-
துபாய்
- தமிழ்த்தேனீ
துபாய் விமான நிலையம் எங்களை வரவேற்றது
விமானத்திலிருந்து இறங்கி எங்கள் பெட்டிகள் வருகைதரும் ஓடும் பட்டையை நோக்கி நகர, அதற்கு முன்னால் எங்கள் துபாய் அனுமதியை பரிசோதனை செய்யும் அதிகார மையத்துக்கு சென்றோம். அவர்கள் எங்கள் அனுமதிச் சீட்டுக்களை பரிசோதனை செய்து விட்டு அனுமதித்தார்கள்.
பாலைவனம் என்று நினைத்துக்கொண்டு நகர ஆரம்பித்த எங்களுக்கு எதிரே உள்ள ஒரு பெரிய சுவற்றில் தண்ணீர் விழுகை ஏற்படுத்தி அதில் விளக்குகள் பொருத்தி அலங்காரமாய் எங்கள் நாடு பாலைவனமல்ல, சோலை வனம் என்று நிரூபிக்க முயன்று அதில் பெருமளவு வெற்றி கண்டிருந்தார்கள். சரி, நகரத்தினுள் சென்று பார்ப்போம் என்று வெளியே வந்தோம். வெளியே எங்கள் வருகைக்காக மகளும் மாப்பிள்ளையும் காத்திருந்தார்கள், கூடவே அனல் கக்கும் சூரியனும் வெள்ளை வெளேரென்று வெய்யிலும் எங்களை வரவேற்றது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் பார்த்ததும் வெய்யிலும் அனல் கக்கும் சூரியனும் ஒரு கணம் மறைந்து இதமான குளிர்ச்சி பரவியது. எங்கிருந்து குளிர்ச்சி வருகிறது என்று பார்த்தோம், குளிரூட்டப்பட்ட காரினுள் இருந்தோம்.
மாப்பிள்ளையின் வீட்டில் சென்று இறங்கினோம், பலமாடிக் குடியிருப்புகள் அடுக்கடுக்காய் பக்கவாட்டில் அமைந்த ஒரு பகுதி, அங்கே ஒரு குடியிருப்பில் மொத்தம் 80 வீடுகள், அந்தப் பகுதியில் மொத்தம் 500 குடியிருப்புகள், ஆனால் ஒவ்வொரு அடுக்கு மாடிக் கட்டிடத்தை சுற்றி நேர்த்தியான நடை பாதைகள், ஒவ்வொரு குடியிருப்புக்கும் இடையே நல்ல காற்று வசதிக்காக 20 அடி இடை வெளி, ஒவ்வொரு குடியிருப்பிலும் பூரண கூளிர்சாதன வசதி, உயரத் தூக்கிகள், வீட்டினுள் நுழைந்தவுடன் சில்லென்று குளிர் எங்களைத் தாக்கியது, வீட்டினுள் நுழைந்தோம்.
அன்று இரவு துபாயை சுற்றிப் பார்க்கலாம் என்று மாப்பிள்ளை அழைக்கவே கிளம்பினோம், ஒரு பெரிய அடுக்குமாடிக் கடைக்கு அழைத்துச் சென்றார். அதை துபாய் மால் என்று சொல்லுகிறார்கள். அடடா! என்ன ஒரு அமைப்பு, என்ன ஒரு நேர்த்தி, அங்கேயும் ஆங்காங்கே செயற்கையாய் ஏற்படுத்தப்பட்ட நீர்வீழ்ச்சிகள், கிடைக்காத பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லாம் கிடைக்கும் வண்ணமாக கடைகள்.
அப்படி சுற்றிப் பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தோம். அந்த மொத்தக் கடைகளையும் பார்க்கவேண்டுமென்றால் குறைந்தது ஒரு வாரமாவது சுற்ற வேண்டும், ஒரே நாளில் பார்க்க முடியாது என்றார் மாப்பிள்ளை. ஆங்காங்கே தமிழ்க் குரல்கள், மலையாளம் பேசும் மக்கள்
அங்கே ஓரிடத்தில் எடை பார்க்கும் ஒரு இயந்திரம் இருந்தது அதில் ஏறி நின்றேன், ஒரு (திரம்) அவர்கள் நாட்டு ஒரு ரூபாய், கிட்டத்தட்ட நம் இந்திய மதிப்பில் 13 ரூபாய், அதை போடச்சொல்லி அந்த இயந்திரம் அறிவிப்பு அளித்தது, போட்டேன், ரத்த அழுத்தம் சோதனைக்கு ஒரு திரம் போடச்சொல்லியது போட்டேன், கொழுப்பின் அளவு எவ்வளவு என்று அறிந்துகொள்ள ஒரு திரம் போடச் சொல்லியது போட்டேன், உயரம் எவ்வளவு என்று அறிந்து கொள்ள ஒரு திரம் போடச்சொல்லியது போட்டேன், சற்று நேரம் எல்லாவற்றையும் பரிசோதனை செய்துவிட்டு ஒரு அச்சடித்த காகிதத்தை துப்பியது, ஆவலாய்ப் பிரித்துப் பார்த்தேன்.
அரபியில் எழுதியிருந்தது.
அன்புடன்
தமிழ்த்தேனீ
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















