மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

சிந்துக்குத் தந்தை

கைலாசபதி

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management

சிந்துக்குத் தந்தை

எட்டயபுரத்திலே கவிதைப் பாலைவனத்தில் வாழ்ந்த பாரதியார் ஷெல்லி முதலிய ஆங்கிலக் கவிகளைப் படித்தவராதலால், பொதுவான இப்போக்கிற்கு விலக்கின்றிச் 'சொனேற்' பாவுடனேயே பத்திரிகை உலகை எட்டிப் பார்த்திருக்கிறார். மதுரையிலிருந்து வெளிவந்த "விவேகபானு" பத்திரிகையின் ஜூலை மாத இதழில் தனியிரக்கம் என்ற பாடல் (சொனேற்) கடினநடையில் வெளிவந்தது, கடின நடையாயிருப்பினும் சாஸ்திரியாரது பாடலிலும் உணர்ச்சி மிகுந்ததாகவே உள்ளது.

"குயிலினாய்! நின்னோடு குலவியின் கலவி
பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்து பின்
இன்றெனக் கிடையே எண்ணில் யோசனைப்படும்
குற்றமும் வளமும் கொழிதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைந்தால்
பாவியேன் நெஞ்சம் பகிரெனல் அரிதோ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள்! முன்னர் யான் அவளுடன்
உடம்பொடும் உயிரென உற்று வாழ் நாட்களில்
வளியென பறந்தநீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயலையென் இயம்புவல் சிவனே
மயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே."

புலவர் கந்தசாமி நடாத்திய பத்திரிகைக்கு அனுப்பிய இக்கன்னி முயற்சியைக் கடினமான பண்டித நடையில் எழுதியிருப்பது உண்மையே. ஆனாலும், பிற்காலத்தில் அவர் எழுதிய குயில்பாட்டு, சுயசரிதை, முதலிய பாடல்ளின் தோற்றத்தை இதிற் சந்தேகத்திற்கு இடமின்றிக் காணக் கூடியதாக இருக்கிறது. அதற்கும் மேலாக, கவிஞனது உள்ளத்தைக் காண்கின்றோம். பாரதி தன்னுணர்ச்சிக் கவி என்பது இதில் நிரூபணமாகிறது. குயில், விதி, நெஞ்சம், பாவியேன், குலவி, முதலிய சொற்கள் பிற்காலக் கவிதைகளில் பாரதியாரால் வழங்கப்பட்டிருக்கும் வேகத்தை அறிபவருக்கு இப்பாடல் இனிக்கும்.

மேற்கூறிய பாடலை மட்டுமன்றி யான், சந்திரிகை முதலிய கவிதைகளையும் சொனேற் பாக்களாக எழுதியுள்ளார் பாரதி. அவை பற்றியும் வெகு விரைவிலேயே அத்தகைய முயற்சிகளிலிருந்து அவர் 'விடுதலை' பெற்றது பற்றியும் சற்றுப் பின்னர் கவனிப்போம். இவ்விடத்தில் நாம் மனங்கொள்ள வேண்டியது ஒன்று தான். பாரதியாரது சமகாலப் புலவரிடத்துக் காணப்படும் இரு பண்புகளாம் பழந்தமிழ் நடையும், ஆங்கில வாடையும் தொடக்கத்தில் தவிர்க்க முடியாதபடி பாரதியிடத்துங் காணப்படுகின்றன. ஆனால் மற்றையோர் தொடர்ந்து அப்பண்புகளுக்கு உருவங்கொடுத்துக் கொண்டிருக்க, பாரதியோ மின்னல் வேகத்தில் புதுப்பிறவி பெற்றவன் போல் தனிப்பாதையொன்றை வகுத்துக் கொள்கிறான். இதிலேதான் அவன் தனது சகபாடிகளிலிருந்து விலகி, முன்னோடிகள் சிலரைச் சார்ந்து கொள்கின்றான்.

இம்மாற்றம் நூற்றுக்கு நூறு வீதம் திடுமெனத் தோன்றியது அல்ல; முற்று முழுதான படிமுறை வளர்ச்சியுமல்ல. இரண்டும் கலந்த தனிச்சிறப்பான நிலையெனலாம். நாம் ஏலவே பார்த்ததுபோல, தனது தந்தைக்கு நிகழ்ந்த பேரிடியும் அதற்கு முழுக் காரணமாக இருந்த அந்நிய பொருளாதார அமுக்கமும் பாரதியை பதினைந்தாம் பதினாறாம் வயதிலேயே 'வெள்ளைக்கார விரோதி' ஆக்கியிருந்தன. நண்பர் சிதம்பரரகுநாதன் குறிப்பிட்டுள்ளது போல, "பாரதியின் தேச பக்திக்கான அடிப்படை அவனது 15-வது வயதிலேயே இதயத்தில் பதிந்துவிட்டது என்று நாம் திட்டவட்டமாகக் கொள்ளலாம். எனினும் இதயத்தின் அடியாழத்தில் பதிந்த அந்த அடிப்படைமீது அவனது உள்ளத்தில் தேசபக்தி சுபகிருது ஆண்டில், 1902-ம் ஆண்டில் அல்லது 1903 தொடக்கத்தில், ஆழமாகக் குடிகொள்ளத் தொடங்கியது..." (பாரதி: தேசபக்தியின் தோற்றம்', தாமரை, செப்.1967).

இத் தேசபக்தியைத் தத்துவ தரிசனம் போலத் தனக்கேயுரிய பாணியில் பாரதி எழுதியுள்ளான். 1909இல் வெளிவந்த "ஜன்மபூமி" என்ற நூலுக்கு (ஸ்வதேச கீதங்கள் - இரண்டாம் பாகம்) புதுவையிலிருந்து எழுதிய முகவுரையில் பின்னோக்கிப் பார்க்கிறான்:

"சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருதி மட்டுமேயன்றி அசேதனப் பிரகிருதியும், புதிய ஜீவனையும் உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றன. இவற்றினை யொப்பவே, நாட்டில் ஓர் புதிய ஆதர்சம் - ஒர் கிளர்ச்சி - ஓர் மார்க்கம் தோன்றுமேயானால் மேன்மக்களின் நெஞ்ச மனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர்போல அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில் சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய "தேசபக்தி" என்ற நவீன மார்க்கம் தோன்றியது, நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறையுடையவனாகிய யானும் தேவியினது கிருபையால் அப்புதிய சுடரினிடத்து அன்பு பூண்டேன். மாதாவும் அதனை அங்கீகாரம் செய்து கொண்டாள்."

இவ்வரிகள் நூலுக்கு முகவுரையாக மாத்திரமல்லாது கவிஞனது பிரகடனமாகவும் அமைந்துள்ளன. 1902ஆம் ஆண்டிற்கும் 1905ஆம் ஆண்டில் நிவேதிதா அம்மையாரைச் சந்தித்த நிகழ்ச்சிக்கும் இடையில் பாரதி வெகு துரிதமாக நவீன மார்க்கத்தால் - தேச பக்தியால் - ஆகர்ஷிக்கப்பட்டு விட்டான். இதுவே கவிதையிற் காணும் புரட்சிக்குக் காரணம். இது ஆழ்ந்து கவனிக்க வேண்டியது. கவிதா வாழ்வின் ஆரம்பத்தில் எல்லோரையும் போலவே, ஆங்கில சொனேற் முறையைப் பின்பற்றியும், 'சங்க' யாப்பான' அகவற்பாவைக் கருவியாகக் கொண்டும் சொந்த விவகாரங்களைச் சம்பிரதாயமான முறையில் பாடுகிறான். அக்காலப் பாடல் தலைப்புக்களே, இவ்வுண்மையை எடுத்துக் காட்டுகின்றன. சந்திரிகை, யான், தனிமையிரக்கம் முதலியன தனது சொந்த மன உளைவுகளைக் கவிப்பொருளாகக் கவிஞர் கொண்டாடுவதைக் காட்டி நிற்கின்றன. ஆனால் நவீன மார்க்கத்தைத் தழுவியவுடனேயே "தன்னை" மறந்து தனக்கு அப்பாற்பட்டு விரிந்து பரந்த புறஉலகுடன் தன்னைப் பிரிக்க முடியாதபடி பிணைத்துக் கொள்கிறான். இறை பக்தியைப் பாடிய மாணிக்கவாசகர்,

"அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன்...."

என்றார்.பாரதியாருக்குத் தேசபக்தி அவ்வாறே இருந்தது. நாவுக்கரசர் பாடினார்:

"தன்னை மறந்தாள்தன் நாமம் கெட்டாள்;
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"

அதுபோலப் பாரதியாரும் தனிமை இரக்கங்களை யெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தன்னையும் தனது கவிமலர்களையும் தலைவிக்குச் சமர்ப்பித்தார். அந்தக் கணத்திலேயே அகவல், சொனேற் முதலிய யாப்பு எல்லைகள் மறைந்து புதிய உத்வேக கீதங்கள் உருப்பெறத் தொடங்கிவிட்டன. பழைய இறை பக்தர்களின் குதூகல உணர்ச்சியும், "நாமார்க்குங் குடியல்லோம்; நமனை அஞ்சோம்" என்ற ஆன்ம வீரமும் அவரது வார்த்தைகளில் பொதுளத் தொடங்கின. தனிமையிலிருந்து நெஞ்சோடு புலம்பிய நிலைபோய் உள்ளக் களிப்பையும் உறுதியையும் உலகை நோக்கி உரத்துக் கூவும் உளப் பாங்கு தோன்றியது. அந்நிலையில் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டில் அதுகாலவரை கேட்காத புதுயுகக் குரல் ஒலித்தது. "வந்தே மாதர மென்போம்" என்ற கீதத்தை அறியாதவர் இலர். இப்பொழுது அச்சிலுள்ள பாரதி கவிதைத் தொகுதிகளில் இடம்பெறாத பா ஒன்றை மட்டும் உதாரணங் காட்டுவோம்; 'வந்தே மாதரம்' கீதத்தின் ஆறாவது சரணம் அது.

"தேவிநம் பாரத பூமி - எங்கள்
தீமைகள் யாவையுந் தீர்த்தருள் செய்வாள்
ஆவியுடல் பொருள் மூன்றும் - அந்த
அன்னை பொற் றாளினுக் கர்ப்பிதமாக்கி."

நவீன மார்க்கத்தைக் கடைபிடித்த பின், பாரதி பாட்டுக்கள் பாடினான்; அவனது சகபாடிகள் செய்யுட்கள் எழுதினர். "வந்தேமாதர கீதத்"தைப் பாடுவதற்கு முன்பே, 1905 செப்டம்பர் 14ஆம் தேதி சென்னைக் கடற்கரையில் நடந்த சுதேசிய மாணவர் பொதுக்கூட்டத்தில் பாரதி "வங்கமே வாழிய" என்ற தலைப்பில் சில கீதங்கள் பாடியிருக்கிறான். பாரதியார் பாடி வெளிவந்த முதலாவது தேசாவேசப்பாடல் இதுவேயாகும். இவை யாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது ஓருண்மை புலப்படுகிறது. நவீன மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பாரதி, கவிதையை மக்களோடு தொடர்பு கொண்டு, உரையாடி உறவாடும் சாதனமாகப் பயன்படுத்தினான். படுத்தவும், அதன் பண்பும் பணியும் பயனும் மாறின. தனது சகபாடிகளினின்றும் வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டான். ஆகவே இறுதி ஆய்வில் இலக்கியத்தின் உள்ளடக்கமே உருவத்தை நிர்ணயிக்கிறது என்னும் கூற்றுக்குப் பாரதியின் பரிணாமம் மறுக்கவொண்ணாச் சான்று பகர்கிறது.

(Article from the Book on Bharathiar by Sri Kailasapatthy)

ஸ்ரீனிவாசன்

ஆசிரியரின் இணையதளம்:

www.geocities.com/seenufour

அத்தியாயம் 3

YOUR FEEDBACK FOR THIS STORY
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com