மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
கைலாசபதி
|
|
சிந்துக்குத் தந்தைசென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலே சமயத்துறையிலும் சமூகத்துறையிலும் இலட்சிய வேகத்துடன் முன்னின்றுழைத்த ஆறுமுக நாவலர் போன்றவர்கள் உரைநடையின் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்திருந்தனர். நாவலர் தமது யுகத்துக்கும் அதற்கேற்ற சாதனத்துக்கும் உள்ள தொடர்பைப் பூரணமாக உணர்ந்திருந்தார். ஈழநாட்டுப் புலவர் சோமசுந்தரனார் பாடியுள்ளதுபோல, செய்யுள் நடையிலேயே பயின்று வந்த தமிழணங்கிற்கு,
"வன்னநடை வழங்குநடை வசனநடை நல்லை நகர் நாவலர், அக்காரணத்தினாலேயே "வசன நடை கைவந்த வல்லாளர்" ஆனார். 'வழங்கும் வசன நடை'க்கு ஆதர்ஷமாக விளங்கும் நாவலர், செய்யுள் இயற்ற முனைந்தபோது சம்பிரதாய முறைப்படி "சீர்பூத்த கருவி நூல்..." என்று தொடங்குவது போன்ற பழைய நடையில் அமைந்தவற்றையே பாடினார். கதிரை முருகன்மேல் சில கீர்த்தனங்கள் பாடியுள்ளாரெனினும், பொதுவாக அவர் செய்யுட்கள் அக்காலத்தில் வாழ்ந்து கவி பாடிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வித்துவான் தியாகராசச் செட்டியார் முதலியோர் செய்யுட்களைப்போலச் செய்யப்பட்டவையே. பாரதி காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் வித்துவான்கள் மாத்திரமன்றி முற்கூறிய ஆங்கிலக் கல்வி பயின்ற நவீனர்களும் பழைய பந்தாக் கவிகளையே பாடுபவராயிருந்தனர். உதாரணமாக, பாரதியின் இளமைத் தோழனாக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் நிரம்பிய ஆங்கிலப் புலமை பெற்றவர்; நவீன வாழ்வியல் தெரிந்தவர்; பல்லாண்டுகள் வழக்கறிஞராகத் தொழில் பார்த்தவர். தற்காலத் தமிழில் புதுக் கவிதைகள் அரிதாயுள்ளன என்றுணர்ந்து இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே உரையும் செய்யுளும் எழுதிவந்தவர். புதுக் கவிகளாக அன்னார் படைத்தவற்றுள் "மாரி வாயில்", "மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி" என்பன வித்துவான்களும் வியந்து பாராட்டியவை. ஆனால் காய்தல் உவத்தலின்றிப் பார்க்கும் ஒருவர் அவற்றைப் பழந்தமிழ்ச் செய்யுட்கள் எனக் கருதினால் வியப்பிருக்காது. இப்பனுவல்களில் சோமசுந்தர பாரதியாரது ஆழ்ந்த தமிழ்ப்புலமை சுடர்விடுகிறது. ஆனால் அவை தற்காலத் தமிழால் ஆனவையல்ல. "பொங்கல் நிகழ்ச்சிப் பாடலை" 1909-ம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். அதுபற்றி முன்னுரையில் (1947) கூறப்படுவதாவது: "முன் எழுதியவற்றுட் சிலவற்றைப் பொருத்தம் நோக்கித் திருத்தியும் அமைத்தது இத்தாழிசைக் கொச்சகச் செய்யுள். இப்பாக்களை வண்ணவகை எனக் கொள்ளினும் இழுக்கில்லை... இது அகத்திணைச் செய்யுளாதலின், இதில் "சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்" ஆயினர். இச்செய்யுள் அகப்பகுதியில், 'நிகழ்ந்தது கூறி நிலையல்' எனும் துறையில் தலைவி கூற்றாகும். இது தொல்காப்பியர் கூறும் 'சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து, ஓதல் வேண்டாது குறித்தது தோன்றும்' புலன் வகையாகும். 'விருந்து' வகை எனினும் பொருந்தும்." சான்றோர் செய்யுட்களுக்கு, நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலிய இடைக்கால உரையாசிரியர் விளக்கங் கூறுவதுபோல, தமது புதுமைக் கவிக்கு இத்துணை விளக்கம் அவசியமெனக் கருதுகிறார் கணக்காயர். நூலுக்கு முகவுரை வழங்கிய கரந்தைத் தமிழ்ச் சங்கப் புலவர் நீ. கந்தசாமிப்பிள்ளை கூறுவதுபோல, "இப்பாக்களில் சொல்லில் நொய்மையும் பொருள் எளிமையும் காணவில்லை." ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு அவிழ் பதம் என்பதுபோல கணக்காயர் போன்று "தமிழிலும் ஆங்கிலத்திலும் பல அரிய அறிவினிக்கும் நூல்கள் இயற்றியோர்" இத்தகைய பழைய நடையையே போற்றினர் என்பதற்கு இப்பனுவர் சிறந்த சான்று. ஆயினும் இன்னுமோர் உதாரணம் பார்ப்போம். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் (1857-1947) உயர்தர வேலையிலிருந்தவர்; ஹேபர்ட் ஸ்பென்ஸர் ஆங்கிலத்தில் கல்வியைப்பற்றி எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்தவர். ஆயினும் அவர் பாடிய கோம்பி விருத்தம், நெல்லைச் சிலேடை வெண்பா என்பன மரபுவழி வித்துவான்கள் வியந்தவை. கணித நூற்பேராசிரியராயும் விஞ்ஞானத் துறையில் ஈடுபாடுடையராயும் விளங்கிய பூண்டி அரங்கநாத முதலியார் கச்சிக் கலம்பகம் பாடி அரங்கேற்றினார். இவ்வுதாரணங்கள் ஒரு பெரும் உண்மையை எமக்குணர்த்துகின்றன. தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலில் நான் வேறொரு தொடர்பிற் கூறியிருப்பது இங்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது: "புதுமையான கருத்துக்களை வசனமாக எழுத முனைந்த அறிஞர் பலர் தமிழ்க் கவிதை எழுதிய போதிலும் பல்லுடைக்கும் கடின நடையிலே மரபு வழிவந்த பாடல்களையே பாடினர். அதுவரை எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்துவந்த வசனத்தை இவர்கள் தன்னம்பிக்கையுடன் கையாண்டனர்; அதன் எஜமானராயினர். கவிதையோ பாரம்பரியச் சிறப்புடையதாகலின், அதனைப் பயபக்தியுடன் அணுகினர். கவிதை இவர்களை ஓர் அளவுகோல் கொண்டும் உரைநடையைப் பிறிதோர் அளவுகோல் கொண்டும் மதிப்பிட்டனர். இவ்வீரடி நிலை இன்றுவரை காணப்படுகிறதெனலாம். பழந்தமிழ்க் கவிதைப்பற்று உள்ளவராகவும், தேவையேற்படின் தாமும் அந்தாதி, கலம்பகம் முதலிய பிரபந்தங்கள் பாடும் ஆற்றல் பெற்றவராகவும் இருந்த இவர்களது முக்கியமான படைப்புக்கள் கவிதையாகவன்றி உரைநடையி லமைந்தமை கவனிக்கற் பாலது." மேற்கூறியவர்களுக்குக் கவிதை சொகுசாகவும் இன்பப் பொருளாகவும் இருந்தது. அதே சமயத்தில் இவர்களிற் பெரும்பாலானோர் பழந்தமிழ்க் கவிதைகளை அவற்றிற் காணப்படும் அறவியற் கருத்துகளக்காகவே போற்றினர் என்று எண்ணத் தோன்றுகிறது. அந்நிய ஆதிக்கத்தின் விளைவாக ஏற்பட்டுக் கொண்டிருந்த பாரதூரமான சமுதாய மாற்றங்கள் மக்களது ஒழுகலாறுகளைப் பாதிக்கத் தொடங்கியிருந்தன. ஈரடி நிலையிலிருந்த இக் கல்விமான்கள் பண்டைய நீதிநூல்களைத் துணையாகவும் புகலிடமாகவும் கொண்டனர். மாதவையர் எழுதிய பத்மாவதி சரித்திரம் போன்ற நாவலில் இதனைக் கண்டு தெளியலாம். (Article from the Book on Bharathiar by Sri Kailasapatthy) ஸ்ரீனிவாசன் ஆசிரியரின் இணையதளம்: |
YOUR FEEDBACK FOR THIS STORY ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |