மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

மெல்லத் தமிழினி...

கீதா சாம்பசிவம்

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management

பாட்டுக்கொரு புலவன்

பாரதியார் "மெல்லத் தமிழினிச் சாகும்"னு சொன்னதாகப் பலபேர் சொல்லிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் அவர் எழுதினதின் நோக்கமே வேறே. அதிலே அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கையாளுவது சற்றுச் சுலபமாக அமைந்து விட்டது நம் எல்லாருக்கும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றும்,

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்றும்,

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவன் போல், இளங்கோ போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை:
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"

என்றெல்லாம் கூறியவர் அவர்.

பாரதிக்கு இருந்த ஒன்றுபட்ட, ஒருமித்த கண்ணோட்டத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை. விடுதலைப் பாடலில் கூட மூன்று முறை "விடுதலை! விடுதலை! விடுதலை!" என்று கூறுவது அரசியல், சமூகம், மற்றும் பொருளாதாரம் எல்லாவற்றிலும் நாம் விடுதலையடைய வேண்டும் என்பதினால் தான். "திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து" யாவரையும் நாட்டை உயர்த்தச் சொன்னவன் பாரதி. அப்படிப் பட்ட பாரதி தமிழ் மொழி சாக வேண்டும் என்று சொல்ல மாட்டார் இல்லையா? உண்மையில் அவன் சொன்னது என்னவெனில், தன் மக்களைப் புதிய சாத்திரம் படைக்க வேண்டித் தமிழ்த்தாய் கேட்பதாக அமைந்த அந்தப் பாடலில் இருந்து சில வரிகள் பின்வருமாறு:

"கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

தந்தை அருள் வலியாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

இது தான் பாரதி சொன்னது. இந்தக் கவிதையில் முதல் ஐந்து செய்யுள்களை விட்டு விட்டு மற்றவற்றை அப்படியே கொடுத்துள்ளேன். இதற்கு மேலும் விளக்கம் நான் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். அப்புறம் கவிதை, "பாரதியார் கவிதைத் தொகுப்பை"ப் பார்த்துத் தான் எழுதி இருக்கிறேன். எனக்குப் படித்தது ஓரளவுக்கு நினைவிருந்தது, ஆனால் கவிதை முழுதும் தவறு செய்யாமல் எழுத வேண்டும் என்பதால் பார்த்தே தான் எழுதி இருக்கேன். பாரதிக்கு இருந்த ஒன்றுபட்ட ஒருமித்த கண்ணோட்டம் இன்றைய நாட்களில் மிக மிக அரிதாக உள்ளது. சுதந்திரத்துக்காகப் பள்ளுப் பாடிய பாரதி, "ஆனந்த சுதந்திரம் அடைய"த் தான் பாடினான். நாம் பெற்றது ஆகஸ்ட் சுதந்திரம். அதைத் தான் நாம் கொண்டாடுகிறோம். இன்னும் சொல்லப் போனால் ஆகஸ்ட் சுதந்திர நன்னாளிலோ அல்லது இந்தியா என்று சுதந்திரம் அடைகிறதோ அன்று தலை நகர் டெல்லியில் செங்கோட்டையில் பிரதம மந்திரி கொடி ஏற்ற வேண்டும் என்று முதன் முதல் சொன்னவரே, "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்" அவர்கள் தான். நாம் பாரதியையும் புரிந்து கொள்ள வில்லை. நேதாஜியையும் புரிந்து கொள்ள வில்லை. ஆகவே தான் நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்துக்கு இன்னும் விடியவில்லை.

ஒரு நண்பர் கேட்ட கேள்வி என்னோட மனசை உறுத்திட்டே இருந்தது. அவர் சொன்னது: "உங்களுக்கு நல்ல ஆசிரியர் கிடைச்சாங்க. நல்லா எடுத்துச் சொல்லிப் புரிய வச்சாங்க. நல்லாப் புரிஞ்சது. எங்களுக்கு அப்படிக் கிடைக்கலை. தவிர எந்தச் சந்தர்ப்பத்தில் பாரதி இந்தப் பாடல்களப் பாடினார், கவிதை ஊற்று எப்படி எல்லாம் பெருக்கெடுத்து ஓடியது போன்ற விவரம் தெரியாமல் சும்மா தேர்வுக்காகப் படிச்சுத் தான் எழுதினோம்"னு சொல்கிறார். தவிர வேறொரு அன்பர் பாரதிக்குப் பயம் அவனோட அச்சத்தைத் தான் இப்படி வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறான் என்று என்னுடன் மூன்று நாளாக விவாதம். 2 நாளாய் மனசில் யோசனை ஓடிக் கொண்டே இருந்தது. அப்போது தெளிவுக்காக வழக்கமாய் எடுக்கும் பாரதியின் புத்தகங்களான கவிதைத் தொகுப்புக்குப் பதில் நான் எடுத்தது தங்கம்மாள் பாரதியின் "பாரதியும் கவிதையும்" என்ற புத்தகம். சரி, பரவாயில்லை எனப் பிரித்தால் 2வது கட்டுரையே நம் கேள்விக்குப் பதில்.

இப்போ இந்தப் புத்தகம் பற்றி ஒரு சிறு அறிமுகம். தங்கம்மாள் பாரதி, தேசீயக் கவி சுப்பிரமணிய பாரதியாரின் மூத்த மகள் ஆவார். இவர் பாரதியைப் பற்றிச் சில புத்தகங்கள் எழுதி உள்ளார். தன் தகப்பானாரான பாரதியின் சில அனுபவங்களையும், அவர் எழுதிய சில முக்கியமான கவிதைகளைப் பற்றியும் கூறி இருக்கும் இவர் அது எழுதப்பட்ட சந்தர்ப்பத்தையும் கூறி இருக்கிறார். அநேகமாய்ப் பாரதி புதுச்சேரியில் வசித்த நாட்களில் நடந்த சம்பவங்களையே இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் புத்தகம், "காரைக்குடி, புதுமைப் பதிப்பகம் லிமிடெட்"ஆல் வெளியிடப்பட்டது. அச்சிட்டது "சாது ப்ரஸ், ராயப்பேட்டா, சென்னை". வெளியிட்ட வருஷம் மார்ச் மாதம் 1947ம் வருஷத்தில். எனக்குக் கிடைத்தது பழைய புத்தகக் கடையில் பள்ளி நாட்களில். அப்போது இருந்தே இந்தப் புத்தகத்தை அவ்வப்போது படித்து வந்தாலும் இந்தக் கவிதை எழுதும்போது நினைவுக்கு வரவில்லை. எப்படி மறந்தேன் என்று புரியவில்லை. பின் யோசனையுடன் 2 நாட்களாய்த் தேடிய புத்தகங்களில் இந்தக் கவிதை எழுதிய சூழ்நிலை பற்றிய சான்று தேடும்போது கிடைத்தது. பிரிக்கவும் கிடைத்தது சான்றோடு முழுக் கவிதையும்.

பாரதியார் புதுச்சேரியில் இருக்கும்போது பாடப் பட்டதாய்க் கூறுகிறார் ஸ்ரீமதி தங்கம்மாள் பாரதி இந்தக் கவிதையை. அவர் கூறும் வார்த்தைகளிலேயே:

"ஒருநாள் சென்னையில் இருந்து சில நண்பர்கள் தந்தையாரைப் பார்க்க வந்தார்கள். அதில் இருவர் "ஆங்கில பாஷையிலும்", "சயன்ஸிலும்" மோகம் கொண்டவர்கள். கிணற்றடியில் அப்போது தந்தை ஸ்நானம் செய்து கொண்டிருந்தார். நண்பர்கள் மாடியிலிருந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தனர்.

முதலாவது நண்பர்:- என்னப்பா? பாரதியாருக்குத் தமிழில் மோகம் அதிகமாமே! தமிழில் என்ன இருக்கிறது? கருத்துக்களை ஆங்கிலத்தில் சொல்வது போல, தமிழில் சொல்ல முடியவில்லை. அதற்கேற்ற அழகான சொல் தமிழ் மொழியில் ஏது?

இரண்டாம் நண்பர்:- அது மட்டுமா? "ஸயன்ஸ்" எத்தனை உயர்ந்தது? தமிழில் இருக்கிறதா? வெள்ளைக்காரன் எப்படியிருந்தாலும் கெட்டிக்காரன். எத்தனை புதிய மெஷின்கள்! எத்தனை கருவிகள்! எத்தனை வஸ்துக்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்! எத்தனை சாஸ்திரங்கள் கற்கிறார்கள்!

முதலாவது நண்பர்:- ஆமாம். இன்னும் சிறிது நாளைக்குள் மேற்கு தேசத்துப் பாஷைகள் நாடெங்கும் விரிந்து பரவிவிடும். தமிழ் ஒளிமங்கி மறைந்து விடும்.

இரண்டாம் நண்பர்:- ஆம், ஒருவரும் அதில் சிரத்தை இல்லாமலிருந்தால் விரைவில் அழிந்து விடும்."

மேலே கூறிய சம்பாஷணைகளை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் அப்பா. கேட்டவுடன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய்ப் பெருகிற்று. தனக்குள்ளாகவே பேசிக் கொண்டார்.

"ஆம், வாஸ்தவம் தான். தாயை மதியாத நம் தமிழனின் அசிரத்தையால் தமிழ் அழியும். கோழைகளே! பழம் பெருமையோடு திருப்தியடைந்து, உண்பதும் உறங்குவதுமாகக் காலங் கழிக்கிறீர்களே! என்ன கொடுமை! ஒருவனாவது நாட்டு நிலைமையைப் பற்றி யோசிக்கிறானா! நமது நிலை இத்தனை கீழ்த்திசை யடைந்திருக்கிறதே என்று சிந்தித்துப் பார்க்கிறானா? தாய்மொழியில் பேசுவதும் எழுதுவதும் கேவலமென்று கருதி தெரியாத ஆங்கிலத்தில் உளறினாலும் மதிப்பு என்று நினைக்கிறார்கள்! சேர, சோழ, பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழின் பெருமையை அறியாத பேதைகள்! இலக்கிய வளர்ச்சியில் ஒருவரது மூளையும் செல்வதில்லை. பிழைப்புக்காகக் கட்டாயமாக ஆங்கிலம் கற்று அதிலுள்ள சுவையைப் புகழ்கிறார்களே! "

இவ்விதம் புலம்பிப் பின் மாடியிலுள்ள நண்பர்களிடம் சென்றார். "தம்பிமாரே! என்ன சொன்னீர்கள் நம் தாய்மொழியைப் பற்றி? மெல்ல மெல்லத் தமிழ் இறந்து விடும் என்கிறீர்கள்! ஒருநாளும் அவ்விதம் ஆகாது. தமிழ்மொழி மங்காது. இன்னும் சிறிது காலத்தில் தமிழர்கள் விழித்தெழுவார்கள். அப்போது தமிழ் மொழி புதுமைப் பொலிவுடன் பிரகாசிக்கும். இதோ கேளுங்கள்! தமிழ்த் தாய் தோன்றிய விதம் யாரும் அறியார்கள்!' என்று கூறிவிட்டுப் பாட ஆரம்பிக்கிறார்.

"யாவரும் வகுத்தற்கரிய பிராயத்தள்
ஆயினுமே எங்கள் தாய் - இந்தப்
பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப்
பயின்றிடுவாள் எங்கள் தாய்" எங்கள் தாய்!"

என்று கூறி விட்டுக், "கேளுங்கள், சகோதரரே! தமிழ்த் தாய் கூறுவதைக் கேளுங்கள்!" என்று கோபமும், ஆத்திரமும், சோகமும் கலந்த குரலில் பாடுகிறார் தமிழ்த் தாயின் வேண்டுகோள் நிறைந்த பாடலை. பாரதியா அஞ்சுகிறவன்?

GIVE YOUR FEEDBACK FOR THE ABOVE ARTICLE
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com