மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
கைலாசபதி
|
|
|
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையுலகின் தலைமகன் பாரதி, புதுமைக் கவி, புரட்சிக்கவி, தேசியக் கவி, மறுமலர்ச்சிக் கவி, மக்கள் கவி என்றெல்லாம் பாராட்டப்பெறும் அவன் நவயுகத்தை நாவாரக் கூவியழைத்தான். பாரதியுடன் இருபதாம் நூற்றாண்டு எமது இலக்கியத்திற் புகுகின்றது. எனினும் பாரதியின் புதுமையைப் பலவாறும் எடுத்துக்காட்டும் இரசிகரும், இலக்கிய வரலாற்றாசிரியரும் அவனுக்கு முன்னோடிகளாக இருந்து கவிவளமூட்டிய இலக்கிய கர்த்தாக்களை எடுத்துக்காட்டுவது குறைவு. பழமையைப் பழமையாகவும், புதுமையைப் புதுமையாகவும் காணும் எமது இலக்கிய வரலாற்றாசிரியர் ஏற்படுத்தியுள்ள வரலாற்றுக் குருட்டுணர்வின் பிரதிபலிப்பு இதுவெனலாம். பாரதியின் புதுமைப்பண்பின் ஆழத்தையும், இயல்பையும் அறிந்துகொள்ளுவதற்கு அவனது சகபாடிகளையும் முன்னோடிகளையும் சேர்த்துத் தெரிந்து கொள்ளல் அத்தியாவசியம்.
முதலிலே பாரதியார் காலத்துச் சமுதாயச் சூழலையும் இலக்கிய கர்த்தாக்களின் மனோநிலையையும் சிறிது நோக்குதல் வேண்டும். 1882இல் எட்டயபுரத்திலே பாரதி பிறந்த வேளையில், இந்தியாவின் பிரதான நகரங்களில் மத்தியதர வர்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவு முதிர்ச்சி பெற்றிருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஆங்கிலேயே அரசாங்கமே திட்டமிட்டு ஆங்கிலக் கல்வியையும் கல்வி முறையும் பரப்பத் தொடங்கியது. பன்னெடுங் காலமாகத் தேங்கிக் கிடந்த ஹிந்து சமுதாயம், முகலாயப் படையெடுப்பு, பிற ஆக்கிரமிப்புகள் முதலியவற்றால் அதிகம் பாதிக்கப்படாதிருந்த ஹிந்து சமுதாயம் ஆங்கிலேயராட்சியில் முற்று முழுதான மாற்றம் பெறத் தொடங்கியிருந்தது. இரு வகைகளில் ஆங்கிலேயராட்சி 'புதியதொரு' சமூகம் தோற்றக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியது. ஒன்று; ஆங்கிலக் கல்வியின் பயனாய் உடலுழைப்பற்ற மதிப்பான துரைத்தன உத்தியோகம் பெற்று வசதியுடன் வாழும் வழி சில இந்தியருக்குக் கிட்டியது; இரண்டாவது: ஆங்கிலேயரது பொருளாதாரச் 'சுரண்டல்' முறையைப் பின்பற்றிச் சில இந்தியர்கள் "முற்றிலும் புதிய வகையான உழைப்புக்குத் தம்மைத் தகுதியாக்கியும், தேவையான பொறியியல் அறிவைப் பெற்றும்" கைத் தொழில் முறையில் முன்னேறும் வாய்ப்பைக் கண்டனர். இவ்விரண்டு வகைப் போக்கின் தருக்கரீதியான வளர்ச்சியே இந்திய புத்திசீவிகளும் இந்திய பூர்ஷ்வாக்களுமாவர். பாரதிக்குப் பருவந்தெரிந்த காலத்திலிருந்தே இவ்விரு போக்குகளும் அவனை எதிர்நோக்கி வந்துள்ளன. தொடக்கத்தில் இரண்டையும் பாரதி வெறுத்தான். இது ஆழ்ந்து கவனிக்க வேண்டியது. ஏனெனில், பாரதியைப் பிற சமகாலப் புலவரின்றும் வேறுபடுத்தும் அடிப்படைக் காரணங்களில் இதுவும் ஒன்று. துரைத்தன உத்தியோகத்தர்களை "தாதர்கள்", "சேவகர்" என்று அலட்சியமாகக் குறிப்பிட்டான். தொழில் முறையால் முன்னுக்கு வர விழைபவர்கள் படக்கூடிய பாட்டைப் பாரதி தனது தந்தையின் வாழ்க்கைச் சோதனையிலிருந்து நன்கறிந்தவன். முதலாண்மைக் கொள்கையின் இயக்கப்பாட்டை அறியமாட்டாத பாரதியின் தந்தை சின்னசாமி அய்யர், அப்பாவித்தனமான உள்ளூரில் மூலதனம் திரட்டிக் கைத்தொழில் துறையில் இறங்கினார்; 1880இல் எட்டயபுரத்திலே பஞ்சாலை ஒன்றை நிறுவினார். முடிவு நாசம்தான். பாரதி இந்நிகழ்ச்சியைத் தனக்கேயுரிய முறையில் சுயசரிதையிற் குறிப்பிடுகின்றான்: "ஈங்கி தற்கிடை யெந்தை பெருந்துயர் ஊய்திய நின்றனன், தீய வறுமையான்; ஓங்கி நின்ற பெருஞ் செல்வம் யாவையும் ஊணர் செய்த கதியில் இழந்தனன். பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய பண்டை நண்பர்கள் கைநெகிழ்த் தேகினர்; வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ?" இப்பாட்டில் ஊணர் என்பது விதேசிய ஆங்கிலேயரை. வ.உ. சிதம்பரம் பிள்ளை கப்பலோட்ட முயன்ற காலை பல்வேறு சூழ்ச்சிகளினால் அச்சுதேசிய முயற்சியை வெள்ளைக்காரக் கம்பெனிகள் முறியடித்ததுபோலவே பாரதியாரின் தந்தையும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் இயக்க விதியான மத்ஸ நியாயத்துக்கு (சின்ன மீனைப் பெரிய மீன் விழுங்குதல்) பலியாகிறார் என்பது தளிவு. இத்தகைய நேர்வுகள் பாரதியைத் தொடக்கத்திலிருந்தே ஆங்கிலேயர் விரோதியாக்கிவிட்டிருந்தன. துன்பமும் துயரமும் வாட்டப் பாரதியாரின் தந்தை மரணமடைந்போது கவிஞருக்கு வயது பதினாறு. மேற்கூறிய நிகழ்ச்சிகளின் பயனாகவும் தொடர்பாகவுமே அக்கால ஆங்கிலக் கல்வி முறையைப் பாரதி வெறுத்தான் என்று கருத இடமுண்டு. பாரதி காலத்துப் புகழ்பூத்த எழுத்தாளரும் இலக்கிய ஆசிரியர்களும் முற்கூறிய துரைத்தன மனோபாவமும் ஆங்கிலேயரைப் பின்பற்றி முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையும் உடையராயிருந்தனர். ஆங்கிலக் கல்வி இத்தகைய மனப்போக்கு உடையவர்களைச் சிருட்டிக்கும் என்று மக்காலே, எல்பின்ஸ்டன் முதலிய பிரபல ஆட்சியாளர் எதிர்பார்த்திருந்தனர். இந்திய தேசிய மறுமலர்ச்சியின் உடனிகழ்ச்சியாகத் தோன்றிய "புதிய" இலக்கியங்களைப் படைத்தோரிற் பெரும்பாலானவர்கள் ஆங்கிலக் கல்வி கற்ற மத்தியதர வர்க்கத்தினரே. அதாவது தமது ஆங்கிலக் கல்வித் தகுதியால் புத்தி சீவிகளாக வாழ்ந்தவர்கள். தமது வர்க்க இயல்பு காரணமாக இவர்கள் பலவிதமான போலிச் சடங்குகள், ஆசாரங்களில் அதிகம் பக்தி சிரத்தையற்றவராய், பிரச்சனைகளை வாழ்க்கையின் தேவை கருதி நோக்கினர். அந்த வகையில் அவர்கள் வௌிப்படையான பயனீட்டுக் கொள்கையாளர் எனலாம். தாம் கற்ற ஆங்கில மொழி இலக்கியத்தில் மட்டுமன்றி, உலகமெங்கணும் நவீன வாழ்கை, உரை நடையையே சிறப்பிக்கிறது என இவர்கள் கண்டனர். தமது வாழ்க்கை நிலையோடொட்டிய, அதற்கு இன்றியமையாத, புதிய எண்ணங்களும் இலட்சியங்களும் கருத்துப் படிவங்களும் எளிய, தளிவான உரைநடை மூலமாகவே நடமாடுகின்றன என்றறிந்தனர். தொடரும்... (Article from the Book on Bharathiar by Late Sri Kailasapatthy) தொகுத்தளிதவர்: ஸ்ரீனிவாசன் (சீனு தாத்தா) சீனு தாத்தாவின் இணையதளம்: |
YOUR FEEDBACK FOR THIS STORY ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |