Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
சிந்துக்குத் தந்தை
கைலாசபதி


சிந்துக்குத் தந்தை

இனி, வேறு சிலர் ஆங்கிலக் கவிதைகளைப் போலத் தமிழிலும் இயற்றிப் 'புதுமை' காண விழைந்தனர். இவர்களுக்கு எடுத்துக் காட்டாகப் பரிதிமாற் கலைஞர் எனத் தமது பெயரை மாற்றியமைத்துக் கொண்ட வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியாரைக் கொள்ளலாம். இத்தாலிய இலக்கியத்தினின்று பதினாறாம் நூற்றாண்டில் ஆங்கிலத்துக்கு இடம் பெயர்ந்த 'சொனெற்' (Sonnet) என்னும் செய்யுள் வடிவத்தை அவர் தமிழிற்கு அறிமுகப்படுத்த முனைந்தார். தனிப்பாகரத் தொகை என்ற தொகுதி வெளிவந்தது. டாக்டர் போப்பையரின் பாராட்டுரை அதற்குக் கிடைத்தது. ஆனால் 11-7-1901இல் போப்பையர் எழுதிய அணிந்துரை பொருளாழம் மிகுந்த கேள்விகளைக் கொண்டதாயிருந்தது. பரிதிமாற் கலைஞர் இப்பாசுரங்களைப் படைத்துக் கொண்டிருக்கும்போது பாரதிக்குப் பதினாறாம் பிராயம் தாண்டியிருந்தது. கவியுலகிற் சஞ்சரிக்கத் தொடங்கிவிட்டார். முதலில் போப்பையரின் கருத்தைப் பார்ப்போம். பாராட்டுரை ஆங்கிலத்திலுள்ளது.

"......இத்தொகுதியில் மறுபிரசுரம் செய்யப் பெற்றுள்ள நாற்பத்தொரு குறுந் தமிழ்ச் செய்யுட்கள் பொதுவாக இசைநயமும் கலைமெருகும் உடையன; இவற்றிற் கூறப்படும் உணர்வு சுவையும் கட்டுரை வன்மையும் பெற்றுத் திகழ்கின்றது...

ஆங்கில இலக்கியம் குறிப்பாக ஆங்கிலக் கவிதை காலந்தோறும் எல்லாப் படி நிலைகளிலுமுள்ள மக்களை ஈர்த்து அவர்தம் உள்ளங்களைப் பிணித்திருக்கும் தன்மையை நோக்குங்கால், தமிழ்க் கவிதை தனக்குரிய மிகப் புனிதமான கடமையில் அநாவசியமாகத் தவறியுள்ளது என்றே எண்ணத் துணிகின்றோம். அதன் நலம் பாராட்டுவோர் மிக சிலரே; தமிழ் கூறு நல்லுலகத்தின் பெருந்தொகையான பொதுமக்களது நெஞ்சைத் தமிழ்க் கவிதை என்றும் கவர்ந்துள்ளதா? இன்று கவர்கின்றதா? இனியும் கவருமா? ஒப்புநோக்கிமிடத்துக் காணப்படும் இக்கேள்விக்குக் காரணங்கள் பல கூறக்கூடும்: நாம் அந்நியர் என்ற வகையில் பணிபுடனேயே இக்கருத்தைத் தெரிவிக்க முனைகிறோம். அதாவது, ஒப்பற்ற தனிச் சிறப்பியல்புகளும், நேர்த்தியுமிருந்தும், பொதுமக்கள் தேவைக்கு இயைந்த எளிமையும் பொருள் தெளிவும் அதனிடத்துப் பொதுவாகக் குறைவே.

இத்தொடர்பின் தமிழ்க் கவிதை அரசி தந்த கடைசிப் பெரும் படையலான நீதிநெறி விளக்கம் என்னும் நூலை நோக்குங்கள். பொதுமக்களுக்கு விஷயங்களைக் கூற முன்வந்து முயன்றால் தமிழில் சாதிக்கக்கூடியவற்றை அந்நூலிலுள்ள பல செய்யுட்கள் காட்டுகின்றன."

மேனாட்டுத் தமிழறிஞருள் தலைசிறந்து விளங்கிய போப்பையரை மொழிநூற் புலவராகவும் மொழி பெயர்ப்பாசிரியராகவுமே பெரும்பாலானோர் அறிந்திருக்கின்றனர். இவ்வணிந்துரை மூலம் நுனித்தாராயும் இலக்கியத் திறனாய்வாளராகவும் அவர் எமக்குக் காட்சியளிக்கின்றார். கிறித்துவ வேதாகமத்தைத் திறம்பட தமிழ் மக்களிடையே பரப்புவதற்காக தொடக்கத்திலே தமிழைக்கற்ற போப் அவர்கள் தமிழ் காதலரானார் என்பது விஷயமறிந்தவர்க்குப் புதிய தகவல் அன்று. தமிழ்க் கவிதை மேலுள்ள காதல் பற்றிச் சில "கசப்பான" உண்மைகளை அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். எளிமையும், பொருட்டெளிவும், பொது மக்களும் சுவைக்கவல்ல தன்மையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ்க் கவிதையிற் காணப்படவில்லை என்பதும், குமரகுருபர சுவாமிகள் இயற்றிய நீதிநெறி விளக்கம் போன்ற நூல்கள் முற்கூறிய அம்சங்களைக் கொண்டு விளங்குவன என்பதும் போப்பையரது கருத்து. அவர் இவ்வாறு எழுதிய காலத்தில் உயர்ந்த நிலையிலிருந்த தமிழர் எவராவது இவ்வாறு கூறியிருப்பர் என்று கூற முடியவில்லை. நாம் ஏலவே பார்த்ததுபோல அவர்கள் 'யமகம் திரிபு அந்தாதி' பாடிக்கொண்டிருந்தவரே. போப்பையர் கூறிய கருத்துக்களுக்குத் தலையசைத்து அவற்றையே ஆணித்தரமாகக் கூறுவதுபோல இருக்கிறது பாரதியின் பின்வரும் கூற்று. யாவருக்கும் நன்கு பழக்கமான மேற்கோள்தான்:

"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்."

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதற்கிணங்க, கிடைத்தவற்றுட் சிறந்ததான தனிப்பாசுரத் தொகையைப் பாராட்டினார் போப். ஆயினும் 'சொனெற்' பாவகையைப் பின்பற்றி எழுத முயன்ற சாஸ்திரியார் விரும்பத்தக்களவு வெற்றிபெற வில்லை என்பதை ஒளிமறைவுவின்றிக் கூறினார். 'சொனெற்' என்ற பதினான்கடிப் பாடல் சிறிய அளவினதாயினும், ஐரோப்பிய இலக்கிய மேதைகள் பலரால் கையாளப் பெற்றுப் பண்கனிந்து இனிய பாடலாக அமைந்தது; இறுக்கமும் நெறிவும் பரிபூரணமாக உள்ளதாய்த் திகழ்வது. பெரும் பாலான சொனெற் பாக்களிலே, முதல் எட்டு அடிகளில் பாடற் பொருள் அறிமுகம் செய்யப்பட்டுத் தடையோ, கேள்வியோ, ஐயமோ, பிரச்சினையோ எழுப்பப்படுகின்றன. இறுதி ஆறடிகள் விடை பகர்ந்து, கருத்தமைதி கண்டு முடிவடைகின்றன. இப்பண்பினையே மனந்திருத்திப் போப்பையர் சாஸ்திரியாரது பாசுரங்களைப் பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்: "...அதுமட்டு மன்றிக் கவிப்பொருளுக்கும் இறுதியில் அழுத்தம் பெறும் கருத்துக்கும் இருக்க வேண்டிய ஒருமைப்பாடு குறைபட்டுள்ளது என்றே கூற வேண்டும். இவ்விடர்ப்பாட்டை இன்றைய நிலையில் முற்றாக நீக்க முடியுமோ என்பது சந்தேகமே."

இன்னுமொன்று, ஐரோப்பிய மொழிகளிலே 'சொனெற்' சிறப்பாகக் காதற் கவியாகவே வளர்ந்தது. முத்தொள்ளாயிரம், நந்திக்கலம்பகம், முதலிய நூல்களிலும், நற்றிணை, நெடுந்தொகை முதலிய தொகை நூல்களிலும் உள்ள அகத்திணைப் பாக்கள் போன்றன அவை. ஆங்கிலக் கவிஞன் மில்டன் (1608-1674) அவ்வடிவத்தைத் தான் கூறிய அரசியல், அறவியற் கருத்துப் படிவங்களுக்கு வாகனமாகப் பயன்படுத்தினா னெனினும், அது அடிப்படையில் தனிநிலை உணர்ச்சிப்பாடலே. ஆனால் எமது கலைஞரோ, அதனைப் புறத்திணைக் காஞ்சிப் பொருளுக்குப் பயன்படுத்தினார். அறிவின் துணைகொண்டு வசனங்களை யாப்பமைதிக்குள் அடுக்கியது போல இருக்கிறது அவரது பாசுரம். செயற்கையும் படாடோபமும் போலியுணர்ச்சியும் வெளிப்படையாகவே தோன்றுகின்றன. ஓருதாரணம்:

"பரிதியே! நாடொறும் பண்பி னிளங்கதிர்
அருநில மகட்கண் டண்ணல்புன் னகையென
எங்கணும் வீசுபு பொங்குகளி சொய்வோய்!
நண்பகல் வெம்மை நனிகொடி தெனினுங்
காலை மாலையுநின் கதிர் நலம் புகழ்வர்
உலகின் கண்ணே! உறுமண்ட வரசே!
உன்னரு னின்றற மாதிய வியலா;
பண்டையிரவின் பாழ்த்தனி யாட்சியில்
வானம் வறக்கும்; தீனஞ் சிறக்கும்;
ஞான மிறக்கும்; மானம் பறக்கும்
உயிர்க ளுயங்கும்; பயிர்க டியங்கும்.
தினந்தொழி னின்மகார் செயப்பணி தலைவா
என்கொல் நின்கருணை யென்கொல்?
நன்குற வாற்று நாத! விண் மணியே."

சூரியனைப் பற்றிச் சில பொதுச் செய்திகளைக் கடினநடையிற் கூறியுள்ளாரேயன்றி அவர் உள்ளத்தின் வெள்ளப் பெருக்குக் கவிதையாக அமையவில்லை என்பது விளக்க வேண்டாத் தெளிபொருள். சூரியனைப் பற்றிய இக் கட்டுரையோடு பாரதியாரின் சில அடிகளை ஒப்புநோக்கினால் விஷயம் தானாகவே தெளிவாகும். தமது பாத்திரம் ஒன்றன் வாயிலாகச் சூரியனை வருணிக்கிறார்:

"அடிவானத் தேஅங்க பரிதிக் கோளம்
அளப்பறிய விரைவினொடு சுழலக் காண்பாய்;
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே,
மொய் குழலாய் சுற்றுவதன் மொய்ம்பு காணாய்;
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்."

பாரதியின் தனித்தன்மையும் மேதாவிலாசமும் அடிதோறும் துள்ளிக் குதிக்கின்றன. இவ்விரு பாடல்களையும் அருகருகே வைத்துப் பார்த்தால் முந்தியது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் இரண்டிற்கும் இடையே சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் தாம் உள்ளன. பாரதியார் பாஞ்சாலி சபதத்தை 1912இல் பாடினார்.

ஆனாலும் இவ்விஷயத்தில் நாம் சாஸ்திரியார் மீது அளவுக்கு மீறிக் கண்டிப்பாக இருக்கத் தேவையில்லை. ஏனெனில், தமிழில் மாத்திரமன்றிப் பிற இந்திய மொழிகளிலும் முதன் முயற்சியாளர்கள் ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மொழிகளிலிருந்து இலக்கிய உருவங்களை எடுத்துப் பரிசீலனை செய்து பார்த்திருக்கின்றனர். உதாரணமாக, நவீன வங்க இலக்கியத்தின் முன்னோடிகளின் ஒருவரான மைக்கேல் மதுசூதன தத்தர் (1824-1873) கல்கத்தா இந்துக் கல்லூரியில் மாணவனாக இருந்த காலத்தில் ஆங்கிலத்திலே 'சொனேற்' பாக்கள் எழுதியவர். அவர் இயற்றி வெளியிட்ட இறுதி நாலும் நூற்று இரண்டு (102) சொனெற் பாக்களைக் கொண்ட தொகையே. சதுர்தஸ்பதீ கவிதாவலீ (பதினான்கு அடிப்பாக்கள்) என்றே அத்தொகைக்குப் பெயருமிட்டிருந்தார். வங்காள இலக்கிய விமர்சகர்கள் கூறவனவற்றைப் பார்க்கும்போது, பரிதிமாற் கலைஞரினும், மதுசூதன தத்தர் பேராற்றலுடன் புதிய பாவகையைக் கையாண்டார் போலத் தெரிகிறது.

(Article from the Book on Bharathiar by Sri Kailasapatthy)

ஸ்ரீனிவாசன்

ஆசிரியரின் இணையதளம்:

www.geocities.com/seenufour

அத்தியாயம் 2 அத்தியாயம் 4

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button