்னா உப்பிண்டு பொன்னிறமா நன்னா இருக்கும். என் அம்மா கூடச் சொல்லுவா, "பஜ்ஜி சாப்பிட்டே உன் நாக்கு நன்னா வளர்ந்துருக்கு"ன்னு. என்ன பண்றது நன்னா இருந்தா ஒரு பிடி பிடிக்கத்தானே தோணும்.
திருமணம் முடிந்து தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்குப் போயிருந்தேன். முதல் நாளே வேறு போய் விட்டேனா, அவர்கள் வீட்டில் ரொம்பவும் சந்தோஷம், நம்மையும் மதித்து மாப்பிள்ளை வந்தாரே என்று ஏக உபசாரம் எனக்கு.
தீபாவளியன்று காலையில் போனால் போதும், உள்ளூர்தானே என்று வேதாவிடம் சொன்னதும், வீட்டில் கன மழை. [வேறு ஒன்றுமில்லை என் அருமை மனைவியின் கண்களில் இருந்து அருவியெனப் பொழிந்த கண்ணீர் மழைதான்.]
புது மனைவி கண்ணீர் விட்டால் மனசு தாங்குமா? நீயே சொல்லு என்றேன் வேதாளத்திடம் ..
காட்சி - 4
நீயே சொல்லு என்றேன் வேதாளத்திடம் ........
அதுவும் சரிதான், என்று ஆமோதித்தது. (flash backஐ தொடர்ந்தேன்)
நாங்கள் போய் சேர்ந்த சிறிது நேரத்துக்கெல்லாம் என் மாமியார் வேதாவிடம், ''வேதா, மாப்பிள்ளைக்கு என்ன டிஃபன் ரொம்ப பிடிக்கும்னு சொல்லு ப்ண்ணித் தரேன்'' என்று ஆசையாகத்தான் கேட்டார். அது அவர்கள் தப்பில்லை.
என் மனைவிக்குத்தான் நாக்கில் ராகுவோ, கேதுவோ புகுந்து ஆட்டிவைத்தது. எனக்கு பஜ்ஜி ரொம்பவும் பிடிக்கும் என்று சொல்ல'' இவ்வளவுதானே, இதோ ஐந்து நிமிடத்தில் பண்ணி விடுகிறேன்'' என்று கச்சை கட்டிக்கொண்டு சமையல் அறைக்குச் சென்று பஜ்ஜி தயாரிப்பில் ஈடுபட, வேதாவும் அவளுக்கு உதவியாக புகுந்து விட, நானும் சிறிது நேரம் அவர்கள் வீட்டு ஹாலில் அமர்ந்து டி.வி.யில் ஒரு பாடாவதிப் படத்தை விதியே என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஐந்து நிமிடத்தில் பஜ்ஜி செய்து விடுவேன் என்று சொன்ன மாமியார் அரை மணி நேரமாயும் வெளியே வரவில்லை. வேதாவையும் காணவில்லை. எனக்கோ பசி, தூக்கம், அப்படியே சோபாவில் படுத்து அரைத் தூக்கம் போட்டிருப்பேன்.
''ஏன்னா, எழுந்திருங்கோ பஜ்ஜி சாப்பிடுங்க்கோ'' என்ற மனைவியின் குரலில் அரக்கப்பரக்க எழுந்தவன் ஆவலோடு டிபன் தட்டை வாங்கியவன், ''என்ன வேதா, பஜ்ஜி எங்கே? வேறே எதோ டிபன் இருக்கே!" என்று சந்தேகமாய் கேட்க, ''விளையாடாதீங்கோன்னா, நன்னா பாருங்கோ" என்று சொல்ல நானும் கண்ணைக் கசக்கிகொண்டு பார்த்தேன். ஊஹூம், வாழைக்காய், உருளைகிழங்கு, வெங்காயம் எல்லாம் வறுவலாகி ஏதோ போல உருமாறியிருந்தது. சொல்லத் தெரியவில்லை. மேலே மாவு தோய்த்த அறிகுறியே இல்லை. அவளிடம் சொன்னேன், அதற்கு அவள், ''ஏன்னா, எங்கம்மாவுக்குத் தெரிஞ்ச வரைக்கும் ஆசை ஆசையா முதமுதல்லே மாப்பிளைக்குன்னு பண்ணியிருக்கா, குத்தம் சொல்லாம சாப்பிடுங்க'' என்றாள் சிணுங்கலுடன். அவள் ஆசையையும் கெடுப்பானேன் என்று கடவுளை வேண்டிக்கொண்டு தட்டிலிருந்து ஒன்றை எடுத்து வா...வா.. யில் போ..போட்டேன். போட்டதை முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அவஸ்தைப் படுவதைப் பார்த்த என் தர்மபத்தினி, "என்னன்னா... என்ன ஆச்சு?" என்று பதற, வாயைத் திறந்து பேச முடியாமல் ஜாடையிலேயே தண்ணீ, தண்ணி என்றேன்.
''இதோ, எடுத்துண்டு வர்றேன்'' என்று உள்ளே ஓடியதும் சடக்கென்று பக்கத்தில் கிடந்த நியூஸ் பேப்பரில் தட்டில் உள்ளதையும், வாயில் இருந்ததையும் துப்பி (வரும்போதே வராந்தாவில் குப்பைக் கூடை பார்த்த நினைவு வர) அப்படியே அத்தனையையும் கடாசினேன். வாஷ்பேசினில் வாய் கொப்பளித்து விட்டு சமர்த்தாக வந்து சோபாவில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரு நொடியில் நடந்தேறியது. தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த வேதா, ''அட! அதற்குள்ளாகவா சாப்பிட்டுட்டீங்க? எப்படீன்னா இருந்த்து?'' என்று கேட்டதும், ''சூப்பர் பஜ்ஜி வேதா, அடடா! என்னமா மொறுமொறுன்னு இருந்தது தெரியுமா? வாயிலே போட்டதும் வழுக்கிண்டு உள்ளே என்னமா போச்சு'' என்று மனசாட்சிக்கு விரோதமாய் அன்றுதான் முதலும் கடைசியுமாய் ஒரு பொய்யைச் சொன்னேன். அதில் மகிழ்ந்து போன மனைவி ''இருங்கோன்னா, இன்னும் இரண்டு பஜ்ஜி சூடா கொண்டு வர்றேன்'' என்றதும், ''அய்யய்யோ! வேதா, இது சாப்பிட்டதே வயிறு ரொம்பிப்போச்சு. அதுவும் எனக்குத்தான் GAS பிராப்ளம் என்று தெரியுமே உனக்கு. வேண்டாம்.'' என்று நிர்த்தாட்சண்யமாய் மறுத்து விட்டேன்.
உடனே என் மாமியார், ''அதெல்லாம் சிலிண்டர் ஃபுல் இருக்கு கவலைப்பட வேண்டாம்னு மாப்பிள்ளைக்கு சொல்லு வேதா'' [நான் வயிற்று GAS பிராப்ளம் என்று சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார், பாவம்] என்றார்.
பிறகென்ன, மறுநாள் தீபாவளியை நல்ல விதமாய்க் கொண்டாடிவிட்டு, என் மாமியார் பட்சணம் என்று கொடுத்ததையும் தேமேன்னு வாங்கிண்டு வந்து சேர்ந்தோம்.
பட்சணத்தைவிட லேகியம் நன்றாக இருந்தது வேறு விஷயம்.
இப்படியாகத்தானே என் பஜ்ஜி புராணம் இன்று வரை தொடருகிறது.
(flash backஐ வேதாளத்திடம் முடித்தேன்)
வேதாளம் அதற்க்கு, ''அப்ப்டீன்னா, உன் ம்னைவி செய்த பஜ்ஜியை சாப்பிடலாமா? சாப்பிடர மாதிரி இருக்குமா?'' என்று சந்தேகமாய் வேதாளம் இழுக்க, ''தாராளமா சாப்பிடு, எங்கம்மா அவளுக்கு சொல்லிக்கொடுத்து நன்னாவே பண்ணறா வேதா'' என்று சற்றுப் பெருமையுடன் சொன்னேன். பாத்திரத்தில் மூடி வைத்திருந்த பஜ்ஜியை அதனிடம் கொடுத்தேன். ''பஜ்ஜி என்று சொல்கிறாய், இதென்ன ஆக்டோபஸ் மாதிரி, நட்சத்திரம் மாதிரி டிசைன் டிசைனா இருக்கே?''
அது ஒண்ணுமில்லே, முதல்லெ போடற பஜ்ஜியை நன்னாத்தான் போடுவா, கடைசீலே மாவு கொஞ்சமா இருக்கும் இல்லியா? மிஞ்சிப் போன காய் எல்லாத்தையும் போட்டு ஒண்ணாக் கலந்து துக்கடாவா போட்டுடுவா, ஆனா இதெல்லாம் ராத்திரிக்கு மோர் சாதத்துக்குத் தொட்டுக்க எனக்குப் போட்டுடுவா. நல்லதெல்லாம் அவா போட்டுண்டுடுவா, இன்னிக்கு உனக்கு அடிச்ச்து யோகம் நீ சாப்பிடு'' என்று பெருந்தன்மையாய் விட்டுக்கொடுத்தேன், [அப்பாடா! இன்னிக்குத் தப்பிச்சேன்!] என்று மனம் ஆனந்த ராகம் பாடியது. வேதாளத்திற்க்கு நல்ல பசி போலும், சாப்பிட்டு வேதாளம் ஏப்பம் விட்டது.
''சரி, சரி சாப்பிட்டு முடிச்சாச்சில்லே, கிளம்பு, கிளம்பு'' என்று அவசரப்படுத்தினேன்.
வேதா வருவதற்குள் இதை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பரபரப்பு என்னுள்.
இரு, இரு போகிறேன், போவதற்கு முன் உன்னிடம் ஒரு புதிர் சொல்லி விடை கேட்டுத் தெரிந்து கொண்டு போகிறேன்.'' என்று சஸ்பென்ஸில் அது நிறுத்த, என்ன கேட்கபோகிறதோ என்று எனக்கு பகீரேன்றது.
நானும் அவ்வண்ணமே நிறுத்துகிறேன். ------------------- "என்ன புதிர் போடப்போகிறதோ தெரியவில்லையே இது? சரியாக மாட்டிக்கொண்டோமே இதனிடம்" இதை நான் மனதில் நினைத்தது எப்படி தெரிந்ததோ, "கவலைப்படாதே விக்கிரமாதித்தனே,சுலபமான சின்ன புதிர்தான்"' என்று சிரித்துக்கொண்டே சொன்னது.
"எதுவாக இருந்தாலும் சீக்கிறம் சொல்லி முடி.. என் வேதா வந்தால் பிரச்சினை ஆகிவிடும்." என்றேன் சிறிது கண்டிப்புடன்.
"என்ன, ஆனாலும் உன் மனைவிக்கு இப்படி பயந்து சாகிறாய்?" என்றது நக்கலாக.
"மறுபடியும் சொல்றேன், எனக்கு எந்த பயமும் இல்லை, நீதான் அவளைப் பார்த்து பயப்படுவாய்" [சும்மாவானும் அப்படியாவது சொன்னால் புதிர் போடாமல் ஓடிப் போகாதா என்ற நப்பாசைதான்.]
அது எனக்கும் பெப்பே, உனக்கும் பெப்பே என்றது, "அஹோ! கேளாய் ராஜனே, ஒரு ஊரில் புதிதாய்க் கல்யாணம் ஆன தம்பதி இருந்தனர். கல்யாணம் ஆனதிலிருந்து எப்போதும் அவர்களுக்குள் சண்டைதான். அதுவும் கணவன் தாழ்ந்து போனாலும் மனைவி மட்டும் விட்டுக்கொடுத்துப் போகமாட்டாள். பிறந்த வீட்டிலும் செல்லமாய் வளர்ந்தவளாதலால், அடிக்கடி கோபித்துக்கொண்டு பிறந்தவீடு போய் விடுவாள். பாவம் அவன் என்ன செய்வான்? இவளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது? தலையைப் பிய்த்துக்கொண்டான். எல்லா வேலையும் அவன்தான் செய்வான். எத்தனை நாள்தான் பொறுத்துக் கொள்வான். அவனுக்கு ஒரு ஆருயிர் நண்பன் இருந்தான். அவனிடம் விஷயத்தை சொல்லி இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லச் சொன்னான். நண்பன் நல்ல புத்திசாலி. அவர்கள் சந்தோஷத்துக்கு நல்லதொரு தீர்ப்பைச் சொல்ல, அதைச் செயல் படுத்த, இப்போது எந்த சண்டையும், சச்சரவும் இல்லாமல் அவர்களின் இல்லறம் இனிதாய் இருந்தது."
சொல்லி முடித்த வேதாளம், "ஏ ராஜன், இப்போ சொல்லு, அந்த நண்பன் சொன்ன யோசனை என்ன? விடை தெரிந்தும் நீ சொல்லவில்லையென்றால்....." என்று நிறுத்த, "என்ன? என் தலை சுக்கு நூறாகி விடும் என்று சாபம் இடப்போகிறாயா?" என்றேன் கேலியாக."
"அதுதான் இல்லை, மறுபடியும் நாளை வந்து இன்னொரு புதிர் போடுவேன்" என்றது.
"அய்யய்யோ! வேண்டாம், வேண்டாம்.... நீ வந்தாலும் வந்து விடுவாய், இதோ சொல்கிறேன்" என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டேன். "அவன் நண்பன் சொன்னது என்னன்னா, 'கண்ணே, நீ அழுதாலே இவ்வளவு அழகாயிருக்கும்போது சிரித்தால் இன்னும் அழகாயிருப்பாய் தெரியுமா? சண்டை போடும்போது கூட உன் குரல் எத்தனை இனிமை தெரியுமா? நீ சமைத்தால் சாப்பாட்டில் சுவை அதிகரிக்கும், நீ வீட்டில் எப்போதும் என்னுடன் இருந்தால் வீடும் எத்தனை பிரகாசமாய் சோபிக்கும், நீ உன் பிறந்த வீட்டுக்கு போகும்போதெல்லாம் என் மனம் உன்னையே நினைத்து எத்தனை நாள் ஏங்கியிருக்கு என்று உனக்குப் புரியாது. இப்படியெல்லாம் அவளை முகஸ்துதி செய்து புகழ்ந்து தள்ளினால் எப்போதும் உன்னையே சுற்றி வருவாள். ஏனென்றால் புகழ்ச்சிக்கு மயங்காத பெண்களே உலகத்தில் கிடையாது.' எப்படி என் விடை சரிதானே?" என்றேன்.
"சரியாகத்தான் சொன்னாய், எ.. எப்.. எப்படி உனக்குத் தோணிற்று?" என்றுகேட்ட வேதாளத்திடம், ''ஹி...ஹி, நாற்பது வருஷமா என் வீட்டிலும் இதே தானே நடந்து கொண்டிருக்கு" என்றேன் அசட்டுப் பெருமையுடன்.
"சரி சரி, நான் கிளம்புகிறேன், மறுபடியும் நாளை பார்க்கலாம்" என்றதும், "ஒரு மாசம் ஊருக்குப் போகிறேன், வராதே" என்று வாழ்நாளில் இன்னொரு பொய்யையும் சொல்ல வேண்டியதாகப் போச்சு.
"அப்படீன்னா சரி, ஒரு மாசம் கழித்துப் பார்க்கலாம்" என்றது விடாக்கண்டனாய். ஒரு வழியாய் அது வெளியேறியது. கதவை சாத்திவிட்டுப் படுத்...... படபடவெனக் கதவு தட்டப்பட, ஆத்திரத்துடன் எழுந்தவன், "அட வேதாளமே [இப்போதும் கவனிக்க], நீ இன்னுமா பொகலே?" "சொல்லிக்கொண்டே கதவைத் திறக்க, என் வேதா நின்று கொண்டிருக்க, நான் அசடு வழிய, என்னைப் பார்த்துக் கண்களை உருட்டி கொண்டே [ஏற்கனவே அவளுக்குப் பெரிய கண்கள்], "என்னைப் பார்த்தால் வேதாளமாய்த் தெரிகிறதா? அப்படி இளப்பமாய்ப் போய் விட்டேனா? நீங்க ஷேமமா இருக்கணும்னு கோவிலுக்குப்போய் உங்க பேருக்கு அர்ச்சனை செஞ்சுட்டு வந்த்ததுக்கு எனக்கு வேதாளப்பட்டமா?" என்று அவளிடம் இருந்து எனக்கு அர்ச்சனை கிடைத்தது.
அவளிடம் விஷயத்தை மறைக்க விரும்பாமல் வேதாளம் வந்து போன விஷயத்தை மட்டும் சொன்னேன் [புதிர்க் கதையை மட்டும் சொல்லவில்லை. வீண் பிரச்சினை வேண்டாமென்று].
''என்ன பகல் கனவா? சும்மா என்னை சமாதானப்படுத்தக் கதை விடறீங்களா? இதையெல்லாம் நம்ப நான் ஒண்ணும் முட்டாள் இல்லை" என்று சொல்ல, அவளை சமையல் அறைக்கு அழைத்துப் போய், "பார், நீ எனக்கு ராத்திரி மோருஞ்ச்சாதத்துக்கு தொட்டுக்க வைத்திருந்த பஜ்ஜியை சாப்பிட்டிருக்கு" என்று காண்பிக்க, "நல்லா பாருங்க, நான் வச்சிருந்த பஜ்ஜி அப்படியே இருக்கு, யாரை ஏமாத்தறீங்க?"
அட! ஆமாம், சே..சே... விதி யாரை விட்டது? இன்னிக்கும் இது (பஜ்ஜி) எனக்குத்தானா? அப்படின்னா நிஜமாவே நான் கனவுதான் கண்டிருக்கேன். வேதாவை எப்படி நம்ப வைப்பது?
"என்ன,திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுத்தா?" வேதாவின் வார்த்தைகள் ஊசியாய்க் குத்த, ஹா.. ஹா முருங்கை மரத்தில்தானே அதன் ஜாகை, நினைவு வந்ததும் அதையே கூப்பிட்டு வேதாவிடம் சொல்லச் சொல்லலாம் என்று பக்கத்துக் காலி இடத்தைப் பார்த்தால் மரம் காணோம்.
"வேதா, இங்கே ஒரு முருங்கை மரம் இருந்ததே எங்கே?" என்று கேட்க, "அதை வெட்டி ஒருமாசம் ஆச்சே, நினைவு இல்லையாக்கும்" என்று நொடித்தாள்.
சரி, இனி என்ன செய்ய முடியும். கொஞ்ச நாளைக்கு இவள் வாயில் விழுந்து புறப்படணும்னு விதி இருக்கும்போது அதை மாத்தவா முடியும்?
இருந்தாலும் மறுபடியும் வேதாளம் வருமோ, அப்படி வந்தால் உங்களிடம் சொல்லட்டுமா? [ஆனால் எனக்கு மட்டும் கதை [விட] எழுத ஒரு நல்ல கரு கிடைத்த சந்தோஷம்].
சுபம். ரா.புஷ்பா.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















